சீகாழி


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

நலங்கொண் முத்து மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொண் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.

பொழிப்புரை :

அழகிய முத்துக்கள், மணிகள் அணிகலன்கள் ஆகியவற்றை நீர்ப் பெருக்குடைய கடலின் மரக்கலங்கள் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் ஆரவாரமுடைய காழிப்பதியில் வெற்றி விளைக்கும் மழு ஒன்றை ஏந்தியவனே! விடையூர்தியனே! என ஏத்தி மலர்மாலை முதலியன சூட்டி வழிபட வல்லாரைத் தீர்தற்கரிய நோய்கள் அடையா.

குறிப்புரை :

நலம் - அழகு. முத்தும் மணியும் அணியும் தலங்களில் ஓதம்கொண்டு சேர்காழி என்க. ஓதம் - அலைகளையுடைய கடல். கலங்கள் - மரக்கப்பல். தன் - சாரியை. கலி - ஓசையையுடைய, செழிப்புமாம். வலம் - வெற்றிக்குரிய வலிமை. விடையாய் - எருது வாகனனே!. அலங்கல் - பூமாலை. அருநோய் - தீர்தற்கு அருமையதான பிறவி நோய் முதலியவை. ஏத்திச் சூட்டவல்லார்க்கு நோய் அடையா என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

ஊரா ருவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரா ரோதங் கரைமே லுயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா வென்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

பொழிப்புரை :

ஊர்தலை உடைய கடற் சங்குகளை மரக்கலங்கள் கடல் ஓதநீர் வழியே கொண்டு வந்து கரையில் சேர்க்கும் கலிக்காழியில் எழுந்தருளிய கங்கை தங்கிய சடையனே! நெற்றிக்கண்ணா! என்று பல முறையும் அவனது பேர் ஆயிரமும் பிதற்றப் பிணிகள் தீரும்.

குறிப்புரை :

ஊர் ஆர் சங்கம் - ஊர்தல் பொருந்திய சங்குகளையும். உவரி - உப்பையுடைய கடலில் (உள்ள சங்குகளை). வங்கம் - கப்பல். கொடு - கொண்டு. கார் ஆர் ஓதம் - மேகம் உண்ணும் கடலின் அலைகள். வங்கம் கரைமேல் உயர்த்தப்படல் இல்லையாதலின், வங்கம் செயப்படுபொருளாகாது. வங்கம் சங்கத்தைக் கொண்டுவந்து ஓதம் கரைமேல் உயர்த்தும் என்க. கொடுவரல் வங்கத்தின் வினை. உயர்த்துதல் ஓதத்தின் வினை. என்று என்று:- அடுக்கு இடைவிடாது சொல்லற் பொருட்டாய் நின்ற குறிப்பு. ஆயிரம் பேரும் - அநேக நாமங்களையும். பிணிதீரும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வடிகொள் பொழிலின் மழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்ற லணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை யல்ல லவலமே.

பொழிப்புரை :

திருத்தமான சோலைகளில் மழலையாய் வரிவண்டுகள் இசைபாட மணம் கமழும் மலர்களில் படிந்து தென்றல் வீதிகளை அடைந்து மணம் பரப்பி இதம் செய்யும் கலிக்காழியில் எழுந்தருளிய முடிகொள் சடையாய்! முதல்வா என்று தவம் முயன்று ஏத்தி அவன் அடிகளைத் தொழுவார்க்கு அல்லல் அவலம் ஆகியன இல்லை.

குறிப்புரை :

வடி - திருத்தம், `வடிநீள்மதில்`(புறம் 18.) மாம்பிஞ்சு என்றுமாம். மழலை - நிரம்பா மொழிபோலும் இனிமை செய்யும் வண்டின் ஓசை. கடி - மணம். போதின் தென்றல் - மலரும் பருவத்தையுடைய போதுகளிற்பட்டு அவற்றின் மணத்தைக் கொண்டு எறியும் (மந்தமாருதம்) தென்காற்று. சடைமுடி. முயன்று - `தவமுயன்று`. அடி - திருவடிகளை. கைதொழுவார்க்கு அல்லலும் அவலமும் இல்லை என்க. அல்லலால் வரும் அவலம் எனலுமாம். அல்லல் - துன்பம். அவலம் - அழுகை, சோர்வு, வறுமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலு ளோத மேறுங் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியா யெனப்பேணி
நினைக்க வல்ல வடியார் நெஞ்சி னல்லாரே.

பொழிப்புரை :

ஆரவாரிக்கும் கடலின் ஓதம் பவளங்களையும் முத்துக்களையும் வீடுகளில் கொண்டு வந்து சேர்த்து வளம் செய்யும் கலிக்காழிப்பதியுள் எழுந்தருளிய, பனைபோன்ற கையை உடைய யானையை ஈர்ந்து அதன் தோலைப் போர்த்தவனே! பெரியாய் என விரும்பிப் பேணி நினைக்க வல்ல நெஞ்சினை உடையார் நன்னெஞ்சுடையார் ஆவர்.

குறிப்புரை :

மனை - வீடு. கனைக்கும் - ஒலிக்கும். ஓதம் - அலை. பனைகைபகடு ஈர் உரியாய் - பனைமரம் போலும் பருத்த துதிக்கையையுடைய யானையின் ஈர்த்ததோலைப் போர்த்தவரே!. ஈர் - ஈர்த்த, உரித்த, ஈர் உரி - (ஈர்மை - குளிர்ச்சி) ஈரியதாய உரி எனப் பண்புத் தொகையுமாம். பேணி - விரும்பி. நெஞ்சின் நல்லார் - நெஞ்சின் நன்மையையுடையார். நல்ல நெஞ்சத்தார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பரிதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.

பொழிப்புரை :

கதிரவன் உலாவரும் உலகின்கண், சிறப்புமிக்க தொண்டுகளோடு சுருதிகளை அறிந்த விண்ணோரும் மண்ணோரும் விரும்பி வழிபடும் கலிக்காழியுள் மேவிய செவிவழியாகக் கேட்டு ஓதப்பெறும் நான்கு வேதங்களான செம்மையைத் தருபவனை நினைந்து, அவனை வழிபட, எழுந்தால் தவறாது உங்கள் துன்பங்கள் தீரும்.

குறிப்புரை :

பரிதி - சூரியன். இதைப் பருதி என்றெழுதுவது குரிசில் என்பதைக் குருசில் என்றெழுதுவது போலும் பிழை. (இலக்கியச் சொல்லகராதியின் உபக்கிரமணிகையில் பக்கம் 15, பார்க்க) அடிசில், பரிசில் முதலியவற்றுள் இரண்டாவதெழுத்து உகரமாய் நிற்றலில்லாமையே அதற்குச் சான்று. `பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில் வலியவாகும் நின்தாள்தோய் தடக்கை` (புறம் 14.) `பரிசில் நல்குவையாயிற் குரிசில் நீ` (புறம் .146) பரிசில் மன்னும் குரிசில் கொண்டதுவே` (புறம் .333) என எதுகையில் நின்றதறிக. ஏனையிடங்களுள், குருசில் என்றிருத்தல் பொருந்தாமை. இவ்விரன்டு காரணங்களால் புலப்படும். சுருதி - கேள்வி. நான்மறைக் கேள்வியான செம்மை தருவானை வழுவாவண்ணம் கருதி எழுமின் துயர்போம் என்க. ஆசிரியர், நான்மறைகளையும் ஆறங்கங்களையும் நினைவூட்டும் இடங்களை நோக்கின் `வேதநெறி தழைத்தோங்க ... அழுத` உண்மை தெளிவாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

மந்த மருவும் பொழிலி லெழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்த நீங்க வருளும் பரனே யெனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.

பொழிப்புரை :

தென்றல் தவழும் பொழிலின்கண் எழுச்சியோடு தேனை உண்டு மணம் பொருந்தியனவாய் வரிவண்டுகள் இசை செய்யும் கலிக்காழியில் விளங்கும், பந்தங்கள் நீங்க அருளும் பரனே! என ஏத்தி அவனைச் சிந்தையில் நினைவார், செம்மை நீங்காதிருப்பர்.

குறிப்புரை :

மந்தம் - தென்றல் காற்று. மருவும் - பொருந்தும். எழில் - எழுச்சி. மது - தேன். கந்தம் - மணம். பந்தம் பசு பாசப்பற்று. `பற்றற பற்றற என்பதெல்லாம் பசுபாசம் விடல் மற்றொரு பற்றறல் இல்லை என்றான், மன்னும் வெங்கலியைச், செற்றருள் சிற்றம்பலநாடி வண்மைச் சிரபுரத்தோன் உற்றதபோதனரே ஒழிந்தே இரும் உம்மையுமே` எனும் சிற்றம்பலநாடிகள் சாத்திரக்கொத்துள் வருங்கட்டளைக் கலித்துறையை அறிக. `பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை` அப்பசு பாசம் ஆகிய பந்தம் நீங்காமல் பார்த்தல் கூடாது. `பந்தம் நீங்க அருளும் பரனே என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பார்` என்பது அதை இனிது விளக்கிற்று. செம்மை `திருநின்ற செம்மை`. (தி .4 ப .8 பா .1; தி .7 பதி .396)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

புயலார் பூமி நாம மோதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணா ரொலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.

பொழிப்புரை :

மேகங்களால் வளம் பெறும் மண்ணுலகில் வாழும் கயல் போலும் விழிகளை உடைய பெண்கள் இறைவன் திருப்பெயர்களைப் புகழ் பொருந்த இசையோடு ஓதிஒலி செய்யும் கலிக்காழியுள் விளங்கும் அப்பெருமானை அன்பு மேலிடத் தொழுது ஏத்த முயல்வார் மேல் கொடிய கூற்றுவன் வந்தடையான்.

குறிப்புரை :

புயல் - மேகம். பெருங்காற்று எப்போதும் உள்ள தன்மையின்மையின் பொருந்தாது. பூமி - மண்ணிடத்துள்ளோர். நாமம் - `சிவனெனும் நாமம்` `நந்திநாமம் நமச்சிவாயவே` `நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன்` `நாமம்பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் ... உரைக்கத் தருதி` `திருநாமம் அஞ்செழுத்தும் செப்பாராகில்` `பராபரன் என்பது பேராக்கொண்டார்` (அப்பர். 310. பொது . 11.). கயல் ஆர் கண்ணார் - மீனோக்கியர். கயற்கண்ணியர். பண் ஆர் ஒலி - பண்ணொடு பொருந்திய இசை. பயில்வான்தன்னை - பயின்ற தொல்லோனை (சிவபிரானை) `பழையோன்`. பத்தி - பக்தி. அன்பு ஆர நிறைய. முயல்வார்மீதே முடுகாது கூற்று என்றால், முயன்றார் மீது முடுகாமை கூறல்வேண்டா. `விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்? பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட் டனாரே` (பதி .31 பா .2) கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய் மறையோனுக்கு` (தி .7 பதி .281).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

அரக்கன் முடிதோள் நெரிய வடர்த்தா னடியார்க்குக்
கரக்க கில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் றன்னை யேத்திப் பணிவார்மேற்
பெருக்கு மின்பந் துன்ப மான பிணிபோமே.

பொழிப்புரை :

இராவணனின் முடி, தோள் ஆகியன நெரிய அடர்த்தருளிய, தன் அடியவர்கட்கு மறைக்காமல் அருளைச் செய்யும் பெருமான் எழுந்தருளிய கலிக்காழியை அடைந்து உலகம் முழுதும் பரவிய அப்புகழாளனை ஏத்திப் பணிவார்க்கு இன்பங்கள் பெருகும், துன்பந்தரும் பிணிகள் போம்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். அடியார்க்குக் கரக்ககில்லாது - அடியவர்க்கு (அருளை) மறைக்கமாட்டாமல். கில் - ஆற்றலை உணர்த்துவது. சிவபெருமான் தன் அடியவர்க்கு அருளை மறைக்கும் ஆற்றல் இல்லாதவன் என்பதுணர்க. `குறைவிலா நிறைவு` எனப்படும் பரமேச்சுவரனுக்கும், தன் அடியார்க்கு இன்பங்கள் தருவதை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத ஒரு குறை உண்டு என்று உணர்த்திய நயம் போற்றத்தக்கது. பணிவார்மேல் இன்பம் பெருக்கும், துன்பமானபிணிபோம். கில்லாமை:- `கிற்றிலேன், கிற்பன் உண்ணவே` (திருவாசகம் 45).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மாணா யுலகங் கொண்ட மாலு மலரோனுங்
காணா வண்ண மெரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்ச முடையார்க் கில்லைக் குற்றமே.

பொழிப்புரை :

பிரமசாரி வடிவினனாகி உலகை அளந்து கொண்ட திருமாலும் நான்முகனும் காணா வண்ணம் எரியுருவாய் நிமிர்ந்தான் உறையும் கலிக்காழியை அடைந்து அணிகலன்பூண்ட தனங்களைக் கொண்ட அம்பிகை பாகனைப் புகழ்ந்து போற்றித் திருகல் இல்லாத மனமுடைய அடியவர்க்குக் குற்றம் இல்லை.

குறிப்புரை :

மாணாய் - பிரமசாரியாய். மாண் - மாணி. `குறுமாண் உருவன் தற்குறியாக` (தி .1 ப .101 பா .5) `மாணாகி வையம் அளந்ததுவும்` என்று திருமங்கைமன்னன் பாடியதிலும் மாண் என்பது இப்பொருளில் வந்திருத்தல் அறிக. பூண் - ஆபரணம், பங்கத்தானை - (வாம) பாகத்தையுடைய சிவபெருமானை. கோணா நெஞ்சம் - திருகலில்லாத உள்ளத்தை. கோணல் - `சிந்தைத்திருகு` `மலக்கோண்` `யான் செய் தேன் பிறர்செய்தார் என்னது யான் என்னும் இக்கோணை ஞான வெரியால் வெதுப்பி நிமிர்த்துத் தான் செவ்வே நின்றிட` (சிவஞான சித்தியார் . கடவுள் வாழ்த்துரை + சூ. 10. திருவிருத்தம் . 2.) லுடை யார்க்குக் குற்றம் இல்லை என்க. `இல்லைக்குற்றம்` என்று மிக்குப் புணர்ந்ததற்கு `இல் என் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும் ... ஆகிடன் உடைத்தே` என்ற தொல்காப்பியச் சூத்திர (372) விதி காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவா ரமணாதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் றன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

பொழிப்புரை :

அச்சத்துடன் துன்பம் தரும் பேச்சுக்களை மொழிந்து திரியும் சமணர்களாகிய அறிவிலிகளுக்கும் காலையில் கஞ்சியையுண்டு திரியும் தேரர்களுக்கும் அறிதற்கு அரியவன் உறையும் கலிக்காழியை அடைந்து தஞ்சமாக அடைதற்குரிய அத்தலைவனை நினைபவர்கள் இறப்பும் பிறப்பும் வாராத பேரின்ப உலகம் பெறுவர்.

குறிப்புரை :

அல்லல் - துன்பம் தரும் பேச்சுக்களை. ஆதர் - அறிவில்லார். காலையிற் கஞ்சி உண்ணும் தேரர் என்று கொள்க. அமணரை முற்கூறியதால், உண்பார் என்றது தேரரை என்க. தஞ்சம் - அடைக்கலம். `தஞ்சம்` (தி .3 ப .78 பா .10) `தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேன்` (தி .3 ப . 51 பா .6) (தண் + து + அம்) துன்ப வெம்மையால் வந்து அடைந்தவர்க்குத் தண்மையுடையவரே, அடைக்கலமென்றபோது அபயம் அளிப்பர். அதனால் தஞ்சம் அடைதல் எனப்பட்டது. `தஞ்சேகண்டேன்` (தி .5 ப .50 பா .3) என்று (தண் + து) அம்முப்பெறாது வருதலும் அறிக. `தஞ்ச வண்ணத்தர்`. (தி .4 ப . 17 பா .3) `அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத ... உன் திருவடி அடைந்தேன்` (தி .7) `தஞ்சமென்று தன் தாளது அடைந்த பாலன்மேல் வந்த காலனை உருள நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை` (தி .7 ப .96 பா .1). துஞ்சல் - சாதல். நல்லவுலகம் - பேரின்பவுலகு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஊழி யாய பாரி லோங்கு முயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
றாழு மனத்தா லுரைத்த தமிழ்க ளிவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகின் மகிழ்வாரே.

பொழிப்புரை :

உலக முடிவில் அழிவதான இம்மண்ணுலகில் அழியாது மிதந்த உயர் செல்வம் உடைய காழியில் எழுந்தருளிய ஈசனின் திருவடிகளைப் பேணும் ஞானசம்பந்தன் பணிவான உள்ளத்தோடு உரைத்த தமிழ் மாலையாகிய இப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான வாழ்வுடைய வானோர் உலகில் மகிழ்ந்துறைவர்.

குறிப்புரை :

ஊழி ஆய பாரில் - உக முடிவு ஆன மண்ணுலகில், ஓங்கும் காழி - பிரளய வெள்ளத்தால் அழியாமல் மேல் மிதந்த தோணிபுரம். உயர் செல்வம் - அழியாமல் உயர்ந்த செல்வத்தை உடைய. `கழலே பேணும் சம்பந்தன்` என்ற பிரிநிலை ஏகாரம், உண்மைச் சைவர்க்குச் சிவபக்தியில் ஓர் உறைப்பை விளைக்கும். தாழும் மனத்தால் - பணியும் உள்ளத்தால். `வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்தேத்திடப் பாழ்படும் அவர் பாவமே` (பதி . 157 பா .4) தாழும் மனமுடையவரே, `கோழம்பத்துறை கூத்தன் குரைகழல் தாழும் பத்தர்கள்` ஆவர். `தாழ்வெனுந் தன்மைவிட்டுத் தனத்தையே மனத்தில் வைத்து வாழ்வதே கருதித்தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்` (தி .7 பதி .79) `வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ் பெறலரிது` (சிவ ஞான சித்தியார் -181) வாழி - வாழ்ச்சி. இகரம் தொழிற் பெயர் விகுதி.
சிற்பி