திருக்கொச்சைவயம்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

நீலநன் மாமிடற்ற னிறைவன் சினத்தன் நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ண மொருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே. 

பொழிப்புரை :

நீல நிறம் பொருந்திய கண்டத்தினனும், வலிமை நிறைந்த சினம் மிக்க பெரிய யானையை உரித்தவனும், சேல்மீன் போன்ற கண்ணினளாகிய ஒப்பற்ற உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்ட வடிவினனும் ஆகிய சிவபிரான் மேவிய பதி, வேல்போன்ற கண்களைக் கொண்ட அழகிய பெண்கள் விளையாடும் ஒலியும், விழாக்களின் ஆரவாரமும், வேத ஒலியும், கடல் ஓசையும் நிறைந்த, கொடி ஆடும் மாட வீதிகளைக் கொண்டுள்ள கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

நீலநன்மாமிடற்றன் - திருநீலகண்டத்தர். சினத்த - கோபத்தை உடைய. மா - யானை. சேல் அன்ன கண்ணி - சேல் மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியார். கூறு - பாகம். உருகொள் திகழ்தேவன் என்க.
கண்ணுக்கு வேல் ஒப்பு. மகளிர் விளையாட்டோசையும், விழாவினோசையும், வேத முழக்கமும், கடலோசையும் உடைய வீதிகள், பதிதான் கொச்சைவயம் என்க. முதல் 9 பாக்கட்கும் இவ்வாறே கொள்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

விடையுடை யப்பனொப்பி னடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதி பதிதான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

விடையை ஊர்தியாகக் கொண்ட தந்தையும், ஒப் பற்ற நடனங்கள் புரிபவனும், பல்வேறு வடிவங்களைக் கொண்ட விமலனும், சடையில் வெள் எருக்கமலர் கங்கை திங்கள் ஆகிய வற்றைப் பொருந்தச் சூடிய ஒளிவடிவினனும் ஆகிய சிவபிரானது பதி, மடைகளில் அன்னப்பறவைகள் நிறைந்து பரவித் தாமரைமலர்கள் மேல் தங்கும் வயல்கள் சூழ்ந்ததும், கொடை வள்ளல்களாய் மறையவர்கள் வாழ்வதுமாகிய கொச்சை வயமாகும்.

குறிப்புரை :

ஒப்பு இல் நடம் - உவமை இல்லாத ஞானத்திருக்கூத்து. விகிர்தம் - மாறுபாடு (பா.10) சடையிடை, வெள்ளெருக்க மலர்:- `வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பு\' (கம்பர், யுத்தகாண், இராவணன் வதைப்,237). தக - தகுமாறு, பொருந்த. சோதிபதி:- ஆறன்றொகை, அன்னம்பரந்து கமலத்து வைகும் வயல். கொடை யுடை வண்கையாளர்:- `கொடையில் ஓவார் குலமும் உயர்ந்தம் மறை யோர்கள்\' (தி.2. ப.122 பா.1) `உரவார் கலையின் கவிதைப் புலவர்க்கு ஒரு நாளும் கரவாவண்கைக் கற்றவர் சேரும் கலிக்காழி, (தி.1 ப. 102 பா. 1).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்தலைக்கை பலிகொள்ளும்இன்பன் இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடு நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே.

பொழிப்புரை :

படம் பொருந்திய பாம்பு ஆடும் முன்கையை உடையவனும், துன்பங்களைப் போக்கும் எம் தலைவனும், அகன்ற வெள்ளிய தலையோட்டைக் கையில் ஏந்திப் பலிகொள்ளும் இன்பனும் ஆகிய சிவபிரானுக்கு இடமாக விளங்கும் அழகிய தலம். மயில்கள் நடனமாட வண்டுகள் மது உண்டு பாடும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்ததும், பொற்கலசம் பொருந்திய கூடங்களில் நாகணவாய்ப் பறவைகள் வேதங்கள் ஓதுவதுமாகிய கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மஞ்சை - மயில், மயில் ஆட வண்டு பாடும். நளிர் - குளிர்ச்சி. கூடத்தின் மிசைக் குடம் இடுதல் முன்பே இருந்தது. பூவை - நாகணவாய்ப் புள், கூடம் ஏறி மறை ஓதும் கொச்சைவயம் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

எண்டிசை பாலரெங்கு மிகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வருநீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

எண்டிசைப் பாலகர்களாகிய இந்திரன் முதலா னோர் எங்கும் சூழ்ந்து புகுந்து மன எழுச்சியோடு விளக்குகளை வரி சையாக ஏற்றித்தூபம் இட்டு வழிபடும் திருவடிகளை உடைய சிவ பிரானது பதி, செறிந்த வண்டல் மணலோடு வரும் பொன்னி நதியின் நீர் வயல்களில் பாய வாளை மீன்கள் கூடி ஆழமான இடங்களில் பாய்ந்து விளையாடும் ஓசை, படைகள்வரும் ஓசைபோல வளர்கின்ற கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

பாலர் - பாலகர். இகலி - பகைத்து. வழிபடு முறையுட் சிறிது உணர்த்திற்று. ஒளி தீபமாலை - தீபாவளி. பாதர் - திருவடி யுடையவர். குண்டு - ஆழம்

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன வல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் னிடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர் தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடு முயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.

பொழிப்புரை :

பனிபடர்ந்த மலைக்கு மன்னாகிய இமவானின் மருகனும், குபேரனோடு தோழமை கொண்ட பகவனும், இனியன அல்லாதவற்றையும் இனிதாக ஏற்று அருள் நல்குபவனுமாகிய இறைவன் இடமாகக்கொண்டருளும் தலம், முனிவர் குழாங்களோடு அந்தணர்கள் வளர்க்கும் வேள்விப்புகை சென்று பரவி வளைந்த பிறையையும் வானையும் மறைத்து நிறையும் கொச்சை வயமாகும்.

குறிப்புரை :

பனி ... ... மலைக்கு - இமாசலராசனுக்கு. குபேரன் சிவ பிரானுக்குத் தோழனாதல் பிரசித்தம். இனிக்காதவற்றையும் இனிய வாகச் செய்தருளும் பெருமான். பிறப்பு இன்னாதது என்பது சர்வமத சம்மதம். அதனை இனியதாகப் பலவுயிரும் விரும்புகின்றன. அவ் விருப்பம் மீண்டும் பிறப்பதற்கு உரிய வினையாகின்றது. இது திரு வருட்செயல். அணவி - கிட்டி. `வேள்விப் புகையால் வானம் இருள் கூர் வெண்காடே\' (பதி. 197. பா.7.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

புலியதள் கோவணங்க ளுடையாடை யாக வுடையா னினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்க ளெரிசெய்த நாத னலமா விருந்த நகர்தான்
கலிகெட வந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்க ளுயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே.

பொழிப்புரை :

புலித்தோலையும் கோவணத்தையும், தான் பெற்றுடைய ஆடையாகக் கொண்டவனும், நினைக்கும் ஒருநொடிப் பொழுதில் உலகை நலிவு செய்து வந்த முப்புரங்களை எரிசெய்தழித்த நாதனும் ஆகிய சிவபிரான் மகிழ்வோடு விளங்கும் தலம், கலிகெட வேள்வி செய்யும் அந்தணர்களும் கலையுள்ளம் கொண்டவர்களும் நிறைந்து வாழ்வதும் அழகிய மண்டபங்களும் உயர்ந்த மாடங்களும் நீண்ட மலைகள் போலத் தோன்றுவதுமாய கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

அதள் - தோல். உடையாடை. (பதி. 217.பா. 2.) கலி - வறுமை. அந்தணாளர் - அழகும் தண்மையும் ஆள்பவர். கலை - வேத முதலிய கலைகள்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

*பாடல் கிடைக்கவில்லை *

பொழிப்புரை :

குறிப்புரை :


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் முடியோடு தோள்க ணெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் னடிவைத்த பேயொ டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குன்மாத ரிசைபாடி யாட விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார் கடங்க ளடிதேடு கொச்சை வயமே.

பொழிப்புரை :

மழைமுகில் போன்ற கரிய மேனியையும் வலிய வாளையும் உடைய அரக்கனாகிய இராவணன் தன் தலைகளோடு தோள்களும் நெரியவும், அவனது பிழை நீங்கவும் சிறந்த மலர்போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றியவனும்,பேய்களோடு உடனாடி மகிழ் பவனும் ஆய சிவபிரான் எழுந்தருளியபதி, மேகலையணிந்த அல் குலை உடைய மகளிர் இசைபாடி ஆட, வானளாவ உயர்ந்த கமுக மரத் தழைகள் விண்ணில் செல்வார் அடிகளை வருடுமாறு உயர்ந்துள்ள கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மழை முகில் - மழையைப் பொழியும் மேகம். அரக்கன்-இராவணன். இராவண்ணன் என்றவாறு. பிழை - மதியாது மலை யெடுத்த குற்றம். இழை - மேகலை முதலியன. கண்ணி - வலை, புட்களைப் படுக்கும் முடிப்புக்கயிறுமாம். கமுகின் குழை (-தளிர்) தருக ண்ணி, விண்ணில் வருவோர் காலைச்சிக்கச் செய்யும் என்றதால், அதன் உயர்ச்சிகூறிற்று.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வைய முழுதுண்ட மாலு மிகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்து மறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேர போது மதுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயன்மேவு கொச்சை வயமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் தாமரை மலர்மேல் எழுந் தருளிய பிரமனும், உலகம் முழுவதையும் உண்ட திருமாலும் தம்முள் மாறுபட்டு அடி முடிகளைக் காண்போம் என்று திருமால் பன்றியாய் நிலத்தைக் கிளறியும் பிரமன் அன்னமாய்ப் பறந்து சென்றும் அறிய முடியாதவாறு சோதிவடிவாய் நின்ற சிவபிரானது பதி, நண்டு உண்ண வும் நாரைகள் செந்நெல் நடுவே இருந்து இரைதேட, நிரம்பிய தேனுடன் தாமரை மலரோடு குவளை மலர்கள் வயலிடையே மலரும் கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

வளர்வான் - பிரமன். மால் கிளறி, வளர்வான் பறந்தும், நண்டு உண்ண, நாரை இரையைத் தேர (-ஆராய). புண்டரிகம் - தாமரை. குமுதம் - ஆம்பல்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்ட ரிடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக்கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே.

பொழிப்புரை :

கையில் உணவை ஏற்று உண்டு உடலினின்று உதிரும் அழுக்கினரும், குண்டர்களும், சீவர உடையினராகிய ஆகிய சமணரும், புத்தரும் மெய்யுரையாதவாறு செய்து விளை யாடவல்ல வேறுபட்ட பல்வகை உருக்கொண்டருளும் பரமனாகிய சிவபிரானது பதி, படப் பாம்பின் எயிறு போன்று குரவம் மலர, வயல்களில் நீல மலர்கள் அலர, இவற்றால் மணம் சிறந்து விளங்கும் கொச்சைவயமாகும்.

குறிப்புரை :

மாசர் - அழுக்கர். புறப்புறச்சமயத்தார்க்குச் சமயா தீதனான பரசிவத்தின் மெய் புலப்படாமை கூறிற்று. எயிறு - பல். பயின்று - மிகுதியாய். செய் - கழனி. (மொட்டு - அரும்பு). கமழ்ந்து - பரந்து. வியலிடம் கமழ் (புறநா.50.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

இறைவனை ஒப்பிலாத வொளிமேனி யானை யுலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேவி வளர்கோயின் மன்னி யினிதா விருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர் போய்
அறைகழ லீசனாளு நகர்மேவி யென்றும் அழகா விருப்ப தறிவே

பொழிப்புரை :

எங்கும் நிறைந்தவனை, ஒப்பில்லாத ஒளி மயமான திருமேனியனை, ஏழுலகங்களையும் மறைக்குமாறு ஊழி வெள்ளம் பரவியகாலத்தும் அழியாது மிதந்து வளர்ந்த திருத்தோணி மலைக் கோயிலில் மன்னி இனிதாக இருந்த மாணிக்கத்தைக் குறை வற்ற ஞானம்பெற்ற இனிய ஞானசம்பந்தன் பாடிப்பரவிய தமிழ் மாலைப் பத்தையும் பாடிப் போற்றுபவர் ஒலிக்கின்ற கழல் அணிந்த ஈசன் ஆட்சி செய்யும் சிவலோகத்தை அடைந்து இனிதாக ஞான வடிவினராய் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

ஒப்பு இலாத ஒளி மேனியான் - உவமையில்லாத பிரகாசத்தையுடைய திருமேனியை உடையவன். `அங்கு இங்கு என்னாதபடி எங்கும் பிரகாசமாய்\' (தாயுமானவர். 1.) விளங்குவது வேறொன்றில்லாமையால் ஒப்பின்மை தெளிவாம். மறைக்கும் வெள்ளம் ஊழிப்பிரளயம்.
சிற்பி