திருக்கொச்சைவயம்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவி லந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேதம் ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி நீங்காத மந்திரங்களோடு கூடிய வேள்விகள் நிகழ்வதும் குறைவற்ற அந்தணர்கள் வாழ்வதுமாய கொச்சை வயத்தில் எழுந்தருளியுள்ள இறைவர், ஒலிக்கின்ற அழகிய கங்கையோடு ஆடும் பாம்பையும் அணிந்துள்ள சடைமேல், பிறையையும் சூடியிருப்பவர். திருமேனி யில் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர்.

குறிப்புரை :

அறையும் - ஒலிக்கும். மறையின் ஒல்ஒலி - வேதங் களை ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி. குறைவு இல் அந் தணர் - வேதாத்தியயனத்திலும், வைதிகாசாரத்திலும், யாககிருத்தியங் களிலும் குறைபாடில்லாத அழகும் குளிர்ச்சியும் உடையவர். வேதாந் தத்தை அணவுவார் அந்தணர் என்றார் நச்சினார்க்கினியர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குனின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த வந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேதங்களை உணர்ந்தவர்களும், நல்லவேள்வி களைத் தவறாது செய்பவரும், மேம்பட்ட எரியோம்பும் தன்மையர் என்று சொல்லத் தக்கவருமாகிய அந்தணர் வாழும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், திருநீறு அணிந்தவர். மான்தோலோடு முப்புரிநூலை அணிந்த மார்பினர். சூழ்ந்த பூதகணங்களை உடையவர். கொடிய கனலைக் கையில்ஏந்தி இரவில் நடனம் புரிபவர். குற்றமற்ற மனத்தில் உறைபவர்.

குறிப்புரை :

சுண்ணத்தர் (திருநீற்றுப்) பொடியர். பூதக்கண்ணத்தர் என்பதில், ணகரமெய் எதுகை நோக்கி விரிந்தது. பூதகணத்தையுடைய வர் என்பது பொருள். கேள்வி - சுருதி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதன் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வேலை எனப்படும் பெரிய கடல் நீரின் வெள்ள மாகப் பெருகிய ஓதத்தின் அலைகள் அழகிய சிறந்தமணிகளைக் கரை மிசைச் சிந்தும் கொச்சை வயத்தில் எழுந்தருளிய இறைவர், பால் போன்ற திருவெண்ணீற்றைப் பூசியவர். சடைகள் பலவும் தாழ்ந்து தொங்க, மாலைக் காலத்தே நடனம் புரிபவர். வேதகீதங்கள் பாடுதலை விரும்புபவர்.

குறிப்புரை :

பாலை அன்னவெண்நீறு:- \\\\\\\"பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறு\\\\\\\" மாலை - இரவு. கீதம்......பாடுதல் மகிழ்வர். (தி.4. ப.77 பா.3; தி.6 ப.34 பா.8; தி. 2 ப.43. பா5) மாமணி - உத்தமரத்நம், அழகிய முத்தும் நீலமணியும் ஆம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையொர் பங்கர்
கடிகொ ணீடொலி சங்கி னொலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.

பொழிப்புரை :

மணவீடுகளில் நீண்டு ஒலிக்கும் சங்குகளின் ஒலி யோடு, கலைகள் பலவற்றின் ஒலிகளும் சேர்ந்து ஒலிப்பதும் நீண்ட கொடிகள் விளங்கும் மாடங்களை உடையதுமான கொச்சை வயத்தில் விளங்கும் இறைவர், வில்வம், ஊமத்தை ஆகியவற்றின் மணம் கமழ் கின்ற சடையின்கண் நீண்ட கண்ணி சூடியவர். திருநீறு அணிந்துள்ள மார்பின்கண் கொண்டுள்ள உமையம்மைக்குத்தம் திருமேனியில் பாதியை வழங்கியவர்.

குறிப்புரை :

மத்தம் கமழ்சடை. மார்பில் புனைதல்:- முதற்பாட்டின் குறிப்பிற் காண்க. கடி - மணம் (விவாகம்). கலை - வேதம் முதலிய கலை. துதைந்து - நெருங்கி.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

ஆடன் மாமதி யுடையார் ஆயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடன் மாமட மஞ்ஞை யணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

ஆடும் இளமயில்கள் அழகிய தம் பெண்ணினத் தோடு மகிழ்ந்து கூடும் தண்ணிய பொழில்கள் சூழ்ந்த கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான், வானவெளியில் திரியும் சிறந்த மதியைச் சூடியவர். பொருந்திய பூதகணங்கள் சூழ ஊன்வற்றிய வெண்டலையைக் கையில் ஏந்தி உலகில் மகளிர் இடும் பிச்சைக்கு உழல்பவர்.

குறிப்புரை :

பாரிடம் - பூதம். வையகம் - பூமியோர். இடவாகு பெயர். உழல்வார் - சுழல்வார், தடுமாறுவார். இடுபலிக்கு வையகத்தில் திரிவார் எனலுமாம்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேற்
றுண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவ ரரணம் வெவ்வழ லெரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

கொச்சைவயத்தில் அமர்ந்துள்ள பெருமான் நீர் செறிந்த கங்கையும் பாம்பும் தங்கிய நீண்ட சடைமுடியில், வெள்ளிய பிறைத் துண்டத்தை அணிந்தவர். பழமையான மேருமலையை வில்லாகக் கொண்டு பகைகொண்ட அசுரர்தம் மூவரணங்களும் கொடிய எரியில் வெந்தழியுமாறு செய்து, விடைமீது அருள் புரியும் கோலத் துடன் காட்சி தருபவர்.

குறிப்புரை :

மண்டு - மிக்குச்செல்லும், கங்கையும் பாம்பும் மல்கிய சடை, வளர்சடை. துண்டப்பிறை, வெண்பிறை. தானவர் - அசுரர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

அன்ற வானிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டில் உண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்றோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

வானில் தோயும் மலை போன்ற அழகிய மாட வீடு களைக் கொண்ட கொச்சை வயத்தில் அமர்ந்துள்ள இறைவர், அக் காலத்தில் ஆல்நிழற்கீழ் இருந்து நால்வர்க்கு அறம் அருளியவர். இறந்த பிரமனது தலையோட்டில் உண்பவர். கடல் பொரும் இலங்கை மன்னன் இராவணனை வலியழியுமாறு ஊன்றிய கால் விரலினர்.

குறிப்புரை :

அன்று அ ஆல் நிழல் என்று பிரிக்க. பொன்றினார் தலை - இறந்த அயனார்தலை. வான்தோய் குன்றம் அன்னமாடம். பொன்மாடம். சீகாழியின் செல்வநெடுமாடம் சென்று சேணோங்கிய சிறப்புணர்த்திற்று.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

சீர்கொண் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி எங்கும் உறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கானீர்ப் பண்பினர் பான்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

பால்போன்று இனிய மொழி பேசுபவளாகிய உமையம்மையாரோடு கையில் கூரிய வேலை வெற்றிபெற ஏந்தியவராய்க் கொச்சை வயத்தில் விளங்கும் பெருமானார், சிறப் பமைந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும் செங்கண் மாலும் போற்றித் துதிக்க அழகிய கொடிய அழலுருவாகி நிமிர்ந்தவர். நிலம் விண்முதலான ஐம் பூத வடிவினர்.

குறிப்புரை :

பார்கொள்விண் அழல்கால் நீர்ப்பண்பினர் - நிலம், வான், தீ, வளி, புனல் என்னும் ஐம்பெரும் பூதத்தின் இயல்பை உடையவர்.
\\\\\\\"மண்ணிற்றிண்மை\\\\\\\", நீரில் இன்சுவை\\\\\\\", \\\\\\\"தீயின் வெம்மை\\\\\\\", \\\\\\\"காலின் ஊக்கம்\\\\\\\", \\\\\\\"வானிற்கலப்பு\\\\\\\" இவற்றினைத் தோற்றியவன் இறைவனாதலின், அப்பண்புகள் அவனுடைமையல்லவோ? `எல்லாம் உன் உடைமையே` (தாயுமானவர் பாடல்) பால்மொழி:- உமா தேவியார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

குண்டர் வண்டுவ ராடை போர்த்ததொர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே. 

பொழிப்புரை :

குண்டர்களாகிய சமணர்களும், செறிந்த துவர் ஊட்டப்பட்ட ஆடையைப் போர்த்துள்ள தனிக்கொள்கையுடைய புத்தர்களுமாகிய வலியர்கள் பேசும் பேச்சுக்கள் மெய்யல்லாதவை. அவற்றைக் கருதாதவர்க்கு அருள்புரிபவர். நீலமணி போன்ற கண்டத்தை உடையவர். நாம் செய்த பழவினைகளைத் தீர்த்தருளும் பண்பினர். ஒளிபொருந்திய கொடி போன்ற உமையம்மையாரோடு மேகங்கள் தவழும் மணி மாடங்களை உடைய கொச்சை வயத்தில் எழுந் தருளியிருப்பவர்.

குறிப்புரை :

துவர்க்கு வண்மை அடையாதலின் அதனது துவர் நிறத்தின் மிகுதி புலப்படும். பார்ப்பவர் கண்ணுக்கும் கருத்திற்கும் முறையே தோற்றத்தாலும் நினைப்பாலும் வெறுப்பை விளைக்கும் வண்டுவர் ஆடையில் ஊட்டப்பட்டது என்க. பேசிய பேச்சு மெய் யல்லாதவை, பொய்ப்பேச்சு.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்அடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.

பொழிப்புரை :

கொத்தாக மலர்ந்த பூக்களுடன் கூடிய அழகிய பொழில் சூழ்ந்த கொச்சை வயம் என்னும் நகரில் மேவிய அந்தணனாகிய இறைவன் திருவடிகளை ஏத்தும் அருமறைவல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்தம் பொருந்திய அழகிய இத்தமிழ் மாலையை ஓதிப் பரவ வல்லவர், வினைகள் கெட முற்படச் சென்று வானவர்களோடு அவர்கள் உலகில் புகவல்லவர் ஆவர்.

குறிப்புரை :

அந்தணன் - தோணியப்பர். `அறவாழிஅந்தணன்` `அந்தணர் என்போர் அறவோர்` `அந்தணர் நூல்` என்பவற்றால் திருவள்ளுவர் குறிக்கும் பொருளை உணர்க. அருமறை ஞானசம்பந்தன்:- மறையின் அருமையும், அம்மறையால் எய்தும் ஞானமும், அந்தஞானத்தொடு தமக்குள்ள சம்பந்தமும் உணர்த்திப் பெயர்க்காரணம் புலப்படுத்தியவாறு. இத்திருப்பதிகம் சந்தம் நிறைந்தும் அழகுடையதாயும் உள்ள தமிழ் மாலை. அழகு - சொல்லழகு, பொருளழகு, தொடையழகு, திருவருட்பொலிவு. வினைகெடமுனை (முன்பு) புகவல்லவர் என்க.
சிற்பி