திருவெண்காடு


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

உண்டாய் நஞ்சை யுமையோர் பங்கா வென்றுள்கித்
தொண்டாய்த் திரியு மடியார் தங்கள் துயரங்கள்
அண்டா வண்ண மறுப்பா னெந்தை யூர்போலும்
வெண்டா மரைமேற் கருவண் டியாழ்செய் வெண்காடே.

பொழிப்புரை :

நஞ்சை உண்டவனே! உமைபங்கா! என்று கூறி மனத்தில் தியானித்துத் தொண்டராகிப் பணிகள் புரியும் அடியவர்களைத் துயரங்கள் நெருங்காவண்ணம் அவற்றை அறத்தீர்த்தருளும் எந்தையினது ஊர், வெண்டாமரை மலர்களில் கருவண்டுகள் யாழ் போல ஒலித்துத் தேனுண்ணும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நஞ்சை உண்டாய் உமையோர்பாங்கா என்று உள்கி - நஞ்சினை அமுதாக உண்டு தேவர் முதலியோரைக்காத்த தலைவரே! அம்மையப்பரே! என்று உள்ளத்தில் தியானம் புரிந்து. தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் - தொண்டராகி உலவும் அடியவர்களுடைய. அண்டாவண்ணம் அறுப்பான் - மீண்டும் அண்டாதவாறு அறத்தீர்த்தருள்பவன். வெண்டாமரை மலர்மேல் கருவண்டுகள் யாழ் (ஒலியைச்) செய்யும் வளத்தையுடைய திருவெண்காடு எந்தை ஊர் போலும். மேலும் இவ்வாறே கொள்க. (பா -2,4,5,6,8,9, நோக்குக).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

நாத னம்மை யாள்வா னென்று நவின்றேத்திப்
பாதம் பன்னாள் பணியு மடியார் தங்கண்மேல்
ஏதந் தீர விருந்தான் வாழு மூர்போலும்
வேதத் தொலியாற் கிளிசொற் பயிலும் வெண்காடே.

பொழிப்புரை :

நாதனாகிய பெருமான் நம்மை ஆள்வான் என்று அவன்பெயரைப் பல முறையும் கூறி ஏத்திப் பல நாள்கள் திருவடிகளைப் பரவும் அடியவர்க்கு வரும் குற்றங்களைத் தீர்த்தருள எழுந்தருளியிருப்பவனது ஊர், வேதஒலிகளைக் கிளிகள் பேசும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நம்மை நாதன் ஆள்வான் என்று நவின்று ஏத்திப் பல்நாள் பாதம்பணியும் அடியார் தங்கள்மேல் ஏதம்தீர இருந்தான் - நம்மை நம்பெருமான் ஆளாக்கொண்டு காப்பான் என்று கருத்திற் கொண்டு, வாயால் பயின்று துதித்துப் பலநாளும் வணங்குகின்ற அடியவர்களிடத்தில் (அணுகும்) துன்பங்கள் தீர்ந்தொழியும் பொருட்டு எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். `பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள் பொருட்சொல்லும் மிழலை` (தி .1 ப .132 பா .1) கிளிகள் வேதத்தின் ஒலியாற் சொற்பயிலும். `பண்மொழியால் அவன் நாமம் பலவோதப் பசுங்கிள்ளை வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே` (பதி .184. பா .6).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

தண்முத் தரும்பத் தடமூன் றுடையான் றனையுன்னிக்
கண்முத் தரும்பக் கழற்சே வடிகை தொழுவார்கள்
உண்முத் தரும்ப வுவகை தருவான் ஊர்போலும்
வெண்முத் தருவிப் புனல்வந் தலைக்கும் வெண்காடே.

பொழிப்புரை :

குளிர்ந்த முத்துக்கள் அரும்பும் முக்குளங்களைத் தீர்த்தங்களாகக் கொண்டுள்ளவனை நினைந்து கண்களில் முத்துக்கள் போல நீர் அரும்ப அவனுடைய கழலணிந்த சேவடிகளைக் கைதொழுவார்களின் உள்ளங்களில் முத்துக்கள் போன்று தூய நன்மை தோன்ற உவகைதரும் இறைவனது ஊர் வெண்மையான முத்துக்கள் போன்ற அருவியின் புனல் வந்து அலைக்கும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

தண் முத்து - தண்ணிதாகிய முத்துக்கள். அரும்ப - அரும்பு போலத்தோன்ற. தடம் மூன்று - மூன்று திருக்குளங்களை; `முக்குளம்`. உன்னி - தியாநம் புரிந்து. கண்முத்து அரும்ப - கண்களில் ஆனந்த பாஷ்பம் முத்துக்களைப் போலச்சொட்ட. கழல் சே அடி - கழலைப் பூண்ட செய்ய திருவடிகளை. உள் - உள்ளத்தே. முத்து அரும்ப - முத்துப் போலும் வெளிதான நிலை (அகளங்கம் ஆன தூய தன்மை) தோன்ற. உவகை தருவான் - இம்மை மறுமை இன்பங்களும் பேரின்பமும் அருள்பவர். வெண்முத்து அருவி - வெளிய முத்தினை ஒத்த அருவி. புனல் - நீர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நரையார் வந்து நாளுங் குறுகி நணுகாமுன்
உரையால் வேறா வுள்கு வார்கள் உள்ளத்தே
கரையா வண்ணங் கண்டான்மேவு மூர்போலும்
விரையார் கமலத் தன்ன மருவும் வெண்காடே.

பொழிப்புரை :

தலையில் நரை வந்து உடல் நாளுக்கு நாள் குறுகி மூப்பு நணுகுதற்குமுன், உரை வேறாகாது நினைபவர் உள்ளத்தே மெலிந்து கரைந்து ஒழியாதவாறு தன்னைத் தோற்றுவிப்பவனது ஊர், மணம் கமழும் தாமரை மலரில் அன்னங்கள் தங்கிமகிழும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

நரையார் - வெளுத்த மயிர். `தென்றலால் புகுந்துலவும் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்` (தி .1 ப .60 பா .7) `கொண்டலார்` கொணர்ந்து அங்கு உலவுந்திகழ் கோட்டாற்றில் தொண்டெலாம் துதிசெய்ய` (பதி .188 பா .8). நரையார் - (தி .1 ப .7 பா .91) நாளும் குறுகி - உயிர் உடம்பின் நீங்கும் நாளும் நெருங்கி, இனி வாழ்நாளும் சுருங்கி எனலுமாம். நணுகுதல் - நாளின் வினை. உரையால் வேறா - வாயுரையால் வேறுபடாத படி. உள்குவார்கள் - தியானிப்பவர்களது. கரையாவண்ணம் - கரைந்து ஒழியாதவாறு நிலைத்து நிற்கும் வகை. இறக்கும் முன் இறைவனை அகத்தில் நினைந்தும், வாயால் வழுத்தியும் வழிபடுவார் உள்ளத்தில் அவனது திருவருளுருவம் கரையாது நிற்கும் என்றவாறு. விரை - மணம். கமலத்து - தாமரை மலரில். அன்னம் - அன்னப்பறவை மருவும் - பொருந்தி வாழும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பிள்ளைப் பிறையும் புனலுஞ் சூடும் பெம்மானென்
றுள்ளத் துள்ளித் தொழுவார் தங்க ளுறுநோய்கள்
தள்ளிப்போக வருளுந் தலைவ னூர்போலும்
வெள்ளைச் சுரிசங் குலவித் திரியும் வெண்காடே.

பொழிப்புரை :

இளம்பிறையையும் கங்கையையும் முடியிற் சூடிய பெருமான் என்று மனத்தில் நினைந்து தொழுபவர்களின் பெருகிய நோய்களைத் தள்ளிப் போகுமாறு செய்தருளும் தலைவனது ஊர், வெண்ணிறமான உள்கோடுகளை உடைய சங்குகள் உலவித்திரியும் திருவெண்காடாகும்.

குறிப்புரை :

பிள்ளைப்பிறை - இளம்பிறை. புனல் - கங்கை நீர். பெம்மான் - பெருமகனென்பதன் மரூஉ. உள்ளத்து உள்ளி தொழுவார் தங்கள் - மனத்தில் நினைந்து வழிபடும் அடியார்களுடைய. உறு நோய்கள் - மிக்க நோய்களை. தள்ளி - உந்தி. போக - போயொழிய. போகத்தள்ளியருளும் எனலுமாம். வெள்ளைச்சுரி சங்கு உலவித் திரியும் - வெண்ணிறமுடைய சுரிந்த சங்குகள் உலாவித்திரியும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

ஒளிகொண் மேனி யுடையா யும்ப ராளீயென்
றளிய ராகி யழுதுற் றூறு மடியார்கட்
கெளியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
வெளிய வுருவத் தானை வணங்கும் வெண்காடே.

பொழிப்புரை :

ஒளி கொண்ட திருமேனியை உடையவனே! உம்பர்களை ஆள்பவனே! என்று அன்புடையவராய் அழுது பொருந்தும் அடியவர்க்கு எளியவன். தேவர்களுக்கு அரியவன் ஆகிய சிவபிரானது ஊர் வெண்ணிறமுடைய ஐராவதம் வணங்கி அருள் பெற்ற திருவெண்காடாகும்.

குறிப்புரை :

ஒளி கொள் மேனி உடையாய்! உம்பராளீ என்று - ஞானப்பிரகாசத்தைக் கொண்ட திருமேனி உடையவரே, தேவர்களை ஆள்பவரே என்று துதித்து. அளியர் ஆகி - அன்பின் முதிர்ச்சியை உடையராகி. அழுது உற்று ஊறும் அடியார்கட்கு எளியான் - உள்ளுருகியும், கண்ணீர் சொரிந்தும், (மெய்யன்பு) மிக்குத்திருவருளில் ஊறிய அடியவர்கட்கு எளியவன். அமரர்க்கு அரியான் - அழியும் இன்பத்தை விரும்பும் தேவர்கட்கு அரியவன். வெளிய உருவத்து ஆனை - வெண்ணிறத்தைப்பெற்ற வடிவத்தை உடைய யானை. `அடைந்து அயிராவதம் பணிய மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடு` `வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான்` (தி .2 ப .184 பா .7,9).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கோள்வித் தனைய கூற்றந் தன்னைக் குறிப்பினான்
மாள்வித் தவனை மகிழ்ந்தங் கேத்த மாணிக்காய்
ஆள்வித் தமர ருலக மளிப்பா னூர்போலும்
வேள்விப் புகையால் வான மிருள்கூர் வெண்காடே.

பொழிப்புரை :

உயிர்கவர்வதில் வித்துப் போல்பவனாகிய கூற்றுவனை, சிவபிரானை நினையும் குறிப்பினால் மாள்வித்து அச்சிவபிரானை மகிழ்வொடு ஏத்திய சுவேதகேது முனிவரை அமருலகம் ஆளச்செய்து அணிசெய்தவனது ஊர் வேள்விப்புகையால் வானம் இருள்கூர்கின்ற திருவெண்காடு ஆகும்.

குறிப்புரை :

கோள் - கொலை. கோள் வித்து - கொலைக்கு விதை. அனைய - போன்ற. கூற்றம்தன்னை - கூற்றுவனை, எமனை. குறிப்பினால் - சிவத்தியாநத்தால்; `மறிதிகழ் கையினன் வானவர்கோனை மன மகிழ்ந்து குறித்தெழு மாணி` (தி .4 ப .107 பா .4). மாள் வித்து - மாளச்செய்து. அவனை - அச்சிவபெருமானை. மாணி - பிரமசாரி. சுவேதகேது முனிவர் (பார்க்க: தி .2 ப .48 பா .5). அமரர் உலகம் ஆள்வித்து அளிப்பான் - தேவலோகத்தை ஆளச்செய்து அருள் செய்வான், அளித்தல் அன்பின் முதிர்தல். வேள்விப்புகை - யாகத்தீயிலிருந்து எழும்புகை. இருள் கூர் - இருள் மிகும். `முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்குனிமதி மூடி நீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே` (தி .2 ப .83 பா .5).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

வளையார் முன்கை மலையாள் வெருவ வரையூன்றி
முளையார் மதியஞ் சூடி யென்று முப்போதும்
இளையா தேத்த விருந்தா னெந்தை யூர்போலும்
விளையார் கழனிப் பழனஞ் சூழ்ந்த வெண்காடே.

பொழிப்புரை :

வளையலணிந்த முன்கையை உடைய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்தகயிலை மலையைக் கால்விரல் ஊன்றி நெரித்து, முளைமதிசூடிய இறைவனே என அடியவர் முப்போதும் தளராது ஏத்துமாறு எழுந்தருளிய எந்தையாகிய சிவபெருமானது ஊர், விளைவைக் கொண்ட வயல்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

குறிப்புரை :

வளை ஆர் முன்கை - வளையல் பொருந்திய முன் கையை உடைய. மலையாள் - இமாசலகுமாரி. வெருவ - அலற. வரை - கயிலைமலை. முளையார் மதியம் - முளைத்தல் பொருந்திய இளம்பிறை. முப்போது - காலை, பகல், மாலை. `வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழ நின்ற முதல்வனை` (தி .4 ப .7 பா .3). இளையாது - (மனம்) இளைப்புறாமல். விளை - விளைவு. ஆர் - நிறைந்த. கழனி - வயல். பழனம் - நீர் நிலம். `செந்நெலங் கழனிப்பழனத்து அயல்` (தி .2 ப .1 பா .1).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

கரியா னோடு கமல மலரான் காணாமை
எரியாய் நிமிர்ந்த வெங்கள் பெருமா னென்பார்கட்
குரியா னமரர்க் கரியான் வாழு மூர்போலும்
விரியார் பொழிலின் வண்டு பாடும் வெண்காடே.

பொழிப்புரை :

கரிய திருமாலும் கமலமலரில் உறையும் நான் முகனும் அடி முடி காண இயலாதவாறு எரியுருவாய் நிமிர்ந்த எங்கள் பெருமானே! என்பார்கட்கு உரியவனும் அமரர்க்கு அரியவனுமான சிவபிரானது ஊர், வண்டுகள் பாடும் விரிந்த பொழில்கள் சூழ்ந்த திருவெண்காடாகும்.

குறிப்புரை :

கரியான் - மாயன். கமல மலரான் - தாமரையில் வாழும் பிரமன். காணாமை - காணமாட்டாத வகை. எரி - தீப்பிழம்பு. என்பார்கட்கு - என்று துதிக்கும் அடியவர்களுக்கு. உரியான் - அருளும் உரிமை உடையவன். `அமரர்க்கு அரியான்` (பா .6). விரி - விரிவு. பொழிலின் - சோலைக்கண்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாடு மடியார் பலருங் கூடிப் பரிந்தேத்த
ஆடு மரவம சைத்த பெருமா னறிவின்றி
மூட முடைய சமண்சாக் கியர்க ளுணராத
வேட முடைய பெருமான் பதியாம் வெண்காடே.

பொழிப்புரை :

பாடுகின்ற அடியவர் பலரும் கூடிப்பரிவுடன் ஏத்த ஆடும் பாம்பை இடையிற்கட்டியுள்ளவனாகி, அறிவற்ற மூடர்களாகிய சமண் சாக்கியர்கள் உணர இயலாத வேடம் கொண்ட பெருமானது பதி வெண்காடாகும்.

குறிப்புரை :

பாடும் அடியார் - பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள். அரவம் - பாம்பு. அசைத்த - கட்டிய. உணராத வேடம் - உணரமாட்டாத சிவஞான வேடம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

விடையார் கொடியான் மேவி யுறையும் வெண்காட்டைக்
கடையார் மாடங் கலந்து தோன்றுங் காழியான்
நடையா ரின்சொல் ஞானசம் பந்தன் தமிழ்வல்லார்க்
கடையா வினைக ளமர லோகம் ஆள்வாரே.

பொழிப்புரை :

விடைக் கொடியைக் கொண்ட சிவபிரான் மேவி உறையும் வெண்காட்டை. கடைவாயிலை உடைய மாடவீடுகள் கலந்து விளங்கும் காழிப்பதியானாகிய ஞானசம்பந்தன் ஒழுக்கநெறியும் இன்சொல்லும் கலந்ததாக அமைத்த இப்பதிகத் தமிழை ஓத வல்லவர்களை வினைகள் அடையா. அவர் அமரலோகம் ஆள்வர்.

குறிப்புரை :

விடை ஆர்கொடியான் - எருது எழுதிய கொடியை உடையவன். மேவி - விரும்பி. உறையும் - எழுந்தருளியிருக்கும். கடை ஆர் மாடம் - கடைவாயில் பொருந்திய மாடம். இது காழிக்கு அடை. நடை - ஒழுக்கம். ஞானசம்பந்தன் வெண்காட்டைத் `தொழுத` தமிழ் என்று ஒரு சொல்வருவித்தியைக்க. வல்லார்க்கு வினைகள் அடையா. வல்லார் அமரலோகம் ஆள்வார்.
சிற்பி