திருத்தலைச்சங்காடு


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

பொழிப்புரை :

அழகிய சங்கவெண்குழையையும் தோட்டையும் அணிந்து ஒப்பற்ற நால்வேதங்களை ஐயம் இன்றி அருளியவரே! சுடுகாடல்லாமல் வேறோர் இடத்தைத் தாம் ஆடுதற்கு இடமாகக் கருதாதவரே! நீர்க்குலைகளாகக் காய்த்துள்ள சிவந்த காய்களை உடைய பசுமையான கமுக மரச்சோலைகளில் குயில்கள் ஆலும் சிறப்புடைய தலைச்சங்கைக் கோயிலை நீர் இருக்கும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

நலம் - அழகையுடைய, சங்கவெண்குழை - சங்காலான வெளியகுண்டலம். சங்கை - ஐயம். கமுகின் குலைக்காய் செந்நிறத்ததாதல் கூறப்பட்டது. தாழ்ந்தீர் - எழுந்தருளியுள்ளீர். தலைச் சங்கை - தலைச்சங்காடு என்பதன் மரூஉப்போலும்.

பண் :

பாடல் எண் : 2

துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லா மாண்பானீர்
பிணிமல்கு நூன்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

பொழிப்புரை :

துணியால் இயன்ற கோவணத்தையும் தோல் ஆடையையும் உடுத்த கோலம் காட்டி ஆட்கொண்டவரே! நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே! தேவர்களுள் மாட்சிமை உடையவரே! நீர், முறுக்கிய பூணூல் மார்பினராகிய அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

மணி - நீலமணிபோலும் நிறம், அண்டர் - தேவர். மாண்பு - மாட்சி, பெருமை. பிணி - பிணித்தல். அணி - அழகு. நான்கு அடியிலும் மல்குதல் என்றதற்கு நிறைதல் என்ற பொருளுறப் பொருத்திக் கூறிக்கொள்க.

பண் :

பாடல் எண் : 3

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளே றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூன்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே கோயிலாக விருந்தீரே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க பாடல்களைப் பாடுபவரே! சிவந்த கண்ணையுடைய திருமாலாகிய வெள்ளேற்றை ஊர்தியாகக் கொண்டவரே! நீரையும் பூவையும் கொண்டு உம்மை நீங்காத தொண்டர் நின்று வழிபட மாலையையும் பூணூலையும் அணிந்த மார்பினை உடையவரே! நீர், தக்கோர் வாழும் தலைச்சங்கையிலுள்ள அழகிய கோயிலை இடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சீர் - கனம், மேன்மை. பாடல் - வேதப்பாடல், சாமகானம். ஏறு - எருது. ஊர்தி - வாகனம். சிவபூசை செய்வார்க்கு இன்றியமையாத பொருள் நீரும் பூவும் என்பது குறிக்கப்பட்டது. தார் - மாலை, தார்கொண்ட மார்பர். நூல் (பூணு நூல்) அணிந்த மார்பர் என்க. தக்கோர் - `அந்தணாளர்`. (பா. 8) ஏர் - அழகு.

பண் :

பாடல் எண் : 4

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையு ம் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

தாமே விரும்பிப் பற்பல வடிவங்களோடு வரும் இயல்பினரே! நீண்ட வெண்டிங்களாகிய ஓடம் செல்லும் கங்கையாற்றை உச்சியில் வைத்துள்ளவரே! நீர், தலைச்சங்கையில் கூடம், மண்டபம் வாயிலில் கொடிதோன்றும் மாடம் ஆகிய வீடுகள் சூழ்ந்த கோயிலை இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

வேடம் - `பலபல வேடம் ஆகும் பரன்`, உச்சியிலுள்ள கங்கையில் திங்கள் ஓடம்போல் உளது. கூடம், மண்டபம், மாடம் என்பன இட விசேடங்கள், வாசலில் கொடி தோன்றும் மாடம் என்க.

பண் :

பாடல் எண் : 5

சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமே னீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கான லன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

சூலம் ஏந்திய கையை உடையவரே! பொடியாகிய வெண்ணீற்றைப்பூசி ஆடுபவரே! நீலகண்டரே! நீண்ட சடைமேல் கங்கையை ஏற்றுள்ளவரே! நீர், வளம் சேர்ந்த குளிர்ந்த சோலைகளில் அன்னங்கள் பொருந்தி வாழும் தலைச்சங்கையில் உள்ள அழகிய கோயிலை உமது கோயிலாக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சூலம் - `மூவிலைவேல்`. சுண்ணம் - பொடியாகிய. ஆடலீர் - மூழ்குதலுடையீர். நீராடல் போல் நீறாடல். நீர் - கங்கை. ஆலம் - நீர். மன்னும் - பொருந்தும். கோலம் - அழகு; வடிவமுமாம்.

பண் :

பாடல் எண் : 6

நிலநீரொ டாகாச மனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

நிலம், நீர், ஆகாயம், அனல், காற்று ஆகிய ஐம்பூதவடிவாய் நின்று ஐம்புலன்களை வென்று நிற்பவரே! பொய்யிலாரது வழிபாட்டை ஏற்பவரே! நீர், வஞ்சகமும் இழிசெயல்களும் இல்லாததக்கோர் வாழும் தலைச்சங்கையில் அழகிய கோயிலை உமது கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

நிலம் முதலிய ஐம்பெரும்பூதங்களாகி நின்றவன் இறைவன். அட்டமூர்த்தங்களுள் முதலைந்தும் இவையே. ஐந்துபுல நீர்மைபுறம் கண்டார் - ஐம்புலன்களை வென்றவர். பொக்கம் - பொய். போற்று - துதி. ஓவார் - நீங்கார். சலம் - மாறுபாடு; வஞ்சகம். நீதம் - இழிஞர். `தக்கார்` (ப .176, பா .10) நலநீர - அழகிய தன்மையுடைய.

பண் :

பாடல் எண் : 7

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல் உமையோர் பாகங்கூடினீர்
பொடிபுல்கு நூன்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

திருவடியிற் பொருந்திய கழல் ஆர்க்க அனல் ஏந்தி நடனம் ஆடி, கொடிபோன்ற மென்மையான சாயலை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டுள்ளவரே! நீர், வெண்பொடிபூசிப் பூணநூல் அணிந்த மார்பினராய் முப்புரிநூலணிந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் விளங்கும் மணம் கமழும் கோயிலையே உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புல்கு - சார்ந்த; கூடிய. ஆர்ப்ப - ஒலிக்க. பேர்ந்து - நட்டம் ஆடி. `கொடி புல்கு மென்சாயல் உமை` என்றது தேவியார் திருநாமம் ஆகிய சௌந்தரியம்மை என்பதைத் தோற்றியது. பொடி - திருநீறு. புரிநூல் ஆளர் - விரும்புகின்ற வேதநூல்களை ஆள்பவர். `நூன் மார்பர்` என்று முன் உள்ளதன் பொருளே கூறல் நன்றன்று. `மறையாளர்` (பா . 9). கடி - காவல்.

பண் :

பாடல் எண் : 8

திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர விரலாலூன்று மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீ ரந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

பொழிப்புரை :

திரைகளோடு கூடிய பெரிய கடல்சூழ்ந்த இலங்கை மன்னனை, அவனுடைய மலைபோன்ற தோள்கள் நெரியுமாறு கால் விரலால் ஊன்றும் பெருவீரம் உடையவரே! இடையில் மேகலையை உடுத்த அம்மையின் பாகத்தைக் கொண்டவரே! நீர் அந்தணாளர் பல்கிவாழும் தலைச்சங்கையில் முறையாக அமைந்த கோயிலை உமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

திரை - அலை. மா - பெரியது. வரை - மலை. அரை - இடை. நிரை - வரிசை. மேகலை - அணிவிசேடம். அரை ஆர்ந்த மேகலையீர், என்பது, பாதி மாதை உடையீர் என்றவாறு. `ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர்` (பதி .192 பா .2)

பண் :

பாடல் எண் : 9

பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார் புறநின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

பாயாக அமைந்த பாம்பணைமேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பசிய தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் சென்று காணஇயலாதவரே! புறச்சமயங்களில் நில்லாத அகச்சமயிகளால் அறிந்து போற்றப்படுபவரே! முத்தீவளர்க்கும் நான்மறையாளர் வாழும் செல்வச் செழிப்புள்ள தலைச்சங்கையில் உயர்ந்து திகழும் கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பாய் - பரந்து. போய் - கீழிடந்துபோய். ஓங்கி -மேற்பறந்துயர்ந்து. புறம் நின்று ஓரார் - புறச்சமயக் கொள்கைகளில் நின்று ஆராயாதவர். அகச்சமயக் கொள்கை வழி ஆராய்பவர் என்றவாறு. புறம் வெளியுமாம். போற்று - துதி. ஓவார் - நீங்காதவர். தீ - வேள்வித் தீ. சேய் - உயர்வின் நீட்சி.

பண் :

பாடல் எண் : 10

அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

பொழிப்புரை :

அலைகளை உடைய நீரில் குளியாத அமணர், குண்டர், சாக்கியர் இடைவிடாது அலர்தூற்ற, தம்மை வழிபடுவார்க்குக் காட்சி தந்து ஆட்கொள்பவரே! நீர், நிலையான நால்வேதங்களை ஓதி உணர்ந்த அந்தணர் வாழும் தலைச்சங்கையில் நிலையாக உள்ள கோயிலை உம் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புனல் துறந்த - குளித்தல் இல்லாத என்றவாறு. சாக்கியர் என்பது புதிய பாடம். தொலையாது - இடையில் ஒழியாமல். அலர் - பழி. நிலை - கோபுரநிலை.

பண் :

பாடல் எண் : 11

நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை யோங்குகோயின் மேயானை
ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரால் வளம் பெறும் காழியில் தோன்றிய நன்மை கருதும் ஞானசம்பந்தன், தண்மையான தலைச்சங்கையில் ஓங்கிய கோயிலில் விளங்கும் இறைவனை, ஒளிரும் பிறையை அணிந்தவனை, போற்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் விளங்கும் கடலால் சூழப்பட்ட மண் உலகினர்க்கு மேலான விண் உலகத்தினராவர்.

குறிப்புரை :

நளிரும் - குளிரும். மேயானை - மேவிய பெருமானை. மிளிரும் திரை - விளங்கும் கடல். வையத்தார் - மண்ணுலகோர். மேலார் - வானுலகோராவர்.
சிற்பி