திருப்பாசூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாளா வென்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

மனத்திலும், தலையின்மேலும் வாக்கிலும் உறைபவர், மாலைக்காலம் வரும்போது வந்து என் மனத்தில் விளங்குபவர், மைந்தா! மணாளா! என்று அழைக்க மகிழ்பவர். அவரது ஊர் பசுமையான மாதவி படர்ந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

சிந்தை, தலை, சொல் என மனம், காயம், வாக்கு ஆகிய திரிகரணங்களையும் உணர்த்தி அம் மூன்றிலும் சிவபெருமான் இருத்தலை மூவேறு சிறு வாக்கியங்களாக அருளிய திறம் அன்பரெல்லாராலும் அறியத்தக்கது. சிவபூஜையில் அந்தரியாகத்தாலும், தோத்திரத்தாலும் இந்நிலையை அநுபவித்து உணர்ந்து போற்றுதல் இன்றியமையாதது. (பதி .61 பா .6.) `சிந்தையுள்ளும் நாவின் மேலும் சென்னியும் மன்னினான்` (தி .1 ப .73 பா .9)- சிந்தையிடையார் - `மனத்தகத்தான்`. தலையின் மிசையார். `தலைமேலான்`. செஞ்சொல்லார் - `வாக்கினுள்ளான்`. `மூவாத சிந்தையே மனமே வாக்கே தன் ஆனையாப் பண்ணியேறினான்` (அப்பர் -227.) `வாயானை - மனத்தானை` என்பது இதனின் வேறு. மாலை - மாலைப் பொழுது. (வந்து) வைகும் போழ்து - தங்கும்வேளையில். மைந்தரென்றும் மணவாளரென்றும் துதிக்க மகிழ்பவர் (சிவபெருமான்). பாசூர் மகிழ்வார் ஊர்போலு மென்று கூட்டுக. பைந்தண் மாதவி - பசுமையும் தண்மையுமுடைய குருக்கத்தி. பாசூர் - (பசுமை + ஊர்) இன்றும் பசுமைமிக்கதாகவே விளங்குகிறது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்
றாருந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார்
ஊரு மரவ முடையார் வாழு மூர்போலும்
பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.

பொழிப்புரை :

இடம் விட்டுச்செல்லும்போதும், வரும் போதும் பெம்மானே என்று மனம் நிறைவுறும் அளவும் அடியவர் ஏத்த அருள் செய்பவர். ஊர்ந்து செல்லும் படப்பாம்பை அணிந்தவர். அவர் வாழும் ஊர் உலக மக்களின் பாடல்கள் ஓவாது கேட்கும் பாசூர் ஆகும்.

குறிப்புரை :

பெயர்தல் - பேர்தல் என மருவும். ஆயினும் இங்கு இரண்டும் வேறுபட்டனவாகத் தோற்றுதலால் பொருளிலும் ஏதேனுமொரு வேறுபாட்டைக் கொள்ளுதல் வேண்டும். பேர்தல் முதன் முதலாக இடம் விட்டு அசைதல். பெயர்தல் - மீண்டும் வருதல். இவ்விரண்டு காலத்தும் இறைவனை மனம் நிறைவுறுமளவும் அடியார் ஏத்த அருள் செய்வான். தனை - அளவு. ஊரும் அரவம் - நகரும் பாம்பு. பாரின்மிசையார் - மண்ணுலகத்தார். பாடல் - தோத்திரப் பாடல்கள். ஓவா - ஒழியாத. பாசூரே அருள் செய்வார் ஊர்போலும். `பண்ணின் மொழியார் பாடல் ஓவாப்பாசூரே` (பா -7). இவ்வாறே மேலும் கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கண்
மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விகிர்தனார்
நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவு மூர்போலும்
பைவாய் நாகங் கோடலீனும் பாசூரே.

பொழிப்புரை :

கைகளால் தொழுதும், தலையைத்தாழ்த்தியும், உள்ளம் உருகி வழிபடும் அடியவர்களின் உடற்குறைகளையும் துன்பங்களையும் தவிர்த்தருளும் விகிர்தன். நெய் முதலிய ஆனைந்தும் ஆடுதல் உடையவன், அவன் எழுந்தருளிய ஊர், பாம்பின் படம் போலக்காந்தள் பூக்கள் மலர்ந்துள்ள பாசூராகும்.

குறிப்புரை :

கைகளைப் பெற்றதன் பயனாகப் பாசூரீசன் பைங்கழலைத் தொழுதும், தலை உடையதன் பயனாக வணங்கியும், உள்ளம் வாய்ந்ததன் பயனாக உருகியும் வழிபடும் அடியார்களுடைய மெய்யிற்பொருந்தியகுறைகளையும் துயரங்களையும் ஒழிக்கும் அநாதி மலமுத்தர். நெய் முதலிய அஞ்சும் (ஆனைந்தும்) ஆடுதலுடையார். திருமுறைகளுள் `ஆனைந்து` எனப்படினும் ஜலமும் மயமும் விட்டுப் பால் முதலிய மூன்றுமே கூறப்படும் உண்மையை ஆங்காங்குணர்க. `ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்` பால் நறு நெய் தயிர் ஐந்தாடு பரம்பரன்` (தி .7 ப .84 பா .9) நிலாவுதல் - நிலவுதல். பை வாய் நாகம் - படம் வாய்ந்த நாகம்; படத்தொடு கூடியவாய் எனினும் ஆம். நாகம் கோடல் ஈனும் - பாம்பைப்போல வெண்காந்தள் மலரைத் தோற்றும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற் பொலிவெய்தக்
கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்
தங்கா தலியுந் தாமும் வாழு மூர்போலும்
பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

பொழிப்புரை :

சினந்து படம் எடுத்தாடும் பாம்பும், கங்கையும் சடையின் மேல் விளங்கித்தோன்ற, தேன் நிறைந்த கொன்றை மலரைச் சூடி என் உள்ளம் குளிர் வித்தவர். அவர் தம் காதலியாரோடு தாமும் வாழும் ஊர் பசிய காலோடு கூடிய முல்லைக் கொடிகள் பற்கள் போல அரும்புகள் ஈனும் பாசூராகும்.

குறிப்புரை :

`கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோமே` என்று அருளிய உண்மையை உணர்ந்து நம்பியாரூரரும், `வம்பறாவரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தனடியார்க்கு மடியேன்` என்றருளினார். அதனை ஈண்டும் உணர்வாம். `கொன்றைமாலை கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே` என்று ஆளுடை அரசரும் அருளியதை நினைக்க (தி .6 ப .99 பா .8). சிவபூஜை செய்வோருக்குக் கொன்றைப் பூக்களால் வழிபடும் பேரன்பு உண்டு. பொலிவு - விளக்கம். எய்த - அடைய. கொங்கு - மணம். குளிர்வித்தாராகிய தாமும் தம் காதலியும் வாழும் ஊர் என்க. காதலி - உமாதேவியார். பைங்கான் - பசிய மணம் ;- கால் கொடியையும் காட்டையும் கொடியேற நட்டகாலையும் குறித்ததாக்கோடலும் பொருந்தும். பல்லரும்பு - பல்போலும் அரும்பு: பல அரும்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆடற் புரியு மைவா யரவொன் றரைச்சாத்தும்
சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்
வாடற் றலையிற் பலிதேர் கையா ரூர்போலும்
பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

பொழிப்புரை :

ஆடும் ஐந்து தலைப்பாம்பை இடையிலே கட்டிக் கொண்டுள்ள மேலான செல்வர். நினைப்பவர் சிந்தையினின்றும் பிரியாதவர். ஊன்வாடியதலையோட்டில் பலிதேரும் கையினர். அவரது ஊர், பாடும் குயில்கள் வாழும் பூஞ்சோலைகளை உடைய பாசூர் ஆகும்.

குறிப்புரை :

ஆடல் புரியும் - (படமெடுத்து) ஆடுதலைச்செய்யும். ஐவாய் அரவு - ஐந்தலைப் பாம்பு. அரை - திருவரை. சாத்தும் - சார்த்தும். சேடச் செல்வர் - சேடராகிய செல்வர் (தி .1 ப .5 பா .2) உடையவர். `சேடர் வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன்`. `சேடர் விண்ணோர்கட்குத் தேவர்` (தி .3 ப .9 பா .7) `சேடர் தேவன் குடித் தேவர் தேவன்` (தி .3 ப .25 பா .11) என் புழிப்போலப் பெரியோருமாம். (தி .1 ப .52 பா .11). வாடல் தலை - வாடுதலை அடைந்த பிரமகபாலம். `வாடல் வெண்தலை சூடினர்` (தி .1 ப .56 பா .7) வாடல் வெண்டலை மாலை (தி .2 ப .50 பா .11). `வாடற்றலை மாலை` (தி .2 ப .71 பா .3) `வாடல்வெண்தலை` (தி .2 ப .112 பா .2) பாடல் குயில்கள் - பாடுதலையுடைய குயில்கள். பயில் - பயின்ற. பூஞ்சோலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கானின் றதிரக் கனல்வாய் நாகங் கச்சாகத்
தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்
மால்கொண் டோட மையல் தீர்ப்பா ரூர்போலும்
பால்வெண் மதிதோய் மாடஞ் சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

திருவடி ஊன்றித் தாளம் இட நாகத்தைக் கச்சாக இடையில் கட்டிக்கொண்டு தோலை ஆடையாக உடுத்தவர். விடை ஊர்தியர். தம்மைத் தொழுபவர்கள் அன்பு கொண்டு தம்மைத் தொழ அவர்களின் மயக்கங்களைத் தீர்ப்பவர். அவரது ஊர் பால் போன்ற வெண்மதிதோயும் மாட வீடுகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

கால் நின்று அதிர - திருவடி ஊன்றி நடஞ்செய்ய. கனல் - நஞ்சின் வெம்மை. கச்சு அரைக்கு அசைக்கும் கச்சு. விடையார் - இடபவாகனத்தார். மால் - அன்பு.(ப . 182 பா .1). மையல் - மயக்கம். மதிதோய் மாடம் - சந்திரமண்டலத்தை அளாவிய உயரியமாடம். பால் வெண்மதி - பால்போலும் வெண்ணிறத்தை உடைய திங்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கண்ணி னயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி
எண்ணுந் தனையு மடியா ரேத்த வருள்செய்வார்
உண்ணின் றுருக வுகவை தருவா ரூர்போலும்
பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.

பொழிப்புரை :

இரு கண்களுக்கு அயலே நெற்றியில் மூன்றாவதாக ஒரு கண்ணை உடையவர். தம் திருவடிகளை நினைந்து எண்ணும் போதெல்லாம் உவகைகள் தருபவர். அவரது ஊர் பண்ணிசை போல மொழிகள் பேசும் பெண்கள் பாடும் ஓசை நீங்காத பாசூராகும்.

குறிப்புரை :

கண்ணின் அயலே - வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் அயலாகும் மேற்பக்கத்தில். கண் ஒன்று - நெற்றிக் (தீக்) கண்ணொன்றை. கழல் - திருவடி. உன்னி - நினைந்து. எண்ணும் தனையும் - அத்திருவடிச் சிறப்பைக் கருதுமளவும். உவகை - உவப்பிற்குரிய வரங்களும் முத்தி இன்பமும். `உகவை` என்று கழகப்பதிப்பில் இருப்பது `தான்நினைத்தைம் புலனும் அழிந்தசிந்தையந்தணாளர்` (தி .1 ப .53 பா .6) என்பதில் புலனும் என்று புள்ளிமாறியது போல் இதிலும் புள்ளிமாறி நின்றவாறறிக. (பார்க்க: பதி .19. பா .3.) உவகை தருவான்:- மதுரை ஞானசம்பந்தப்பிள்ளை பதிப்பில் `உவகை` என்றே உளது. அடங்கன் முறைப்பதிப்புகளில் அப்பதிப்பே மிகமேலானது என்பது அறிஞர் முடிபு. `உரந்தோன்றும் பாடல் கேட்டு உகவையளித்தீர்`. `உகவாதார் புரந்தோன்றும் மும்மதிலும் எரியச் செய்தீர்` (தி .2 ப .54 பா .8) பண்ணின் - பண்ணைப்போன்ற. மொழியார் - மொழிகளை உடைய மகளிர். ஓவா - ஒழியாத. `பாரின் மிசையார் பாடல் ஓவா` (பா .2.)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.

பொழிப்புரை :

புகழ்குன்றாத தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை மனம் கூசுமாறு அடர்த்துக் கூரிய வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மையே பலகாலம் பேசிப்பிதற்றும் அடியவர்கட்குப் பெருமை தருபவர். அவரது ஊர் பசுமையான நீர் நிலைகளும், வயல்களும் சூழ்ந்த பாசூராகும்.

குறிப்புரை :

தேசு - சூரியன் தன்மேல் செல்லாதிருப்பினும் சிவபக்தியின் முதிர்ச்சியையுடைய அரசனது ஆட்சியாதலின் வையங்காக்கும் ஒளி. குன்றா - குறையாத. தெள்நீர் இலங்கை - தெளிந்த நீரையுடைய கடல் நடுவிலே உள்ள இலங்கை. கூச - மனம் கூசுதலடைய. வீரத்தால் நாண என்பதும் பொருந்தும். வாள் கொடுத்த வரலாறு முன்னும் பின்னும் பலமுறை கூறப் பெற்றுள்ளது. `கொடுப்பார் தம்மையே பேசி` என்ற ஏகாரத்தை ஊன்றி நோக்குதல் நன்று. பெருமை - இம்மை மறுமை நலங்களும் வீட்டின்பமும். பாசி - நீர்ப்பாசி. தடமும் வயலும் நீர்வளத்தால் பசுமை உடையவாதலை உணர்த்தியது. இதனால் ஈண்டுப் பாசூரென்ற பெயர்க்காரணமும் நன்கு விளங்குகின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

நகுவாய் மலர்மே லயனு நாகத் தணையானும்
புகுவா யறியார் புறநின் றோரார் போற்றோவார்
செகுவா யுகுபற் றலைசேர் கையா ரூர்போலும்
பகுவாய் நாரை யாரல் வாரும் பாசூரே.

பொழிப்புரை :

விரிந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முக னும், நாகணையில் பள்ளிகொள்ளும் திருமாலும் புகுமிடம் அறியாதவராகவும் புறம்பே நின்று அறிய இயலாதவராகவும் போற்றுதலை ஓவாதவராகவும் நிற்க அழிந்தவாயிற் பல்லுடைய தலையோடு சேர்ந்த கையினை உடையவர். சிவபெருமான். அவரது ஊர் பிளந்தவாயினை உடைய நாரைகள் ஆரல் மீன்களை வௌவி உண்ணும் பாசூராகும்.

குறிப்புரை :

நகு வாய் மலர் - திறந்த வாயையுடைய தாமரை, நாகத்து அணையான் - பாம்பணை மேலுறங்குபவன். புகுவாய் - சிவபெருமானைக் காணப்புகும் இடம். ஓரார் - உணரார். போற்று - துதி. ஓவார் - ஒழியார். செகு - அழிந்த. வாய் - வாயிலிருந்து. பல் உக்க தலை - பல் சிந்திய தலை. `பல் இல் ஓடு கையேந்தி` (தி .1 ப .51 பா .4) (தி .2 ப .91 பா.6) (தி .3 ப .45 பா .4) `பல்லார் தலைசேர் மாலை` (தி .2 ப .63 பா .3) `வெண் பற்றலை கலனா` (தி .7 பா .506) `பல் இல் வெள்ளைத்தலையன்` (தி .7 பா .831). பகு வாய் நாரை - பிளந்த வாயையுடைய நாரை, ஆரல் மீன்களை வாரும் பாசூர். வாடும் - வௌவும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூய வெயினின் றுழல்வார் துவர்தோ யாடையார்
நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்
காவல் வேவக் கணையொன் றெய்தா ரூர்போலும்
பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

பொழிப்புரை :

நல்ல வெயிலில் நின்று உழல்பவரும், துவர் தோய்ந்த ஆடையை அணிந்தவருமாகிய சமண புத்தர்கள் நாவினால் வெய்ய சொற்களைச் சொல்லித்திரியும் நீதி அற்றவர்கள் காவல் புரியும் முப்புரங்களும்வெந்தழியுமாறு கணை ஒன்றை எய்த சிவபிரானது ஊர் பாவை போல மலரும் குராமரங்கள் செறிந்த சோலைகள் சூழ்ந்த பாசூர் ஆகும்.

குறிப்புரை :

தூய வெயில் - நல்லவெயில். தூய்மை - கலப்பின்மை உணர்த்திற்று. `சுத்தப்பொய்` என்பதுபோல. வெய்ய - கொடிய சொற்களை. நயம் - நீதி. காவல் - மும்மதில்: திரிபுரம் தொழிலாகுபெயர். பாவைக்குரவம் - பாவைபோலும் பூத்தலையுடைய குரவமரம். `அரவின்வாயின் முள்ளெயிறு ஏய்ப்ப அரும்பு ஈன்று குரவம்பாவை முருகமர் சோலைக் குற்றாலம்` (தி .1 ப .99 பா .9).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஞான முணர்வான் காழி ஞான சம்பந்தன்
தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்க்
கானம் முறைவார் கழல்சேர் பாட லிவைவல்லார்
ஊன மிலரா யும்பர் வானத் துறைவாரே.

பொழிப்புரை :

கலைஞானம் சிவஞானம் ஆகியவற்றை உணர்ந்தவனாகிய காழி ஞானசம்பந்தன் தேனும், வண்டும் இன்னிசை பாடும் திருப்பாசூர் என்னும் காடுகள் நிறைந்த ஊரில் உறையும் இறைவனின் திருவடிகளில் சேர்ப்பிக்கும் பாடல்களாகிய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் குற்றம் அற்றவராய் வானுலகில் உறைவர்.

குறிப்புரை :

ஞானம் - சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலாக்கலை ஞானமும், பவமதனை அறமாற்றும் பாங்கினிலோங்கிய ஞானமாகிய உணர்வரிய மெய்ஞ்ஞானமும். உணர்வான் - திருவருண்ஞானம் குழைத்து அளித்த அம்பிகையின் திருமுலைப்பால் குடித்த அந்நிலையில் (ஓதாது) உணர்ந்தவர். தேன் - நால்வகை வண்டுள் ஒன்று. திருப்பாசூர்க் கானம் - என்பதை நோக்கின் `பைங்கான்` (பா .4) என்புழிக் காடென்னும் பொருள் ஏற்றதாதலறிக. ஊனம் - பிறப்பிறப்பாகிய குறைகள். உம்பர் வானத்து - வானோர்க்குயர்ந்த உலகத்தில்.
சிற்பி