சீகாழி


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

விண்ணியங்கு மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப்
பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற்
கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண்
மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே.

பொழிப்புரை :

ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள், உலகம் நலம் பெறமறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன், விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக் கொண்ட நெற்றியன்.

குறிப்புரை :

விண் இயங்கும் மதிக்கண்ணியான் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும் திங்களாகிய தலைமாலையை அணிந்த சிவபிரான். பெண் நயம் கொள் திருமேனியான் - அர்த்தநாரீசுவரவடிவினன். அனல் கண் நயம்கொள் திருநெற்றியான் - நெருப்புக் கண்ணைக்கொண்ட அழகிய நெற்றியை உடையவன். மண் நயம்கொள் - மண்ணோர் நலமாக்கொண்ட.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே.

பொழிப்புரை :

வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி முதலியன செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும் வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன் உயிரைப் போக்கியவன்: உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும் கையினை உடையவன்: மேலானவன்.

குறிப்புரை :

மடவாள் - உமாதேவியார். பரமேட்டியான் - தனக்கு மேலான தொன்றில்லாத ஸ்தாநத்தையுடைய முழுமுதற் பொருள். ஆன் விகுதி தமிழ். கலியை - வறுமை முதலிய துன்பங்களை. உகந்த - உயர்ந்த. எம் நம்பன் - எம் விருப்பாயுள்ளவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

சுற்ற லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண்
மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே.

பொழிப்புரை :

கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும் காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப் பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன்.

குறிப்புரை :

சுற்றல் ஆம் புலித்தோல்:- சுற்றுதல் - அரையிற் சுற்றி உடுத்தல். அசைத்து - கட்டி. துற்றல் - உண்ணல். சுடுநீறு -(தி .2 ப .214 பா .2.) மல் - வலிமை. தயங்கு - விளங்குகின்ற. மைந்தன் - வலியன், வீரன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.

பொழிப்புரை :

கற்களையும் அசையச்செய்யும் கடல் அலை நீர் சூழும் காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்: பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட தோள்கள் அசைய நடனம் ஆடுபவன்.

குறிப்புரை :

அயங்கு - அசங்கிய, நிலைகுலைந்த, (தி .2 ப .140 பா.3). மல் ..... தோள் - வலிமையால் அசைந்த தோள். `மற்றயங்கு திரடோள்` என்றதை மேற்பாட்டிற் காண்க. தோள்கள் ஆர நடமாடுதல். `கல் அயங்குதிரை சூழ`:- `கற்களில் அசங்கிய அலை`. `கல் வித்தகத்தால் திரை சூழ் கடற்காழி`(தி .2. ப .208 பா .11). தொல் புகழ், அயங்குபுகழ் -(எங்கும்) பரவிய கீர்த்தி. பேண - அடியவர் விரும்பிப் புகல. `பொருள் சேர் புகழ் புரிந்தார்` சுடர் வண்ணன்:- `அந்தி வண்ணன் அழல் வண்ணன்` என்பன அவன் திருநாமங்கள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தூநயங்கொடிரு மேனியிற் பொடிப்பூசிப்போய்
நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக்
கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட்
டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே.

பொழிப்புரை :

மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும் மணம்மிக்க நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்: நாநயம் பெற வேதங்களை அருளியவன்.

குறிப்புரை :

தூ - பரிசுத்தம். நயம் - நன்மை. நாநயம்கொள் மறை - நாவினது நற்பயனைக் கொண்ட வேதம். நாவாலுள்ளதாய நயம். `நாநலம்` - நாவாலுளதாய நலம்.(குறள்.641 உரை) பூசிப்போய்க் கொள்மறையோதி என்றியைக்க. ஓதி - பெயர். தேன் கொள்முடி - தேனாட்டப்படும் திருமுடி. அம் முடியில் ஆனைந்து ஆடிய செல்வன். ஆனைந்து:- பால், தயிர், நெய்; பிறசேரா.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட்
பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே.

பொழிப்புரை :

உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும் குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச் சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன்.

குறிப்புரை :

சுழி - நீர்ச்சுழி. `கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுந் திருச்சுழியல்` (தி .7. பா . 834). மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன் - `மாதியலும் பாதியன்`. கங்கையைச் சடையிலும், உமைநங்கையை வாமபாகத்திலும் உடையவன். பழி இலங்கும் துயர் - நிந்தையால் தோன்றும் துயரம். ஒன்று - சிறிதும் என்னும் பொருட்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

முடியி லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ
வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.

பொழிப்புரை :

முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும் முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில் ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடையினளாகிய பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான்.

குறிப்புரை :

முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ அடி இலங்கும் கழல் ஆர்க்க - துவாதசாந்தத் தலத்தில் விளங்கும் உயர்ந்த தியானத்தால் மனனசீலர்கள் வழிபடத் திருவடியில் பிரகாசிக்கும் கழல்கள் ஒலிக்க, கொண்டது முடி இலங்கும் என்று இயைத்துப் பொருள் கூறலும் ஆம். கொடி இலங்கும் இடையாள் - மின்னல் கொடி போலத் திகழும் மெல்லிடையுடைய உமாதேவியார். தொழ ஆர்க்க ஏந்தியும் காழியுட் குடிகொண்டதோ என்று அறிவினாவாக்குக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

வல்ல ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய அரக்கனாகிய இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார் மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேதமொழிகளைப் பாடி வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான்.

குறிப்புரை :

நல்சிந்தை, ஒருக்கியதோர் சிந்தை - ஒற்றுமையாக்கிய தொருமனம். சிவனோடொற்றுமை. அத்துவிதம், மலர்தூவ - பூக்களைத்தூய் வழிபட. தொல் - தொன்மை. இருக்கும் மறை - விரித்தல் விகாரமாக்கொண்டு இருக்கு வேதம் எனல் சிறந்தது, இருக்கும் எனில் அழியாது நிலைபெறும் என்க. மறையேத்து - வேதஸ்துதியை. உடன் - அம்பிகையுடன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.

பொழிப்புரை :

பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன், நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல் அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரிய முத்துக்கள், சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும் உடைய காழியாகும்.

குறிப்புரை :

எரியான்தன் ஊர் - தீப்பிழம்பாக நின்றவனதூர். வியல் முத்தவை - அகன்று பரவிய முத்துக்கள். கருவை - கரிய வைக்கோல். கருவேல மரமுமாம். முத்தவையும் சங்கும் சேர்காழி என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர்
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான்
கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே.

பொழிப்புரை :

கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில் வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக் கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதவன்.

குறிப்புரை :

நன்றி - நன்மை. ஒன்றும் - சிறிதும். அன்றி - பகைத்து. கானல் - கடற்கரைச்சோலை. வென்றி - வெற்றி. வியன்கோயில் - பெரிய கோயில். விடை ஆளன் - எருதை (ஊர்தியாக) ஆள்பவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கண்ணு மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.

பொழிப்புரை :

மூன்று கண்களை உடைய முதலோனாகிய சிவபிரான் வாழும் காழிப்பதியுள் அத்தலைவனின் தண்ணருளைப் பேணி ஞானசம்பந்தன் சொல்லிய இப்பாடல்களை மூவகை வண்ணங்களையும் தெரிந்து இசையோடு பாடுவார் விண்ணுலகும் மண்ணுலகும் விரிகின்ற புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

கண்ணு மூன்றும் - முக்கண்ணும். உடை - உடைய. ஆதி - முதல்வன். உம்மை இனைத்தென அறிந்த சினைக்கு வினைப்படுதொகுதியின் வேண்டுவது.(தொல். சொல் . 33) உடை - குறிப்பு வினை. வண்ணம் மூன்றும் - மெலிவு, சமன், வலிவு என்பவை. இசை பாடுவார், இம்மூன்றும் தெரியாது பாடுவரேல் அவ்விசை, கேட்பவரை எழுப்பும் விசையுடையதாகும்.
சிற்பி