திருப்பிரமபுரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.

பொழிப்புரை :

நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு பெயர்களையுடைய கழுமலமாகும்.

குறிப்புரை :

பூமேல் மாமகளூர் வெங்குரு - திருமகள் பரவும் ஊராகிய வெங்குரு, அவள் வாழும் ஊர் எனலுமாம், செல்வம் பற்றியது. இஞ்சி - மதில். சேமம் - காவல். காமனை - மன்மதனை. நுதல் - நெற்றி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.

பொழிப்புரை :

சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும் ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களை உடைய காழிப்பதியாகும்.

குறிப்புரை :

கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம், கற்பகம் முதலியவை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர் விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற. கற்பத்தார் - கற்பகப்பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே.

பொழிப்புரை :

உலகில் விளங்கும் ஊர், வேதங்களை நாவில் தரித்த அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தரியார் - பகைவர். இஞ்சி - மும்மதில், திரிபுரம். இமையோர்கோன் - இந்திரன். விரை - மணம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.

பொழிப்புரை :

காமன் உடலைக் காய்ந்த சிவபிரானது ஊர், விளங்கும் பிரமபுரம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மேகம் ஏய்க்கும் - மேகமண்டலத்தை ஒன்ற ஓங்கும். கமுகம் - பாக்குமரம். எழில் - அழகு. ஏர் ஆர் வளம் - அழகு நிறைந்த வளமை. வல்நஞ்சம் - வலியவிடம். களங்கம் - குற்றம். களத்தவன் - (திருநீல) கண்டன். காமன் - மன்மதன். காய்ந்தோன் - காய விழித்தவன், கோபித்தவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.

பொழிப்புரை :

முருகப்பெருமானைப் பெற்றெடுத்து உலகில் தேவர்களின் பகைவனாகிய சூரபன்மனை அழித்தருளியவனும் சினந்துவந்த காலனை அன்று உதைத்தவனும் ஆகிய சிவபிரானது ஊர், கழுமலம் முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

காய்ந்து - கோபித்து. காலனை - இயமனை. சேந்தனை - முருகப்பிரானை. பயந்து - பெற்று. பகை - சூரன்படை. (பதி . 209. பா .1. பார்க்க).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.

பொழிப்புரை :

கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும் நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும் மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

மலி - மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று - மகிடாசுரனைக் கொன்று. மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள், (துர்க்கை) கறுப்பாயி.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.

பொழிப்புரை :

பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம் மிக்க ஊர், நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

மன்றில் - பொதியில், புறம் என்னும் பொருளது. மன்றில் ஒன்று எனல்பொருந்து மேற்கொள்க. மோடி - துர்க்கை (தி .2 ப .209. பா .8). வென்றி - வெற்றி. பூதங்கள் தாங்கும் ஆக்கம் மிக்க ஊர். (தி .2 ப .210. பா .11).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.

பொழிப்புரை :

வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த எம்தலைவனாகிய சிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல் உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

தூ - தூய்மையுடைய. எல்லாவுயிர்க்கும் பற்றுக் கோடாகிய. மை - மேகம், கருமையுமாம். பொழில் - சோலை. அரக்கன் - இராவணன். ஈடு - வலிமை, பெருமையுமாம். எம்மான் எம்பெருமான்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.

பொழிப்புரை :

மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால், தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில் தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான் எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

பொய்ம்மாண்பிலோர் - மெய்ப்புகழுடையோர். புரந்தரன் - இந்திரன். கைம்மா - துதிக்கையையுடைய யானை. காரின் மெய் மால் - மேகம்போலும் திருமேனியையுடைய திருமால். பூமகன் - பிரமன். தழல் - தீ.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.

பொழிப்புரை :

ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய சிவபெருமானது ஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்பதியாகும்.

குறிப்புரை :

இறைவன் - சிவபிரான். அமர் - விரும்பியெழுந்தருளிய. எழில் - அழகு. அதிபன் - இந்திரன். சிறை - அணை. தேசு - ஒளி. கையர் - கீழோர். பரிசு - சிவமாம்பெற்றி, சிவன் இயல்பு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 12

அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.

பொழிப்புரை :

அம்மானாகிய சிவபிரான் எழுந்தருளிய கழுமலம் முதலான பன்னிரு திருப்பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியின் மீது வழியில் மாறிமாறி பாய்ந்துள்ள கோமூத்திரியின் அமைப்பில் அங்குள்ள சிவபிரான் மேல் ஒன்றிய மனமுடைய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலையைக் கற்போர் தக்கவராவர்.

குறிப்புரை :

மா - பெருமை, இலக்குமியுமாம். மானத்து - பெருமையையுடைய. ஒள் - ஒளி. அம்மால் - அழகிய திருமால் (கிருட்டிண மூர்த்தி). சிவபிரானுமாம். வழிமுடக்கும் ஆவின் பாச்சல் :- கோமூத்திரி என்னுஞ் சித்திரபந்தத்தினியல்பு கூறப்பட்டது. தம்மான் - தம் பிரான். `தன்னடைந்தார் தம்பிரான் ஆவான்` (தி .2 ப .176. பா .1). தம்மானை ஒன்றிய என்று இரண்டனுருபு விரித்து. சிவபிரானொடு அத்து விதமுற்ற என்று பொருள் கொள்க. தமிழ் - `சைவமும் தமிழும்` என்ற தொடர்க்கண் உள்ள தமிழ்மறை.
சிற்பி