திருவிளநகர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர்கோவண வாடையர்
குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி
நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்
மிளிரிளம்பொறி யரவினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

விளங்குகின்ற இளம்பிறை சென்னிமேல் உடையவர். கோவண ஆடை உடுத்தவர். கங்கை நங்கையை விரும்பியவர். ஒளியும் புள்ளிகளும் பொருந்திய இளநாகம் அணிந்தவர். அவ்விறைவர் விரும்பி உறையும் தலம், தண்ணிய மழை பொழியத்தக்க மேகங்கள் தவழும் பொழில்களைக் கொண்டதும், அழகிய நீர் நிறைந்ததும் குளிர்ந்த புதிய புனலைக் கொண்டு நீண்ட துறையுடன் விளங்குவதுமான விளநகராகும்.

குறிப்புரை :

ஒளிர் - பிரகாசிக்கின்ற. சென்னிமேல் பிறை உடையர், கோவணம் ஆகிய ஆடை உடுத்தவர். குளிர் மழைக்கு இளமை, பெய்து வெளிறாமை. நளிர் - குளிர்ச்சி. துறை நதிசாதியடை. மிளிர் - பிறழ்கின்ற, புரள்கின்ற, விளங்குகின்ற. பொறி - பாம்பின் படத்திலுள்ள புள்ளிகள். `பொறியரவம்` (தி .1 ப .132 பா .2) `பொறிகிளர் அரவம்` (தி .3 ப .92 பா .3). `பொறிகிளர் பாம்பு` (தி .3 ப .101 பா .2). `பொறியரவு` (தி .4 ப .35 பா .6) என்று பயின்ற ஆட்சியாயிருந்தும், ஆகரங்காட்டிய அகராதியில் அராப்பொறி இராப்பொறியாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததொ ராமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.

பொழிப்புரை :

எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில் மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற விளநகராகும்.

குறிப்புரை :

அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது. ஓர் ஆமைபூண்டு - எலும்பும் பாம்பும் (அழகுற) அணியும் ஆபரணம் என்ன, அவ்வாபரணத்தோடு கட்டியதோராமை அணிந்து, அணிகலனைச் சுட்டாமல் அக்கரவு:- தட்டிற்றெனில் அவற்றொடு எனல் வேண்டும். அக்கர் எனின், வலிந்து பொருள் கொள்ளலாம். உக்கவர் - அழிந்தவர். சுடுநீறு :- முற்பதிகத்தின் முதற்பாட்டுரையிற் பார்க்க. (பதி .211 பா .3) `ஒளிமல்கு புனல் காவிரி` என்றது இன்றும் கண்கூடு. பூண்டு அணிந்து அவர் மேயது விளநகர் என்க. காவிரிப்புக்கவர் என்பது சிவபிரானைக் குறித்ததாக்கொள்ளின், அணிந்து புக்கவர் என்க. காவிரிப் புக்கவர் - காவிரி நீரிற் புகுந்து முழுகியவர், இது சிவபிரான் தீர்த்தம் அருளற்பொருட்டு எழுந்தருளும் உண்மை குறித்தது.`துயர்கெடுக` எனச்சங்கற்பஞ்செய்து திருநீறு பூசுதல் வேண்டும். துயர் - பிறவித் துன்பம். துயர்க்கேடு - பாசநீக்கம். `துயர் கெடுக` என்றார்க்கு இன்புறுக என்றலும் உட்கோளாகும். அவ்வின்பாக்கம் - சிவப்பேறு. இவ்விரண்டும் சேர்ந்ததே ஆன்மலாபமாகிய முத்தி. `பாசவீடும் சிவப்பேறும் எனப் பயன் இருவகைப்படும். அவ்விரண்டனுள் பாசவீடாகிய பயனைப்பெறுமாறு உணர்த்து ..... தல் பயனோத்தின் முதற்பாதமாகிய இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்க` ( சிவஞானபோதம், சூ .10. மாபாடியம்) `ஆன்மலாபம் இரண்டனுள் முடிவாய் எஞ்சிநின்ற சிவப்பேறு கூடுமாறுணர்த் ..... துதல் பயனோத்தின் இரண்டாம் பாதமாகிய பதினோராஞ்சூத்திரத்தின் கருத்து என்க` `ஆன்மலாபம் எனப்படும் பயன் இரண்டனுள் பாசநீக்கம் உணர்த்திய பின்னர்ச் சிவப்பேறு உணர்த்துதல் முறைமை` (? . சூ .11). இவ்விரண்டும் `சிவாயநம என்று நீறணிந்தேன்` என்று, `திருவருளால்` வந்த தேவாரத்தில் உள்ளன. `துயர்கெடுகெனப்பூசுவெண்பொடி` என்றதால், பூசும் பொழுது திருவைந்தெழுத்தோதாது பூசுவது தகாது. மிக்கவர் - மேலான அடியவர். வழிபாடு - அருள் வழிபடுஞ் சிவதரிசனம் முதலியவை. `நிலைநிலையாப் பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலனெறி நீத்து அருள் வழிபோ` தல் வழிபாடு. (திருவிளையாடற் புராணம்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

வாளிசேரடங் கார்மதி தொலையநூறிய வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கட னஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்
மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின் முப்புரங்களை அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல் போலும் சடையினரும், வலிய விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர்.

குறிப்புரை :

வாளி - அம்பு. அடங்கார் - பகைவர். மதில் - மும் மதில். நூறிய - அழித்த. வம்பின் வேய்த்தோளி - புதிய மூங்கிலை ஒத்த தோள்களையுடைய உமாதேவியார், இரண்டு கணுக்கட்கும் இடைப் பகுதியே தோளுக்கு ஒப்பு. வம்பு - புதுமை. உயர்ந்த கடல், தொல் கடல் - பாற்கடல். நஞ்சு - விஷம். காளம் - கருமை. மல்கிய - நிறைந்த. காளமல்கிய கண்டத்தர் :- திருநீலகண்டர். கதிர் - செவ்வொளி. விரி - விரியும். சுடர்முடியினர் - நெருப்பைப்போலும் சடைமுடியுடையவர். `அலரும் எரிசெஞ்சடை` (பதி .37) `எரிதருசடை` (பதி .122) `எரியார் சடை` (பதி .154) `அனல்நிகர்சடை` (பதி .123) `கனல் செய்தகமழ் சடை` (பதி .121) `தீச்செய்தசடை` (பதி .119) `நெருப்பினாற் குவித்தாலொக்கு நீள்சடை` (தி .5 ப .30 பா .7) நெருப்பராய் நிமிர்ந்தாலொக்கும் நீள்சடை (? .9) என்னும் திருமுறைச்சான்று கொண்டு இப்பொருள் எழுதப்பட்டது. மீளி - வலிமை, பெருமையுமாம். ஏறு - விடை, எருது. உகந்து - விரும்பி, உயர்ந்து. மேயது - எழுந்தருளியிருப்பது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார்
நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்
மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

காலில் விளங்கும் கழலணிந்தவர். கையில் விளங்கும் சூலத்தை உடையவர். பூணநூல் விளங்கும் மார்பினர். துன்புறும் நோயும் பிறத்தலும் இல்லாதவர். கருமை விளங்கும் ஒளி நிரம்பிய குற்ற மற்ற நீல மணி போலும் கண்டத்தினர். வானவெளியில் விளங்கும் வெள்ளிய பிறையைச் சூடியவர். அவ்விறைவர் மேயது விளநகர்.

குறிப்புரை :

நூல் - பூணுநூல். நோய் (உம்) இலார் பிறப்பும் இலார் - நோகுந்துன்பமும் இல்லார் பிறத்தலும் இல்லார். மால் - கருமை. மால் விளங்கிய மிடறினார் - திருநீலகண்டர். விளங்கு ஒளி மல்கிய மிடறு. மாசிலா மணிமிடறு - குற்றம் இல்லாத நீலமணிபோலும் மிடறு, அழகிய மிடறுமாம். மால் விளங்கு என்பதற்கு - `இடமால் தழுவிய பாகம்` (தி .4 ப .2 பா .4, ப .22 பா .4, ப .24 பா .7, ப .37 பா .7 ப .40 பா .5, ப .62 பா .8, ப .66 பா .8, ப .78 பா .7, தி .6 ப .24 பா .5) என்றும் கூறலாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்
துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்
சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

வேதங்களை அருளியவர். அவ்வேதங்களைப் பாடுபவர். முடியில் திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச் சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர். அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித்தூநெறி பெறும் பொருட்டு எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை உடைய கரையில் அமைந்த விளநகராகும்.

குறிப்புரை :

பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார். `மறை` இடை நிலை விளக்கு. பாய - பரவிய. சீர்க்காவிரி, பழங்காவிரி, காவிரித் துறை. முன்னினார் - அணுகினவர். தூநெறி - தூய (சிவ) கதி. (பா. 11) திங்களை அராவோடும் கங்கையோடும் உடன் சேர்த்தவர், `ஓடு உடன்` இரண்டும் ஒருசேர நின்றதறிக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

தேவரும்மம ரர்களுந் திசைகண்மேலுள தெய்வமும்
யாவரும்மறி யாததோ ரமைதியாற்றழ லுருவினார்
மூவரும்மவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும் முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர். திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும் அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னு மாறும் பொருந்த அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும்.

குறிப்புரை :

தேவர் அமரர் என்பர் வெவ்வேறு எனல் காண்க. தேவர் - தெய்வமாவார். அமரர் - மரணமில்லாதவர். அமரார் என்றிருந்து, கால் குறைந்ததுபோலும், மரணமில்லாமையுடையவராய்த் தெய்வ மாகாதவர் அமரர். தெய்வமாகி மரணம் உடையார் தேவர். `நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்` (தி .5 ப .100 பா .3) என நுதலுந் தேவாரத்தால் தேவர்க்கு மரணம் உண்மை வெள்ளிடைமலை. `செத்துச் செத்துப் பிறப்பதே வென்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ` (தி .5 ப .100 பா .2). திசைகள் மேல்உள தெய்வமும் - அஷ்டதிக் பாலகர்களும், யாவரும் அறியாதது ஓர் அமைதி :- `ஏனையாவரும் எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத தேனை .... சிவனை ... க்குறுகிலேன்` (திருவாசகம், திருச்சதகம். 42) மூவரும் இவரே எனவும் முதல்வரும் இவரே எனவும் மேவ அரும்பொருள் ஆயினார். இத்திருப்பாடலில் சிவபரத்துவம் உணர்த்தப்பட்டதறிக. மேவ - அடைய.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

சொற்றருமறை பாடினார் சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார் காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும் வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர் மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.

குறிப்புரை :

சொல்தரும் மறை - `எழுதாக்கிளவி` யாதலின் கண் வழியே காணும் எழுத்தாலன்றிச், செவிவழியே கேட்டு உணரச் சொல்லால் தரும் உயர்வுடைய வேதம். `சொற்றருமறை முதல் தொன்மை நூல்முறை கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவரு குரவன்` (சிவபுண்ணியத்திரட்டு). கல்தருவடம் - செபமணி மாலை. தருவ்வடம் - வகரம் விரித்தல் விகாரம். மல் - வலிமை. திரள்தோளினார், பொடிப் பூசினார் - திருநீற்றையணிந்தவர். ஒற்றுமிகை. வில் - ஒளி. தரும்மணி - நீலரத்நம். முதலடியில் தருதல் துணைவினையாதலும் கூடும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழலடி பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார்
விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்
மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

பரவிய சடைமுடியை உடையவர். தம் கழல் அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில் இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற பொன்போன்ற முப்புரிநூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும்.

குறிப்புரை :

படர்தரும் - படரும். பைங்கழல் அடி - பசிய கழலை அணிந்த திருப்பாதம். ஒற்று விரித்தல் விகாரம். அடர்தரும் - தாக்கும். பிணிகெடுக என அருளுவார். `துயர் கெடுக என` (பா .2). இவ் வீரிடத்தும் வியங்கோள்வினையின் ஈற்றுயிர் கெட்டது. அரவு அரை யினார் - பாம்பைக் கச்சாகக்கட்டிய திருவரையுடையவர். விடர் - மலைப்பிளப்பு. மலைகளில் மணி கிடைத்தல்பற்றிக் கூறியது. மின்னு பொன்புரி நூலினார் (பா .5).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்
பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்
மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.

பொழிப்புரை :

கையில் விளங்கும் சூலத்தை உடையவர். தோலாடை உடுத்தவர். முற்றழிப்புக் காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையம்மையை இடப்பாகமாக உடைய பரமர். கரிய ஒளி நிறைந்த குற்ற மற்ற நீலமணி போன்ற மிடற்றினை உடையவர். திருமேனியில் விளங்கும் திருவெண்ணீற்றை அணிந்தவர். அவ்விறைவர் மேவியிருப்பது விளநகர் ஆகும்.

குறிப்புரை :

கைஇலங்கிய வேலினார் (பா .4) தோலினார் கரிகாலினார் என்பது காலினார் கரித்தோலினார் என்றிருந்து பிறழ்ந்தது போலும். தோலினார் - யானைத்தோலும் புலித்தோலும் தரித்தவர். கரி காலினார் - எல்லாம் வெந்து கரிந்துபோகுஞ் சருவசங்கார காலத்தில் தாம் ஒருவரே அழியாது நிற்பவர். கரிதல் - `வெந்து கரியான காமன்`. கால் - காலம். பை - படம். பின்புறத்தில் இடுப்பிற்கும் புறங்காலிற்கும் இடைப்பகுதி படம் விரித்த பாம்பின் தோற்றம் இருத்தலால், அல்குலுக்கு அரவு ஒப்பாயிற்று. அல்குலைக் குறி எனல் குற்றம். திரு முறையில் அஃது ஒவ்வாது. மெய் - திருமேனி. உண்மையுமாம். `உண்மையிலுள்ளது நீறு`, `சத்தியமாவது நீறு`, `தத்துவமாவது நீறு` (பதி .202).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்
உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்
உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார் தருஞ்சடை முடியின்மேல்
உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார் விளநகர் மேயதே.

பொழிப்புரை :

கீழ் உள்ள திருவடியை யான் காண்பேன் என்று சென்ற கரிய மணிவண்ணனாகிய திருமாலும், மேல் உள்ள திருமுடியை யான் காண்பேன் என்று சென்ற தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் உள்பொருளாய் விளங்கும் சிவபிரானைக் கண்டிலர். ஒளி பொருந்திய சடைமுடியின் மேல் விளங்கும் பிறை முதலியவற்றை யாரும் காண இயலாத சோதிப் பிழம்பாய்த் தோன்றும் அப்பெருமானார் தம்மை அன்பர்கள் கண்டு வழிபட விளநகரில் எழுந்தருளியுள்ளார்.

குறிப்புரை :

கீழ்உள்ளதைக் காண்பன் என்ற மாமணிவண்ணன் - திருமால். மேல்உள்ளதைக் காண்பன் என்ற மாமலர் அண்ணல் - பிரமன். இவ்வாறு கொள்ளாமல், எங்கும் உள்ள தன்னைக் கீழ் காண்பன் மேல் காண்பன் என்றதாக்கொள்ளுதல் சிறப்புடையது. வண்ணனும் அண்ணலும் கண்டிலார் என்க. உள்ளது + அன் + தன் + ஐ = உள்ளதன்றனை எனக்கொண்டு, சிவபிரானை என்று பொருளுரைத்தல் மிக்க பொருத்தமுடையதாம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு` என நீதி நூலும், உள்ளது என்னும் வினைப் பெயரால் சச்சிதாநந்தப் பொருளை உணர்த்துகின்றது. `உன்னும் உளது ஐயம் இலது` எனச் சிவாகமமும் (திருவருட்பயன் . 10) உணர்த்திற்று. உள்ளது - சத்து. சத்தெனவே அவிநாபாவமாகிய சிதாநந்தமும் பெறப்படும். சர்வ வியாபகவஸ்துவே உள்ளது எனப்பட்டது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுத லண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்மிலர் தூநெறிபெறு வார்களே.

பொழிப்புரை :

மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ் போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறை சூடிய பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும் இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர். தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள்.

குறிப்புரை :

வண்டுகள் யாழோசையைச் செய்கின்ற துறை என்று வளங்கூறப்பட்டது. சண்பை - சீகாழித் தலப் பெயர்களுள் ஒன்று. சீர் இன்பு - சீரும் இன்பமும். துன்பு உறும் துயரம் - துன்பமும் அடையும் துயரமும். அண்ணலைச் சொன்னவற்றை ஏத்துவார் தூநெறி பெறுவார்கள்.
சிற்பி