திருப்பிரமபுரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலிவெங் குருமேற்சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம்வண் புறவமண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங் கொச்சைகழு மலமென்றின்ன
விளங்குமரன் றன்னைப்பெற் றிமையவர்தம் பகையெறிவித் திறைவனூரே.

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் சீகாழியின் பன்னிருதிருப்பெயர்களை மாறிமாறிவரப் பாடியருளியது. இளங்குமரனாகிய முருகக்கடவுளைப் பெற்றுத் தேவர்களின் பகைவர்களாகிய சூரபன்மன் முதலானோரை அழியச் செய்தருளிய சிவபிரானது ஊர், விளங்கிய புகழை உடைய பிரமனூர் வேணுபுரம் முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

இப்பதிகத்திலும் அடுத்த பதிகத்திலும் 206 - ஆவது பதிகத்தின் முதற்பாட்டிலுள்ள முறையே பன்னிரு திருப்பெயரும் அமைந்திருத்தல் அறிதற்பாலது. மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம் என்றது. உயர்ந்தோங்கிய சோலைகளினும் மேலோங்கி விளங்குவதால், சோலை வளத்தைத் தோணிமலை கவர்ந்து திகழ்வதாயிற்றென்றபடி. இளங்குமரன் - முருகக் கடவுள், பாலசுப்பிரமணியர். பெற்று - ஐந்து முகத்தோடு அதோமுகமும் கொண்டு. சேந்தனை முன் பயந்துலகில் தேவர்கள் தம்பகை கெடுத்தோன் திகழுமூரே. (தி.2.ப.210.பா.6) பகை - பகையாய அசுரர்களை. எறிவித்த - எறியச் செய்த. பெயரெச்சத்தகரம் தொக்கது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

திருவளருங் கழுமலமே கொச்சை தேவேந்திரனூர் அயனூர்தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர் காழிதகு சண்பையொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய் தோணிபுர முயர்ந்ததேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள் கண்டத்தோன் விரும்புமூரே.

பொழிப்புரை :

பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள் அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

அயனூர் - பிரமபுரம். தெய்வத்தரு - கல்பக விருக்ஷாதி. சிலம்பனூர் - சிரபுரம். நாகநாதசுவாமியைச் சிலம்பன் என்றருளினார் போலும். நாகம் - மலை. ஒள்பா உருவளர் - அறிவொளியுடைய அருட்பாக்கள் வடிவில் வளர்கின்ற. வெருவ - அஞ்சியலற.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற் காழியிறை கொச்சையம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ தரனாளும் அமருமூரே.

பொழிப்புரை :

சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ் பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மறை - வேதம். சிலம்பன் வாழ்ஊர் - சிரபுரம். நாகநாத சுவாமிகோயில்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப் புகலிதராய் தோணிபுரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே கொச்சைதேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற் சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின் பயன்நுகர்வோர் பரவுமூரே.

பொழிப்புரை :

பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும் ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார் விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம் - காவல். பூமகனூர் - பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் - வலிமை, வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு கலைகள். நுகர் வோர் - அநுபவிக்கும் அறிஞர்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி வயங்கொச்சை தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர் விண்ணவர்தங் கோனூர்வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச் செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ முலகத்தி லுயர்ந்தவூரே.

பொழிப்புரை :

உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர் பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தரைத்தேவர் - பூசுரர், அந்தணர். தமிழ்க்காழி என்றதால் ஸ்ரீகாளிபுரம் என்றதன் திரிபென்ற கூற்று ஆராயத்தக்கது. விரை - மணம். மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம். விண்ணவர்தம் கோன்ஊர் - வேணுபுரம். திலை - அரை. உரை - (புகழ்) மொழி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு சிரபுரம்பூங் காழிசண்பை
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற் கொச்சைவா னவர்தங்கோனூர்
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை யுதைத்துகந்த வப்பனூரே.

பொழிப்புரை :

வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம் முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

புண்டரிகத்து ஆர்வயல் - தாமரை மலர்களால் நிறைந்த கழனி. இறைஞ்சிய - வணங்கிய. வானவர் கோனூர் - வேணுபுரம். அண்ட அயனூர் - பிரமதேவனூர். பிரமபுரம். காலசங்காரகர்த்தா என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங் கோனூர்வண் புகலியிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு சண்பைவியன் காழிகொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந் தோணிபுரம் பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம் பால்வண்ணன் பயிலுமூரே.

பொழிப்புரை :

வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

வண்மை - கொடை. வரத்து - மேன்மையையுடைய இஞ்சி - மதில். மிக்கோர் - ஞானம், தவம், தொண்டு, பூஜை முதலியவற்றால் மேம்பட்டவர். கற்றோர் - சிவபிரானை வழிபடும் நெறியை உணர்ந்தோர். வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை வேணுபுரங் கமலநீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி தராய்தோணி புரங்கூடப்போர்
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள் செற்றமலைச் சிலையனூரே.

பொழிப்புரை :

போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும் திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப் பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி புறங்காக்கும் ஊராகிய புறவம் என்க. (தி .2 ப .210 பா .8) சீர்ச்சிலம்பன் ஊர் - சிரபுரம். கமல நீடுகூடியவன் ஊர் - பிரமபுரம். (தாமரையில் வாழ்பவன்.) போர். புரங்கள் செற்றமலை சிலையன் - திரிபுரத்தசுரரை அழித்த மேருவில்லியாகிய சிவபிரான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்றன்னூர்
நிரக்கவரு புனற்புறவ நின்றதவத் தயனூர்சீர்த் தேவர்கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன்விற லழித்தருளி கழுமலமந் தணர்வேத மறாதவூரே.

பொழிப்புரை :

அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவுபடாத ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

இரக்கம் உடை இறையவன் - கருணையே உருவமாகிய சிவபிரான். நிரக்க வருபுனல் என்றது நீரின் பெருக்கத்தையும் விரைவையும் உணர்த்தும். தவத்து அயன் - தவத்தையுடைய பிரமன். புகல் என்றெண்ணி வரக் கரவாத புகலி. மாசு - குற்றம். அரக்கன் - இராவணன். விறல் - வலி. அருளி - சிவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் கொச்சையிந் திரனூர்மெய்மை
நூலோது மயன்றனூர் நுண்ணறிவார் குருப்புகலி தராய்தூநீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடு மயனறியான் வண்காழி சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே.

பொழிப்புரை :

உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக ஓதப்பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மெய்த்தவம் - உண்மைத் தவம்(தபசு). மெய்ம்மை நூல் - சத்தியமான வேதங்கள், நுணி அறிவு ஆர் குரு - நுட்பமான அறிவு பொருந்திய குரு, வெங்குரு. சேல் - மீனினம். செரு - போர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர் கொச்சைகழு மலமன்பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமொண் புறவநண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர் புகலிவெங் குருவுமென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா வகைநின்றான் றங்குமூரே.

பொழிப்புரை :

சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

ஆக்கு - ஆக்கம். `ஆக்கம்மிக்க ஊர்`(தி .2 பா .210 பா .8). (மன்று மன்றம் இன்பு இன்பம். நீட்டு நீட்டம். பாட்டு பாட்டம் என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான் ஊர் - அன்புருவான சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம். `அன்பே சிவம்`. கமலத்தோன் - பிரமதேவன். புரந்தரன் - இந்திரன். ஓக்கம் - உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம். நீங்குவது நீக்கம். தேங்குவது தேக்கம். அடங்குவது அடக்கம். தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு. ஙகரவொற்றில்லை. இறக்கம் - இறங்கு. ஙகரவொற்றிருக்கின்றது. பகுதியில் அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 12

அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய் தோணிபுர மணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர் புகழ்க்காழி சண்பைதொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுர மயனூர்மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.

பொழிப்புரை :

புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப் போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.

குறிப்புரை :

அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு. அழியாத தருமனூர் என்றது வெங்குருவினை. தருமன் - இயமதருமன் `...... பூவைபாகன். அன்பழுத்தும் அறமகற்கு இவ்வருள் பழுத்து ..... பின்பழிச்சி ஒரு தருமன் தன் பதத்தின் இனிதிருக்கப் பெற்றான்` (சீகாழித் தலபுராணம்) (தி .7 ப .38 பா .9). புக்கரம் - தாமரை. தொல்லூர் - (புராதனபுரி). பழமையதாகிய ஊர். மிக்கரஞ்சீர் - மிக்கு அரன் சீர் என்றதாகக் கொண்டுரைக்கலாம். நன்கு புலப்பட்டிலது. இச்சக்கரம் எனச்சுட்டியதால், இப்பதிகம் சித்திர கவியுள் ஒன்றான சக்கர பந்தம் என்றறிந்து முன்னோர் தலைப்பிற் குறித்தனர்.
சிற்பி