திருவறையணிநல்லூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலா
வீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதி
சூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்
ஆடினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொழிப்புரை :

அழிவற்றவரும், இளவெண்பிறையைச் சூடியவரும், வேதங்களை அருளியவரும், சுடலைப்பொடி பூசியவரும், அழலின் கண் நின்று ஆடுபவரும் ஆகிய அறையணிநல்லூர் இறைவரைத் தம் அம் கையால் தொழுபவர் பீடினால் பெரியோர் ஆவர். பாசங்கள் கெடப் பற்றற்றவராய் உயர்ந்தவர்கள் ஆவர்.

குறிப்புரை :

பீடு - பெருமை. பேதைமை - அறியாமை. ஈண்டுப் பண்பாகுபெயராய் ஆணவத்தையும் இனம்பற்றி மாயை கன்மங்களையும் உணர்த்திநின்றது. தீதிலா வீடு - முற்றத்துறந்து பற்றற்ற நிலை. `ஒருபற்றிலாமையும் கண்டிரங்காய்` வீடினால் - விடுதலால். வீடு இலார் - (அழிவில்லாத) நித்தியர். இளமதி, வெண்மதி - பிறை. சுடலைநீறு - மகாசங்கார காலத்தில் அனைத்துலகையும் அழித்துப் பொடித்த பொடி. அழல் - தீயில். பெரியோர்களும் உயர்ந்தார்களும் ஆவார் எவர் என்னில், அறையணிநல்லூரைத் தொழுபவர்களே என்று இயைத்துணர்க. வீடிலாரும் சூடினாரும் பாடினாரும் ஆடினாரும் ஆகிய சிவபெருமானது ஊர் என்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

இலையினார்சூல மேறுகந் தேறியேயிமை யோர்தொழ
நிலையினாலொரு காலுறச் சிலையினான்மதி லெய்தவன்
அலையினார் புனல்சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.

பொழிப்புரை :

இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன் ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான் எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.

குறிப்புரை :

இலையின்ஆர்சூலம்:- `மூவிலைவேல்` `இலையாருஞ் சூலத்தாய்` (அப்பர் திருத்தாண்டகம்)`இலைமலிந்த வேல்நம்பி யெறிபத்தர்` (திருத்தொண்டத்தொகை). தடுமாற்றம் - பிறவிக் குழியில் விழுந்தடுமாற்றம், ஓங்குவார் தடுமாற்றம் நீங்குவார் என்க. `ஆரூர் தம் கையினால் தொழுவார் தடுமாற்றறுப்பாரே` (தி .1 ப .105. பா .6).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொழிப்புரை :

என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண் மூர்த்திதன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.

குறிப்புரை :

என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும் (தீய்க்கும்) சூலப்படை ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு இன் ஆல் - பின்பினால், பின்புறத்தில். பின் - பின்புறத்தில், பின்னால் - பின்னலால் எனலும் பொருந்தும். `பின்றாழ்சடை` (தி .1 ப .71 பா .4, ப .80 பா .2)`பின்னுசடைகள்` (தி .1 ப .74 பா .6)`பின்னிய தாழ்சடையார்` (தி .1 ப .8 பா .10). பிறங்கும் - விளங்கும். பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக்கொண்டு நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது. முன்பினார் - வலிமை, பழமையுடையார். நினைத்தலையுடையவர் எனலுமாம். முன் பின் ஆர் என்று பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார் சூலத்தார் உச்சியான் பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே மூவரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.

பொழிப்புரை :

அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும், வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும், பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழிபாவங்கள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை. உரவு - கடல். அரவு - பாம்பு. கண்ணியார் - தலைமாலையுடையார். பரவுவார் - வாழ்த்திவணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

பொழிப்புரை :

தீப்போல விளங்கும் செம்மேனியனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.

குறிப்புரை :

தீயின் ஆர் திகழ் மேனியாய் - தீயைப்போலப் பொருந்திய பிரகாசிக்குந் திருமேனியை உடையாய். தேவர் தாம் தொழுதேவன் நீ ஆயினாய், கொன்றையினாய், அனல் அங்கையாய், வீட்டினாய், பாயினாய் கழலினாய், பரமனே என மனமுருக வாய் குளிர அழைத்து, அடிபணிவன் என்றது பக்திசாகரத்தில் அழுத்துகின்றது. தம - தம்முடைய. பாயினாய் - பாய்ந்தாய்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களு முரையினாலுயர்ந் தார்களே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர். சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில் விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால் போற்றுபவர் புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

வேகம் - விடவேகம். பத்துவேகம் `பத்துக்கொலாம் அவர் பாம்பின்கண் பாம்பின்பல்` (தி .4 ப .18 பா .10). நாகம் - பாம்பு. வீக்கிய - கட்டிய. அரையில் நாகம் வீக்கினார் என்க. நரையின் ஆர் விடை - வெண்ணிறத்தினைப் பொருந்திய எருது. நறும்போது - நறுமணம் கமழும் பூக்கள். உரையினால் - 1. தோத்திரங்களால். 2. புகழால், பூவால் அருச்சித்து வாயால் தோத்திரம் புரிதல்பற்றிப், `போதுசேர் உரை` என்றார். `உரை மாலையெல்லாம் உடைய அடி` (தி .6 ப .6 பா .7) `உரையாலுணரப்படாத அடி` `உரையாரும் புகழானே` (தி .6 ப .62 ரபா .6) `உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார்தங்கள் உச்சியாய்` (தி .7 பா .936)`உரையார் தமிழ்மாலை` (தி .1 ப .84 பா .11) `உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்` (குறள்). அர்ச்சனையில் உயர்வது புகழில் உயர்வதாகும் என்றவாறு. வழிபாட்டால் வரும் புகழேயன்றி மற்றைய வழிகளால் வரும் புகழ் உயர்வுடையதன்று. `உரையார் பொருளுக்குலப்பிலான்` (தி .6 ப .11 பா .7) என்பதற்கேற்பப் பொருள் உரைத்தலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற வெம்மிறை
ஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.

பொழிப்புரை :

ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார்பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில் விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும்.

குறிப்புரை :

வீரம் - ஞானம். ஞானவேதியர் - சிவபிரான். அட்ட வீரட்டம் (எட்டு வீரத்தலம்) நோக்கின் சிவபிரானுக்குப் பொருந்தும்.(வீரம் ஆகிய வேதியர்) தக்கயாகத்திலிருந்தவர்களும் ஆம். வேகமாகளியானை - அவர்கள் வேகத்துடன் போதர ஏவிய பெரிய மதக்களிப்பையுடைய யானை. யானையின் ஈரம் ஆகிய உரிவை - அந்த யானை ஈரிய தோல். அரிவை - உமாதேவியார். பாம்புமாலையணிந்தவர். வாரம் - அன்பு. நினைப்பார்கள் தம் வல்வினை மாயும் - தியானம் புரிபவர்களுடைய தீவினை அழியும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் றாழ்சடை
முக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழ
அக்கினோடெழி லாமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.

பொழிப்புரை :

தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர். தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர். முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர். அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி நலம் செய்யும் வேறு சார்பிலோம்.

குறிப்புரை :

தக்கனார் - தக்ஷன். முக்கணான் - `திரிநேத்திரன்`. அக்கு - எலும்பு, உருத்திராக்கமுமாம். ஆமைபூண்ட அண்ணலார். அவர்சார்வு - அச்சிவபிரான்றிருவடிச்சார்பு. நாங்கள் அவர் சார்வு அல்லால் பேரின்பம் பயக்கும் சார்பு வேறிலோம். அடுத்த பாடலின் ஈற்றடியும் ஈதேயாதல் அறிக. (தி.2 ப . 44 பா .3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்
செய்வதேயலங் காரமா மிவையிவைதேறி யின்புறில்
ஐயமேற்றுணுந் தொழிலரா மண்ணலாரறை யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால் யாதுஞ்சார்விலோம் நாங்களே.

பொழிப்புரை :

வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர். வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தெளிந்து இன்புறவேண்டின் ஐயமேற்றுண்ணும் தொழிலரும் தலைமையாளரும் ஆகிய அறையணி நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.

குறிப்புரை :

வெய்ய - வெம்மையுடைய. வெறியராய் - வெறி பிடித்தவர்போல. செய்வதே அலங்காரம் ஆம் இவை இவை என்பது செய்வனவே அழகாக்கும் பெற்றிபோலும். அவர் `கொண்டதே கோலம்` என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல் இன்மை விளங்கும். சைவன் - சிவபிரான். `சைவா போற்றி`(திருவாசகம்.) `மான்மறிமழுவொன்றேந்துஞ் சைவன்` (தி .4 ப .62 பா .4). `சைவத்தசெவ்வுருவன் திருநீற்றன்` (தி .7 பா .838)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை யண்ணலாரறை யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.

பொழிப்புரை :

நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும் வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர். திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும் கழியப்பெறுவீர்.

குறிப்புரை :

வாக்கியம் - பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும் - சாராதீர்கள். சாராதேயுங்கள். சாரேல்:- ஒருமை, அதனொடு `உம்` சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர். இது திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி .2. ப .119 பா .10; தி .3 ப .91 பா .10) காண்க. அரணம் - திரிபுரம். ஆக்கிய மழு. மகர மெய் விரித்தல் விகாரம். பாக்கியம் குறை - பாக்கியமாகிய இன்றியமையாப் பொருள். பாக்கியம் - தெய்வம். (குறள் .1141) எதுவந்தால் முடிவுறும்? அஃது, இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு முடிக்கப்படும் பொருள், இன்றியமையாப் பொருள் என்று பொருளுரைத்தனர் சான்றோர்.(குறள் .612)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம் பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் றாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.

பொழிப்புரை :

உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர்.

குறிப்புரை :

பழி இல்லாமை மறைக்கு அடை. பண்பின் ஆர் மொழியினால் - இத்திருப்பதிகத்தால். கெழுவினார் - பொருந்தினவர். கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மொடும் பதி பெறுவர் என்றதால், தம்மையும் பெறுவர், பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல் - `தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்`. (சிவஞான. அவையடக்கம்) என்றவாறு தம்மையுணர்தல். `தன்னுயிர்தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிரெல்லாந்தொழும்`(குறள் . 268). பதி - சிவம்.
சிற்பி