திருவாரூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தோய்த்துப்பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

நெஞ்சே! மரணமுறுங்காலத்தில் சிவனடியைச் சிந்திக்கும் பாக்கியமில்லாத அஞ்ஞானிகளைப்போல நாணினையே. விடையின்மேல் ஏறிவந்தருளும் திருநீலகண்டப் பெருமானுடைய திருவாரூரைத் தொழுது உய்யலாகும், மையல்கொண்டு அஞ்சாதே. ஆரூரைத் தொழப்பெறாதே கழியுமோ என்று கருதி மயங்கி அஞ்சாதே. மீண்டும்போந்து தொழப்பெறலாம் என்பது கருத்து. கொண்டு அஞ்சேல் என்பது காரணப் பொருட்டாய வினையெச்சம். கொண்டு என்பது அஞ்சு என்னும் முதனிலை கொண்டது. பவனம் - காற்று. இறக்குங்கால், பிராண வாயு உடலின் நீங்கும் பொருட்டுப் பெருகும். அது `மேல்மூச்சு வாங்குகின்றது` என்ற வழக்கினாலும் அறியப்படும். நாக்கு உலர்ந்துபோம். சோடை - வறட்சி, நாக்கு உலர்ந்து போதலோடு, அதன்கண் எய்தும் உணவை உட்செலுத்த எழ மாட்டாமலும் போம். நா எழாது என்பதில் துவ்விகுதி கெட்டது. ஒருமையாதலின் வல்லெழுத்து மிக்கது. பன்மையாயின், `காக்கை கரவா கரைந்துண்ணும்` (குறள் .527) என்பது போன்று இயல்பாகும். நாவானது பால் முதலியவற்றை உட்செலுத்தமாட்டாது (வலி குன்றியது) பற்றி, அருகில் இருப்பவர் அப்பாலையோ பிறிதோருணவையோ பஞ்சில் தோய்த்து உட்புகுமாறு பிழிவர். அப்பிழிவை உயிரை ஓம்புதற்பொருட்டு, இரையை எண்ணிப் பழகிய பழக்கத்தால் இறையை எண்ணாத பேதையர் தம்மை அறியாதே உட்செலுத்தப் பெறுவர். பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிந்தியாப்பேதைமார் என்க. தோய்த்து என்பதன் மரூஉ, தோய்ச்சு என்பது போலி என்பாருமுளர். காய்தல் முதலியவும் இவ்வாறு மருவியுள. சிவன் + அ = சிவன; ஆறனுருபு. தாளிரண்டாதலின் பன்மையுருபு நின்றது. `நுன கழலிணை` (திருவிசைப்பா. 7). அட்ட - பிழிந்து ஒழுக்க. கவனம் - விரைவு. கண்டனவன் எனப் பிரிக்காமல் கொள்வதே பொருத்தம். பிரித்துச் சுட்டுதல், வேண்டாதது. உய்யலாம் மையல் என்க. மையல் கொண்டஞ்சல் உய்யலாம் என்பாருமுளர். பேதைமார் போலாமையை `அவமிலா நெஞ்சமே` (பெரிய . புரா .518). எனச் சேக்கிழார் சுவாமிகள் விளக்கியதுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டுபோவார்
எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியா லேழை நெஞ்சே
அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

தந்தையர் தாயர் என்பன பலர்பால். தாமும் போவார் என்னும் பன்மைநோக்கி நின்றன. கொந்த - குத்த. `கொந்தி அயில் அகல் அம்பால் குட்டமிட்டுக் கொழுப்பரிந்து` (பெரிய . கண்ணப்பர் . 145). எரிய என்றுமாம். `கொந்தழல்` (சிந் .1499). கூற்றத்தார் - இயம தூதர் (உடம்பும் உயிரும் கூறுபடுதலைச் செய்பவர்). கொண்டு போவாராய்ப் பார்க்கின்றார். வைத்தி - வைப்பாய்?. எந்த நாள் வாழ்வதற்கு மனம் வைத்தி`. என்று வினாவியருளினார். மனம் `வாழாத நெஞ்சம்` எனப்படும். `வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே, சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும், வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே` என்பது திருவாசகம். வாழ்க்கை, `உரித்தன்று உனக்கு இவ்வுடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம் தரித்தும் தவமுயன்றும் வாழாநெஞ்சே?`(தி .6 ப .42 பா .10). என்றதிற் குறித்தது தம்முன்னோர் எல்லாரும் இறந்தவாறே தாமும் இறப்பது திண்ணம். மாய்க்க மறலிதூதர் சித்தமாயுள்ளனர். இறப்பு அண்மையில் இருக்கின்றதால், இறவாமல் என்றும் வாழ்வதற்கு எந்தநாள் மனம் வைப்பாய்? வாழ்வது - திருவடி நிழலில் அழியாத இன்பத்தைத் துய்த்துக் கொண்டிருப்பது. ஆரூர் தொழுது உய்யலாம். நெஞ்சே மையல்கொண்டு அஞ்சாதே. முதலாவது விளி அதன் போக்கை உணர்த்த. இரண்டாவது விளி அதற்கு அபயம் அளிக்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

நிணங்குடர் தோனரம் பென்புசே ராக்கைதா னிலாய தன்றால்
குணங்களார்க் கல்லது குற்றநீங் காதெனக் குலுங்கி னாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலு மனங்கொ டேத்தும்
அணங்கனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் கன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும் குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கிநின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

யாக்கை (-கட்டப்பட்டது, உடம்பு) ஆக்கை என்று ஆயிற்று. யகரமெய் முதலிற்கொண்ட சொற்கள் அதனை ஊர்ந்த ஆமுதலாய் வழங்கப்படுதல், யாறு - ஆறு, யாமை - ஆமை, யாய் - ஆய், யாண்டு - ஆண்டு, யானை - ஆனை முதலியவற்றிற் காணப்படும். நிலாயது - நிலாவியது. `குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போடுயிரிடை நட்பு` (குறள் .338) நல்ல குணங்களுயுடையார்க்கே குற்றம் நீங்கும் அல்லாதார்க்கு (தீயகுணங்களைடைய வர்க்கு) க் குற்றம் நீங்காது. குலுங்கினாய் - நடுங்கினாய். சுராசுரர் எல்லாரும் நாடோறும் வணங்குவராய் மணம் (தூபம் முதலியவற்றைக்) கொண்டு ஏத்தும் கடவுள். `மனம்` என்ற பாடம் கழகப் பதிப்பில் உளது. மனம் கொடு - தியானித்து. அணங்கு - தெய்வத்தன்மை. அணங்கன் - சிவபிரான். குணம் குற்றம் இரண்டும் உடைமை குறிக்கச் சுராசுரரைக் குறித்தார்போலும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்த நோய்கள்
வாதியா வாதலா னாளுநா ளின்பமே மருவி னாயே
சாதியார் கின்னரர் தருமனும் வருணர்க ளேத்து முக்கண்
ஆதியா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! நீ நீதிவழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள்தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்னரர், தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

நெஞ்சே, நீதிவழியே வாழவில்லை, காலம்பல வீணே கழிக்கின்றனை. நாளும் நோய்கள் வருத்தா. நோய்கள் வாதியா நாள் செலா நின்றன என்று கொண்டு கூட்டுக. வாதியா - வாதித்து, வருத்தி, இதற்கு வாதிப்பனவாயின என்றுரைப்பது எவ்வாறு? நாளும், நாளும் இன்பத்தையே பொருந்தினாய். சாதி - குலம். ஆர் - பொருந்திய. கின்னரரும் தருமனும் வருணனும் வழிபட்டனரென்று குறித்தார். ஆதி யாரூர் என்றது காவிரிநாட்டிடைத் தொன்மையில் மிக்கது. திகையெட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே என்ற கருத்தைக் குறித்தது. ஆதியின் ஆரூர் என்றலுமாம்.`ஆதிபாதமே ஓதி உய்ம்மினே` (தி .1 ப .90 பா .3).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பிறவியால் வருவன கேடுள வாதலாற் பெரிய வின்பத்
துறவியார்க் கல்லது துன்பநீங் காதெனத் தூங்கி னாயே
மறவனீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்தநீர் மல்கு சென்னி
அறவனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

அவமிலா நெஞ்சம் (பெரிய . திருஞா .518) உயிர்க்குப் பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள். மற்றையெல்லாத் துன்பங்களும் அவற்றிடை விளைவன. இறத்தலும் பிறத்தலால் உண்டாவதே, `தோற்றம் உண்டேல் மரணம் உண்டு`(தி .7 பா ,63)`பிறந்தால் பிணிப்பட வாய்ந்தசைந்துடலம் புகுந்து நின்று இறக்குமாறுளதே இழித்தேன் பிறப்பினை நான்` (தி .4 ப .20 பா .8) `கெடுவது இப்பிறவி சீசீ` (தி .4 ப .76 பா .10). துறவு வீடு பேரின்பத்தைக் கொடுப்பது. அத்துறவு பிறவியால் விளையும் கேடுகளை உணர்ந்தவர்க்கே உண்டாகும். ஆதலின், பிறவியால் கேடு வருவன உள. ஆதலின் பெரிய இன்பத் துறவியாரானார் என்றருளினார். துறவியார்க்கே துன்பம் நீங்கும். துறவாதார்க்குத் துன்பம் நீங்காது என்று சோர்ந்தது நெஞ்சு. தூங்குதல் - சோர்தல். நெஞ்சே! துன்பம் நீங்காது எனச் சோர்ந்தாய். சோர்வு வேண்டா. நீ ஆரூரை மறவல் (- மறவாதே). மார்க்கமே நண்ணினாய் - சன்மார்க்கத்தினையே சேர்ந்தாய். `மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர்` (சித்தியார்.) என் புழிப்போல நின்றது. `தயாமூலதன்மம்` என்னும் தத்துவத்தின் வழி `நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலங்கொடுக்கும் நம்பி` (தி .6 ப .20 பா .6). யாயிருத்தலாலும் `தயாமூலதன்மவழி எனக்கு நல்கி மனந்திருத்தும் மழபாடி வயிரத்தூண்` என்றதில் அடியார்க்கு நல்கும் `தயாமூலதன் மவழி`யுடையனாதலாலும் அறவாழியந்தணன் சிவனே. அறப் பெருஞ்செல்வி சிவையே. அவன் கல்லாற் கீழிருந்து உரைத்தருளிய அறத்தின் ஏகதேசமே ஏனையோர்பால் இருப்பது. `பிறவி அறுப்பீர்காள்`. `அறவனாரூரை மறவாதேத்துமின் துறவியாகுமே` என்றதை (தி .1 ப .91 பா .2). மறவல் நெஞ்சமே `(தி .1 ப .90 பா .8). என்பதனோடு ஒப்பு நோக்கியுணர்க. மறவன் என்று பிரிப்பது மறமன்றி அறமாகாது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

செடிகொள்நோ யாக்கையைம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச்சிறு பறவை
கடிகொள்பூந் தேன்சுவைத் தின்புற லாமென்று கருதி னாயே
முடிகளால் வானவர் முன்பணிந் தன்பரா யேத்து முக்கண்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

முடைநாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடிதாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

செடி - பாவம், துன்பம், தீ நாற்றமும் ஆம். (தி .2 ப.93 பா.2). (தி .6 ப .82 பா .7).(திருவாலவாயுடையார் புராணம். 54:- 19). நோயையுடைய யாக்கை. (பா .3). `ஐம்பாம்பு` என்ற பாடமே மதுரை - ஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் பதிப்பிலுளது. அம்பாம்பு என்ற பாடம் சிறவாது. `பாம்பின்வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் ஒற்றியூருடைய கோவே`. (தி .4 ப .47 பா .1). பாம்பின் வாயில் தேரை. தேரையின் வாயில் சிறுபறவை (வண்டு). அவ்வண்டின் வாயில் மலர்த்தேன் துளி. அதைச் சுவைத்துக் கொண்டிருக்கும் அச்சிறு பறவைக்கும், அதை உண்ணும்தேரைக்கும், அதை விழுங்கும் பாம்பிற்கும் அவ்வவ்வுணவால் எய்தும் இன்பத்தின் சிறுமையும் தாம் உற்ற துன்பத்தின் பெருமையும் உவமை. உயிர்கள் விரும்பும் உலக இன்பத்தின் சிறுமையும் அதனை விழைந்து முயன்று தேடிப்பெறும் பொருட்டு உயர்ந்த பிறவியைப் பயன்படுத்தித் திருவருளிற் செலுத்தாமையால், அடையப்பெறாத உண்மையின்பத்தின் பெருமையும் உவமேயம். சிறு பறவை முதலிய மூன்றற்கும் உள்ளது போல்வதொரு பெருங்கேடு யாக்கையின் செடி கொள்நோய். நோய் பாம்பைக்கொல்லும், பாம்பு தேரையைக்கொல்லும், தேரை வண்டைக் கொல்லும். அந்நிலையில் பாம்பு முதலிய மூன்றும் தேரை, வண்டு தேன்றுளியால் முறையாகச் சிறிது இன்புறும் செயலால், பின் உள்ள பெருந்துயரை அறியாதுள்ளன. இந்நிலைமையை நெஞ்சிற்கு அறிவுறுத்தி, நிலைத்த பொருளை நாடுவித்தலே இதன் உட்கோள். `அடுகரி தொடர வீழ ஐந்தலை நாகங் காண இடிகிணற் றறுகின் வேரைப் பற்றிநான் றிடஅவ் வேரைக் கடுகஓர் எலியும் வந்து கறித்திட அதில்நின் றோனுக் கிடைதுளி தேன்நக் கின்பம் போலும்இப் பிறவி யின்பம்.` `கொண்டு விண்படர் கருடன்வாய்க் கொடுவரி நாகம் விண்ட நாகத்தின் வாயினில் வெருண்டவன் றேரை மண்டு தேரையின் வாய்தனில் அகப்படு தும்பி வண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம்.` என்னும் தனிப்பாடல்களையும் `வனப்பாழ்ங்கிணற்றுள் வெம்பாம்பு பற்றும் விடத் தேரை வாய்வண்டு தேன் வேட்டல் போல் விசித்துக் கொடுபோய்விட ... ... கூற்றை எண்ணாது எண்ணும் வேட்கையெல்லாம் விட... ... அரங்கன் திருத்தாளில் விழு நெஞ்சமே` (திரு வரங்கத்தந்தாதி .93) என்பதையும் துன்பத்துள் துன்பமான உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே தனக்கு உடனே வரக்கடவதாகிய துன்பத்தைச் சிறிதும் நினையாமல் இன்பத்தையே மேன்மேல் அவாவும் பேதைமையியல்புக்கு, ... ... கானகத்தில் நீரற்ற பாழ்ங் கிணற்றிலே பாம்பின் வாய்ப்பட்டு நஞ்சு தலைக்கு ஏறிய தேரையின் வாயில் அகப்பட்டதொரு வண்டு தேனை விரும்புதலை உவமை கூறினார்` என்னும் அதன் விளக்கத்தையும் நோக்கி உணர்க. இதற்குப் பிறர் எழுதியது பொருந்துமா என்று ஆய்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

ஏறுமால் யானையே சிவிகையந் தளகமீச் சோப்பி வட்டின்
மாறிவா ழுடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கி னாயே
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த
ஆறனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! உலாவரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தாற்காலிகமாகப் பெறும் துன்பமயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக்கொண்ட உமையம்மை பங்கினரும், பிறைமதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல்கொண்டு அஞ்சாதே!.

குறிப்புரை :

ஏகாரம் எண்ணுப் பொருட்டு, சிவிகை - பல்லக்கு. அந்தளகம் - கவசம். (தமிழ் லெக்ஸிகன் : பக்கம் 82.) ஈச்சோப்பி - ஈயோட்டி. விருது என்றாருமுளர், வட்டின்மாறி வாழ் உடம்பு:- உடையை மாற்றுவதுபோல் உடம்பினை மாற்றுவது அவ்வுடம்பினை எடுக்கச்செய்யும் வினைப்பயனாக உயிர்க்கு நிகழ்வது. வட்டு - உடை. வட்டின் - வட்டுப்போல. உடம்பில் மாறி வாழ்தல் ஆவது எடுத்த உடம்பினை விடுத்துப் புதியதோருடம்பிற்புகுதல். யானை, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி என்பவற்றை உடையவர் அருள்வாழ்வு பெறாராயின், அழியாத பேற்றை அடைவாரல்லார். மாறிவாழ் உடம்பினாரேயாவர். அவர் அந்நடலையே படுவர். நடலை - பொய். அதை நன்று என்று மயங்கிப் பற்றின் பிறவிதொலையாது. அல்லியங்கோதையார் பாகராகிய தியாகராயரைத் தொழுது பிறவித்துன்பத்தினின்றும் உய்தி அடையலாம். நெஞ்சே மையல் கொண்டு அஞ்சாதே என்க. செல்வராயிருந்தபோது யானை மீதும் சிவிகை மீதும் சென்றவர், வறியரானபோது, ஈயோட்டும் இழி நிலையும் உண்ணும் வட்டில் மாறும் நிலையும் அடைவது பற்றிக் கூறியதாகக் கொள்ளலும் பொருந்தும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம் மில்லம்
புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான் முகடு கொண்டு
முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கி டாதே
அன்பனா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

எறிந்து - நீளக்கட்டி. முகடு - மேல்மூடு. ஒன்பது வாய்தல் - நவத்துவாரம். குரம்பை - உடற்குடில். (தி .4 ப .33 பா .4). அன்பன் - சிவபிரான். `அன்பே சிவம்`. கால்கொடுத்தெலும்பு... ... கூரை (தி .4 ப .67 பா .13) `ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து தாம் எடுத்த கூரை`. (தி .6 ப .12 பா .1) முகடு என்பது மூடு என மரூஉவாகும். ஒன்பது வாய்தல்:- `புழுப்பெய்த பண்டிதன்னைப் புறம் ஒரு தோலான் மூடி ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை` (தி .4 ப .5 பா .22) குரம்பை - (தி .4 ப .31 பா .2,3). `புலால் கமழ்பண்டம்`(தி .4 ப .67 பா .8)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர் தார மென்னும்
பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப் பற்றி னாயே
வெந்தநீ றாடியா ராதியார் சோதியார் வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசியவரும், ஆதியான வரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

நெஞ்சே, நீ, அஞ்சாதே, தந்தை, தாய், சகோதரர், புத்திரர், மனைவி என்னும் பற்று நீங்காதவர்க்குப் பிறவித்துன்பத்தினின்றும் உய்தி அடையும் உபாயம் இல்லை என்று தெளிந்து, திருவாரூர்த் தியாகராசப் பெருமான் திருவடியே கதி எனப்பற்றிக் கொண்டாய். ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டாய். `தந்தையார் தாயாருடன் பிறந்தார், தாரமார் புத்திரரார்தாந்தாமாரே, வந்தவாறெங்ஙனே போமாறேதோமாயமா மிதற்கேது மகிழவேண்டா, சிந்தையீருமக்கொன்று சொல்லக் கேண்மின், திகழ்மதியும் வாளரவுந் திளைக்குஞ்சென்னி யெந்தையார் திருநாம நமச்சிவாய வென்றெழுவார்க் கிருவிசும்பிலிருக்கலாமே`. `உடலைத் துறந்து உலகேழுங் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து உய்யப் போயிடலாகும் ... ... ... ... சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணி நெஞ்சமே`. (தி .6 ப .93 பா .10), (தி .4 ப .112 பா .2)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத் தெண்டோள்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்ச னெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்ன வடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்றுவரை தேடிக்காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம் போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

குறிப்புரை :

நெடியமால் மண் (பூமியை) இடந்தான் - பேர்த்தான் பிரமன் (வானில் உயர) நீண்டான், பறந்தான். நீண்டு. இடந்து இன்னம் நேடிக் காணாப்படியனார் என்க. படி - பண்பு. உருவம் எனில் ஈண்டுத் தீப்பிழம்புருவம் ஆகும். `இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே`(தி .6 ப .97 பா .10) என்பதில் காட்சிக்குரியது எனல் உணர்க. பாகவடிவு - அர்த்தநாரீச்சுரரூபம். மணி - நீலரத்நம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங் காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம் பந்த னாரூர்
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் தீதிலா ரோதநீர் வைய கத்தே.

பொழிப்புரை :

பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லி வருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.

குறிப்புரை :

யாழ் - யாழொலியை. `நல்லவே நல்லவே` என்ற அடுக்கும் ஏகாரமும் ஆசிரியர் திருவாய் மலர்ச்சியின் எய்தும் ஆன் மலாபத்தை உறுதிப்படுத்தி நின்றன. `ஒழுக்கம் உடையவர்க்கு ஒல் லாவே தீயவழுக்கியும் வாயாற்சொலல்` (குறள் .139) என்றதனுரையில் பரிமேலழகர் எழுதிய தாற்பரியம் ஈண்டுக் கருதற்பாலது. எல்லியம்போது - இரவு. ஓதம் - கடல். வையகத்தே பாடல் சொல்ல வல்லவர் தீது இலர் என்க. இத்திருப்பதிகம் நித்திய பாராயணத்திற்குரியனவற்றுள் ஒன்றாகும்.
சிற்பி