திருத்தேவூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்தி
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்
அண்ணல் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

இனிய மொழியினளாகிய உமையம்மை பங்கனும், எம்தலைவனும், விண்ணுலகில் வாழும் வானவர் தலைவனும், குற்றமற்றவனும், விடையூர்தியும், ஆகிய, தெளிந்த நிலவொளியைத் தரும் மதிதவழும் மாளிகைகளைக் கொண்ட தேவூரில் விளங்கும் அண்ணலின் சேவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் இலராயினோம்.

குறிப்புரை :

`பண்ணிலாவிய மொழியுமைபங்கன்` என்றதில், இத்தலத்தின் தேவிக்கு வழங்கிய திருப்பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இதைப் பின்னோர் `மதுரபாடணியம்மை` என்று மாற்றினர். விண்ணில் வானவர் என்பது தேவகணம் எல்லாவற்றையும் குறித்தது. கோன் - சிவபெருமான். விமலன் - மலரகிதன். விடையூர்தி - எருதூர்பவன். தெள்நிலா - தெளிந்த நிலவுடைய. மதி - பூரணசந்திரன், பிறையுமாம். அண்ணல் - பெரியோன், சிவன். அடைந்தது காரணம். அல்லல் இன்மை காரியம். அல்லல் - பிறவித்துன்பம். பிறப்பில் எய்தும் துன்பம் எனலும் பொருந்தும். ஒன்று இலம் - ஒன்றும் இல்லேம். சிறிதும் இல்லேம் எனலுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு
சோதி வானவன் றுதிசெய மகிழ்ந்தவன் றூநீர்த்
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்
ஆதி சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

நிலவுலகில் வாழ்வோர் ஓதிஉய்ய, உதயகிரியில் ஏறிவரும் கதிரவனால் வழிபடப்பட்ட வானவர் தலைவனாய் விளங்குவோனும், தன்னைத் துதிப்பாரைக் கண்டு மகிழ்ந்து உடனே அருள் புரிபவனும், ஆகிய குற்றமற்ற தாமரை மலர்கள் மகளிர்முகம் போல மலரும் சிறப்பினதாகிய தேவூரில் விளங்கும் முழுமுதற் கடவுளின் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.

குறிப்புரை :

மண்தலத்தோர் ஓதி முழுது உய்ய - மண்ணிடத்து வாழும் மக்கள் திருப்புகழ்களை ஓதிப்பூரணமான உய்வைப்பெற. வெற்பு ஏறு சோதிவானவன் - உதயகிரியில் ஏறி ஒளிர்கின்ற சூரிய தேவன். துதிசெய - வழிபட. மகிழ்ந்தவன் - உவந்து அருள்புரிந்த சிவபிரான், தேவூரில், நீரில், குற்றம் இல்லாத தாமரைப்பூக்கள் மகளிருடைய முகம் போலப்பூக்கும் என்பது நீர் நிலவளம் உணர்த்திற்று. தேவூர் ஆதி - தேவூரில் கோயில் கொண்டெழுந்தருளிய முதல்வன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்
செறுவில் வாளைகள் சேலவை பொருவயற் றேவூர்
அறவன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

வேதவிதிப்படி மிக்க வழிபாடுகளை இயற்றிய மார்க்கண்டேயரின் உயிரைக் கவர்தற்குச் சினந்து வந்த காலனைக் காய்ந்த கடவுளும், சேற்றில் வாழும் வாளைமீன்களும் சேல்களும் சண்டையிடுகின்ற வயல்களை உடைய தேவூரில் விளங்கும் அறவனும் ஆகிய சிவபிரான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் நாம் அல்லல்கள் சிறிதும் இலராயினோம்.

குறிப்புரை :

மாணி - பிரமசாரி. மார்க்கண்டேயர். கறுவு - கோபம், எம்கடவுள், செறுவில் - சேற்றில். பொரு - போர்செய்கின்ற. அறவன் - தருமரூபி. சிவபிரான், `அறவாழியந்தணன்` (குறள்).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

முத்தன் சில்பலிக் கூர்தொறு முறைமுறை திரியும்
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் றன்னடி யார்கள்
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழிற் றேவூர்
அத்தன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

பாசங்களின் இயல்பாகவே விடுபட்டவனும், சிலவாக இடும் உணவுக்கு ஊர்கள் தோறும் முறையாகப் பலியேற்கும் பித்தனும், சிவந்தசடையைக் கொண்டுள்ள பிஞ்ஞகனும், தன் அடியவர்களின் சித்தத்தில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய மாளிகைகளையும், மதிதவழும் பொழில்களையும் உடைய தேவூர்ப்பெருமான் திருவடிகளை நாம் அடைந்துள்ளோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

முத்தன் - அநாதிமுத்தன், இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன். எண்குணத்துள் ஒன்று. சடைப்பிஞ்ஞகன் - மயிர் முடியினன். தன் அடியார்கள் சித்தன் - தன் அடியை வழிபடுவோரது சித்தத்தில் இருப்பன். சித்தன் - அறிவுக்கறிவாயிருப்பவன் என்றலும் அமையும். `மதிதவழ்பொழில்` சோலையின் உயர்ச்சியைக் குறித்தது.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொரு ளானவன் செறிபொழிற் றேவூர்
ஆடு வானடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

இசைபாடுபவர்க்கும், பல்பொருள் பயனாக அவன் இருத்தலை அறிந்துணர்ந்து அன்போடு கூடுவார்க்கும், உலகில் துணையாகக் கொண்டுள்ளவர்கள் மேல் செலுத்தும் பற்றுக்களை விட்டு அவனையே பற்றித் தேடுவார்க்கும் பொருளாயிருப்பவனும், செறிந்த பொழில்களை உடைய தேவூரில் நடனம் புரிபவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

பாடுவாரும் கூடுவாரும் தேடுவாருமான அடியார்கட்குப் பேறாயுள்ள பொருளானவன் தேவூர்த் திருக்கூத்தன் என்றவாறு. இசைபாடுவார் சிவபிரானைத் துணையாக்கொண்டவர்கள், தங்கள் பற்றுக்கள் எல்லாம் அற்றொழிய அச்சிவபிரானையே பற்றாகப் பற்றித் தேடுவார்கள். அவர்களுக்கு அவனன்றி வேறு பொருள் இல்லையாதலின், `தேடுவார் பொருளானவன்` என்றார். துணையாகக் கொண்ட தமது பற்று அற எனலுமாம், முன் துணையெனப்பற்றப் பட்டது பின் பொய்யாய்த்தோன்ற, மெய்த்துணை உயிர்த்துணையாகிய சிவபிரானே எனல் விளங்கும். விளங்கின் அதையே பற்றுதலும் தேடுதலும் நிகழும். `ஆடுவான்` என்றது எல்லாத் தலங்களிலும் ஒரு ஞானக்கூத்தனே எழுந்தருளியிருக்கும் உண்மை பற்றியது, இச் சிந்தாந்தவுண்மையுணராமல் உரைப்பவை பொருந்தா. (பதி .152 பா .1.)

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்
திங்கள் சூடிய தீநிறக் கடவுடென் றேவூர்
அங்க ணன்றனை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

கிளர்ந்து எழுந்த அணிகலன் பூண்டுள்ள தனங்களையும், நெறிந்த கூந்தலையும், வரிவளையல்களையும் கொண்டுள்ள மலைமங்கை பங்கினனும், கங்கையை வளர்ந்த சடைமீது வைத்தவனும், திங்கள் சூடியவனும், தீப்போன்ற செந்நிறமுடைய கடவுளும் ஆகிய, அழகிய தேவூரில் எழுந்தருளிய அழகிய கருணையாளனை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

பூண் - ஆபரணம். குழல் - கூந்தல். பொருப்பின் மங்கை - இமாசலகுமாரி. தீநிறக்கடவுள் - அழல்வண்ணனாகிய சிவபிரான். அங்கணன் - கருணாகடாக்ஷன். `கண்ணுக்கு அழகு கருணை`

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் றக்க
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

வலியதோள்களை உடைய அவுணர்தம்புரங்கள் எரியுமாறு தன்தோள்களால் பெரிய மேருமலையை வில்லாகப் பொருந்த வளைத்தவனும், தென்தமிழ்க் கலைகளை நன்குணர்ந்தவர் வாழும் தேவூரில் விளங்கும் அன்பனுமாகிய சிவபிரானின் சேவடிகளை அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

வல்புயத்த அத் தானவர் - வலிய புஜங்களையுடைய அந்த அசுரர். அ - பண்டறிசுட்டும் உலகறி சுட்டுமாம். புயத்து அவம் எனப்பிரித்துரைத்தலும் அமையும். வரை - மேருமலை. தேவூரில் தமிழ்ப்புலவர் இருந்த உண்மை உணர்த்தப்பட்டது. அன்பன் - `அன்பேசிவம்`.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுக னெரிந்து
வெருவ வூன்றிய திருவிர னெகிழ்த்துவாள் பணித்தான்
தெருவு தோறுநற் றென்றல்வந் துலவிய தேவூர்
அரவு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

சிறப்புடைய மரங்கள் உயர்ந்து வளர்ந்த கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த பத்துத் தலைகளை உடைய இராவணன் நெரிந்து வெருவுமாறு ஊன்றிய கால்விரலை, அவன் பாடல் கேட்டு நெகிழச்செய்து அவனுக்கு வாள் முதலியவற்றை வழங்கியவனும், தெருக்கள் தோறும் நல்ல தென்றல் வந்துலவும் தேவூரில் பாம்பணிந்தவனாய் விளங்குவோனுமாகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

தசமுகன் - இராவணன், தேவூர்த்தெருக்களின் நலம் கூறப்பட்டது. சூடி - அணிந்த சிவன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

முந்திக் கண்ணனு நான்முக னும்மவர் காணா
எந்தை திண்டிற லிருங்களி றுரித்தவெம் பெருமான்
செந்தி னத்திசை யறுபத முரறிருத் தேவூர்
அந்தி வண்ணனை யடைந்தன மல்லலொன் றிலமே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்கள் அடிமுடிகாண்போம் என முற்பட்டுத் தேடிக் காணாது தொழுத எந்தையும், திண்ணிய வலிமை பொருந்திய பெரிய யானையை உரித்த எம்பெருமானும், செந்து என்னும் இசைவகையை இசைத்து வண்டுகள் முரலும் தேவூரில் விளங்கும் அந்திவண்ணனும் ஆகிய சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் இலரானோம்.

குறிப்புரை :

களிற்றிற்குத் திண்மையும் திறலும் இருமையும் அடைகளாயின. செந்து - பெரும்பண்களுள் ஒன்று. `செந்து மண்டலி` பிங்கலந்தை. செந்து இனத்து இசை - செந்து என்னும் பண்வகையைச் சார்ந்த இசையை. `செந்திலங்கு மொழியவர்` (தி .2 ப .3 பா .10) `செந்து நேர்மொழி யார்` (தி .2 ப .51 பா .11) `செந்திசை பாடல்` (தி .1. ப .114 பா .11) அறுபதம் - வண்டு, முரல் - ஒலிக்கும், `திருத் தேவூர்` என்று ஆசிரியரே சிவதலங்களை வழங்குமாறு உபதேசித்தருளியவாறுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுடென் றேவூர்
ஆறு சூடியை யடைந்தன மல்லலொன் றிலமே

பொழிப்புரை :

ஓடித் திரியும் புத்தர்களும், தவத்தை மேற்கொண்ட சமணரும் பலநாள்களாகக் கூறிவரும் இலக்குப் பிழையானது எனத் தெளிவுற்று, எங்கும் மிகுந்து தோன்றும் நம் செஞ்சடைக் கடவுள் எழுந்தருளிய தேவூரை அடைந்து கங்கையை அணிந்துள்ள சிவபிரானைச் சரணாக அடைந்தோம். ஆதலால் அல்லல்கள் சிறிதும் இலரானோம்.

குறிப்புரை :

பாறுபுத்தர் - ஓடுகின்ற புத்தர்கள். பாறல் - ஓடுதல். தவம் அணி - தவக்கோலம் அணிந்த. குறி :- `குண்டர் சாக்கியர் கூறிய தாம் குறியின்மையே சொலீர்` (பதி .137 பா .10). தேறி - தெளிந்து.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 11

அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்
எல்லை யில்புகழ் மல்கிய வெழில்வளர் தேவூர்த்
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும்வல் லாரே.

பொழிப்புரை :

காழிவாழ் மக்களுக்குத்தலைவனும், நல்ல செந்தமிழ் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் எல்லையற்ற புகழ் பொருந்திய அழகிய தேவூரில் விளங்கும் பழமையான இறைவனைப் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் துன்பங்கள் இன்றி விண்ணுலகை ஆள்வர்.

குறிப்புரை :

அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் வல்லார் என்க. முற்பாக்களில் `யாம் அல்லல் ஒன்று இலம்` என்றருளி, இதில், இப்பத்தும் வல்லார் அல்லல் இலராவர் என்ற உண்மை உணர்த்தப்பட்டது. இத்திருப்பதிகத்தை நாடோறும் நியமமாகப் பாராயணம் செய்பவர் அல்லல் அடையார் என்பது திண்ணம். அதிபன் - தலைவன்.
சிற்பி