பொது


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

மூங்கில்போன்ற தோளினை உடைய உமை யம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையைமீட்டிக்கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு , திங்கள் முதலான ஒன்பான் கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம் . அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

வேய்உறுதோளிபங்கன் - மூங்கிலின் இரு கணுக் களுக்கும் இடைப்பட்ட பகுதியைப்போலும் தோள்களையுடைய உமா தேவியாரை இடப்பால் உடையவர் . ஞாயிறு ... பாம்பு இரண்டும் - சூரியன் முதலிய ஒன்பதுகோள் ( கிரகங் ) களும் . ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன . அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன . பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

என்பு , பன்றிக்கொம்பு , ஆமையோடு ஆகியன மார்பின்கண் இலங்கப் பொன்போன்ற மகரந்தம் பொருந்திய ஊமத்தைமலர்மாலை , கங்கை ஆகியனவற்றை முடிமேல் சூடி உமை யம்மையாரோடு எருதேறி வந்து என் உளம் புகுந்து எழுந்தருளியிருத் தலால் , அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது , பத்து , பதினாறு , பதினெட்டு , ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவன வும் பிறவுமான நட்சத்திரங்கள் அன்போடு மிக நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

கொம்பு - பன்றிக்கொம்பு . ஆமை - முற்றலாமை யோடு . ஏழை - உமாதேவியார் . ` ஏழை பங்காளனையே பாடேலோ ரெம்பாவாய் ` ஒன்பது :- அசுவினி முதலாகக்கொண்டு எண்ணின் ஒன்பதாவது நட்சத்திரம் ஆயிலியம் . ஒன்பதோடொன்று :- பத்து - மகம் . ஒன்பதொடேழு :- பதினாறு - விசாகம் . பதினெட்டு . கேட்டை . ஆறு :- திருவாதிரை , உடனாய நாள்கள் மற்றயவை . அவை :- பரணி , கார்த்திகை . பூரம் , சித்திரை , சுவாதி , பூராடம் , பூரட்டாதி , நாள்கள் என்றதால் , ஆகாத திதிகளும் கிழமைகளும் அடங்கின . இவ் வுண்மையை , ` ஆதிரை பரணி ஆரல் ஆயில்யமுப் பூரம் கேட்டை தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம்ஈ ராறும் மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப் பட்டார் மீளார் பாய்தனில் படுத்தார் தேறார் பாம்பின்வாய்த் தேரைதானே .` என்னுஞ் சோதிடநூற் பாட்டாலுணர்க . கயப்பாக்கம் சதாசிவச் செட்டி யார் அவர்கள் எழுதிய அகத்தியர் தேவாரத் திரட்டின் உரை யில் உள்ள தும் , தமிழ்ப்பொழில் - துணர் 7.8. 9 இல் பண்டித அ . கந்தசாமிப் பிள்ளை அவர்களும் எம் . எஸ் . பூரணலிங்கம்பிள்ளை அவர்களும் எழுதிய கட்டுரைகளால் ஐயந்தீர்த்து முடிவு செய்யப்பட்டதுமான உரையே இதில் குறிக்கப்பட்டதாகும் , ஆயினும் சிவபெருமானுக்குரிய திருவாதிரையை முதலாக்கொண்டு , அதற்கு ஒன்பது சித்திரை . அத னொடு ஒன்று சுவாதி . அதிலிருந்து முன் ஏழு ஆயில்யம் . அதற்குப் பதினெட்டு பூரட்டாதி . அதற்குமுன் ஆறு பூராடம் என்றும் , உடனாய நாள்கள் : பரணி , கார்த்திகை , மகம் , பூரம் , விசாகம் , கேட்டை என்றும் உரைப்பாருமுளர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொழிப்புரை :

அழகிய பவளம் போன்ற திருமேனியில் ஒளி பொருந்திய திருவெண்ணீற்றை அணிந்து மணம் பொருந்திய கொன்றை , திங்கள் ஆகியவற்றை முடிமேல் அணிந்து சிவபிரான் உமையம்மையாரோடு வெள்ளை விடைமீது ஏறிவந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் திருமகள் , துர்க்கை , செயமகள் , நிலமகள் , திசைத் தெய்வங்கள் ஆன பலரும் அரிய செல்வங்களையே நல்லன வாகத் தரும் . அடியாரவர்கட்கும் மிகவும் நல்லனவாகவே தரும் .

குறிப்புரை :

உருவளர் பவளமேனி - அழகுவளரும் பவளம் போன்ற செம்மேனியில் . கலையதூர்தி - துர்க்கை . நெதி - திரவியம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பிறைபோன்ற நுதலை உடைய உமையம்மையா ரோடு ஆலின்கீழ் இருந்து வேதங்களை அருளிய எங்கள் பரமன் கங்கை , கொன்றைமாலை ஆகியனவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , சினம் மிக்க காலன் , அக்கினி , யமன் , யமதூதர் , கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடை யனவாய் நல்லனவே செய்யும் . அடியவர்களுக்கும் மிகவும் நல்ல னவே செய்யும் .

குறிப்புரை :

வடபால் - ஆலின்கீழ் . வடம் - ஆலமரம் . ` கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந்து ஈடா உறைகின்ற இடைமருது ` ( தி .1 ப .32 பா .1.) வடபக்கம் என்பாருமுளர் . கொதி - கோபம் , உக்கிரம் . காலன் - ` காளமேகந் நிறக்காலனோடு அந்தகன் ` ( தி .2. ப . 119. பா .6.) அங்கி - அக்கினி . நமனொடு தூதர் - இயமனும் இயமதூதரும் , ` மண்ணிடைக் குரம்பைதன்னை மதித்து நீர் மையல் எய்தில் விண்ணிடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் ? ( தி .4. பதி .31. பா .2.) ` தருமராசற்காய் வந்த கூற்றினைக்குமைப்பர் ` ( தி .4. பதி .49. பா . 2.) என்பவற்றால் , நமன் ( தருமராசன் ) வேறு நமனுடைய தூதராகிய கூற்றுவர் வேறு என்றும் ` சூலத்தால் அந்தகனைச் சுருளக்கோத்துத் தொல்லுலகில் பல்லுயிரைக் கொல்லுங் கூற்றைக் காலத்தால் (- காலால் ) உதைசெய்து ` ( தி .6. பதி .83. பா .9.) என்பதில் அந்தகன் வேறு கூற்று வேறு என்றும் உணர்த்தல் அறிக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

நஞ்சணிந்த கண்டனும் , எந்தையும் , உமையம்மை யாரோடு விடையேறி வரும் எம் தலைவனுமாகிய சிவபிரான் , இருள் செறிந்தவன்னிஇலை , கொன்றைமாலை ஆகியவற்றை முடிமேல் அணிந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் கொடிய சின முடைய அவுணர் , இடி , மின்னல் , செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் . அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

துஞ்சிருள்வன்னி :- வன்னிமரத்தின் இலைகள் மிகுந் தும் அடர்ந்தும் தழைத்திருத்தலால் இருள் துஞ்சும் நிலையினது . உளத் திற்கு ஏற்றினும் அமையும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

ஒளியும் வரியும் பொருந்திய புலித்தோலாடையை உடுத்து வரிந்து கட்டிய கோவண ஆடையராய் உள்ள பெருமானார் உமையம்மையாரோடும் உடனாய் அன்றலர்ந்த மலர்கள் , வன்னி , கொன்றை , கங்கை ஆகியவற்றை முடிமிசைச் சூடிவந்து என் உளத்தின் கண் புகுந்துள்ள காரணத்தால் வலிய குரங்கு , புலி , கொலையானை , பன்றி , கொடிய பாம்பு , கரடி , சிங்கம் ஆகியன நமக்கு நல்லனவே செய்யும் ! அடியார் கட்கும் மிக நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

வரி - கீற்றுக்களை உடைய புலியினது . வாள்வரி :- அன் மொழித்தொகை . கோள் - வலிமை . அரி - குரங்கு . கோளு ( வலிமை , கொலையு ) ம் அரி (- பகை ) யும் உடைய உழுவை (- புலி ) எனலுமாம் . ஆளரி - சிங்கம் . ` ஆளரியேறனையான் ` ( பெரிய . திருஞான .474).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

செப்புப் போன்ற இள நகில்களை உடைய உமை நங்கை ஒருபாகத்தே விளங்க விடையேறிவரும் செல்வனாகிய சிவ பிரான் தன்னை அடைந்த இளமதியையும் , கங்கையையும் முடிமேல் அணிந்தவனாய் , என் உள்ளத்தின்கண் புகுந்து எழுந்தருளிய காரணத் தால் , வெம்மை தண்மை வளி மிகுந்த பித்தம் வினைகள் இவற்றால் வரும் துன்பங்கள் நம்மை வந்து நலியா . அடியார்களுக்கும் அவை நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

செப்பு - சிமிழ் . அடைவு ஆர் - அடைதலுற்ற . அப்பு - கங்கை . வெப்பு - வெம்மை . சுரநோய் சிலேத்துமம் . வாதம் - வளி . பித்து - பித்தம் . ` மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று ` ( குறள் .941)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

மன்மதன் அழியுமாறு நெற்றி விழியைத்திறந்து எரித்து விடைமீது உமைமங்கையோடும் உடனாய் இருந்து , முடிமிசை ஒளிபொருந்திய பிறை , வன்னி , கொன்றைமலர் ஆகியனவற்றைச் சூடிச் சிவபெருமான் வந்து என் உளம்புகுந்துள்ள காரணத்தால் ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனாலும் பிற ராலும் வரும் இடர்கள் நம்மை வந்து நலியா ; ஆழ்ந்த கடலும் நமக்கு நல்லனவே செய்யும் . அடியார்களுக்கும் அவை நல்லனவே புரியும் .

குறிப்புரை :

விழிசெய்து - நெற்றிவிழி திறந்து எரித்து . வாள் - ஒளி . அரையன் - அரசன் , இராவணன் . இடர் ஆன - துன்பமானவை . கடல்நல்ல .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பல்வேறு கோலங்கொண்டருளும் தலைவனும் , உமைபாகனும் , எருதேறிவரும் எங்கள் பரமனுமாகிய சிவபிரான் , முடிமீது கங்கை , எருக்கமலர் ஆகியவற்றை அணிந்து வந்து என் உளம் புகுந்துள்ள காரணத்தால் தாமரைமலர்மேல் உறையும் பிரமன் , திரு மால் , வேதங்கள் தேவர்கள் ஆகியோராலும் , கெட்ட காலங்கள் , அலைகடல் , மேரு ஆகியவற்றாலும் வரும் தீமைகள் எவையாயினும் நமக்கு நல்லனவாகவே அமையும் . அடியார்களுக்கும் அவை மிகவும் நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

` வேடம் பலவாகி நின்ற பரமன் ` ( தி .2 ப .87 பா .6.) ஒருவனுமே பலவாகி நின்றதொரு வண்ணமே ` ( தி .3 ப .10 பா .8.) ஒன்றொடொன்று ஒவ்வாவே ` ( தி .3. ப .102 பா .6.) ` ஒன்றோ டொன்றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நின்றனன் ` ( சித்தியார் - 71.) நாரி - உமாதேவியார் . மலர்மிசையோன் - செந்தாமரை மேலிருக்கும் பிரமன் . காலம்ஆன - கெட்டகாலங்களானவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே

பொழிப்புரை :

பூங்கொத்துக்கள் அணிந்த கூந்தலினளாகிய உமையம்மையாரோடு சென்று குணம் காட்டி அருச்சுனனுக்கு அருள்புரிந்த வேடவடிவம் கொண்ட சிவபிரான் முடிமேல் ஊமத்தை மலர் , பிறை , பாம்பு ஆகியவற்றை அணிந்து , என் உளம் புகுந்துள்ள காரணத்தால் , புத்தர்களையும் அமணர்களையும் அவ்வண்ணலின் திருநீறு வாதில் தோற்றோடச் செய்யும் . நமக்கு வரும் அத்தகைய தீமைகள் நல்லனவற்றையே செய்யும் . அடியார்களுக்கும் அவ்வாறே நல்லனவே செய்யும் .

குறிப்புரை :

விசையற்கு - அர்ச்சுனனுக்கு . வேடவிகிர்தன் - வேடனாக மாறியவன் . வாதில் - மதுரையில் நடந்த அனற்போர் புனற் போர்களிலும் போதிமங்கைக்கருகில் புத்தருடன் நடந்த போரிலும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே

பொழிப்புரை :

தேன் பொருந்திய பொழில்களைக் கொண்டதும் , கரும்பு , விளைந்த செந்நெல் ஆகியன நிறைந்துள்ளதும் , வளரும் செம் பொற்குவியல் எங்கும் நிறைந்திருப்பதும் , நான்முகனால் முதன்முதல் படைக்கப்பட்டதுமான பிரமாபுரத்துத் தோன்றி மறைஞானம் பெற்ற ஞான முனிவன் ஆகிய ஞானசம்பந்தன் வினைப்பயனால் தாமே வந்துறும் கோளும் நாளும் பிறவும் அடியவரை வந்து நலியாத வண்ணம் பாடிய சொல்லான் இயன்ற மாலையாகிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர் . இது நமது ஆணை .

குறிப்புரை :

மறைஞான ஞானமுனிவன் - அபரஞானமும் பர ஞானமும் ஆகிய இரண்டையும் உடைய முனிவர் . பெரிய , திருஞான . ` சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் ( ஆகிய ) உணர்வரிய விஞ்ஞானம் பவம் ... ... அறமாற்றும் ... ... ஓங்கிய ஞானம் ( ஆகிய ) உவமையிலாக் கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர் ... ... உணர்ந்தார் `. கோளும் - சூரியன் முதலிய கிரகங்களும் . நாளும் - அசுவினி முதலிய நட்சத்திரங்களும் .
சிற்பி