திருக்கடம்பூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வானமர் திங்களு நீரு மருவிய வார்சடை யானைத்
தேனமர் கொன்றையி னானைத் தேவர் தொழப்படு வானைக்
கானம ரும்பிணை புல்கிக் கலைபயி லுங்கடம் பூரில்
தானமர் கொள்கையி னானைத் தாள்தொழ வீடெளி தாமே.

பொழிப்புரை :

வானிற் பொருந்திய திங்களும் கங்கையும் மருவிய நீண்ட சடையை உடையவனும், தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவனும், தேவர்களால் தொழப்படுபவனும், காடுகளில் பெண்மானைத் தழுவி ஆண்மான்கள் மகிழும் கடம்பூரில் எழுந்தருளிய இயல்பினனும் ஆகிய பெருமான் திருவடிகளைத் தொழின் வீடு எளிதாகும்.

குறிப்புரை :

வான் - ஆகாயத்தில். அமர் - பொருந்திய. திங்களும் - பிறையும். நீரும் - கங்கையும். மருவிய - கலந்த. வார் - நீண்ட. தேவர் தொழப்படுவானை:- `தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே`(தி .4 ப .112 பா .5). என்றவாறு, தன் அடியாரையும் தேவர் தொழுவர் எனின், தன் (பரமசிவ) னைத் தொழுதலில் ஐய முண்டோ?. கான் - காடு. பிணை - பெண் மான். கலை - ஆண்மான். கடம்பூர் - கடம்பு மரம் உள்ளவூர்; தலவிருட்சம். `கானமரும் பிணை புல்கிக் கலைபயிலுங் கடம்பூர்`. என்றதால் கடப்பங்காடும் ஆகும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.

பொழிப்புரை :

பாம்பு, ஆமையோடு, ஆகியவற்றைப் பூண்டு, அழகிய ஆடையாகப் புலித்தோலை உடுத்து அழகிய முடிமீது பொருந்திய வெண்பிறையைச்சூடிப் பலராலும் விரும்பிப்பரவப் பெறும் சிறந்த கடம்பூரில் எழுந்தருளிய பசிய கண்களை உடைய வெள்ளேற்று அண்ணலின் திருவடிகளை இரவும் பகலும் பணிய நமக்கு இன்பம் உளதாம்.

குறிப்புரை :

அரவு - பாம்பு. ஆமை:- `முற்றலாமை இளநாகமோடு ஏனமுளைக் கொம்பவைபூண்டு`. அம் துகில் வேங்கை அதள் - அழகிய புலித்தோலாகிய ஆடை. முடிமேல் திங்கள் சூடி விரும்பிப்பரவுங் கடம்பூர் என்க. அம்பிகைக்குரிய துகிலும், அரனுக்குரிய அதளும் விரவும் (- கலக்கும்.) எனலுமாம். பரவும் - எழுந்தருளிய. சூடி விரும்பி எழுந்தருளிய கடம்பூர் என்று கொள்ளாக்கால், வினைமுடிபு பொருந்தாது. பரவுதல் - வாழ்த்துதல், துதித்தல் என்று பொருள்படுதல் ஈண்டுப் பொருந்தாது. இதில், சூடுதலும், விரும்புதலும், பரவுதலும் இறைவன் வினையாதல் வேண்டும். சூடி என்பதைப் பெயராகக் கொண்டு கூறலாம் எனினும், பூண்டு சூடி விரும்பிப் பரவும் என்று தொடர்தலால் இடையில் ஒரு வினையெச்சத்தைமட்டும் பெயராக் கோடல் யாங்ஙனம்? அதளும் விரவும் முடி எனல் விளங்கிற்றிலது. பைங்கண் வெள்ளேறு - பசிய கண்களையுடைய வெள்விடை. ஏற்றண்ணல் - எருதூரும் பெருமானார். இரவும் பகலும் பாதம் பணிய நமக்கு இன்பமது ஆம் என்க. விரும்பிச்சூடி - அதளும் விரும்பி என்று பொருத்தினும் பொருந்தல் இல்லை. அதளும் விரவும் திருமுடி என்று கொண்டு அரையில் உடுத்த புலித்தோல் முடியையும் மறைத்துச் சுற்றியிருந்ததோ என்று எண்ணுவாரும் உளர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

இளிபடு மின்சொலி னார்க ளிருங்குழன் மேலிசைந் தேறத்
தெளிபடு கொள்கை கலந்த தீத்தொழி லார்கடம் பூரில்
ஒளிதரு வெண்பிறை சூடி யொண்ணுத லோடுட னாகிப்
புலியத ளாடை புனைந்தான் பொற்கழல் போற்றுது நாமே.

பொழிப்புரை :

இளி என்னும் இசை இனிமையும் சொல்லினிமையும் உடைய மகளிர் தம் கரிய கூந்தலில் புகை படியுமாறு அந்தணர் ஆகுதி வேட்கும் கடம்பூரில் ஒளிபொருந்திய வெண்பிறைசூடி உமையம்மையோடு உடனாய்ப் புலித்தோலுடுத்து எழுந்தருளியுள்ள இறைவனின் பொற்கழலை நாம்போற்றுவோம்.

குறிப்புரை :

இளி - (யாழின் நரம்புகளுள் ஒன்று.) ஏழிசையுள் ஒன்று. சொல்லினிமையும் இளி என்னும் இசையினிமையும் வேறுபடாது இருக்கும் என்றபடி. (சொல்லினிமைக்கு ஒவ்வாது இளியும் படும் எனலும் ஆம்). குழல் - கூந்தல். குழல்மேல் புகை இசைந்து ஏறத் தீத்தொழில் ஆர்கடம்பூர் எனலுமாம். ஏற என்னும் வினையெச்சம். ஆர் என்னும் வினைப்பகுதியொடு முடிந்தது. கலந்த என்பதனொடு முடித்தலும் கூடும். ஏறக் கொள்(ளும்) கை எனல் வலிந்து பொருள் கொள்வதாகும். ஏறத் தெளி (த்தல்) என்று பொருத்தலுங்கூடும். யாகத்தில் இருபத்தேழு நட்சத்திரப் பெண்டிர்க்கும் தீவழி உதவும் வேதவுண்மை குறிக்கப்பட்டது. தெளிபடு கொள்கை - தெளிவு பொருந்திய கோட்பாடு; வேதக்கொள்கை. தீத்தொழில் - வேள்வி. ஆர் - பொருந்திய. தீத்தொழிலார் - வேள்வியாளர் எனலுமாம். ஒளி தருபிறை - வெண்பிறை. ஒள் நுதல் - ஒளியதாகிய நெற்றியை உடைய உமாதேவியார். பண்புத்தொகை நிலைக்களத்துப்பிறந்த அன்மொழித் தொகை. `பண்பு தொகவரூஉம் கிளவியானும் ... ஈற்று நின்றியலும் அன்மொழித் தொகையே` (தொல், சொல்,902). `பண்புத்தொகை படவும் ... அச்சொற் றொக்கபின் அத்தொகை அன்மொழித் தொகை யாகாமையின், தொகுவதன்முன் அவற்றிற்கு நிலைக்களமாகிய சொற் பற்றிவரும்`(பிரயோக விவேகம் :- 24.உரை). ஓடு உடன் இரண்டனுள் ஒன்று மூன்றனுருபின் நீட்சி. (தொல்காப்பியர் `ஒடு` என்றே கூறினார்). மற்றொன்று உடனாதல் (ஒருசேர இருத்தல்) குறித்தது. `எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி` (தி .7 பா.230) என்புழிக் காண்க. ஓடுடன் கூடி என்றலும் உண்டு. சூடிஉடனாகிப் புனைந்தான் என்றியைக்க. புலி அதள் ஆடை - புலித்தோலுடையை. புனைந்தான் - அணிந்த சிவபிரான். பொன் கழல் - பொன்போலுஞ் சேவடி. கழல் - ஆகுபெயர். நாம் கழலைப் போற்றுதும் (- போற்றுவோம்). `கள்` வண்டு என்பாருமுளர். இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பறையொடு சங்க மியம்பப் பல்கொடி சேர்நெடு மாடம்
கறையுடை வேல்வரிக் கண்ணார் கலையொலி சேர்கடம் பூரில்
மறையொலி கூடிய பாடன் மருவிநின் றாடன் மகிழும்
பிறையுடை வார்சடை யானைப் பேணவல் லார்பெரி யோரே.

பொழிப்புரை :

பறை சங்கம் முதலியன ஒலிக்கப் பலவகையான கொடிகள் கட்டிய மாட வீடுகளில் மகளிர் ஆடும் ஒலி நிறைந்த கடம்பூரில் வேதஒலியோடு கூடிய பாடல்கள் பாடி ஆடி மகிழும் பிறைசூடிய நீண்ட சடையை உடைய பெருமானைப் பேணவல்லவர் பெரியோர் ஆவர்.

குறிப்புரை :

பறை - வாத்தியம். சங்கம் - சங்குகள். இயம்ப - ஒலிக்க. கறை - குருதிக் கறை. கறுப்பு. வேல். பிறருடம்பிற்பட்டு, இரத்தம் தோய்ந்து உலர்ந்து கறுப்புறுதல் கூறப்பட்டது. சாதியடை, கண்ணுக்குச் செவ்வேல், அதன் கொடுமையும் கூர்மையும் செம்மையும் பற்றி ஒப்பாகும். கலை - மேகலை; மாடங்களில் மகளிர் ஆடுதலால் உண்டாகும் ஒலி. மறை ஒலி - வேத முழக்கம். பாடல் - வேத கீதம்; ஆடல் மகிழும் சடையான். வார் - நீண்ட. பேணவல்லார் - விரும்பி வழிபடவல்லார்:- பெரியோர் - திருவருட்பெருமையுடையோர். பேணவல்லார்:- `வித்தும் அதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம், வித்தும் அதன் அங்குரமும் மெய் உணரில் - வித்ததனிற் காணாமையால், அதனைக் கைவிடுவர். கண்டவர்கள், பேணாமையால் அற்றார் பேறு`. (திருக்களிற்றுப்படியார். 57.) என்னும் உண்மைநூலின்கண் பேணாமையாலாம். பெறாமை கூறுமுகத்தான் பேண வல்லார் பெருமை உணர்த்தப்பட்டமை விளங்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தீவிரி யக்கழ லார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரி கூந்தனற் பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரி கொன்றை கலந்த கண்ணுத லான்கடம் பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.

பொழிப்புரை :

தீப்போலும் சடைவிரியக் கழல்கள் ஆர்க்கக் கையில் அனல் ஏந்திச் சுடுகாட்டில் பேய்க்கணம் நகைக்க நடனம் ஆடுபவனும் கொன்றைமாலை அணிந்த நுதல்விழியானும் ஆகிய சிவபெருமானது கடம்பூரை அடைந்து ஓசையின்பம் உடைய பாடல்களைப் பாடிப் போற்றுவார் பழிபாவங்கள் இலராவர்.

குறிப்புரை :

தீவிரியக் கழல் ஆர்ப்பச் சேய் எரி கொண்டு இடு காட்டில் நட்டம் நவின்றோன் - தீப்போலும் சடை விரியவும் கழல் ஒலிக்கவும் செந்தீயைக் கையில் கொண்டு, உலகனைத்தும் கற்பொடியென அழியுஞ் சருவசங்காரகாலத்தில், அகண்டாகாரப் பெருவெளியில், தான் தனியனாகி இலங்கித், திருநடம் பயிலுஞ் சிவபெருமான், நாவிரிகூந்தல் நல்பேய்கள் நகைசெய்ய - நீட்டிய நாக்கையும் பரந்த கூந்தலையும் உடைய நல்ல பேய்கள் நகுதலைச் செய்ய (நட்டம் நவின் றோன்). காவிரி கொன்றை - சோலைகளில் மலர்ந்த கொன்றை மலர்கள். கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன். பாவிரிபாடல் - ஓசை (யின்பம்) பெருகிய பாட்டு. பா - பரந்து செல்வதோரோசை. (தொல்.). பயில்வார் - பயிற்சிசெய்வார். பழியொடு பாவம் இலார் - (புகழும் புண்ணியமும் உள்ளவராய்ப்) பழியும் பாவமும் இல்லாதவராவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தண்புன னீள்வய றோறுந் தாமரை மேலனம் வைகக்
கண்புணர் காவில்வண் டேறக் கள்ளவி ழுங்கடம் பூரில்
பெண்புனை கூறுடை யானைப் பின்னு சடைப்பெரு மானைப்
பண்புனை பாடல் பயில்வார் பாவமி லாதவர் தாமே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர்நிறைந்த வயல்களில் முளைத்த தாமரைகள் தோறும் அன்னங்கள் வைகிமகிழவும், கண்கவரும் சோலைகளில் வண்டுகள் மொய்க்க மலர்கள் தேன்பிலிற்றவும் அமைந்த கடம்பூரில் மாதொருபாகனாய்ப் பின்னிய சடையினனாய் விளங்கும் பெருமானைப் பண்ணமைந்த பாடல்கள் பாடிப்பரவுவார் பாவம் இல்லாதவராவர்.

குறிப்புரை :

தண்புனல் - குளிர்ந்ததாகிய நீர். அனம் - அன்னப்புள். கண்புணர்கா - கண்கள் தாமே சென்று புணர்தற்குத்தக்க அழகுமிக்க சோலை. கள் - தேன். அவிழும் - அலரும். வண்டுகள் ஏறுதலால் மலர்கள் தேன்நெகிழ அலரும் என்றபடி, பெண்புனை கூறு உடையான் - `மாதியலும் பாதியன்` அர்த்தநாரீச்சுவரன். பின்னுசடை - பின்னிய சடை. பண்புனை பாடல் - பண்களால் அழகு செய்யப்பெற்ற பாடல்கள். `பண்ணின் பயனாம் நல்லிசை` (பெரிய . சண்டேசுர .9). கலந்த பாடல் என்றவாறு. `பாவம் இலாதவர்` - என்றதற்கு மேற்பாட்டில் உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பலிகெழு செம்மலர் சாரப் பாடலொ டாட லறாத
கலிகெழு வீதி கலந்த கார்வயல் சூழ்கடம் பூரில்
ஒலிதிகழ் கங்கை கரந்தா னொண்ணுத லாளுமை கேள்வன்
புலியத ளாடையி னான்றன் புனைகழல் போற்றல் பொருளே.

பொழிப்புரை :

சிவபூசகர்கள் பூசைக்கு வேண்டும் செம்மையான மலர்களைக் கொய்து, பாடியும் ஆடியும் மகிழும் ஒலிநிறைந்த வீதிகளையும் நீர் நிரம்பிய வயல்களையும் உடைய கடம்பூரில் கங்கையை முடியில் மறைத்தவனாய், உமைபாகனாய், புலித்தோல் உடுத்தவனாய் விளங்கும் பெருமான் புகழைப் போற்றுதலே பொருள் உடைய செயலாகும்.

குறிப்புரை :

பலி - பூஜை. (சேது புராணம்). செம்மலர் - செய்ய பூக்கள். பலிகெழுமலர் - பூஜைக்குப் பொருந்திய பூக்கள். சார - அடைய. பாடலொடு ஆடல் - பாட்டும் ஆட்டும். அறாத - நீங்காத. கலி - ஒலி. கடம்பூர் வீதியிலுள்ளார் சிவபூஜைக்குப் பொருந்திய பூக்கள் கொண்டுவந்து பூசித்துப் பாடுதலும் ஆடுதலும் செய்வர் என்றவாறு, செம்மலர் என்பதற்குப் பெருமையிற் சிறந்தோர் எனலுமாம். பாடலாடலறாத கலிகெழு வீதி கலந்தகடம்பூர். வயல்சூழ்கடம்பூர். செம்மல்லர் என்று பொருள் கொள்ளின். பலி என்பது (அம்மல்லரது மெய்வலிமை குறிக்க) மாமிசம் என்றாகும். புலி அதள் ஆடை:- (பார்க்க : பா.3) புனை - அழகுறுத்தப்பட்ட. கழல் - கழலணிந்த திருவடிகளை. போற்றல் - துதித்தல், பொருள் - உடம்பின் பயன். போற்றாமை - உடம்பெடுத்ததன் பயனின்மை என்றவாறு. பிறவிப் பயன் ஆகமங்களை உணர்ந்து, சிவபிரான் திருவடி மலர்களை எப்பொழுதும் இடைவிடாமல் போற்றுதலேயன்றிப் பிறிதில்லை. `எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பூம்படு கிற்கயல் பாயப் புள்ளிரி யப்புறங் காட்டில்
காம்படு தோளியர் நாளுங் கண்கவ ருங்கடம் பூரில்
மேம்படு தேவியொர் பாக மேவியெம் மானென வாழ்த்தித்
தேம்படு மாமலர் தூவித் திசைதொழத் தீய கெடுமே.

பொழிப்புரை :

அழகிய நீர் நிலைகளில் கயல்கள் பாய, அதனால் பறவை இரிந்தோட விளங்கும் கடம்பூரில் மூங்கில் போன்ற தோள்களை உடைய மகளிர் மனங்கவரும் இயல்பினனாய் விளங்குவோனும் புறங்காட்டில் ஆடுபவனுமாகிய பெருமானது கடம்பூரை அடைந்து மாதொருபாகனே! எம்மானே! எனக்கூறி மலர்தூவித்தொழத் தீயனகெடும்.

குறிப்புரை :

படுகு - படுகர், நீர்நிலை. வண்டு - வண்டர். சிறகு - சிறகர், சுரும்பு - சுரும்பர் எனவருதல் போல்வது இது. பூம்படுகரில் கயல்மீன்கள் பாயவும் புட் (பறவை) கள் இரிய (ஓட) வும் புறங்காட்டில் தோளியர் கண்கவரும் என்க. காம்பு அடுதோள் - மூங்கிலை நீ எனக்கு ஒப்பாகாய் என்று கொல்லும் தோள். அடுதல் - கொல்லுதல். கண்களை ஒவ்வாது தோற்றோடிக் கயல் படுகரிற்பாய்தலும் புள் (வண்டு) இரிதலும் கூறப்பட்டன, `கயலஞ்சப் பிறழ்கண்ணாள்`(கம்பர் . மிதிலைக் . 26) `புள்ளுறைகமலவாவிப் பொருகயல் வெருவியோட வள்ளுறை கழிந்த வாள்போல் வரியுற வயங்கு கண்ணாள்` (? உண்டாட்டு 20). `நறைபாய் வனமலர்வாய் அளிபடரச் சேல்பாய்வனகயல் பாய்வன செங்கால் மடவன்னம், போல்பாய் புனல்மடவார் படிநெடுநாடு`(? . கங்கைப் .8). இதன் பொருளமைதி புலப்பட்டிலது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

திருமரு மார்பி லவனுந் திகழ்தரு மாமல ரோனும்
இருவரு மாயறி வொண்ணா வெரியுரு வாகிய வீசன்
கருவரை காலி லடர்த்த கண்ணுத லான்கடம் பூரில்
மருவிய பாடல் பயில்வார் வானுல கம்பெறு வாரே.

பொழிப்புரை :

திருமகள் மருவிய மார்பினனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும் ஆகிய இருவரும் அறிய முடியாதவாறு எரியுருவான ஈசனும் கரியமலைபோன்ற இராவணனைக் காலால் அடர்த்தவனும் ஆகிய பெருமானது கடம்பூரை அடைந்து, பொருந்திய பாடல்களைப் பாடிப்போற்றுவார் வானுலகம் பெறுவர்.

குறிப்புரை :

திருமார்பிலவனும் - திருமகள் மருவிய மார்பினையுடைய திருமாலும். திருமறுமார்பன் என்பது வேறு. அதில் ஸ்ரீவத்ஸம் என்பது திருமறு எனப்பட்டது. மாமலரோன் - செந்தாமரை மலரில் வாழ்கின்ற பிரமன். ஆகிய இருவரும் என்று ஒரு சொல்வருவிக்க. அறிவொண்ணா - அறிதற்கு ஒன்றாத. எரி உரு - தீப்பிழம்பு வடிவம். கருவரை - கரிய மலை போலும் இராவணனை. காலில் அடர்த்த கயிலையை எடுத்தபோது திருவடிப் பெருவிரலூன்றி நெருக்கிய. காலனைக்காலாற் கடிந்த கண்ணுதலான் எனலுமாம். பிற திருப்பதிகங்களுள், ஒன்பதாவது பாட்டில், அடிமுடி தேடிய வரலாற்றையொட்டி இராவணன் கயிலையெடுத்த வரலாற்றைக் கூறக்காணோம். சில பதிகங்களுள் இரண்டுங்கூறப் பட்டில ஆயினும், இவ்வாறு வரலாற்றை முன்பின் ஆகக்கூறவில்லை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

ஆடை தவிர்த்தறங் காட்டு மவர்களு மந்துவ ராடைச்
சோடைக ணன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தனம் வேத முதல்வன்
காட தனினட மாடுங் கண்ணுத லான்கடம் பூரே.

பொழிப்புரை :

ஆடையின்றி அறங்கூறும் அமணர்களும், துவராடை உடுத்து அறநெறிபோதிக்கும் பதர்களாகிய புத்தர்களும் நன்னெறிகூறிச் சொன்னாலும் அவை மெய்ச்சொற்களல்ல. பலவேறு வடிவங்களைக் கொண்டருளும் சிவபிரானும், நம் வேதமுதல்வனும் சுடுகாட்டுள் நடனமாடும் கண்ணுதலோனுமாகிய பெருமான் எழுந்தருளியிருப்பது கடம்பூராகும்.

குறிப்புரை :

ஆடை தவிர்த்து அறம்காட்டுமவர்களும் - ஆடை உடுக்காமல் தர்மோபதேசம் செய்யும் அமணர்களும். அம்துவர் ஆடைச்சோடைகள்:- சிவப்பு ஊட்டிய உடைகளைத் தரித்த வறட்சியர் (பொருளில்லாத பேச்சுடையார் என்றவாறு). நல்நெறி - நல்லவழி (ஞானமார்க்கம்). சொல்லினும் சொல் அல - சொல்லினாலும் அவை மெய்ச்சொற்கள் அல்ல. வேடம் பலபல காட்டும் விகிர்தன்:- பல வேடமாகும் பரன் நம் வேத முதல்வன். காடதனில் - காட்டில். `கள்ளி முதுகாட்டில் ஆடிகண்டாய்` (தி .6 ப .23.பா .4).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

விடைநவி லுங்கொடி யானை வெண்கொடி சேர்நெடு மாடம்
கடைநவி லுங்கடம் பூரிற் காதல னைக்கடற் காழி
நடைநவின் ஞானசம் பந்தன் நன்மையா லேத்திய பத்தும்
படைநவில் பாடல் பயில்வார் பழியொடு பாவ மிலாரே.

பொழிப்புரை :

விடைச்சின்னத்தை அறிவிக்கும் கொடியை உடையவனை, வெண்கொடிகள் சேர்ந்த உயரிய வாயில்களைக் கொண்ட மாடவீடுகளை உடைய கடம்பூரில் விருப்புடையவனை, கடலை அடுத்துள்ள காழிமாநகரில் தோன்றிய நன்னடை உடைய ஞானசம்பந்தன் நன்மை அருளுமாறு வேண்டிப்பாடிய சாதனமாகிய பாடல்களை ஓதுவார் பழிபாவம் இலாராவர்.

குறிப்புரை :

விடை நவிலும் கொடியானை - எருது பயின்ற கொடியை உடையவனை. வெண்கொடி - வெள்ளைத் துணிக்கொடி. கடை - வாயில், இடமும், அங்காடியுமாம். காதலன் - உயிர்கட்கு அருட்காதல் விளைப்பவன், அன்புருவானவன் எனலுமாம். `அன்பே சிவம்`. நடை - ஞானாசாரம். நன்மை - மங்களம். படைநவில் பாடல் - திருவருட்சாதனமாக நவின்ற பாடல்கள். படை - சாதனம். அல்லற் பட்டு...செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் .555). படை - நிவேதனமுமாம். இறைவன் புகழொடு படுக்கும் பாடல் என்றார் கோவை சிவக்கவிமணி முதலியாரவர்கள். பழியொடுபாவம் இலர் (பா.5இல்) உரைத்தாங்கு உரைத்துக்கொள்க.
சிற்பி