திருக்கழுமலம்


பண் :காந்தாரம

பாடல் எண் : 1

பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங் காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலநாம் பரவு மூரே.
 

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களைத் தனித்தனியே முதலிற் கொண்டு பன்னிரு பாடல்களாக அமைந்துள்ளது. கழுமலத்தின் பெயரை மட்டும் பெரும்பாலும் முடிவாகக் கொண்டுள்ளது. நாம் பரவும் ஊர் பிரமனூர் முதலாகக் கொச்சைவயம் உள்ளிட்ட பன்னிரண்டு திருப்பெயர்களை உடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

1.பிரமபுரம், 2.வேணுபுரம், 3.புகலி, 4.வெங்குரு, 5.தோணிபுரம், 6.பூந்தராய், 7.சிரபுரம், 8.புறவம், 9.சண்பை, 10.காழி, 11.கொச்சைவயம், 12.கழுமலம் ஆகிய திருப்பெயர்களை இம்முறையே தனித்தனி முதலிற்கொண்டு தொடங்கும் திருப்பாடல் இப்பதிகத்திற் காணப்படுகின்றன. ஈற்றுப்பாடல் மட்டும், `கழுமலத்தின் பெயரை` என்றுரைக்கும் காரணம் பற்றியும் ஒவ்வொரு பாட்டிலும் `கழுமலம்` என்று வருதல் பற்றியும் கழுமலம் என்று தொடங்கிற்றிலது. இம்முறையே, சேக்கிழார் சுவாமிகளும்,
\\\\\\\\\\\\\\\"பிரமபுரம் வேணுபுரம் பெருபுகலி வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டுதிருப்பெயர்த்தால்\\\\\\\\\\\\\\\".
பெரிய.திருஞான.14) என அருளியிருக்கின்றார்.(பார்க்க: தி.2 ப. 109, 110.) மன்னு - நிலைபெற்ற. பொன் அம் - பொன்னையும் அழகையும் உடைய. அரன் மன்னு தண்காழி - சிவபிரான் எழுந்தருளிய குளிர்ந்த காளீச்சரம். உள்ளிட்டு - உட்பட்டு. அங்கு ஆதி ஆயபரமன் ஊர், பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊர். ஊர் பன்னிரண்டே அன்றி ஓர் ஊர்க்குப் பேர் பன்னிரண்டல்ல. இவ்வுண்மை அறியாதார் ஒரே ஊர்க்குப் பன்னிரண்டு பெயர் உள்ளன என்று எழுதியும் பேசியும் தொன்மையை அழித்தனர். தலபுராணத்திலும் தொன்மை மாறாத உண்மை உணர்த்தப்பட்டது.

பண் :காந்தாரம

பாடல் எண் : 2

வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலநாங் கருது மூரே.
 

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் வேணுபுரம் முதலாக சண்பைச் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டு செல்வம் கருதிய வையகத்தார் ஏத்தும் கழுமலமாகும்.

குறிப்புரை :

வெள்ளத்து ஓங்கும் தோணிபுரம் - பிரளய வெள்ளத்துள் மேல் ஓங்கி மிதந்து விளங்கிய தோணிபுரம். தூநீர் - பரிசுத்த ஜலத்தையுடைய. கோணிய - வளைந்த. கோட்டாறு - இன்றும் உளது. `கோட்டாறு சூழ் கொச்சை` (தி.3 ப.89 பா.1) கூரும் - மிகும். காணிய - காண. வையகத்தார் - (வையாலாகிய வீடு என்னும் பொருள்படும் வையகம் பெருகிய உலகிற்கு ஆகுபெயர்) உலகர். (தி.2-பதி.102- பா.5. கோட்டாறு).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சைவய நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குருவோ டந்தண் டராயமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
 

பொழிப்புரை :

நாம் கைதொழுது பாடும் ஊர் புகலி முதலாக பூந்தராய் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக்கொண்ட, சிவபெருமானுக்கு இன்பம் தரும் நல்ல கழுமலமாகும்.

குறிப்புரை :

நிகர் - ஒப்பு. இல் - இல்லாத. நீர் மேல் நின்ற மூதூர் - தோணிபுரம். அகலிய - அகன்ற இடத்தையுடைய. அம் தண்தராய் - பூந்தருவராய். அமரர் பெருமாற்கு - தேவர்பிரானுக்கு. பகரும் - கூறும். `நாம் கைதொழுது பாடும் ஊர்` என்றதால், நாம் பாடும்போதும் கைதொழுதல் இன்றியமையாதது என்பது விளங்கும். இத் தமிழ் மறையைப் போற்றும் அருளொழுக்கம் புலப்படும். பா.6 குறிப்புரை பார்க்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 4

வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
 

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் வெங்குரு முதலாக சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடையதும், கங்கையணிந்த சடை முடியினை உடைய சிவபிரான் எழுந்தருளியதும் ஆகிய கழுமலமாகும்.

குறிப்புரை :

தண் - குளிர்ந்ததாகிய. வெள்ளம் கொள்ளத் தொங்கிய தோணிபுரம் என்றதால், தோணி தொங்குதல் உணர்த்தப்பட்டது. தொகு - கூடிய. தொல் - பழைய. பொழில் - சோலை. தலைபண்டு ஆண்ட மூதூர் - சிரபுரம். ஏற்றான் - ஏற்ற சிவபிரான்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 5

தொன்னீரிற் றோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்பன் நகரா நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலநாம் புகழு மூரே.

பொழிப்புரை :

நாம் புகழும் ஊர், கடல்மேல் மிதந்த தோணிபுரம் முதலாகச் சிரபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும், நல்ல பொன் போன்ற சடையினை உடையான் எழுந்தருளியதுமான பொலிவுடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

தொல் நீர் - பழைய பிரளய வெள்ளம். துயர் - பிறவித்துயர் (பிறதுயர்கள் இதனுள் அடக்கம்). இன்நீர் - இனிய நீரினையுடைய. எழில் - அழகு. நல்நீர, - நல்ல நீரினையுடைய. சிலம்பன் நகர் - சிரபுரம்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 6

தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமு னாண்ட
வண்ண னகர்கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குருநல் வேணுபுரந் தோணிபுர மேலா லேந்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலநாங் கைதொழுது கருது மூரே.

பொழிப்புரை :

நாம் கைதொழுது கருதும் ஊர், தண்மையான பூந்தராய் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களை உடைய இருகண்களுக்கு மேல் நெற்றியில் நிமிர்ந்துள்ள கண்ணை உடையோனாகிய சிவபிரான் மேவிய கழுமலமாகும்.

குறிப்புரை :

தண் அம்தராய் - பூந்தராய். தாமரையான் ஊர் - பிரமபுரம். தலைமுன் ஆண்ட அண்ணல் நகர் - சிரபுரம். விண் - ஆகாயம். இயல் - செல்லும். சீர் - கனம், புகழ். மேலார் - தேவர், மேன்மையுடைய ஞானியர் முதலோர். மேவிய - விரும்பி எழுந்தருளியுள்ள. தியானம் புரியும்போது கை தொழுத வண்ணம் இருத்தல் வேண்டும். `அஞ்சலி செய்திருந்து` (ஞான பூசா விதி - 8). பா.3 குறிப்புரை பார்க்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 7

சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குருவொ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப்
பேரா னெடியவனு நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
 

பொழிப்புரை :

சீர் பொருந்திய சிரபுரம் முதலாகத் தோணிபுரம் நிறைவாய்ப் பன்னிரு திருப்பெயர்களை நினைந்து இவ்வூரைப் பிரியாதவனாய், திருமாலும் பிரமனும் வழிபட்டும் காண்பரிய பெருமானாய் உள்ள சிவபிரானது ஊர் கழுமலம்.

குறிப்புரை :

சீர் ஆர் - புகழ் நிறைந்த. கனம் மிக்க எனலுமாம். நல்ல ஆராத்தராய் - நல்ல தெவிட்டாத பூந்தராய். ஏர் - அழகு. என்று என்று:- அடுக்கு இடைவிடாமை மேலது. உள்கி - நினைத்து. பேரான் - பெயராதவனாய். பேரான் என்பது இருவர்க்கும் பொதுவாய்த் தனித்தனி அமையும். பேரானாய்க் காண்பு என்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 8

புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குருவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலா லரக்கனைச் செற்றான்றன் கழுமலநாஞ் சேரு மூரே.

பொழிப்புரை :

நாம் சேர்வதற்குரிய ஊர் புறவம் முதலாக வேணுபுரம் உள்ளிட்ட பன்னிரு திருப்பெயர்களைக் கொண்டது. அது அருச்சுனனோடு விற்போர் செய்தவனும் இராவணனை அடர்த்தவனும் ஆகிய சிவபிரானது கழுமலமாகும்.

குறிப்புரை :

நறவம் - தேன். நான்முகன்றன் ஊர் - பிரமபுரம். விறல் -பெருமை. விசயன் - அருச்சுனன். திறல் - திறன். அரக்கன் - இராவணன். செற்றான் - அழித்தான்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 9

சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குருநற் காழி சாயாப்
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுர நாணி லாத
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
 

பொழிப்புரை :

நாணமற்ற வெண்பற்களைக்கொண்ட சமணர்கள், சாக்கியர்கள் ஆகியோரின் பெருமைகளை அழித்த விமலனது ஊர், சண்பை முதலாகத் தோணிபுரம் ஈறாகப் பன்னிரு பெயர்களைக் கொண்ட ஊராகும்.

குறிப்புரை :

சாயாப் பண்பு - அழியாக்குணம். பண்பார் - குணத்தார் எனினுமாம். நாண் - நாணம். வியப்பு - பெருமை. விமலன் - அநாதி மலமுத்தன்.

பண் :காந்தாரம

பாடல் எண் : 10

செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய
கொழுமலரா னன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய
விழுமியசீர் வெங்குருவொ டோங்குதராய் வேணுபுர மிகுநன் மாடக்
கழுமலமென் றின்னபெயர்பன்னிரண்டுங் [கண்ணுதலான் கருது மூரே.
 

பொழிப்புரை :

செழுமையான அழகிய காழி முதலாக வேணுபுரம் ஈறாகப் பன்னிருபெயர்களைக் கொண்டது கண்ணுதலான் கருதும் ஊராகும்.

குறிப்புரை :

செழுமலிய - செழிப்பு மலிதலையுடைய. செய்ய கொழுமலரான் நன்னகரம் - பிரமபுரம். விழுமிய சீர் - மிக்க புகழ். பன்னிரண்டும் ஊர் என்றது ஈண்டும் காண்க.

பண் :காந்தாரம

பாடல் எண் : 11

கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரநீள் சண்பை மூதூர்
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்
அச்சங்கள் தீர்த்தருளு மம்மான் கழுமலநாம் அமரு மூரே.

பொழிப்புரை :

நாம் விரும்பும் ஊர், கொச்சைவயம் முதலாகத் தோணிபுரம் உள்ளிட்ட பன்னிரு பெயர்களைக்கொண்டதும் நம்மேல் வரும் அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் எழுந்தருளியிருப்பதுமான கழுமலமாகும்.

குறிப்புரை :

நிச்சல் - நாடோறும். விழவு - திருவிழாக்கள். ஓவா - ஒழியாத. நீடு ஆர் - காலத்தாலும் இடத்தாலும் நெடுமை பொருந்திய. நச்ச இனிய - விரும்புதற்கு இனிய. அச்சங்கள் - பிறப்பச்சம் முதலியவை. அம்மான் - அருமகன் என்பதன் மரூஉ. பெருமகன் என்பது பெம்மான் என்று வருதல்போல.

பண் :காந்தாரம

பாடல் எண் : 12

காவி மலர்புரையுங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்
பாவியசீர்ப் பன்னிரண்டு நன்னூலாப் பத்திமையாற் பனுவன் மாலை
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
மேவியிசை மொழிவார் விண்ணவரி லெண்ணுதலை விருப்பு ளாரே.
 

பொழிப்புரை :

குவளை மலர் போலும் கண்களை உடைய மகளிர் வாழும் கழுமலத்தின் பெயர்களை நாள்தோறும் புகழ்மிக்க பன்னிரு நூல்கள் போல நாவினால் நலம் புகழ்ந்து ஞானசம்பந்தன் பாடிய இப்பனுவல்மாலையை இசையோடு மொழிபவர் விண்ணவர்களில் ஒருவராக எண்ணப்பெறும் மேலான விருப்புடையவர் ஆவர்.

குறிப்புரை :

காவி - நீலோற்பலம், கருங்காவி. புரையும் - ஒக்கும். பாவிய - பரவிய. பத்திமை - அன்பு, மை விகுதி தமிழ் `பத்திமையாற் பணிந்து`. (தி.6 பதி.54 பா.3) தலைவிருப்பு - தலையன்பு.
சிற்பி