திருப்பெரும்புலியூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

திருப்பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், தாம் கொண்டருளிய பேருருவில் மண்விண் ஆகிய உலகங்களை ஒவ்வொரு பாகமாகக் கொண்டவர். திருமாலை ஒருபாகமாக ஏற்றவர். உமையம்மையை இடப்பாகமாகக் கொண்டவர். வேதங்களை உடையவர். விமலர். உமையம்மைக்குத் தம்முடலில் ஒருபாகத்தை அளித்ததால் கண்களிலும் ஒருபாதியையே பெற்றவர். கங்கையைச் சடையில் கரந்தவர்.

குறிப்புரை :

சிவபெருமானது விசுவரூபத்தில் ஒவ்வொரு பாகம் மண்ணும், அம்மண்ணைப் படைக்கும் பிரமனும், காக்கும் மாலும், விண்ணும், கண்ணும், பெண்ணும் உடையவர். வேதத்தை (ச் செய்யுட் கிழமையாக) உடைய நிமலர். கங்கையைச் சடையில் ஒளித்தவர். உடையாரும், விமலரும், கரந்தாருமாகிய சிவபெருமான் புலியூர் பிரியார் என்க. உடையார் எழுவாய், பிரியார் பயனிலை. பெரும்புலியூர் செயப்படுபொருள். மேலும் இங்ஙனமே கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண் டோள்கள்
மின்னு சுடர்க்கொடி போலும் மேனியி னாளொரு கங்கைக்
கன்னி களின்புனை யோடு கலைமதி மாலை கலந்த
பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

கடலில் பொருந்திய பவளம் போன்ற தூயனவாகிய நீண்ட தோள்களையும், மின்னுகின்ற ஒளி பொருந்திய கொடிபோன்ற மேனியையும் உடைய கங்கையைப், பிற நதிக்கன்னியரின் நீரோடு, கலை வளரும் மாலைபோன்ற பிறைமதியைப் புனைந்த பின்னிய சடையை உடைய பெருமான் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

துன்னு - நெருங்கிய. பவளம் சேர் தோள்கள் - கடலிலுள்ள பவளத்தை ஒத்த தோள்கள். தூயன தோள்கள். நீண்ட தோள்கள். திண்மை - உறுதி. சுடர்க்கொடி போலும் மேனியினாள் - சோதிக்கொடிபோன்ற திருமேனியுடையவள். கங்கைக் கன்னிகள் புனையோடு - கங்கை நதியின் கிளைகளின் நீரொடு. நதிகளைப் பெண்பாலாக் கொள்ளுதல் மரபு. நதிபதி எனக் கடலைக் கொள்ளுதலால் கன்னி என்பது பெண்ணென்னும் பொருட்டு. புனை - நீர். `அனைவரு கானகத்து அமுதளாவிய புனை வர உயிர் வரும் உலவை\\\\\\\' (கம்பர். அகத்தியப் -4) கலைமதிமாலை - பதினாறு கலைகளுடைய திங்கட் கண்ணி, சிவபெருமான் சடைமேலுள்ளது பிறையேயாயினும் மதிக்குரிய அடை கொடுத்துக் கூறுதல் உண்டு. சாதியடை. திருமுறையுள் ஆண்டாண்டுக் காண்க. புனையோடுமாலை கலந்த சடை. பின்னு சடை. சடையையுடைய பெருமானார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கள்ள மதித்த கபாலங் கைதனி லேமிக வேந்தித்
துள்ள மிதித்துநின் றாடுந் தொழில ரெழின்மிகு செல்வர்
வெள்ள நகுதலை மாலை விரிசடை மேன்மிளிர் கின்ற
பிள்ளை மதிப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

கள்ளங்கருதிய பிரமனது கபாலத்தைக் கையில் ஏந்தித்துள்ளி மிதித்து நின்றாடும் தொழிலராகிய அழகிய செல்வரும், கங்கை சிரிக்கும் தலைமாலை ஆகியன மிளிர்கின்ற விரிசடைமேல் பிள்ளைமதியையும் புனைந்துள்ளவரும் ஆகிய பெருமான் பெரும் புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

கள்ள மதித்த கபாலம் - கள்ளத்தைக் கருதிய பிரமனது கபாலம். முதல் வினை சினைமேல் ஏற்றப்பட்டது. அதைக் கையில் ஏந்தித் துள்ள மிதித்து நின்று ஆடும் தொழிலுடையவர் என்று சிவபெருமான் நடனமாடுங்காலத்துக் கபாலத்தைத் தாங்கியிருந்த உண்மை கூறப்பட்டது. எழில்மிகு செல்வர் - சென்று அடையாமையாகிய அழகுமிக்க செல்வத்தை உடையவர். வெள்ளம் - கங்கை. நகு தலை மாலை - சிரிக்கின்ற தலைகளின் வரிசை. பிள்ளைமதி - இளம் பிறை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

ஆட லிலைய முடையார் அருமறை தாங்கியா றங்கம்
பாட லிலைய முடையார் பன்மை யொருமைசெய் தஞ்சும்
ஊட லிலைய முடையார் யோகெனும் பேரொளி தாங்கிப்
பீட லிலைய முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

நடனலயம் உடையவர். அரிய நான்கு மறைகளைத் தாங்கிப் போற்றும் ஆறு அங்கங்களாகிய இலயம் உள்ள பாடல்களைப் பாடுபவர். பன்மையும் ஒருமையுமாகிய கோலத்தைச் செய்து, ஐம்புலனடக்கம் இன்மையால் நாம் ஐயுறுமாறு இருப்பவர். யோகம் என்னும் ஒளிநெறியை மேற்கொண்டு பெருமை பொருந்திய நள்இரவில் நடனம் புரிபவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

ஆடல் இலையம் - நடனலயம். ஆறுஅங்கம் - சிக்கை, கற்ப சூத்திரம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம் என்பன. பாடல் இலயம் - சங்கீதலயம். பன்மை ஒருமை செய்து - அநேகம் ஏகம் என்னும் நிலைமைகளைத் தோற்றி. அஞ்சும் - ஐம்பொறிகளும். ஊடலில் - ஊடுதலாலே. (ஐம்பொறி அடக்கம் இல்லாமையால்) ஐயம் உடையார் - மெய்ப்பொருள் நிச்சயமின்றி ஐயப்படுதலுக்குரியார். யோகு - யோகம். யோகநெறி; ஒளிநெறியாதலின் யோகெனும் பேரொளி என்றார். பீடு அல் - பெருமையுடைய நள்ளிரவில். இலயமுடையார் - நட்டம் பயிலுதலுடையார். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் ஆற்றல் யோகெனும் பேரொளி தாங்கியிருத்தல் கொண்டே `உறைந்ததோர் ஒளியதாக்கி ஒடுங்கிடின் யோகபூசை\\\\\\\\\\\\\\\' (ஞானபூசாகாரணம்-14) என்பதும், ஞானி யோகி கிரியாவான் முறையே அறிவிற்கறிவாகவும் அறிவில் ஒளியாகவும் அறிவில் மூர்த்தியாகவும் தியானிப்பர் என்பதும், `மூன்றும் பெறின்புறப் பூசையாமே\\\\\\\\\\\\\\\' (ஞான-14) என்பதும் `மூன்றும் உணர்வும் ஒளியும் மூர்த்தியும்\\\\\\\\\\\\\\\' என்பதும் தருமையாதீனத்து முனிவருள் ஒருவராகிய ஸ்ரீமத்சட்டைநாதத்தம்பிரான் சுவாமிகள் குறிப்புரையால் உணரத்தக்கன. இதனால் யோகியர் யோகெனும் பேரொளி தாங்கும் உண்மை புலப்படும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தோடுடை யார்குழைக் காதிற் சுடுபொடி யாரன லாடக்
காடுடை யாரெரி வீசுங் கையுடை யார்கடல் சூழ்ந்த
நாடுடை யார்பொரு ளின்ப நல்லவை நாளு நயந்த
பீடுடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

பெரும்புலியூரைப் பிரியாதுறையும் இறைவர், ஒரு காதில் தோட்டையும் ஒருகாதில் குழையையும் உடையவர். சாம்பலைப் பூசியவர். அனலில் நின்று ஆடுதற்கு இடுகாட்டை இடமாக உடையவர். எரிவீசும் கையுடையார். கடலால் சூழப்பட்ட நாடுகள் அனைத்தையும் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லனவற்றை நாள்தோறும் விரும்பிய பெருமை உடையவர். எல்லோர்க்கும் தலைவராயிருப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகிறார்.

குறிப்புரை :

குழையணிந்ததொரு காதில். தோடணிந்ததொரு காதில். காதில் திருநீறணிதல் உணர்த்தப்பட்டது. காட்டில் தீயில் ஆடுபவர். கையில் எரி ஏந்தியவர். கடல் சூழ்ந்த நாடெல்லாம் உடையவர். பொருள் இன்பம் ஆகிய நல்லவற்றை நாள்தோறும் விரும்பி, அடியார்க்கருளும் பெருமை உடையார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

கற்ற துறப்பணி செய்து காண்டுமென் பாரவர் தங்கண்
முற்றி தறிதுமென் பார்கண் முதலியர் வேதபு ராணர்
மற்றி தறிதுமென் பார்கண் மனத்திடை யார்பணி செய்யப்
பெற்றி பெரிது முகப்பார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

கல்வி கற்றதன் பயனை அறிந்து பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்குக் கண்ணாயிருப்பவர். இதனை முற்றும் அறிவோம் என்பார்க்கு முதல்வராய் இருப்பவர். வேத புராணங்களாய் விளங்குபவர். இதனைப் பின் அறிவோம் என்பார் மனத்தில் இருப்பவர். தொண்டர்களைப் பெரிதும் உகப்பவர். அவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

கற்றது உறப் பணி செய்து காண்டும் என்பார் அவர் தம் கண் - கற்றதனாலாய பயன் தம்மைப் பொருந்தத் திருப்பணி செய்து கடவுளைக் காண்போம் என்பார்க்கு அவர் தம் கண்ணாயுள்ளார். முற்று இது அறிதும் என்பார்கள் முதலியர் - இதனை முற்றும் அறிவோம் என்பவர்களுக்கு முதல்வராயிருப்பவர். வேதபுராணர் - வேதமும் புராணமுமாயிருப்பவர். வேதத்தால் உணர்த்தப்படும் பழையோர். மற்று இது அறிதும் என்பார்கண் மனத்திடையார் - இதைப் பின்னே அறிவோம் என்பாருடைய மனத்தில் இருப்பவர். பணி செய்யப் பெற்றி பெரிதும் உகப்பார் - திருத்தொண்டு செய்துவரின் அத்தொண்டின் தன்மையையும் தொண்டர் தன்மையையும் மிகவிரும்பி அருள் செய்வார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

வேதம் ஓதுகின்றவர்கள், ஒலிக்கின்ற பாடல்களால் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர், மனக்குறை உடையவர் ஆகியோர் குறைகளைத் தீர்ப்பவர். இளமைத்தன்மையர், அழகர். நம் செல்வராயிருப்பவர். கண்டத்தில் விடக்கறை உடையவர். கங்கையைச் சடையில் கரந்தவர். சென்னியின்மேல் பிறை உடையவர்.

குறிப்புரை :

வேதங்களுடையவரும், ஒலிக்கின்ற பாடல்களாலே அழகிய தாமரை மலர்போலும் சிவந்த திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களும், மனக்குறை உடையவர்களும் ஆகிய எத்திறத்தாருடைய குறைகளையும் தீர்ப்பார். இளைஞர். சொக்கர். நம் செல்வர். நீலகண்டர். கங்கைச் சடையர். சந்திரசேகரர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

உறவியு மின்புறு சீரு மோங்குதல் வீடெளி தாகித்
துறவியுங் கூட்டமுங் காட்டித் துன்பமு மின்பமுந் தோற்றி
மறவியஞ் சிந்தனை மாற்றி வாழவல் லார்தமக் கென்றும்
பிறவி யறுக்கும் பிரானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

உறவும் இன்பமும் ஓங்குமாறு செய்து வீட்டின்பத்தை எளிதாகத்தந்துதுறவுள்ளமும் பற்றுள்ளமும் காட்டித்துன்ப இன்பங்களைத் தந்து மறத்தலுடைய சிந்தனையை மாற்றி மறவாமையுடன் வாழவல்லார்; பிறவியைப் போக்கும் பிரானார் பெரும்புலியூரை பிரியாதுறைகின்றார்.

குறிப்புரை :

உறவியும் இன்புறு சீரும் ஓங்குதல் - உறவும் இன்பம் மிக்க சிறப்பும் உயர்தல். எளிதாகி - வீடு எளிதாகி. பற்றற்றொழிதல் எளிதாகி. துறவியும் கூட்டமும் காட்டி - முத்தியும் பந்தமும் காட்டி. துன்பமும் இன்பமும் தோற்றி - துக்கமும் சுகமும் ஆக்கி. மறவி அம் சிந்தனை மாற்றி - மறத்தல் உடைய கருத்தை ஒழித்து. வாழவல்லவர் தமக்குப் பிறத்தல் என்றும் இல்லாமல் போக்கும் பிரானார். இத்திருப்பாடல் எல்லாருள்ளத்தும் என்றும் நிற்கத்தக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே.

பொழிப்புரை :

புகழுடைய அடியவர்களுக்குப் பெரியோரைப் போல்பவர். சடையில் கங்கையை உடையவர். திருநீறுபூசும் நினைவுடையவர். விரிந்த கொன்றைமாலையைச் சூடியவர். விடையை ஊர்ந்து வருபவர். தலைமைத்தன்மை உடையவர். அழகிய ஆயிரம் பெயருடையவர். பெருமானாக விளங்குபவர். அவ்விறைவர் பெரும்புலியூரைப் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

சீர் - கனம். உடையார் - சுவாமி. அடியார்கள் சேடர் ஒப்பார் - அடியார்களுக்கெல்லாம் பெரியோரைப் போல்வார். சடை சேரும் கங்கை உடையார். திருநீறு பூசும் திருவுள்ளம் உடையார். விரிந்த கொன்றைமாலை அணிந்தவர். எருது ஊர்வார். எவ்வுலகிற்கும் எவ்வுயிர்க்கும் தலைவர். ஐயாயிரம் பேர் உடையார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

உரிமை யுடையடி யார்கள் உள்ளுற வுள்கவல் லார்கட்
கருமை யுடையன காட்டி யருள்செயு மாதி முதல்வர்
கருமை யுடைநெடு மாலுங் கடிமல ரண்ணலுங் காணாப்
பெருமை யுடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே. 

பொழிப்புரை :

உரிமையுடைய அடியவர்கட்கும், மனம் பொருந்த நினைப்பவர்கட்கும் காண இயலாதனவற்றைக் காட்டி அருள் செய்யும், ஆதிக்கும் ஆதியாய முதல்வர். கரியதிருமாலும் மணமுடைய தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் காணாப் பெருமையுடைய பெருமான். அவ்விறைவர் பெரும்புலியூரில் பிரியாது உறைகின்றார்.

குறிப்புரை :

உரிமை உடைய...முதல்வர் - திருவருள் உரிமை உடைய அடியவர்களின் உள்ளத்தில் மிக நினைக்க வல்லவர்கட்குக் காண்டற்கருமையுடையனவற்றைக் காட்டி அருள் செய்யும் அநாதி முதல்வன். ஆதிமுதல்வன் என்பது ஆதிக்கும் ஆதியாய அநாதி முதல்வரை உணர்த்திற்று. மாயோனும் மலரவனும் காணாத தீப்பிழம்பாகிய பெருமை உடைய பெருமான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பிறைவள ரும்முடிச் சென்னிப் பெரும்புலி யூர்ப்பெரு மானை
நறைவள ரும்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
மறைவள ருந்தமிழ் மாலை வல்லவர் தந்துயர் நீங்கி
நிறைவளர் நெஞ்சின ராகி நீடுல கத்திருப் பாரே. 

பொழிப்புரை :

பிறைவளரும் முடியினை உடைய சென்னிப் பெரும்புலியூர்ப் பெருமானை, தேன் பெருகும் பொழில் சூழ்ந்தகாழிப்பதியில் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றி அருளிய வேதமாக வளரும் இத்தமிழ்மாலையால் பரவவல்லவர்கட்குத் துயர் நீக்கமும் நெஞ்சு வளர் நிறையும் உளவாம். அவர்கள் நீடிய பேரின்ப உலகில் வாழ்வார்கள்.

குறிப்புரை :

பிறை தளர்தலின்றி வளர்ந்து கொண்டேயிருக்கும் சடைமுடியைக் கொண்ட தலையையுடைய பெருமான். நறை - தேன். பொழில் - சோலை. நற்றமிழ் - திருப்பதிகங்கள். மறை வளரும் தமிழ் மாலை - இத்திருப்பதிகம். வல்லவர் எழுவாய். இருப்பார் - பயனிலை. அவர்க்குத் துயர் நீக்கமும், நெஞ்சுவளர் நிறையும் உளவாகும்.
சிற்பி