திருநாரையூர்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

உரையினில் வந்தபாவ முணர்நோய்களும்ம செயறீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த வவைதீரும் வண்ண மிகவேத்தி நித்த நினைமின்
வரைசிலை யாகவன்று மதின்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங் களைச் செற்று, வளரும் கங்குலில் உமையம்மை அஞ்சக் கடல் நஞ் சினை உண்ட சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கையால் தொழுதால் வாக்கு; மனம் காயம் ஆகியவற்றால் விளைந்த பாவங்கள் தீரும். அங்குள்ள பெருமானை அவ்வாறு தீருமாறு மிக ஏத்தி நித்தமும் நினைவீராக.

குறிப்புரை :

உரையினில் வந்த பாவம் - வாக்கால் வந்த தீவினைகள். உணர்நோய்கள் - (மனத்தால்) நினைப்பால் உண்டான தீவினைகள். செயல்தீங்குகுற்றம் - (காயத்தால்) தீச்செயல்களால் வந்த தீவினைகள். தீங்கு செயல் என மாற்றுக. பாவம், நோய்கள், குற்றம் மூன்றற்கும் `உம்ம\\\\\\\' என்னும் ஆறனுருபு ஏற்ற சொல் பொதுவாய் நின்றது. உம்முடைய பாவம் நோய்கள் குற்றம் என்க. செயல் தீங்கு குற்றம் - செயலது தீங்காலாகும் குற்றமென விரித்தலும் ஆகும். வரையினிலாமை - அளவில்லாமை, அளவில் நில்லாமை.(`மை\\\\\\\') எதிர்மறைவினையெச்சமும் பெயரும் ஆம். கைதொழுதால், செய்த அவை தீரும், அவை - உம்முடைய உரையால் வந்த பாவமும் உணர் நோய்களும் தீச்செயலான குற்றமும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கு முயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையா னிலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

உயரிய வானத்தில் விளங்குகின்ற வெள்ளிய மதியைச் சூடிய சென்னியினனும், விதிகளைக் கூறும் வேதங்களை அருளிய விகிர்தனும், இடுகாட்டில் பூதப் படையோடு ஆடுபவனும், இயங்கும் விடையூர்தியினனும், விளங்கும் தலைமீது வண்டு பாடும் தேனடைந்த மலர்களைச் சூடிய சடையினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால் உடலால் செய்யப்பெறும் குற்றம் முதலானவும், அவ்வுடலைப்பற்றிய பிணி நோய்களும் கெடும்.

குறிப்புரை :

ஊன் - உடம்பு, ஆகுபெயர். ஒருங்கும் - கெடும். உயரும்வான், வான் அடைகின்ற மதி. வெள்ளைமதி என்க. ஆடி:- பெயர். இயங்குவிடையான் - சஞ்சரிக்கும் இடபவாகனன்

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் றுயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும்
தேரிடை நின்றவெந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

திரிபுரத்தசுரரோடு போர் செய்து மும்மதில்களைக் கணையால் எய்த காலத்தில் புகழ்பெற்ற தேவர்கள் கூடியமைத்த தேரில் நின்ற எந்தை பெருமான் எழுந்தருளிய திருநாரையூரைக் கைகளால் தொழுதால், ஊரின் கண் நின்று வாழ்ந்த உயிர் கவரும் காலனால் வரும் தீங்கும், உலகவர் கூடி மெள்ளப் பழித்துரைக்கும் வார்த்தைகளும் ஒழிவுறும்.

குறிப்புரை :

இத்திருப்பாட்டின் முற்பகுதியில் காலன் தீங்கு விரவிப் பாரிடைவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வரலாறு கூறப்பட்டது. அது திருநாரையூர்ப் புராணத்தில் காணப்படவில்லை. ஞான்று:- நாளன்று என்பதன் மரூஉ. இது கல்வெட்டுக்களில் பயின்றுள்ளது. `நாளன்று போகி\\\\\\\' (புறம் 124) என்புழிப்படும் பொருள் ஈண்டுக் கொள்ளலாகாது. நாளாகிய அன்று, அந்நாள், பொழுது என்னும் பொருளில் ஆளப்படுகின்றது.
`திருமுடியூர் ஆற்றுத் தளிப்பெருமானடிகளுடைய...... திருக் கற்றளியாக அமைப்பித்து, இவ்வாட்டை மகர ஞாயிற்றுச் சனிக் கிழமை பெற்ற இரேவதி ஞான்று கும்பதாரை\\\\\\\' (Archaeological Survey of India, Annual Report 1905-6, pp. 182-3.)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

தீயுற வாயவாக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற வுலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

இடுகாட்டில் பேய்களோடு உறவுகொண்டு நடன மாடுபவனும் விடமுண்ட அழகியகண்டத்தினனும் முடிமேல் தேய்ந்த பிறையைச் சூடியவனும் ஆகிய சிவபிரான் மேவிய திருநாரையூரை வணங்கினால் தீவினையால் உலகிற் பிறந்து அடையும் துன்பங்கள் அகலும். தாயாய்த் தலையளி செய்யும் அவன் நாமங்கள் நும் உள்ளத்தில் மருவும்.

குறிப்புரை :

செற்ற - நெருங்கிய, பின்னிய. செற்றவுலகு என்று இயைக்க. செற்ற என்பதற்கு அழித்த என்று பொருள் கொள்ளின் தலைவன் என்பதோடியையும். `உலகின்தாய்\\\\\\\' \\\\\\\"தாயாய் முலையைத் தருவானே\\\\\\\" (திருவாசகம் 50-5) (தி.2 ப.24 பா.8). குறிப்புரை காண்க. நடமாடி:- பெயர். தேய்பிறை என்றது இயல்படை. சிவபெருமான் திருமுடியில் உள்ள பிறைக்குத் தேய்தலும் வளர்தலும் இல்லை. தொழமருவும் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

வசையப ராதமாய வுவரோதம் நீங்குந் தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணு நிலனும்
இசையவ ராசிசொல்ல விமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

மேலான வீட்டுலகில் இருப்பவர். எல்லார்க்கும் முன்னே தோன்றியவர். அழகிய மார்பில் இலங்கும் முப்புரிநூலர். விண்ணும் மண்ணும் நிறைந்தவர். இமையவர்கள் ஏத்த அவர்கட்கு ஆசி சொல்பவர். அன்போடு திசைப்பாலகர் போற்ற நிற்பவர் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைத் தொழின் கடலளவு பெருகிய பழிகள் இடையூறுகள் நீங்கும். தவம் வரும்.

குறிப்புரை :

உவரோதம் - உபரோதம். இடையூறு. உவர் ஓதம் என்னும் தொடர் உப்பு நீர்க்கடல் என்னும் பொருளதுமாம். அப் பொருள் கொள்ளின் வசை ஆம் அபராதமாய உவரோதம் என்ப தற்குக் கடல் அளவு குற்றமாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

உறைவள ரூனிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை யுலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவி னுரிபோர்த்த மெய்யன் அரவார்த்த வண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டி னருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

வேதம் வளரும் திருநாவினன் யானைத் தோலை மெய்யில் போர்த்தவன். பாம்பைக் கச்சையாகக் கட்டியவன். தலைமைத் தன்மை உடையோன் . அப்பெருமான் திருவடிகளையே திறைப்பொருளாக வளர்கின்ற தேவர்கள் தம் தொண்டால் அவன் அருளைப் பெற நிற்கும் திருநாரையூரைத் தொழுதால் உறையாக நிற்கும் உடலில் விளங்கும் உயிர் நிலை பெறும். நல் உணர்வைத்தரும். குறைகளைப் போக்கும். நெஞ்சில் நிறைவைத் தரும். நேசம் வளரும்.

குறிப்புரை :

வேதம் வளரும் திருநாவினன், யானை உரி போர்த்த திருமேனியன், பாம்பைக் கச்சாகக்கட்டிய தலைவன் ஆகிய சிவபெரு மான் திருவடிகளையே தேவர்கள் திருத்தொண்டின் எய்தும் திருவரு ளால் விரும்பநின்ற திருநாரையூர். திறைவளர்தேவர் - சிவபிரானுக் குத் திறையாக வளர்கின்ற தேவர்கள். திறையாதல் - தம்மை அர்ப்பணம் செய்தல். அடைக்கலமும் ஆம். தெறுதல் - தெறை - திறை. \\\\\\\"ஒன்னார்த்தெறுபொருள் - பகைவரைத் திறையாகக்கொள்ளும் பொருள். தெறுதலான் வரும் பொருள் எனவிரியும்\\\\\\\" (குறள் 756. உரை).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தனம்வரு நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற வுடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினயங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலமூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

முன்னொரு காலத்தில் முப்புரங்கள் அழியுமாறு சரம் விடுத்து அவுணரின் சினத்தை அழித்த சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைத் கைகளால் தொழுதால் தனம் வரும். நன்மையாகும். பெருமை பெறுதற்குத் திசைதோறும் அலைந்து உழன்று உடலின்கண் பொருந்திய ஐம்பொறிகளால் ஆகும் வஞ்சகங் களை அழித்துப் பெருமான் திருவடிகளில் நினைவு ஒன்றும் சிந்தை உண்டாகும்.

குறிப்புரை :

திருநாரையூரைத் தொழுதால் செல்வம் வரும். நலங்கள் உளவாகும். மேன்மை பெறுதற்கு முயன்று திசையெல்லாம் சுழன்ற உடம்பில் கூட்டமாக வளர்கின்ற ஐம்புலக் கள்வர் செய்கின்ற வஞ்சகங்களை அழித்து, சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

உருவரை கின்றநாளி லுயிர்கொள்ளுங் கூற்ற நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் இழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் மழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

அழிவில்லாத கடலாலும் அரிய மலைகளாலும் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வீரம் அழியவும், நீண்ட கைகள் முடிகள் நெரியவும், திருவிரலை ஊன்றி, உகந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைகளால் தொழ உடல் நீங்கும் காலத்தில் உயிர் கொள்ள வரும் இயமன் மிகவும் அஞ்சுவான். ஆதலின் நீர் மணமலர் களைத் தூவி அப்பெருமானை வழிபாடு செய்வீர்களாக.

குறிப்புரை :

திருநாரையூரைத் தொழ உடம்பு நீங்கும் காலத்தில் உயிரைக் கொள்ளும் கூற்றுவன் மிக அஞ்சுவன். ஆதலால் நீர் மிகுதி யாக மணமலர்களைத் தூவி எப்பொழுதும் சிவ வழிபாடு செய்மின். அழிதலில்லாத கடல் நடுவே மலைகள் ஆழப்பெற்ற இலங்கைக்கு வேந்த னாகிய இராவணனது வீரம் அழியவும் பத்துத் தலைகளும் இருபது கைகளும் நசுங்கவும் ஒரு திருக்காற் பெருவிரலை ஊன்றி உயர்ந்த சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திரு நாரையூர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்
சேறுயர் பூவின்மேய பெருமானும் மற்றைத் திருமாலு நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

சேற்றில் உயர்ந்து தோன்றும் தாமரை மலரில் விளங்கும் நான்முகனும், திருமாலும் தேடச் சிவந்த எரியுருவாய்ச் சீறி எழுந்த சிவபிரான் மேவிய திருநாரையூரைக் கையால் தொழப் பிறப்பு இறப்பற்ற தன்மை கிடைக்கும். வினையாகிய துக்கம், மிக்க பகை இவற்றைத் தீர்க்கும். தெளிந்த சிந்தையில் வாய்மை விளங்கித்திகழ மறைந்து நிற்கும் சிவனது வெளிப்பாடு கிடைக்கும்.

குறிப்புரை :

சேற்றில் தோன்றி உயர்ந்த தாமரைப்பூவில் மேவிய பெரியோனாகிய பிரமனும் திருமாலும் தேடத் தீப்பிழம்பாகிக் கனன்ற செம்மையாகும் சிவபெருமான் எழுந்தருளிய செல்வத்தை உடைய திருநாரையூரைக் கைதொழுதால் பிறந்திறந்துழலும் துன்பவாழ்விற்கு வேறாய் உயர்ந்த பேரின்ப வாழ்வாகிய சகச நிலை திகழும். வினையும் அதனால் வரும் துக்கமும் மிக்க பகையைத்தீர்க்கும். பொருந்திய உடலில் தெளிந்த சிந்தையும் உண்மையும் தெளியச் செய்யநின்ற தனது மறைவை ஒழித்து விளங்கும். தன்மை - சகசம், சுபாவம், இயல்பு. வினையாகிய துக்கம்மிக்க பகை. வினையைப் பகை என்றல் திரு முறையில் பயிலக்காணலாம். `கரப்பர்கரிய மனக்கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம்துரப்பர்\\\\\\\\\\\\\\\'. (தி.6 ப.17 பா.5)

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

மிடைபடு துன்பமின்ப முளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ண மொலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரு முடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ண மழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.

பொழிப்புரை :

சூலப்படையைக் கையில் ஏந்திப் பலியேற்கும் தன்மையனாய் இசைபாடி ஆடிச் செல்லும் இறைவனது பெருமையை உடையின்றியும் உடை போர்த்தும் திரியும் சமண் சாக்கியர் கூறுவன மாயுமாறு செய்து காக்கும் சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கை தொழத் துன்பம் நீங்கும். இன்பம் உளதாகும். உள்ளம் ஒளி யாக்கும். ஆதலின் அத்தலத்தை உன்னி உணருங்கள்.

குறிப்புரை :

வெளியாக்கும் - ஒளியைஆக்கும், \\\\\\\"அடியார்கள் உளமான வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே\\\\\\\" (சிவப்பிர காசம் - காப்பு) உன்னி உணரும் - தியானித்து உணருங்கள். முன்னி எனப்பிரித்தலும் ஆம். அதற்கு நினைந்து என்றும் முந்தி என்றும் கொள்க. உணரும்:- நிகழ்காலஉம்மீறு அன்று. எதிர்காலம் உணர்த்தும் முன்னிலைப் பன்மை. சீவக. 808. உரை - சமணசாக்கிய சமயங்களின் கொள்கைகள். செடி - குணம் இல்லாமை. கைதொழ வெளியாக்கும் அதனால் ஆடியின் பெருமையை உன்னி உணரும் என்று இயைக்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

எரியொரு வண்ணமாய வுருவானை யெந்தை பெருமானை யுள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்து மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.

பொழிப்புரை :

தீயைப் போலச் சிவந்த நிறத்தை உடையவனாய், எம் தந்தையாகிய பெருமானாய் மனமுருகி நினையாத அசுரர்களின் திரிபுரத்தை அக்காலத்தில் அழித்துக் காத்த சிவபிரான் எழுந்தருளிய திருநாரையூரைக் கை தொழுது நீர் வளம் நிறைந்த காழி மறைஞான சம்பந்தன் உரைத்த இத்தமிழ்மாலையை மொழிபவர் திருவளரும் திருவருட்பேற்றுடன் செம்மையினராவர்.

குறிப்புரை :

எரி...உருவானை\\\\\\\' - தீயைப் போலும் ஒப்பற்ற அழகிய தாய நிறத்தை உடையவனை, `அழல்வண்ணன்\\\\\\\' என்பது திருநாமம். எந்தை பெருமானை உள்கித் திருநாரையூரைக் கைதொழுவான் ஆகிய மறைஞானசம்பந்தன் உரை(த்த) மாலை பத்தும் மொழிவார் செம்மை யாகிப் பேறுமிக்கதுள்ளது என்பராய்ச் செம்மையினர் ஆவர் என ஆக்கம் விரித்து முடிக்க. உள்குதல் கைதொழுதல் இரண்டும் மொழி வார்க்கு ஏற்றி உரைத்தலும் பொருந்தும். அப்பொருட்குத் தொழுவான் என்பது வினையெச்சமாகும். முன்னைய பொருளுக்கு வினை யாலணையும் பெயர்.
சிற்பி