திருவகத்தியான்பள்ளி


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய வெம்பெரு மானகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையி னார்கட்கில்லை யாம்பாவமே.

பொழிப்புரை :

தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

வாடிய - வற்றிய. தலைமாலை, `தலைமாலை தலைக் கணிந்து`. மயங்கு இருள் - செறிந்த இருள். கொள்ளி - தீக்கொள்ளி. கொள்ளி விளக்கொளி செய்ய என்றபடி. நிவந்த - உயர்ந்த, வளர்ந்த, அகரம் தொகுத்தல் விகாரம். எரிஆடிய - தீயில் ஆடிய. `அனலாடி` `தீயாடி` என்பவை சிவநாமங்கள். பாவம் இல்லையாம் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

துன்னங்கொண்ட வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே.

பொழிப்புரை :

தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

துன்னம் - தைத்தல். துதைந்த - நெருங்கிய. முற்றப்பூசிய, `முழுநீறுபூசிய மூர்த்தி போற்றி` (தி .6. ப .5. பா .3). `முழுநீறு பூசிய முனிவர்`. உன்னம் - தியானம். மனத்தார்கள் தம் வினை - மனத்தையுடையவர் வினைகள்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே.

பொழிப்புரை :

உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.

குறிப்புரை :

உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும் காலனை, முப்புரம் துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து - கோபித்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.

பொழிப்புரை :

அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான்மகளை. அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

அன்று நெற்றிக்கண்ணால் காய்ந்ததும் மன்மதனை, பாய்ந்ததும் இயமனை, பண்ணினால் ஆராய்ந்ததும் வேதத்தை, பொருந்தியதும் இமாசல குமாரி பாகத்தை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பொழிப்புரை :

போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது புலித்தோல். ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

போர்த்ததும் யானைத்தோல். உடை - புலித்தோல். உடை என்பது தொழிலாகு பெயர். அது (உடுத்தது) வினையாலணையும் பெயர்ப் பொருளில் எழுவாய் நின்று புலித்தோலென்னும் பெயர்ப் பயனிலை கொண்டது. மழுவை ஏந்தி அரைக்கு ஆர்த்ததும் அரவம் (-பாம்பு) என்க. பார்த்ததும் படர்ந்த எரியில் அரணம் (மும்மதில்) மூழ்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே.

பொழிப்புரை :

தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

தெரி(ஆராய்)ந்ததும் கணை (- பாணம் ). ஒன்றை ஒரு சேரச்சென்று எரித்ததும் திரிபுரத்தை, முன் அரிந்ததும் அழகு பொருந்திய பூவில் வாழும் பிரமன் தலையை, புரிந்தது (விரும்பிக் கொண்டது)ம் உமாதேவியார் ஒரு பாகத்தைப் புனைதலை, அப்பனது ஒரு பாகத்தை அம்மை அழகு செய்ததனாற்றான் உயிர்கட்கு அவ்வழகு உண்டாயிற்று. `அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்` (சித்தியார் சூ 1:-69).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண் பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும்.

குறிப்புரை :

எல்லாம் ஓதி - வேதங்களையெல்லாம் ஓதியருளியவனே! உலகுக்கு ஓர் ஒண்பொருள் ஆகி - உலகங்களுக்கு ஒப்பற்ற ஒளிர்பொருளானவனே! மெய்ச்சோதி - உண்மையொளியே! என்று கூறித்தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய பெருமானது பள்ளியைத் தொழுவார் வினை நீங்கும் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.

பொழிப்புரை :

சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.

குறிப்புரை :

செறுத்ததும் தக்கன்யாகத்தை. செறுத்தல் - கோபித்தல், அழித்தல். ஒறுத்தல் - கடிதல், வருத்துதல். ஒறுத்ததும் பகைவர் திரிபுரத்தை. திருந்தார் - பகைவர். திருந்தியவர் நண்பராவர். அறுத்ததும் ஒளியை உடைய தாமரைப்பூவில் வாழும் பிரமன் தலையை, இறுத்ததும் (-முறித்ததும்). இராவணனுடைய இருபது தோள்களையும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

சிரமுநல்ல மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே.

பொழிப்புரை :

தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவவல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும்.

குறிப்புரை :

சிரமும் - தலைமாலையும். நல்லமதி (உம்) - அழகிய பிறையும். மத்தமும் - ஊமத்தம் பூவும். `மத்தங்கமழ்சடை` (தி .2. ப .205 பா .6). அரவும் - பாம்பும். `அரவம்` என்ற பாடம் பிழை என்பது முதலடியாலே விளங்கும். பெற்றிமை - தன்மை. பாறும் - ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

செந்துவ ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.

பொழிப்புரை :

சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.

குறிப்புரை :

செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை - சொல்லும் பரசமயக்கோள்கள். அந்தணன் - சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள், நும் வினையானவை சிதைந்து ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

ஞாலம் மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே.

பொழிப்புரை :

உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய இத்தமிழ்மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.

குறிப்புரை :

ஆலும் - ஆடும். புடை - பக்கம். நல்ல சூலப்படையான் என்றும் சூலமாகிய நல்ல படையான் என்றும் கூறலாம். `நல்லபாம்பு`. மாலை - இத்திருப்பதிகம். மேல்வினை:- ஆகாமிய கன்மம் என்றலும் பொருந்தும்.
சிற்பி