திருவிடைமருதூர்


பண் :சீகாமரம்

பாடல் எண் : 1

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர் சாமவேத மோதினீர்
எங்குமெழிலார் மறையோர்கண் முறையாலேத்த விடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

பொழிப்புரை :

திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.

குறிப்புரை :

படை - கணம். எழில் - அழகு. எங்கும் ஏத்த மகிழ்ந்தீர் என்க. மேலும் இவ்வாறே கூட்டுக. முறையால் - வேதாகம விதிப்படி. மங்குல் - மேகம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 2

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்
போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்
ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீ ரிடைமருதில்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க்கருவியாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதிதேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.

குறிப்புரை :

நிகழ்வித்தீர் - விளங்கச் செய்தீர். பூதம் பாடலீர் - பூதங்கள் பாடுதலை உடையீர். ஏர் - அழகு. சீர் சிறப்பு, மேன்மை.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 3

அழன்மல்கு மங்கையில் ஏந்திப்பூத மவைபாடச்
சுழன்மல்கு மாடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்
எழின்மல்கு நான்மறையோர் முறையாலேத்த விடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பொழிப்புரை :

நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடை மருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.

குறிப்புரை :

அழல் - தீ. சுழல் மல்கும் ஆடலீர் - சூழ்தல் நிறைந்த திருக்கூத்தை உடையீர். பொழில் - பூஞ்சோலை. பொலிந்தீர் - பொன்போல் விளங்கினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 4

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்
வில்லாற் புரமூன்றும் எரித்தீர் விடையார் கொடியினீர்
எல்லாக் கணங்களும் முறையாலேத்த விடைமருதில்
செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

பொழிப்புரை :

பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பொல்லா - பொலிவில்லாத. விடையார் கொடி - எரு துருவெழுதியகொடி. `ஏர்காட்டும் கோதிலா ஏறாங்கொடி` (திருவா - திருத்தசா - 10). எல்லாக் கணங்களும் - சிவகணம் முதலிய எல்லாமும். செல்வு ஆய - செல்வமாகிய, அம்விகுதி கெட்டது. `செல்வாய செல்வம் தருவாய் போற்றி`, (அப்பர்) `செல்வாய்த் திருவானாய் நீயே` (அப்பர் பதி.255. பா. 3).

பண் :சீகாமரம்

பாடல் எண் : 5

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

வருந்திய - தவத்தால் மெய்வருந்திய. ஏனோர் - மண்ணோர், பாதலத்தோர் முதலியோர். ஈண்டி - கூடி. இத்தலத்தில் தைப்பூசத்தில் தீர்த்தமாடி வழிபடுதல் தொன்று தொட்டு நிகழும் வழக்கு. `தேசம்புகுந்தீண்டி ஓர் செம்மை உடைத்தாய், பூசம் புகுந்தாடி` `பூசம் நாம் புகுதும் புனலாடவே` (அப்பர்). பொலிவு - சிவப்பொலிவு.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 6

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்
வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்
இலமல்கு நான்மறையோ ரினிதாவேத்த விடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

பொழிப்புரை :

பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான் மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சலம் - கங்கை நீர். வலம் - வெற்றி, வலப்பக்கமும் ஆம். இலம் - இல்லம்; வீடு. பற்றின்மையும் ஆகும். புலம் - அறிவு, இடமுமாம்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 7

புனமல்கு கொன்றையீர் புலியினதளீர் பொலிவார்ந்த
சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்
இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொ ளிடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள்விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

புனம் - கொல்லை. அதள் - தோல். மால் விடை - திருமாலாகிய எருது; அறவிடை, உயிர் விடை என்பவை வேறு. இம் மூன்றும் சிவபிரானுக்கு ஊர்தி, செய்யீர் - செந்நிறத்தை உடையீர். `செம்மேனியெம்மான்`. இனம் - கூட்டம். மறைக்கும், மறையோர்க்கும் பொது. கனம் - மேகம், கோயிலின் உயர்ச்சி குறித்தது.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 8

சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்
தலைபத்துந் திண்டோளு நெரித்தீர் தையல்பாகத்தீர்
இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த விடைமருதில்
நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

பொழிப்புரை :

மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

உய்த்த - செலுத்திய. திறல் - வலிமை. தையல் - உமாதேவியார். நலம் - அழகு. நயந்தீர் - விரும்பினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 9

மறைமல்கு நான்முகனு மாலுமறியா வண்ணத்தீர்
கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்
அறைமல்கு வண்டினங்க ளாலுஞ்சோலை யிடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு. அறை - ஓசை. கபாலம் - பிரம்மகபாலம். ஆலும் - ஒலிக்கும். நிறை - `நிறையால் நினைபவர்`. நிகழ்ந்தீர் - விளங்கினீர்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 10

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணரும்
துன்பாய கட்டுரைகள் சொல்லி யல்லல்தூற்றவே
இன்பாய வந்தணர்க ளேத்துமேர்கொ ளிடைமருதில்
அன்பாய கோயிலே கோயிலாக வமர்ந்தீரே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்புவடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

சின் (போர்வை) - சின்மை, அற்பம். திரிபு, `நன் பொருள்` என்பதிற் போல லகரம் னகரமாகத் திரிந்தது. துன்பு ஆய கட்டுரைகள் - துன்பந்தருவனவாய கட்டிச் சொல்லியவை. அல்லல் - துன்பம். இன்பு - இன்பம். அன்பு ஆயகோ `அன்பே சிவம்` அன்பிற்குரியதாகிய கோயிலுமாம். அமர்தல் - விரும்பியிருத்தல்.

பண் :சீகாமரம்

பாடல் எண் : 11

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான் நற்றமிழ் ஞானசம்பந்தன்
எல்லி யிடைமருதில் ஏத்துபாட லிவைபத்தும்
சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரம்இல்லையே.

பொழிப்புரை :

கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.

குறிப்புரை :

கல்லின் மணிமாடம் - கல்லாற் கட்டப்பட்ட அழகிய மாடங்களையுடைய (கழுமலம்). கழுமலத்தார் - சீகாழியில் உறையும் சிவமறையோர். காவலவன் - அரசன்; வேந்தன். `சண்பையர் வேந்தன்`. எல்லி - இரவு. துயரம் - பிறப்பு இறப்புக்கள்.
சிற்பி