திருமீயச்சூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்
பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டி
மாயச் சூரன் றறுத்த மைந்தன் றாதைதன்
மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.

பொழிப்புரை :

அழகிய உடலை உடைய காமனைக் காய்ந்து, கங்கையை விரிந்த புன்சடையிற் பாயுமாறு செய்து, பதித்த பரமேட்டியும் சூரபன்மன் மாயும்படி அழித்த முருகப்பெருமானின் தந்தையும் ஆகிய சிவபிரானது மீயச்சூரைத் தொழுது வினையைத் தீர்த்தொழியுங்கள்.

குறிப்புரை :

காயம் - உடம்பு. செவ்வி - அழகு. காமன் - மன்மதன் (உடலழகையுடைய மன்மதன்). காமற்காய்ந்து - காமனைக் கோபித்து. இரண்டன்தொகை. படர் புன் சடையில் பாயக்கங்கையைப் பதித்த பர மேட்டி - படர்ந்த பொன்போலுஞ் செஞ்சடைமேல் விரைந்து பாயும் வண்ணம் கங்கையாற்றைப் பதியச்செய்த பரமேட்டி. பரமேட்டி - தனக்குமேல் ஒன்றில்லாத உயர்ந்த இடத்திலிருப்பவன். மாயச்சூர் - வஞ்சத்தையுடைய சூரபதுமனை. சூர்மாய என்று மாற்றிச் சூரபத்மன் மாயும்படி என்றலும் பொருந்தும். மைந்தன் - முருகப்பிரான். தாதை - தந்தை (சிவபிரான்). வீட்டும் - அழிமின். சிவபிரானுடைய மீயச்சூர் என்னும் சிவதலத்தை வழிபட்டுப் பிறவிக்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்தொழியுங்கள் என்று உபதேசித்தருளியவாறு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

பூவார் சடையின் முடிமேற் புனல ரனல்கொள்வர்
நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்தி
ஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கி
மேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் மலர் அணிந்துள்ள சடை முடியில் கங்கையைச் சூடியவர். கையில் அனலைக் கொண்டவர். நாவால் வேதங்களை அருளியவர். பிறைசூடியவர். நாற்றமுடைய வெள்ளிய தலையோட்டை ஏந்தியவர். பெருமை பொருந்திய மேருமலையாகிய வில்லில் திருமாலைக் கழியம்பாகவும் அக்கினியை அம்பின் முனையாகவும் கொண்டு வில்லை வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

பூ - கொன்றைப்பூ. அன்பர் அர்ச்சிக்கும் பல்வேறு மலர்களும் ஆம். புனலர் - கங்கையை அணிந்தவர். அனல் கொள்வர் - தீயேந்துபவர். நா ஆர் மறையார் - வேதங்களை அருளிய நாவினர். பிறையர் - பிறைசூடியவர். நற வெண்தலை - நாற்றத்தையுடைய வெளிய பிரமகபாலத்தை. ஏ - பெருமை. மலை - மேருமலை. சிலையா - வில்லாக. கழியம்பு - கோல் அம்பு. எரி - அக்கினி. திருமால் அம்பாகவும் அக்கினி அவ்வம்பின் நுனியாகவும் கொண்ட வரலாற்றை நினைக்க. `எரிகாற்று ஈர்க்கு அரி கோல் வாசுகி நாண் கல் வில்` (தி .1)மேவார் - பகைவரது. புரம்மூன்று - திரிபுரத்தை, புனலரும், கொள்வரும், மறையரும், பிறையரும், ஏந்தி வாங்கி எரித்தாரும் ஆகிய சிவபிரானார். மீயச்சூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பொன்னேர் கொன்றை மாலை புரளு மகலத்தான்
மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்
தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்
அந்நே ரிமையோ ருலக மெய்தற் கரிதன்றே.

பொழிப்புரை :

பொன்போன்ற கொன்றை மாலைபுரளும் மார்பினனும், மின்னல் போன்ற சடைகளை உடையவனும் தனக்கு ஒப்பார் பிறர் இல்லாதவனும் ஆகிய மீயச்சூர் இறைவனைத் தலையால் வணங்குவார் அழகும் நேர்மையும் உடைய தேவர் உலகத்தை எய்துதல் அரி தன்று.

குறிப்புரை :

பொன் ஏர் கொன்றை - பொன்போலும் அழகிய கொன்றை. கொன்றையைப் பலபட அருளிய வகையெல்லாம் ஆசிரியரது திருமுறையுள் ஆங்காங்கு நோக்கி உணர்தல் நன்று. `வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும் மதுமலர் நற்கொன்றையான் அடியலால் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்` என்றதில் கொன்றையான் என்று சிவபிரானைக் குறித்ததன் கருத்து அறியத்தக்கது. அதற்கு ஆதாரமானது இத்திருப்பாடல்:- `கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோம்` இதனை ஆசிரியரே அருளியதால் அவரது குறிக்கோளை நன்கு அறிந்து கொள்ளலாம். அகலத்தான் - திருமார்புடையவன். மின் ஏர் சடைகள் - மின்போலும் ஒளிர்கின்ற சடைகளை. தன் நேர் பிறர் இல்லானை - தனக்குவமையாகப் பிறர் இல்லாத தலைவனை. அவனுக்கு அவனே ஒப்பாம் என்று, அநந்நிய உவமை உணர்த்தியவாறு. தலையால் வணங்குவார் (க்கு) இமையோருலகம் எய்தல் (ஆனது) அரிதன்று, மிக எளிது என்றவாறு. அ + நேர் + இமையோர். உலகம் - அந்த நேர்மையுடைய தேவருலகத்தை. `எய்தலரிதன்றே` என்ற பாடமும் உண்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்
பாக முமையோ டாகப் படிதம் பலபாட
நாக மரைமே லசைத்து நடமா டியநம்பன்
மேக முரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.

பொழிப்புரை :

வேகமும் மதமும் உடைய நல்லயானையை வெருவுமாறு கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்து உமைபாகராக அவ்வம்மையார் பாடப் பாம்பை இடையின் மேல் கச்சாகக் கட்டிக் கொண்டு நடனமாடிய பெருமான் மேகந்தோயும் பொழில்சூழ்ந்த மீயச்சூர் இறைவன் ஆவான்.

குறிப்புரை :

வேகம் - விரைவுடைய நடை. மதவேகமுமாம். நல்லி யானை (நன்மை + யானை):- .... உயர்திணை அஃறிணை ஆயிருமருங்கின், ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் ... மருவின் பாத்திய புணரியல் நிலையிடை உணரத்தோன்றா (தொல்காப்பியம் .482.) என்றவாறு, நல்லதாகிய யானை என்று விரித்துரைத்தற்பாலது. நன்னூற் சூத்திரப்படி, பண்பைவிளக்கும் மொழி தொக்கதாகக் கொண்டு, விரித்துரைத்தல் குணகுணிபேதம் அறியாக் குற்றமுடையதாகும். உரி - தோல். பாகம் - இடப்பாகம். படிதம் - வல்லபை. துதி என்றாரும் உளர். அவர், சந்தர்ப்பத்திற்கேற்பத் தாமே கருதி எழுதியது அப்பொருள் என்று தோன்றுகின்றது. நாகம் - பாம்பு. அரை - திரு அரை. அசைத்து - கட்டி. நடம் - திருக்கூத்து. நம்பன் - சிவபிரான். நம்பு - நசை. எல்லா உயிர்களும் விரும்புதற்குரியவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்
படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்
பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்
விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர், விடைக்கொடியை உடையார். சடைமேல் விளங்கும் பிறைவேடத்தை உடையவர். படைகளாக அமைந்த பூதங்கள் சூழப்பாடியும் ஆடியும் மகிழ்பவர். பெடைகளோடு கூடி ஆண் வண்டுகள் அணையும் கொன்றைமாலையை அணிந்தவர். காளைபோன்ற நடையை உடையவர்.

குறிப்புரை :

விடை ஆர் கொடியார் (பார்க்க : பதி .197 பா .11.). பிறை வேடம் - பிறையை அணிந்த வேடம். சடைமேல் பிறைவேடம் விளங்கும். படை ஆர் பூதம் - படையாகப் பொருந்திய பூதங்கள். பாடல் ஆடலார் - பாடுதலும் ஆடுதலும் உடையார். பெடை - பெண் வண்டு. பிணை - மாலை. பிணையல் - கொன்றைப்பிணை. விடை ஆர் நடை - `ஏறுபோல் பீடுநடை` (குறள்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

குளிருஞ் சடைகொண் முடிமேற் கோல மார்கொன்றை
ஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடி
நளிரும் மணிசூழ் மாலை நட்ட நவினம்பன்
மிளிரும் மரவ முடையான் மீயச் சூரானே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவன் குளிர்ந்த சடைகளைக் கொண்டுள்ள முடிமீது அழகிய கொன்றைமாலை, விளங்கும் பிறை ஆகியவற்றைச் சூடியவன். ஒப்பற்றவன். மணிகள் அமைந்த மாலையுடன் கைகளைவளைத்து நடனம் புரிபவன்: விளங்கும் அரவினை அணிந்தவன்.

குறிப்புரை :

கோலம் - அழகு. ஒளிரும் - விளங்கும். சடைமுடி மேல் கொன்றையும் பிறையும் உடையான் என்க. கைகோடி - கையை வளைத்து. நட்டம் நவில் நம்பன் - திருக்கூத்தாடும் சிவபெருமான். நளிரும் - குளிரும். மிளிரும் - விளங்கும். அரவம் - பாம்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்
கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்
காலர் கழலர் கரியி னுரியர் மழுவாளர்
மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் நீலகண்டர். நீண்டவர். ஒப்பில்லாதவர். அழகிய பலபல வடிவங்கள் தம்முடையனவாகக் கொண்டு அறிதற்கு அரியராயிருப்பவர். காலிற் கழல் அணிந்தவர். யானையின்தோலைப் போர்த்தவர். மழுவேந்தியவர். மேன்மையானவர். மதியை அணிந்தவர். உலகைப்படைப்பவர்.

குறிப்புரை :

நீலவடிவர் மிடறு - திருநீலகண்டர். நெடியர் - நீண்டவர். (உயர்ந்தோங்கிய நிலையின் எல்லையில்லாதவர்). `உம்பராலும் உலகின்னவராலும் தம்பெருமை அளத்தற்கரியான்` (தி .1 ப .29 பா .5). `நுண்ணியான் மிகப்பெரியான்` (தி .1 ப . 61 பா .6). நிகரில்லார் - (அதுலர்) ஒப்பிலியப்பன் கோலவடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார். பல உருவன் (தி .1 ப .13 பா .2). `நானாவித உருவாய் நமை யாள் வான்` பலபல வேடமாகும் பரன் தன்மையாரும் அறிவாரில்லை (தி .2 ப .6 பா .2.). ஓதியாரும் அறிவார் இல்லை - ஆர்க்கும் அறிவரியான். காலர் கழலர் - கழலணிந்த திருவடி உடையார். காலர் - காலரூபர், வாயுரூபர் எனலும். கூற்றை உதைத்தவரெனலும் ஆம். கரியின் உரியர் - யானைத் தோல் உடையவர். மழுவாளர் - மழுவை ஆள்பவர், மழுவாளை உடையவர். மேலர் மதியர் - பிறையைச் சடைமேல் அணிந்தவர். மேலானவரும் ஞானசொரூபரும் ஆம். காலர் கழலர் மேலர் மதியர் :- வடநூலார் மதம்பற்றி அடைமொழிக்கும் அடைகொளியின் விகுதி கொடுத்துக் கூறியனவாக் கொள்ளலும் ஆம். `நுண்ணறிவால் வழிபாடுசெய்யுங் காலுடையான்` (தி .1 ப .5 பா .4). `காலனுயிர் செற்றகாலன்` (தி .1 ப .45 பா .4) எனலும் அமையும். பவமலி தொழிலது நினை விதியர் :- படைப்பவரானவர். `அரியானை ... கரியானை நான்முகனை ... பிறவாநாளே` (தி .6 ப .1 பா .1). `படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை` (தி .1 ப .128 பா .4). `அயன வனாய்` (தி .1 ப .13 பா .5). `வேதவிதியானை` (தி .1 ப .128. பா .4). `எனதுள்ளம் விடகிலா விதியே` (தி .7 பா .385). `பவமலி தொழிலது நினைவொடு பதுமன் நன் மலரது மருவிய சிவன்` (தி .1 ப .2 பா .1) என்பதில், பிரமனது இதய கமலத்திலிருந்து சிவபிரான் படைப்பித்தருள்வதாகக் குறித்த உண்மை உணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

புலியி னுரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்
ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தா ருமையஞ்ச
வலிய திரடோள் வன்க ணரக்கர் கோன்றன்னை
மெலிய வரைக்கீ ழடர்த்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

திருமீயச்சூர் இறைவர் புலியின் தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் அணிந்தவர். ஆரவாரித்து வந்த கங்கையை ஓர் சடைமேற் கரந்தவர். உமையம்மை அஞ்ச வலிமையான திரண்ட தோள்களையும் வன்கண்மையையும் உடைய அரக்கர்கோனை மெலியுமாறு மலையின் கீழ் அடர்த்தவர்.

குறிப்புரை :

உரிதோலாடை நீற்றார் - உரித்த தோலாகிய ஆடையையும் பூசும் திருநீற்றுப் பொடியையும் உடையவர். ஒலிகொள்புனல் - முழக்கத்தைக் கொண்ட கங்கை வெள்ளத்தை. ஓர்சடை - ஒப்பற்ற சடை. ஓர்தற்குரிய ஞானமாகிய சடை எனலுமாம். `பொன்றயங் கிலங் கொளிந் நலங்குளிர்ந்த புன்சடை பின்றயங்க ஆடு வாய்` (பதி .310 பா .6). `நுண்சிகை ஞானமாம்` (திருமந்திரம்) கரந்தார் - மறைத்தவர். உமை - உமாதேவியார். திரள் தோள் - திரண்ட புயங்களையும். வன்கண் - அகத்திலுள்ள வலிமையைப் புறத்தே காட்டும் கண்களையும் உடைய, அரக்கர்கோன் - அரக்கர்க்குக் கோமகன். அவனை அடர்த்தார் - வரையின் கீழ் மெலிய அடர்த்தார். அடைத்தவர் மீயச்சூரிலுள்ளார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்
போதி லவனு மாலுந் தொழப்பொங் கெரியானார்
கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கி
மேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.

பொழிப்புரை :

வரிவண்டுகள் மலர்களைக் கோதி ஒலிசெய்யும் பூம்பொய்கைப் புனலில் எருமைகள் மூழ்கி வயல் கரைகளில் சென்று படுக்கும் திருமீயச்சூரில் மேவும் இறைவர், காதில் விளங்கும் குழையை அணிந்தவர்: கரிய கண்டத்தினர்: தாமரையோனாகிய பிரமனும் திருமாலும் தொழப் பொங்கிய எரிவடிவாய் நின்றவர்.

குறிப்புரை :

மிளிரும் - விளங்கும். குழையார் - குழையை அணிந்தவர். குழை - தழை, ஓலை, குழை என்பன பண்டைய வழக்கத்திற் காரணப்பெயராயிருந்தன; `மரக்கால்` போல. பொற்கலனானபின்னும் குழை என்ற பெயராலே வழங்கப்படுகின்றது. இருப்புத்தகட்டாலான பின்னும் `மரக்கால்` என வழங்கப்படுவதுபோல, `பத்திரம் எழுதி னான்` என்பது முதலியவற்றையும் நோக்குக. கரியகண்டத்தார் - திருநீலகண்டர். போது - பூ. போது இ(ல்)லவனும் - தாமரைப் பூவை இல்லமாக உடைய பிரமனும். பொங்கும் எரி - மிக்க தீ. வண்டு கோதி அறை பூ என்க. பொய்கை - குளம். மேதி - எருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்
கொண்டார் சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்
பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லா
விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.

பொழிப்புரை :

கண்டவர் நாணும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர், கலிங்கமாகிய பட்டாடையை உடுத்த தேரர் ஆகியோர் கூறுவனவற்றை உயர்ந்த சிவநெறிக் கொள்கையர் குறுகார். திருமீயச்சூர் இறைவர் பெண்ணைப் பாகமாக உடையவர். பெரிய மலையாகிய வில்லால் பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

கண்டார் நாணும்படியார் - திகம்பரசைனர். ஆடையில்லாதவர். கலிங்கம்... கொண்டார் - ஆடை உடைய தேரர். முடை என்று கொண்டு நாற்றம் எனலுமாம். கலிங்கமாகிய பட்டுடையை என்றலே பொருத்தம். உயர்ந்த கொள்கையார் (சைவர்) அவ்விருதிறத்தவர் சொல்லைக் குறுகார் என்க. பெண்தான்பாகம் - மங்கைபங்கு. விண்டார் - பகைவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

வேட முடைய பெருமா னுறையு மீயச்சூர்
நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்
பாட லாய தமிழீ ரைந்து மொழிந்துள்கி
ஆடு மடியா ரகல்வா னுலகம் அடைவாரே.

பொழிப்புரை :

பற்பல வடிவங்களைக் கொண்டருளிய பெருமான் உறையும் திருமீயச்சூரை விரும்பும் புகழார்ந்த புகலி ஞானசம்பந்தன் அருளிய பாடலாகிய தமிழ் ஈரைந்தையும் மொழிந்தும் நினைத்தும் ஆடும் அடியவர் அகன்றவானுலகை அடைவர்.

குறிப்புரை :

வேடம் - `பலபல வேடம்` `ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர்` (தி .1 ப .68 பா .5)(ஞானவேடம்). மீயச்சூர் நாடும் புகழ் ஆர் - திருமீயச்சூரை விரும்பும் புகழ் நிறைந்த (ஞானசம்பந்தர்). `புகழார்` சிவபிரானாகக் கொண்டு, அவரது புகலி எனலும் பொருந்தும். பாடல் ஆய தமிழ் ஈரைந்தும் என்றது இத்தமிழ்த் திருப்பதிகத்தை உணர்த்திற்று. உள்கி - நினைத்து. அடியவர், உள்ளம் உரை உடல் மூன்றாலும் முறையே முறையே மொழிந்தும் உள்கியும் ஆடியும் இத்தமிழால் சிவபிரானை வழிபட்டால் வீடு பெறுதல் திண்ணம் என்றவாறு.
சிற்பி