திருப்பிரமபுரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையு நவின்றிலர் போலு மாசுண மார்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் சொரூபநிலையில் எல்லாம் அற்றவராக இருப்பினும், தடத்த நிலையில் கறை பொருந்திய வேலை உடையவர். கபாலம் தரித்தவர். வேதங்களை அருளியவர். பாம்புகளை இடையில் கட்டியவர் உடுக்கைப்பறை ஏந்திய கரத்தினர். கயிற்றைக்கையில் பிடித்தவர். பிறையணிந்த சடைமுடியினர். போலும் என்பதனை வினாப்பொருளதாகக் கொண்டு இங்குக் கூறிய செய்திகள்யாவும் உறுதிப்படுமாற்றை உணரலாம்.

குறிப்புரை :

கறை - குருதிபட்டுலர்ந்த கறுப்பு. வேல்; பகைவர் உடம்பிற்பாய்ந்து உற்ற ரத்தம் உலர்ந்து கறுப்பாகும், வேலுக்குச் சாதியடை. கபாலம் - பிரமகபாலம். தரித்திலர் - தாங்கிலர். மறை - வேதம். மாசுணம் - பாம்பு. பறை - உடுக்கை. (டமருகம்). பாசம் - கயிறு. முதற் பத்துப் பாக்களிலும் வரும் இலர்போலும் என்பது ஈற்றுப்பாட்டில் `அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து வகை வகையாலே ... நவின்றன `என்ற கருத்திற்கேற்றவாறு பொருள் கொளற்பாலது பரமசிவன் உண்மை (சொரூபநிலை) யில் இவை ஒன்றும் இல்லாத சச்சிதாநந்த சொரூபியாதலின் `செய்யாதன` என்று எதிர்மறையில் கூறப்பட்டன. தடத்த நிலையாகிய பொதுவில், உயிர்களுக்கு ஐந்தொழிலும், அருட்டொழிலேயாகச் செய்யும் பொருட்டு, இவையெல்லாம் இறைவனுக்கு உள்ளன ஆதலின் `இலர்` என உடையான் வினையாக்கியும் `போலும்` என ஐயப்பொருட்டாக்கியும் உரைத்தருளினார். `இலர் போலும்` என்பது உள்ளவர் என்னும் குறிப்புணர்த்துவது, இஃது இன்றும் உலக வழக்கில் இருக்கின்றது. செல்வரை, `வறியர்போலும்` எனக் குறிப்புப் பொருள் உணர்த்தக் கூறுதல் முதலியன `வேலிலர்` `தரித்திலர்` சடைக்கிலர்`என்ற மூன்றுவகை வாய்பாட்டில் அடங்குமாறும் அறிக. சிவபிரான் செய்தனவாக உள்ள அத்தனையும் உண்மை ஞானம் பெற்றார்க்குச் செய்யாதனவாய்த் தோற்றும். அவற்றைச் செய்தனவாகக் கொண்டு வழிபடுவார்க்கே உண்மை ஞானம் உண்டாகும். ஆதலின் அவற்றைப் பொய்யெனலாகாது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கூரம் பதுவிலர் போலுங் கொக்கி னிறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலு மாமை யணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலுஞ் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் கூரிய அம்பினை உடையவர். கொக்கின் இறகை அணிந்தவர். ஆரங்கள் பூண்டவர். ஆமையோட்டைத் தரித்தவர். சடைமுடியில் மாலை அணிந்தவர். சண்டேசுரருக்கு அருள்புரிந்தவர். பலபெயர்களை உடையவர்.

குறிப்புரை :

கூர் அம்பு - கூரியபாணம். கொக்கினது இறகு. ஆரம் - மணிமாலை. ஆமை - `முற்றலாமை` (தி .1 ப .1 பா .2) தார் - கொன்றை) மாலை. சண்டி - சண்டேசுரர். பேர் - திருநாமம்; பெயர் என்பதன் மரூஉவாகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங்கடுங் காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயன மிடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான், சித்தர் வடிவம் போன்ற உருவினர், பலதேசங்களுக்கும் சென்று திரிந்தவர், சத்தமிட்டு வந்த காளியின் கோபாவேசத்தைத் தவிர்த்தவர், தன் உடம்பிலுள்ள கண்களில் ஒன்றைப் பெயர்த்தணிவித்த திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்தவர். பித்தர் வடிவம் போன்ற வடிவினர்.

குறிப்புரை :

சித்தவடிவு - சித்தருருவம் போலும் உருவம். சித்துக்களில் வல்லவரென்பதை உணர்த்தும் திருமேனி. தேசம் - நாடு. கதங்கள் - கோப (?வேச) ம். தவிர்த்திலர் - நீக்கிலர். மெய்த்த - மெய்யில் (உடம்பி) லுள்ள. எய்த்த எனப் பிரித்துப் பொருள் கொள்ளல் சிறந்தது. நயனம் - கண். இடந்தார்க்கு - போர்த் (து ஆயிரம் பூவென நிறைத்) த திருமாலுக்கு. ஆழி -சக்கராயுதம். பித்தர் வடிவுபோலும் வடிவாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நச்சர வாட்டிலர் போலு நஞ்ச மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலு
மொய்ச்சவன் பேயிலர் போலு முப்புர மெய்திலர் போலும்
பிச்சை யிரந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான் நஞ்சினை உடைய பாம்பைப் பிடித்து ஆடச்செய்பவர். நஞ்சினை மிடற்றில் உடையவர். பாம்பைக் கச்சாக அணிந்தவர். கங்கையை முடியில் தரித்தவர். சூழ்ந்துள்ள வலியபேய்க் கணங்களை உடையவர். முப்புரங்களை எய்து எரித்தவர். பிச்சை இரப்பவர்.

குறிப்புரை :

நச்சு அரவு - நஞ்சமுடைய பாம்பு (நஞ்சு - நச்சு, விஷம்). கச்சு - அரையிற்கட்டும் கச்சு, மொய்ச்ச - மொய்த்த. வன்பேய் - வலியபேய்கள். பிச்சை இரத்தல் - பிச்சையிடுக என்று யாசித்தல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தோடு செவிக்கிலர் போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய யானை யுரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலு மொள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பீடுமிகுந்த செல்வப் பிரமபுரம் அமர்ந்த பெருமான் ஒருசெவியில் தோடணிந்தவர். கையில்சூலம் பிடித்தவர். அசைகின்ற நீண்ட கையை உடைய யானையை உரித்தவர். தலையோட்டைக் கையில் ஏந்தியவர். ஒளிபொருந்திய அழலைக் கையில் உடையவர்.

குறிப்புரை :

செவிக்குத் தோடு இலர்போலும் என்க. ஆடுகை. தடக்கை. துதிக்கை ஆடுதலும் பரியதாதலும் வெளிப்படை. வலிய ஆனையை உரித்தல் செய்யாதவர் போலும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ண லயன்றலை வீழ வன்று மறுத்திலர் போலும்
வண்ண வெலும்பினொ டக்கு வடங்க டரித்திலர் போலும்
பெண்ணின மொய்த்தெழு செல்வப் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

மகளிர் கூட்டம் சூழ்ந்து போற்றும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், தேவர்களால் அறியப்பெறாதவர். தக்கன் செய்த வேள்வியை அழித்தவர். தலைமைத் தன்மையுடைய பிரமன் தலைகளில் ஒன்றைக் கொய்தவர். அழகிய எலும்புகளோடு உருத்திராக்க வடங்கள் தரித்தவர்.

குறிப்புரை :

விண்ணவர் - விண்ணிடத்திலுள்ள தேவர். வேள்வி - தக்கன் யாகம். அண்ணல் - படைத்தற் கடவுள்; பெருமையுமாம். அயன் - பிரமன். வண்ணம் - அழகு. அக்கு - உருத்திராக்கம். பெண்ணினம் - மகளிர்கூட்டம். ஈண்டுப் பெண்ணென்னும் அஃறிணைப் பெயர் பெண்டிர் என்னும் உயர்திணைப் பொருட்டாய் நின்றது. பெண்கள், ஆண்கள் என்னும் பிழை வழக்குப் பயிற்சியை நோக்குக. `சோர்விலாள் பெண்` என்ற வள்ளுவர் காலத்துக்கு முன்னேயே இவ்வாறு வழங்கியது போலும். மொய்த்து - (கூடி) நெருங்கி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிற்காலத்தும் பெருமைகள் பெருகும் பிரமபுரம் அமர்ந்த பெருமான், பன்றியின் கொம்பைத் தரித்தவர். பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்து அருள் புரிந்தவர். சினந்துவந்த காலன் வீழுமாறு கால்கொடு பாய்ந்தவர். பிணங்கள் செறிந்த சுடுகாட்டில் ஆடித் திளைப்பவர்.

குறிப்புரை :

பன்றியின் கொம்பு - ஏனக்கொம்பு. `ஏனமுளைக் கொம்பு` (தி .1 ப .1 பா .2). பார்த்தற்கு - அருச்சுனனுக்கு. கன்றிய - கோபித்த. காலன் - எமன். காலனைக் கால்கொடுபாய்ந்திலர், வீழப் பாய்ந்திலர் என்க. துன்று - நெருங்கிய. துதைந்திலர் -நெருங்கிலர். பின்றி - பிந்தி. `பின்றா நேசத்தால்` (திருவாசகம்). பீடு - பெருமை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரச னிலங்கையர் கோனை யன்று மடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியி னதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்கள் செறிந்த பொழில் சூழ்ந்த பிரமபுரம் அமர்ந்த பெருமான், கையில் மழுவைத் தரித்தவர். வீழ்ந்து பட்ட பிரமனது தலையோட்டைக் கையில் ஏந்தியவர். இலங்கையர் தலைவனாக விளங்கிய இராவணனை அக்காலத்தே அடர்த்தவர். பரண் அமைத்துக் காக்கும் புனத்தில் வரும் இளமான் புலி ஆகியவற்றின் தோல்களை உடுத்தவர்.

குறிப்புரை :

பரசு - மழு. படுதலை - கபாலம். கோன் - இராவணன். அடர்த்திலர் - தாக்கிலர். புரை - பன்னசாலை. அதள் - தோல். பிரசம் - தேன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

அடிமுடி மாலயன் றேட வன்று மளப்பிலர் போலுங்
கடிமல ரைங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கட லீந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பெண்யானை போன்ற நடையினை உடைய மாதர்கள் பெருகிய பிரமபுரம் அமர்ந்த பெருமான், அன்று திருமால் பிரமர்கள் அடிமுடிதேடி அளக்கலாகாத திருவுருவம் கொண்டவர். மணம் கமழும் மலர்கள் ஐந்தினைக் கணைகளாகக் கொண்ட மன்மதன் எரியுமாறு விழித்தவர். மண்ணுலகில் தந்தையிடம் பால்கேட்ட மலர்போன்ற மென்மையான இளம் பாலகனுக்குப் பாற்கடல் ஈந்தவர்.

குறிப்புரை :

கடி - மணம். மலர் ஐங்கணை - ஐந்து பூங்கணை. வேள் - (கரு) வேள்; மன்மதன். கனல - தீப்பொறி பறக்க. பாலன் - உபமன்யு முனிவர். `பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடலீந்த பிரான்`. பிடி - பெண்யானை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவ ரானிழ னால்வர்க் கறங்க ளுரைத்திலர் போலும்
உற்றல ரொன்றிலர் போலு மோடு முடிக்கிலர் போலும்
பெற்றமு மூர்ந்திலர் போலும் பிரம புரமமர்ந் தாரே.

பொழிப்புரை :

பிரமபுரம் அமர்ந்த பெருமான், வெற்றுடலோடும், சீவரம் அணிந்தும் திரியும் சமண புத்தர்கட்குப் புலனாகாதவர். ஆல் நிழற் கீழ்ப்பற்றற்றவர்களாகிய சனகாதிமுனிவர் நால்வர்க்கு அறங்கள் உரைத்தவர். எதனையும் சார்ந்து நில்லாதவர். ஒன்றுமில்லாதாரைப் போலத்தோன்றுபவர். தலையோட்டை முடியில் தரித்தவர். விடை ஊர்ந்துவருபவர்.

குறிப்புரை :

வெறுமை அரைசீவரத்தார் - ஆடையில்லாச்சமணர். சீவரம் - பழுப்பேறிய ஆடை. `துவர் ஊட்டின சீலை` யும் ஆம், `சீவரம் போர்த்தல் மத்திம தேசத்தார் ஆசாரம் அன்றோ மூத்தோர் முன் இளையார் போர்வை வாங்குவது போல` (நீலகேசி 3:13, உரை). அற்றவர் - பற்று ஒன்றுமில்லாதவர். `அற்றவர்க்கு அற்ற சிவன்` பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சுமாறே` (திருவா -514). நால்வர் - சனகாதியர். அலர் - பழி. முடிக்கு - சடைமுடிக்கு. ஓடு - தலையோடு. `தலைமாலை தலைக்கணிந்து`. பெற்றம் - எருது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பெண்ணுரு வாணுரு வல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லா மறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்த னவின்றன பத்தும்வல் லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.

பொழிப்புரை :

பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத (மாதொருபாகராக) பிரமபுரநகரில் உகந்தருளிய தலைமையை உடைய சிவபிரான் செய்யாத செயல்களைச் செய்தனபோலக் கூறும் இயல்புகளையெல்லாம் அறிந்து வகை வகையாக விரும்பிய ஞானசம்பந்தன் நவின்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் விண்ணவர்களோடு இனிதாக வீற்றிருப்பர்.

குறிப்புரை :

`பெண்ணுரு ...... அண்ணல்` பெண்ணுருவமும் ஆணுருவமும் அல்லாத அண்ணல். `ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகை வீரட்டனாரே` (தி .4 ப .27 பா .8). `பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை` (தி .6 ப .45 பா .9). பிரமபுரநகர் மேய அண்ணல் - பிரமபுரத்தில் எழுந்தருளிய தலைவர். `செய்யாதன எல்லாம்` என்றதால் முற்பாக்களில் உரைத்தவை சிவபிரான் செய்யாதவை என்றும்; பொருள்சேர் புகழ் என்றும் உணர்த்தினார். வல்லவர்களாகிய அவர் வீற்றிருப்பார் என்று இயைக்க. நண்ணிய - விரும்பிய.
சிற்பி