திருவரிசிற்கரைப்புத்தூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மின்னுஞ் சடைமே லிளவெண் டிங்கள் விளங்கவே
துன்னுங் கடனஞ் சிருடோய் கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலா ரரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.

பொழிப்புரை :

மின்னல் போல ஒளிரும் சடைமேல் இளம்பிறை விளங்கக் கடலில் பொருந்திய நஞ்சினது கருமை தோய்ந்த கண்டத் தராய் விளங்கும் பெருமானது பழமையான ஊர் அன்னங்கள் படிந்து ஆடும் நீரை உடைய அரிசிலாற்றின் அலை பொன்னையும் மணியை யும் கொண்டு வீசும் தென்கரையின் மேல் விளங்கும் புத்தூராகும் .

குறிப்புரை :

சடைமேல் திங்கள் விளங்க ( இருள் ) தோய்கண்டர் என்று இயைக்க . சடைமேல் வெள்ளொளியும் கழுத்தில் காரிருளும் ஆக உள்ள முரணும் புலப்படக்கூறியவாறு . விளங்கத்துன்னும் என்றி யையாது . துன்னுதல் - ( நெருங்குதல் ) கடலின் வினை . தோய்தல் - இருளின் வினை . திங்கள் விளங்க இருள் தோய்ந்தது . திங்கள் பகலின் விளங்காதன்றோ ? இருளின் தோய்வு திங்களின் விளக்கத்திற்கு இன்றி யமையாதது . கழுத்திலுள்ள காரிருள் சடைமேலுள்ள திங்கள் விளக்கம் நன்கு தோன்றத் துணையாயிற்று . கடல் நஞ்சு இருள் - பாற்கடலின் எழுந்த நஞ்சினாலான கறுப்பு . அன்னம் - பறவை . ஆர் - நிறைந்த . அரிசில் - அரிசிலாறு . பொரு - மோதுகின்ற . தென்கரைமேல் உள்ள புத்தூர் . தொன்மூதூர் புத்தூர் என்க . தொன்மை , முதுமை இரண்டும் ஒருங்குவரல் அறியத்தக்கது . தொன்மை காலத்தைப்பற்றியது . முதுமை அக்காலத்தோடு அதில் நிகழும் வளர்ச்சியையும் பற்றியது . தோன்றி நெடிது நிலை பெற்றுவருவது தொன்மைக்கும் முதுமைக்கும் உரியதாகும் . முன்னொருகால் தோன்றியிருந்து அழிந்த பொருளை நெடுங்காலங் கழிந்த பின்னர்த் தொல்பொருள் எனலாம் . முது பொருள் எனலாகாது . காலத்தின் நெடுமையும் இடத்தின் நீட்சியும் தொன்மை எனும் வழக்கிற்கொவ்வும் . தொல்லோன் , தொலைந்தான் , ` ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத் தியற்கை ` ( புறம் -86). தொலைவு , தோல்வி , தொல்லை என்பவற்றை ஆராய்க . முன்னொருகால் தோன்றியிருந்த குழந்தையைப் பின்னொரு கால் தொல்குழந்தை எனலாம் . முது குழந்தை எனலாகாது . கிழவ னேல் ` தொல்லோன் ` ` முதியோன் ` எனலாம் . ` பல நீர்மை குன்றிச் செவி ... நரை தோன்றும் காலம் ` ( தி .1 ப .59 பா 6) என்றதிற் குறித்த முதுமை , நெடுங்காலமாக உள்ளனவும் காலம் அல்லாதனவும் ஆன பிற பொருள் இடம் முதலியவற்றில் இல்லை . அவற்றில் தொன் மையே உண்டு . திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தொல்லோர் ஆவ ரேயன்றி , முதியோராகார் . திருநாவுக்கரசரோ தொல்லோரு மாவர் ; முதியோருமாவர் . தொன்மையைப் புராதனம் புராணம் முதலியவற் றாலும் முதுமையை வார்தக்யம் , விருத்தாப்பியம் முதலியவற்றா லும் வடமொழியிற் குறிப்பர் . புராதனமும் விருத்தாப்பியமும் ஒன்றாகா . ` தொன்மூதாலத்துப் பொதியில் ` என்ற குறுந்தொகை 15 உம் ` தொன் மூதாலம் ` என்ற நெடுந்தொகை 70, 251 உம் இக்கருத்தில் உரைக்கப் பட்டனவோ ? அவற்றின் உரைகளைக் காண்க . யாண்டு முதுமை ஆண்டுத் தொன்மை எனலாம் . யாண்டுத்தொன்மை ஆண்டு முதுமை எனல் ஒவ்வாது . இப்பாட்டில் , ` தொன்மூதூர் ... புத்தூரே ` என்று முரண் டொடையாய் அமைந்த நயம் அறிந்து மகிழ்தற்பாலது . புதுமையும் தொன் ( பழ ) மையும் ஒன்றற்கு ஒன்று மறுதலை , இளமையும் முதுமை யும் ஒன்றற்கொன்று மறுதலை . தொன்மைக்கு இளமையும் முதுமைக்குப் புதுமையும் மறுதலையாகா . நெடுங்காலமாக உள்ள வெற்றிடத்தைத் தொன்மையது எனலாம் . அங்குத் தோன்றி நெடுங் காலமாகவே இருக்கும் ஒன்றனை முதுமையதெனலுமாம் . ஆகவே , தொல்மூதூர் என்றதற்கு மிகப் பழைய ஊர் என்று பொருள் கோடல் குற்றமாம் .

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

மேவா வசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்
ஏவா ரெரிவெங் கணையா லெய்தா னெய்துமூர்
நாவா னாத னாம மோதி நாடோறும்
பூவா னீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.

பொழிப்புரை :

பொருந்தாத அசுரர் வாழும் மூன்று கோட்டைகளும் வெந்து அழியுமாறு மலைவில்லால் அம்பாகப் பொருந்திய எரியாகிய கொடிய கணையால் எய்தவனது ஊர், பூசுரர்கள் நாவினால் நாதன் நாமங்களை நாடொறும் ஓதிப்பூவாலும் நீராலும் போற்றி வழிபடும் புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

மேவா அசுரர் - விரும்பாத (பகைமையுடைய) திரிபுரத்தசுரர். மேவு எயில் - மேவிய மதில். வேவ - தீய. மலைவில் - மேருவில். ஏ - உணர்ச்சி. கணை எனப்பின் உள்ளதால் அம்பு எனப்பொருள்படாது. எரிகணை - அக்கினியை முனையிலுடையது. வெம்மை - தீ வெப்பம். எய்தான் - எய்த சிவபிரான். எய்தும் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும். ஊர் - புத்தூர் என்க. நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூர் என்றது ஆசிரியர் அங்கு அடைந்த காலத்தில், அவ்வூர்ச் சிவவேதியர்கள் ஒரு நாளும் தவறாமல் சிவநாமங்களை நாவாரச் சொல்லி நீரால் ஆட்டிப் பூவால் போற்றி வழிபட்ட உண்மை உணர்த்தியவாறு. `நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த வல்லவாறே வந்து நல்காய்` (தி .1 ப .50 பா .1). `உன்றன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்.`(ஷெ 4)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்ல ரழகியர் புத்தூர்ப் புனிதரே.

பொழிப்புரை :

புத்தூர்ப்புனிதர், பற்களோடு கூடிய தலை மாலையைச் சூடிப் பாம்பையும் அணிந்து உடல் முழுதும் வெண்ணீறு அணிந்து ஒப்பற்ற விடைமீது ஏறி இமவான் மகளாகிய பார்வதி பங்கராக இருப்பவர். ஆராயுமிடத்து அவர் பொல்லாதவர் அல்லர். அழகியவர்.

குறிப்புரை :

தலைமாலையைத் தலையிற் சூடியுள்ளார் இறைவர். அத்தலைகளில் பற்களின் வரிசை கெடாது இருக்கின்றன என்பார் `பல் ஆர்தலை` என்றார். `தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலி தேருந்தலைவன்`. எல்லா இடமும் வெண்ணீறு அணிந்து - `மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியன்` (தி .4 ப .5 பா .1) `நீற்றினை நிறையப்பூசி` (தி .4 ப .49 பா .2, தி. 4 ப .64 பா .8) `நீரலைத்த திருஉரு` (தி .6 ப .75 பா .3) ஓர் ஏறு ஏறிக்கல்லார் மங்கை பங்கர் - ஒப்பற்ற எருதேறியூர்ந்து அம்பிகையை இடப்பங்கில் உடையவர். ஏறி என்னும் வினையெச்சம் `பங்கர்` என்னும் வினைக்குறிப்பைக் கொண்டது. பொல்லார் - பொலிவில்லாதவர், அழகியவர். கல்லார் மங்கை:- கல் - இமயமலை. செழுங்கல் வேந்தன் செல்வி (தி .1 ப .53 பா .5). இமாசல குமாரி. மங்கையென்பது இத்தலத்தின் அம்பிகைக்குரிய திருப்பெயராகிய `அழகம்மை` என்பதைக் குறித்ததுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

வரியேர் வளையா ளரிவை யஞ்ச வருகின்ற
கரியே ருரிவை போர்த்த கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங் கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.

பொழிப்புரை :

வரிகளும் அழகும் பொருந்திய வளையல்களை அணிந்த அம்பிகை அஞ்சுமாறு வந்த யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் கருதும் ஊர், நெல்லரிகளைக் கொண்ட வயல்கள் சூழ்ந்து அழகிய நெற்பொரிகள் போல புன்கமரங்கள் பூக்களைச் சொரியும் சோலைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

வரி - நிறம். ஏர் - எழுச்சி (யை உடைய). வளையாள் - வளையலை அணிந்த அம்பிகை. கரி - கரத்தையுடைய யானை. ஏர் - அழகு. உரிவை - தோல். அரி - தவளை, வண்டு, நெல்லரி எனலுமாம். பழனம் - மருதநிலம். புன்கு சொரி பொரி ஏர் பூஞ்சோலை - புன்க மரங்கள் சொரிகின்ற பொரி போன்ற அழகிய பூக்களையுடைய சோலை. சோலை சூழ்ந்த புத்தூர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

என்போ டரவ மேனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகு மடியார்க் கன்ப ரமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.

பொழிப்புரை :

எலும்பு, பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

என்பு - எலும்பு. அரவம் - பாம்பு. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. எழில் - அழகு. மின்னைப்போலும் முப்புரிநூல். விரவி - கலந்து. மணி - அழகிய ரத்னமாலை எனலுமாம். சிவபிரானை, அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்றது எல்லாருள்ளத்திலும் பதியத்தக்கது. `தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி` (திருவாசகம் - திருச்சதகம் -73). `நேசன் காண் நேசர்க்கு`(தி .6 ப .65 பா .2) `அன்பின் நிலையே அது` ( திருவருட்பயன் . 8.10). `அன்பே சிவம்` (திருமந்திரம்). பொன் போது - பொன்னைப் போல அலரும் பூக்கள். அலர்கோங்கு - பூக்கும் கோங்கமரம். கோங்கு ஓங்கு சோலைகளையுடைய புத்தூர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

வள்ளி முலைதோய் குமரன் றாதை வான்றோயும்
வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீ ரரிசிற் றென்பால் சிறைவண்டும்
புள்ளு மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.

பொழிப்புரை :

வள்ளி மணாளனாகிய முருகனின் தந்தையாய் வான்தோயும் கயிலைமலை போன்ற வெள்விடையை உடையவன் எழுந்தருளிய ஊர், தெளிவாக வரும் நீரை உடைய அரிசிலாற்றின் தென்கரையில் சிறைவண்டும் பறவைகளும் நிறைந்து வாழும் அழகிய பொய்கைகள் சூழ்ந்த புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

வள்ளி முலை தோய் குமரன் :- `குறவி தோள் மணந்த செல்வக்குமரவேள்` (தி .4 ப .60 பா .3). `வள்ளிவளைத்தோள் முதல்வன்` (தி .6 ப .3 பா .2). `நம் செந்தில் மேய வள்ளி மணாளற்குத்தாதை` (தி .6 ப .23 பா .4). வான் - விண்ணிடம். வான்றோயும் மலை. விடை - எருது. வெண்ணிறத்தால் ஒப்புணர்த்த வெள்ளிமலை எனப்பட்டது. தெள்ளி - தெளிந்து. தென்கரை (பா .1). `வண்டும் புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூர்` (பா .6) என்று வளங்கூறிய சிறப்புணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பி னீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தானூர்
அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

பொழிப்புரை :

நிலம், தண்ணீர், அனல், காற்று விசும்பு ஆகிய ஐம்பூதங்களின் இயல்பை உடையவன். சிலந்தியைக் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கச் செய்தவன். அவனது ஊர் வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.

குறிப்புரை :

நிலம், தண் (குளிர்ந்த) நீர், அனல் (- தீ), கால் (- காற்று) விசும்பு (- ஆகாயம்) என்னும் ஐம்பெருங்காரண பூதங்களின் இயல்பையுடையவன். நீர்மை - இயல்பு. சிலந்திப் பூச்சி, சிவபூஜைப் பயனாகக் கோச்செங்கட் சோழநாயனாராகிய வரலாறு உணர்க. அலந்த - சிவபூஜை முட்டுப்படத்துயருற்ற, அன்றைக்கு - அன்று. அந்நாட்கு - அந்நாள். அன்றாடம் ஒருகாசு எய்தி, பொழுது புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றும் புத்தூர். செய்தான் ஊர் புத்தூர் என்க. `அடியான்` என்றது `செருவில்லிபுத்தூர் மன்னுஞ் சிவமறை யோராகிய ... நிகரில்லா (ப்) புகழ் நீடு புகழ்த்துணையார்`. (பெரிய புராணம் ஷெ நாயனார்.1)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இத்தே ரேக விம்மலை பேர்ப்ப னென்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீ ழலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன் மருவும் மூரான
புத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.

பொழிப்புரை :

இந்தத் தேர் செல்லுதற்குத் தடையாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பேன் என்று கூறிச் சிவபிரான் எழுந்தருளிய திருக்கயிலையைப் பெயர்த்து ஏந்திய பத்து வாய்களை உடைய இராவணன் மலைக்கீழ் அகப்பட்டு அலறுமாறு தம் பாதத்தைச் சிறிது ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள் செய்யும் வரதனாகிய சிவபிரான் மருவும் ஊரான புத்தூரைத் தரிசிக்கச் செல்வார் வினைகள் போகும்.

குறிப்புரை :

தேர் ஏக - தேர் தடையின்றிச் செல்லற்பொருட்டு. இம் மலை - இக்கயிலைமலையை. பேர்ப்பன் - பெயர்த்திடுவேன். ஓர் பத்து வாயான் - ஒரு பத்துவாயுடையவன். அக்கயிலைமலையின் கீழ், பத்து வாயாலும் அலறினான். அதனால் இரங்கி முன்வைத்த பாதம் வாங்கியருளினான். வரதன் - வரத்தைக் கொடுப்பவன். நாளும் வாளும் பெருந்தேரும் கொடுத்தவரம் ஆங்காங்குணர்க. மருவும் ஊர் ஆனபுத்தூர் - எழுந்தருளிய நகராகிய புத்தூர். புத்தூர் காணப்புகுவார் வினை - தலதரிசனம் செய்ய நுழையும் அடியார்களுடைய வினைகள் (ஆகாமியம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முள்ளார் கமலத் தயன்மான் முடியோடு அடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற் கரியா னூர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.

பொழிப்புரை :

முட்கள் பொருந்திய தண்டினை உடைய தாமரை மலரின் மேல் உறையும் நான்முகன், திருமால் ஆகியோர் முடியோடு அடிதேட, ஒளி பொருந்திய எரி உருவினனாய், உணர்தற்கு அரியவனாய் விளங்கிய சிவபிரானது ஊர், தேன் பொருந்திய நெய்தல், கழு நீர், ஆம்பல், தாமரை ஆகியவற்றை உடைய பறவைகள் நிறைந்த பொய்கைகளில் பூக்கள் நிறைந்து தோன்றும் புத்தூர் ஆகும்.

குறிப்புரை :

முள் ஆர் கமலத்து - (`முட்டாட்டாமரை`) முட்கள் நிறைந்த தாமரையில் வாழும். அயன்மால் முடி அடி: முறை நிரல் நிறை. ஒள் - ஒண்மை, ஒளி, எரி - தீப்பிழம்பு, அயன்மால் உணர்தற்கு அரியான். உணர்தற்கே அரியவன் என்றால் ஓதற்கும் எளியன் அல்லன் என்பது சொல்லல்வேண்டா. `உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்` (பெரியபுராணம், மங்கலம்). `அன்பராகி மற்றருந்தவமுயல்வார் அயனுமாலும் மற்றழலுருமெழுகாம் என்பராய் நினைவார்` (திருவாசகம் செத்திலாப் பத்து 4). கள் - தேன், நெய்தல், ஆம்பல், கழுநீர், கமலங்கள். புள் - பறவைகள். பூக்களும் புட்களும் பொருந்திய பொய்கை (- குளம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

கையார் சோறு கவர்குண் டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை மண்டையர் சொல்லு மெய்யல்ல
பொய்யா மொழியா லந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா வென்பார்க் கையுறவின்றி யழகாமே.

பொழிப்புரை :

கையில் வாங்கிச் சோற்றை உண்ணும் குண்டர்களும், துவர்நிறம் ஊட்டிய ஆடையை மெய்யிற் போர்த்தி மண்டையில் உணவு வாங்கி உண்ணும் தேரர்களும் கூறும் சொற்கள் உண்மையல்லாதவை. மெய்ம்மொழியால் அந்தணர்கள் போற்றும் புத்தூரில் எழுந்தருளிய தலைவனே! என்று போற்றுவார்க்கு ஐயுறவு இன்றி அழகு உண்டாம்.

குறிப்புரை :

கை ஆர் சோறு - கையில் நிறைந்த சோறு. `கையிலுண் ணுங்கையர்` (தி .3 ப .53 பா .1). மெய் ஆர் போர்வை - உடம்பைப் பொருந்தப் போர்த்த போர்வை; துவர் உண்ட போர்வை. மண்டையர் - பனங்குடையில் உண்ணுமவர். சொல்லு - சொற்கள். மெய்யல்ல - பொய். பொய்யாமொழியால் - மெய்யாகிய வேதவாக்குகளால். ஐயா :- `வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே` (திருவா. சிவபுரா. அடி. 35). ஐயுறவு - சந்தேகம். அழகு - சிவப்பொலிவு. இம்மை மறுமைக்கான அழகுகளும் கொள்ளலாம். சொல் + து = சோறு. சொல் - நெல். `சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந்தீன்று மேலலார் செல்வமே போல் தலைநிறுவித்தேர்ந்த நூற் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே` என்னும் (சிந்தாமணி .53) செய்யுளில், சொல் என்றது நெல் என்று நச்சினார்க்கினியர் எழுதிய பொருளையும் அறிக. சோறு என்பதன் பொருள் சொல்லால் ஆனது என்பதாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்
பொறிகொ ளரவம் பூண்டா னாண்ட புத்தூர்மேல்
செறிவண் டமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ டின்ப மடைவாரே.

பொழிப்புரை :

தேன் மணம் கமழும் அழகிய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன், புள்ளிகளைக்கொண்ட பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆட்சிபுரியும் புத்தூர்மேல் வளமை செறிந்த தமிழால் செய்த இம்மாலையைச் செப்பவல்லவர்கள் அறவடிவினனான சிவபிரான் திருவடிகளை அடைந்து அன்பும் இன்பமும் அடைவார்கள்.

குறிப்புரை :

நறவம் - தேன், மணம். பொறி - புள்ளிகள். பூண்டான் - பூண்ட சிவபிரான். செறி - சொல்லும் பொருளும் செறிந்த. வண்தமிழ் செய்மாலை - வளவிய தமிழாற்செய்த இப்பாமாலையை, அறவன் - `அறவாழியந்தணன்` `அறத்தானை அறவோனை` (தி .6 ப .80 பா .7). `தருமா போற்றி` (தி .6 ப .5 பா .10). `தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று ... நலம் கொடுக்கும் நம்பி`, `தயா மூலதன்மவழி எனக்கு நல்கி` (தி .6 ப .20 பா .6). அன்போடு இன்பம் - அன்பும் இன்பும்: `அன்பெனும் பாசம் வைத்தார்` (தி .4 ப .30 பா .3). `அன்பலால் பொருளும் இல்லை` (தி .4 ப .40 பா .6). `அன்பினில் விளைந்த ஆரமுது` `அன்பினால் இன்பம் ஆர்வர்` `இன்ப அன்பு`.
சிற்பி