திருக்கடவூர் மயானம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

வரியமறையார் பிறையார் மலையோர்சிலையா வணக்கி
எரியமதில்கள் எய்தார் எறியுமுசலம் உடையார்
கரியமிடறு முடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பெரியவிடைமேல் வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

இசைப்பாடல்களாக அமைந்த வேதங்களை அருளியவர். பிறையணிந்தவர். மலையை ஒருவில்லாக வளைத்து முப்புரங்கள் எரியுமாறு கணைதொடுத்தவர். பகைவரை அழிப்பதற்கு எறியப்படும் உலக்கை ஆயுதத்தை உடையவர். கரிய மிடற்றை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பெரிய விடைமீது ஏறிவருபவர். அவர் எம்பிரானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

வரிய மறையார் - வரிகளையுடைய வேதியர். வரிய - சிரேட்டமுடைய எனலும் பொருந்தும், மலையை ஒரு சிலையாக வணக்கி என்க. சிலை - வில். வணக்கி - வளைத்து. மதில்கள் எரிய எய்தவர். எறியும் முசலம் - வீசும் உலக்கை. மிடறு - கழுத்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

மங்கைமணந்த மார்பர் மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயான மமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர். மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின் மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

மங்கை மணந்த மார்பர் - உமாதேவியாரை இடப்பால் உடையவர். மார்பு இடப்பக்கத்தது. `போகமார்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த ... அண்ணல்` வலன் - வலக் கையில். கரந்தார் - மறைத்தார். செல்வம் - அடியார்கட்குத் திருவருட் காட்சி கிடைக்கும் பாக்கியம். செய்யா - செய்து. மறி - மான்கன்று. (பா .5.) அதை ஏந்தியதால் அங்கை ஏறிய மறியார் என்றார்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

ஈடலிடப மிசைய வேறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவ முடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி, சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும் புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

ஈடு + அல் = ஈடல். தன்னொடு பிறிதொன்று ஒப்பு அல்லாத இடபம். காடது இடமாக உடையவர். பாடல் இசை - பாடுதலில் இசை. படுதம் - கூத்து. `பாகம் உமையோடாகப் படிதம் பல பாட` (பதி . 198 பா .4) என்பதில் `படிதம்` என்றுள்ளதறிக.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

இறைநின்றிலங்கு வளையா ளிளையாளொருபா லுடையார்
மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்
கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயான மமர்ந்தார்
பிறைநின்றிலங்கு சடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தெளிந்த ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில் சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும் சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

இறை - முன்கை. வளையாள் - வளையலையுடையவள். இளையாள் - தேவியாரைக் குறித்தவை. மறை... மொழி யார் - வேதவாக்கியப் பொருளாயுள்ளவர். மலையார் - மலைத்தல் இல்லாதவர், தெளிந்தவர். அவர் மனத்தின் மிசையார். மனம் ஊர்தி. சிவபிரான் - ஊர்பவர். `அன்பர் மனமாங்குதிரை`. கறை - கறுப்பு நிறம். மரச்செறிவால் இருள்மிக்க சோலை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்
துள்ளுமிளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்
கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயான மமர்ந்தார்
பிள்ளைமதிய முடையார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர். ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில் ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம் பிறையைச் சூடியவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.

குறிப்புரை :

ஒளிவிரியும் தோடு ஒருகாதிலும், குழை ஒருகாதிலும் விளங்க. மான்மறி (பா .2.) துலங்க - ஒளிசெய்ய. பிள்ளை மதியம் - இளம்பிறை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர்மயான மமர்ந்தார்
பின்றாழ்சடைய ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம் பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும் கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும் சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

பொன்தாது உதிரும் கொன்றை, மணம்கொள் கொன்றை. புனைகொன்றை. பூங்கொன்றை என்று இயைத்துக் கொள்க. புனை - அழகுசெய்யும். புனைந்தார். - அணிந்தார். வெள்ளேறு - வெளியவிடை. ஒன்றா - ஒன்றாக, சிறப்புடையதாக. உயர்த்தது - தூக்கியது. அதுவே - அவ்விடையே. கன்று ஆ இனம் - கன்றுகளையுடைய பசுக்கூட்டம். புறவு - காடு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

பாசமான களைவார் பரிவார்க்கமுத மனையார்
ஆசைதீரக் கொடுப்பா ரலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போன் மிடற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
பேசவருவா ரொருவர் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

பாசங்களைப் போக்குபவர். அன்பர்க்கு அமுதம் போல இனிப்பவர். ஆசை அகலுமாறு அருள் கொடுப்பவர். மாலையணிந்த விடைமீது வருபவர். காயாமலர்போலும் மிடற்றினை உடையவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். அவரது புகழைப் பலரும் பேசி வணங்கவரும், ஒப்பற்றவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

பாசம் ஆன களைவார் - மலம் ஆயின ஐந்தையும் போக்குவார். ஆணவம், மாயை, கன்மம் என்று மும்மலமும், அவற்றையே மாயேயம், திரோதான சத்தியுடன் கூட்டி ஐம்மலமும் உண்டு என்பர். சிவஞானமாபாடியம். சூ .2. அதி .2. பார்க்க. `மலங்கள் ஐந்தாற் சுழல்வன்` (திருவாசகம் 133). ஆன - வினைப்பெயர். பரிவார்க்கு - அன்பர்க்கு. பரிவு - அன்பு. அமுதம் அனையார் - அமிர்தத்தைப் போல்பவர். ஆசைதீர - மூவாசையும் (மண், பொன், பெண்) ஒழிய. அலங்கல் - மாலை. காசை மலர் - காயாம்பூ; திருநீல கண்டத்துக்கு ஒப்புரைப்பது மரபு. 19-4-54 திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் 8-05 வரையில் இத்தருமை ஆதீனத்து 25 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமண்ய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள், தரிசனார்த்தம் வந்த எழுத்தாளர் பலருக்குக் காட்சிகொடுத்து, செவியறிவுறுத்தி அருளியவற்றுள், இடையில் இத்திருப்பாடலை எடுத்துக்காட்டி, நயம் பல கூறிய போது, அடியேம் மெய்ம்மறந்து உருகி நின்றேம். `ஆசை தீரக் கொடுப்பார்` என்றதற்குக் கூறிய நயம், அக்குருநாதர் திருக்கை வழங்கப்பெற்ற அடியேங்களுக்கோ அநுபவப் பொருளாயிருந்தது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

செற்றவரக்க னலறத் திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான் கடவூர்மயான மமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம் சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது ஏறி வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

செற்ற - கோபத்தையுடைய. கற்குன்று - கயிலைமலை. மற்று ஒன்று இணை இல்லாத வலிய மாசு (- குற்றம்) இல்லாத வெள்ளி மலைபோலும் பெற்று (- எருது) ஒன்று ஏறிவருவார் என்க. பெற்றம் - பெற்று என்று நின்றது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

வருமாகரியி னுரியார் வளர்புன்சடையார் விடையார்
கருமானுரிதோ லுடையார் கடவூர்மயான மமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும் நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய அடிகள் ஆவார்.

குறிப்புரை :

மான் உரிதோல் - மானை உரித்த தோல் `மானினது உரியாகிய தோல்` எனலுமாம். முன்னது வினைத்தொகை. பின்னது பண்புத்தொகையாதல் உரித்தோல் என்று நிற்புழி. ஒண்ணா - ஒன்றாத. மரூஉ. கன்று - கண்ணு, மூன்று - மூணு முதலியவைபோல.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார் கடவூர்மயான மமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்றேர ரமணர்
பேய்பேயென்ன வருவார் அவரெம்பெருமா னடிகளே.

பொழிப்புரை :

தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப்புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும் சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

குறிப்புரை :

துன்னார் - பகைவர். செற்றார் - கோபித்தார். தீய கருமம் - கெட்ட செயல்கள். இறையை, `பேய் பேய்` என்பார் தேரரும் அமணரும், சிறுமை புன்மை இரண்டும் பொது அடை. தீயகருமஞ் செய்தல் சிறுமை. சொல்லுதல் புன்மை `சிறுமை யுறுபசெய்பறியலரே`(நற்றிணை ,1)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

மரவம்பொழில்சூழ் கடவூர் மன்னுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா னகலமறிய லாகப்
பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி நினைவார்வினைக ளிலரே.

பொழிப்புரை :

குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின் பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப் பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.

குறிப்புரை :

மரவம் - குங்குமமரம். அசைத்த - கட்டிய. அகலம் - வியாபகம். அறியல் ஆக - அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே இருந்ததெனின், நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல் வேண்டுமோ?
சிற்பி