திருவேணுபுரம்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தி னொலியொடு மும்பர்வா னவர்புகுந்து
வேதத்தி னிசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

பூதப்படைகளை உடையவரே! கொன்றை மலர் மாலை அணிந்தவரே! கடல் ஒலியோடு உம்பரும் வானவரும் வந்து வேதகீதம் பாடி மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடும் திருவடிகளை உடையவரே! நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

பூதகணங்களை உடையீர், கொன்றைப்பூ மாலையை அணிந்தீர். கடல் முழக்கத்தொடும் உம்பரும் வானவரும் உட்புகுந்து வேதமுழக்கஞ்செய்து மணமலர்களைத் தூவி வழிபடும் திருவடியை உடையீர். வேணுபுரத்தைத் திருப்பதியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றீர், பூதகணம், கொன்றைப் பூமாலை சிவபிரானுக்குள்ளவை. வேணுபுரம் கடலிடத்ததாகலின் ஓதத்தின் ஒலியோடும் வேதத்தின் இசைபாடி எனப்பட்டது. `உம்பர், வானவர்` உம்பரும் வானவரும். உம்மைத் தொகை. `உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனைத்தந்தருளி, (தி .7 பதி .25 பா .2.) `ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே` (தி .6 பதி .1 பா .10.) `அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்றிலோம்` (தி .5(தி .5 ப .39 பா .3) `மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம்` (தி .3 ப .118 பா .4) `தாரன்மாலையன் தண்ணறுங்கண்ணியன்` (தி .5 பதி .12 பா .7) என்பதால் இருபாலும் ஒவ்வொரு பூவைத்துத் தொடுக்கும் தார், ஒருபால் காம்பும் ஒருபால் மலரும் அமையத்தொடுக்கும் கண்ணிக்கும், பன்மலர் மாலைக்கும் வேறுபட்டது எனல் விளங்கும். ஓதம் - கடல்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீ ருமையாளை யொருபாகம்
அடையாள மதுகொண்டீ ரங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே, அருள் வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர் வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

துன்னம் - துளைத்தல், தைத்தல். கோவணம் தோல் உடையாடை :- `புலியதள் கோவணங்களுடை ஆடையாக உடையான்` (பதி .219 பா .6.) அங்கை - அகங்கை, உள்ளங்கை, அழகிய கையும் ஆம். பரசு எனும் படை - மழு என்னும் ஆயுதம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளவரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறுடையீர் மறையோர்க ணிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச் செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்ததடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

செற்று - அழித்து. அரவம் - பாம்பு. சென்னி - தலை. பங்கயம் - தாமரை.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

நீர்கொண்ட சடைமுடிமே னீண்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழின்மத்த மிலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.

பொழிப்புரை :

கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர் ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல் ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட வேணுபுரத்தைப் பதியாகக்கொண்டு எழுந்தருளியுள்ளீர்.

குறிப்புரை :

நீர் - கங்கைநீர். அபிடேக நீரும் ஆம். மதியம் - பிறை. மத்தம் - ஊமத்தை. மாளிகை - நகரிலுள்ள உயரிய வீடுகளும் தோணியப்பர் மலைக்கோயிலும் ஆம். கார்கொண்ட வேணுபுரம் என்றதனால் மூங்கிலின் உயர்ச்சி விளங்கும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

ஆலைசேர் தண்கழனி யழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்க ளிசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.

பொழிப்புரை :

கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசைபாடி மகிழ்விப்பதும், காலை நேரங்களில் இனிய மொழிகள் பேசுமகளிர் ஆலயம் வந்து கைகூப்பித்தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினதுமாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய் எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர்.

குறிப்புரை :

ஆலை - கரும்பாலை, கரும்பு. நறவு - தேன், தூ - தூய்மை. காலையே ..... கைதொழ :- என்றதால் பண்டு மகளிர் நாள் தோறும் காலையில் தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட்ட உண்மைபுலப்படுகின்றது. பாலையாழ் :- நாற்பெரும் பண்ணுள் ஒன்று, பாலையாழ். `அராகம் நோந்திறம் உறுப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே` என்பது பிங்கலந்தை -1381. நோந்திறத்தின் மறுதலை செந்திறம். `கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம்` தொல். அகத் .55. உரை இளம்பூரணம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

மணிமல்கு மால்வரைமேன் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டி லாட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக வமர்ந்தீரே.

பொழிப்புரை :

மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது உமையம்மையாரோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர் தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில் விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக்குரிய கோயில் எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

`மணிமல்கு ...... இருந்தீர்` தோணிபுரம் எனப்படும் மலைக்கோயிலில் அம்மையப்பராக வீற்றிருந்தீர். அக்கோயில் `நாலைந்து புள்ளினம் ஏந்தின` (தி .4 ப . 82 பா .1) அமைப்புடையது. துணி - துண்டு. ஆட்டு - கூத்து. பரிந்து - அன்புகொண்டு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் றனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனி யழகார்வேணு புரமமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாக்கொண்டீரே.

பொழிப்புரை :

நீல நிறம் சேர்ந்த கண்டத்தை உடையவரே, நீண்டு சிவந்துள்ள சடைகளைக் கொண்டவரே, அழகிய விடையூர்தியை உடையவரே, கொடிய காலனை அழித்தவரே, நீர், தண்ணீர் நிரம்பிய கழனிகளை உடைய அழகிய வேணுபுரத்தில் உள்ள வேலைப்பாடுகளால் விளங்கித் தோன்றும் கோயிலையே நுமக்குரிய கோயில் எனக்கொண்டு அமர்ந்துள்ளீர்.

குறிப்புரை :

நீலஞ்சேர் மிடற்றினீர் - திருநீலகண்டத்தீர். கோலம் - அழகு. ஆலம் - நீர், கலப்பையும் ஆம். கோலம் - வளைவு.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விரைமண்டு முடிநெரிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைமண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.

பொழிப்புரை :

சங்குகள் இரைகளை மிகுதியாக உண்டு கரைகளில் ஏறி இளைப்பாறும், கடலால் சூழப்பட்ட தென்திசையிலுள்ள இலங்கையர் மன்னனாகிய இராவணனின் மணம் மிக்க முடிகள் பத்தும் நெரியுமாறு கயிலைமலையின் கீழ் அகப்படுத்திக் கால் விரலை ஊன்றி அடர்த்தவரே, நீர் ஓதம் பெருகி கரையை அலைக்கும் கடலை அடுத்துள்ள அழகிய மணம்மிக்க வேணுபுரத்தையே நுமக்குரிய பதியாகக்கொண்டு அமர்ந்து பெருமையால் சிறந்து விளங்குகின்றீர்.

குறிப்புரை :

மண்டி - மேற்சென்று, நெருங்கியும் ஆம். விரை - நறுமணம். கவின் - அழகு. ஓதம் - நீர். எற்றும் - மோதும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையான் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.

பொழிப்புரை :

முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன், திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப்பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.

குறிப்புரை :

தீயோம்பு...... முகன்:- பிராமணர்க்கு முதல்வன் பிரமன் என்னும் உண்மை உணர்த்தப்பட்டது. மால் - திருமால், ஓங்குதல் - பிரமன் செயல். இழிதல் - மால்வினை. போற்ற அரிய திருவடி எனத் திருவடிச்சிறப்பு உணர்த்தப்பட்டது. பாய் ..... வேணுபுரம் :- பண்டு சீகாழியில் மரக்கலங்கள் (கடற்றுறையுள்) இருந்தமை தெளிவாகும். சேய் ..... புரம் :- விண்ணில் ஓங்கிய உயர்ச்சியைக் குறிப்பது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானா ரறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணீநீ சரணென்றார் தமையென்றும்
விலையாக வாட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.

பொழிப்புரை :

பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட்படுத்தாது உம் பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று அடைந்தவர்களை எப்பொழுதும் நும்மைத் தந்து அவர்களைக் கொள்ளும் விலையீட்டில் ஆட்கொள்ள வேணுபுரத்தைத் நுமக்குரிய தலமாக விரும்பியுள்ளீர்.

குறிப்புரை :

நிலையார்ந்த உண்டியினர் - நின்று உண்பவர். அடுத்த பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும் ஈற்றில் அருளிய திறத்தை நோக்கினால் உன்பொன்னடியே நிலையாகப்பேணி நீ (யே) சரண் என்றாரை, என்றும் விலையாக ஆட்கொள்ளும் திறம் வாய்மையாதல் விளங்கும். * * * * * * * 11 11. * * * * *
சிற்பி