திருப்புகலூர்வர்த்தமானீச்சரம்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பட்டம் பால்நிற மதியம் படர்சடைச் சுடர்விடு பாணி
நட்டம் நள்ளிரு ளாடும் நாதன் நவின்றுறை கோயில்
புட்டன் பேடையொ டாடும் பூம்புக லூர்த்தொண்டர் போற்றி
வட்டஞ் சூழ்ந்தடி பரவும் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

ஆண் பறவைகள் தன்பிணையோடு கூடி மகிழும் அழகிய புகலூரில் அடியவர்கள் வட்டமாகச் சூழ்ந்து திருவடிகளைப் போற்றிப் பரவும் வர்த்தமானீச்சரத்து இறைவர் திருமேனிமேல் உத்தரீயமும் விரிந்த சடைமேல் வெண்மதி ஒளிதரும் கங்கை ஆகியவற்றையும் கொண்டு நள்ளிருளில் நட்டமாடும் தலைவர் ஆவார் . அவர் கோயில் திருப்புகலூர்வர்த்தமானீச்சரம் ஆகும் .

குறிப்புரை :

பட்டம் - உத்தரீயம் . பாணி - கங்கை . ` பாணி மூவுலகும் புதைய மேல்மிதந்த ` தோணிபுரத்துறைந்தனை ` ( தி .1 ப .1 பா .128.) ` விண்ணியல் பாணியன் ` ( பொன்வண் . 30). ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் ` . புள் - பறவை . பேடை - பெண்பறவை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

முயல்வ ளாவிய திங்கள் வாண்முகத் தரிவையில் தெரிவை
இயல்வ ளாவிய துடைய வின்னமு தெந்தையெம் பெருமான்
கயல்வ ளாவிய கழனிக் கருநிறக் குவளைகள் மலரும்
வயல்வ ளாவிய புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

கயல்கள் நிறைந்த கழனிகளில் கரிய நிறக் குவளை கள் மலரும் வயல்களை உடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர் , முயற்கறை பொருந்திய திங்கள் போன்ற ஒளிபொருந்திய முகத்தினை உடைய மங்கையரில் மேம்பட்ட தெரிவையாகிய உமையம்மையைப் பாகமாக உடைய இனிய அமுதம் போன்றவர் . எமக்குத் தந்தையாக வும் தலைவராகவும் விளங்குபவர் .

குறிப்புரை :

முயல் - களங்கம் . திங்கள் (- சந்திரன் ) இடத்திருப்பது . அரிவை தெரிவை இரண்டும் மாதர் பருவத்தின் வேறுபாட்டாற்பெற்ற பெயர்கள் . கண்மலரும் - கண்போல் பூக்கும் . குவளைகள் பூக்கும் எனலுமாம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் குளிர்ந்த நீர் நிலைகளில் மூழ்கி மலர்மாலை சாந்து , மணப்புகை கொண்டு திருவடிபரவி வழிபடக் கண்டு அவர்தம் குறிப்பறிந்து அவர்கட்கு உதவும் முருகநாயனார் தாமும் அவ்வாறே இறைவனை அலங்கரித்துக் கண்குளிரக் கண்டு மகிழுமாறு வண்டுகள் கள்ளுண்டு பண்செய்யும் ஒலிபோல ஒலிக்கும் . வர்த்த மானீச்சரத்துள் சிவபெருமான் உகந்தருளியுள்ளார்

குறிப்புரை :

கயம் - நீர்நிலை . துணையல் - மாலை . ` கொண்டு ` இரண்டனுள் , ஒன்று துணையல் முதலியவற்றைக்கொண்டு என்றும் மற்றொன்று அடியை உளங்கொண்டு என்றும் கொள்ள நின்றமை உணர்க . குறிப்பு அறிமுருகன் :- முருக நாயனார் சிறப்புணர்த்திற்று . அவரது குறிப்பு அறியும் ஆற்றலை , தமக்கு நண்பருமாம் பெருமை தந்த பிள்ளையாரே அறிவார் . பூக்கள் திறக்கும் அநுபவ மிகுதியால் , அவற்றைக் கொள்ளும் சமயக் குறிப்பும் ஆம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பண்ண வண்ணத்த ராகிப் பாடலொ டாடல றாத
விண்ண வண்ணத்த ராய விரிபுக லூரரொர் பாகம்
பெண்ண வண்ணத்த ராகும் பெற்றியொ டாணிணை பிணைந்த
வண்ண வண்ணத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

விரிந்த பரப்புடைய புகலூர் வர்த்தமானீச்சரத்து இறைவர் , பாடல் ஆடல்களில் பயிலும் பண்ணிசை மயமான வரும் , ஆகாய வடிவினராய் விளங்குபவரும் , பெண்ணொர் பாகமான வடிவினரும் , ஆணொடு இணைந்த அரி அர்த்த வடிவினரு மானவர் .

குறிப்புரை :

பண்ண வண்ணத்தர் - பண்ணிசை மயமான சிவ பெரு மான் . ` ஏழிசையாய் இசைப்பயனாய் `. விண்ணவண்ணத்தர் - ஆகாச ரூபர் . பாகம் பெண்ணவண்ணத்தர் - அம்மையப்பர் . அர்த்தநாரீச்சுரர் . ஆண் இணை பிணைந்தவண்ண வண்ணத்து எம்பெருமான் என்றது அறியத்தக்கது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

அழகிய புகலூரில் முருகநாயனார் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் கொண்டு மூன்று பொழுதிலும் வழிபட அம் மண மலர்களோடு விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் எல்லோர்க்கும் தலைவர் . விடையேறு உடையவர் . இனிய அமுதம் போன்றவர் . எந்தை , எம்பெருமான் குற்றம் அற்ற வெண்ணீறு பூசியவர் .

குறிப்புரை :

இதன் முதலடியோடு ஒத்தது முன் ( தி .2 ப .90 பா .1.) உணர்ந்தது . பூச - பூசுதற்கு . நீற்றர் - நீறுடையவர் . பூச என்னும் எச்சம் நீற்றர் என்னும் வினைக்குறிப்பில் உடையர் என்பதோடு முடிந்தது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தளிரி ளங்கொடி வளரத் தண்கய மிரியவண் டேறிக்
கிளரி ளம்முழை நுழையக் கிழிதரு பொழிற்புக லூரில்
உளரி ளஞ்சுனை மலரு மொளிதரு சடைமுடி யதன்மேல்
வளரி ளம்பிறை யுடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர் நிலைகளை அடுத்து வளரும் இளங் கொடிகளின் தளிர்கள் கிழியுமாறு வண்டுகள் சரேலென எழுந்து முழை கள்தோறும் செல்லும் பொழில்கள் சூழ்ந்த புகலூரில் வாழ்பவர் சுனை நீரில் பூத்த மலர்கள் விளங்கும் சடைமுடியில் பிறை சூடியவராகிய வர்த்தமானீச்சரத்து இறைவர் .

குறிப்புரை :

இளமுழை - இளமான் . உளர் - அசைகின்ற ; சுழல் கின்ற . தளிர்களையுடைய கொடி , இளங்கொடி . தண்கயம் - குளிர்ந்த நீர் நிலையில் . இரிய - சாய . சுனைமலரும் ஒளிதருஞ்சடை . சடைமுடி மேல் பிறை உடையார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

தென்சொல் விஞ்சமர் வடசொற் றிசைமொழி யெழினரம் பெடுத்துத்
துஞ்சு நெஞ்சிரு ணீங்கத் தொழுதெழு தொல்புக லூரில்
அஞ்ச னம்பிதிர்ந் தனைய வலைகடல் கடையவன் றெழுந்த
வஞ்ச நஞ்சணி கண்டர் வர்த்தமா னீச்சரத் தாரே

பொழிப்புரை :

அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசை மொழிகளிலும் அழகிய யாழ் நரம்பை மீட்டித் தங்கள் மனத்திருள் நீங்கப்பாடித் தொழும் புகலூரில் , அன்று அலைகடலைக் கடந்த போது , மை பிதிர்ந்தாற்போல எழுந்த வஞ்ச நஞ்சினை உண்ட அழகிய கண்டத் தினாராய் விளங்குபவர் வர்த்தமானீச்சரத்து இறைவர் .

குறிப்புரை :

தென்சொல் - தமிழ் . விஞ்சுதல் - மிகுதல் , வடசொல் - ஆரியபாடை . திசைமொழி - ஏனைய மொழிகளினின்று தமிழில் வந்து வழங்கும் சொற்கள் . சிவதோத்திரம் பாடும் பாஷைகள் குறிக்கப் பட்டன . நெஞ்சு இருள் - நெஞ்சிலுள்ள ( அகத்து ) இருள் . எழில் நரம் பெடுத்தலாவது :- இசை எழுச்சியையுடைய யாழ்நரம்பில் அமைத்துப் பாடுதல் . அஞ்சனம் - மை . நஞ்சுக்குவமை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

சாம வேதமொர் கீத மோதியத் தசமுகன் பரவும்
நாம தேயம துடையார் நன்குணர்ந் தடிகளென் றேத்தக்
காம தேவனை வேவக் கனலெரி கொளுவிய கண்ணார்
வாம தேவர்தண் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

தண்மையான புகலூரில் விளங்கும் வர்த்தமானீச் சரத்து இறைவர் , இராவணன் சாம வேதம் பாடிப் பரவும் பெயரையும் ஊரையும் உடையவர் . நன்குணர்ந்து அடிகள் என்றேத்தும் பெயர்களை உடையவர் . காமதேவனை எரித்த கண்ணையுடையவர் .

குறிப்புரை :

தசமுகன் ( இராவணன் ) சாமவேத கீதம்பாடி நலம் உற்றான் . நாமதேயம் - பெயராற் சுட்டப்படுவது . கண்ணார் - நெற்றிக் கண்ணினார் . வாமதேவர் - பஞ்சப்பிரம மந்திரரூப மூர்த்திகளுள் ஒன்றாய் விளங்கும் சிவபிரான் . சதாசிவருடைய ஐந்துமுகத்தில் நான்காவது வாமதேவம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

சீர ணங்குற நின்ற செருவுறு திசைமுக னோடு
நார ணன்கருத் தழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர ணங்குறு முமையை யஞ்சுவித் தருளுதல் பொருட்டால்
வார ணத்துரி போர்த்தார் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

வர்த்தமானீச்சரத்து இறைவர் , சிறந்த தெய்வத் தன்மை உடையவர்களாய் யார் தலைவர் என்பதில் மாறுபட்டவர் களாய்த் தம்முட் செருச்செய்த திருமால் பிரமர்களின் கருத்தழியுமாறு அவர்களிடையே தோன்றி நகை செய்தவர் . உமையம்மையை அஞ்சுவிக்கும்பொருட்டு அவள் எதிரே யானையை உரித்தவர் .

குறிப்புரை :

அணங்கு - தெய்வம் , அழகுமாம் . செரு - இருவரும் , சிவபிரானைக் காண்பேன் என்று சொல்லி நிகழ்த்திய போர் . ` அவனொடு நாராயணனும் கருத்தழிய நம்பர் நகைசெய்தார் `. அஞ்சுவித்து - அஞ்சச்செய்து . வாரணத்து உரி - யானைத்தோல் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையி னால்தம்
மெய்யைப் போர்த்துழல் வாரு முரைப்பன மெய்யென விரும்பேல்
செய்யில் வாளைக ளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்
மைகொள் கண்டத்தெம் பெருமான் வர்த்தமா னீச்சரத் தாரே.

பொழிப்புரை :

வாளைமீன்களோடு கயல்கள் குதித்து விளை யாடும் வயல்களைக் கொண்ட புகலூரில் நீல கண்டராய் விளங்கும் வர்த்தமானீச்சரத்து இறைவர் புகழே மெய்ம்மையானவை . கையில் உணவு ஏற்று உண்ணும் சமணரும் துவராடை போர்த்த புத்தரும் கூறும் உரைகளை மெய்யெனக் கருதேல் .

குறிப்புரை :

ஆடையினால் தம் உடம்பைப் போர்த்து உழல்வார் தேரர் . உரைப்பன - உரைக்கும் புறப்புறச் சமயக் கொள்கைகளை . மெய் - வாய்மை . விரும்பேல் - விரும்பாதே . செய் - கழனி . வாளை யும் கயலும் மீன்கள் . மை - கருநிறம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

பொங்கு தண்புனல் சூழ்ந்து போதணி பொழிற்புக லூரில்
மங்குன் மாமதி தவழும் வர்த்தமா னீச்சரத் தாரைத்
தங்கு சீர்திகழ் ஞான சம்பந்தன் றண்டமிழ் பத்தும்
எங்கு மேத்தவல் லார்கள் எய்துவ ரிமையவ ருலகே.

பொழிப்புரை :

மிகுதியான தண்ணிய நீராலும் , மலர்பூத்த பொழில்களாலும் சூழப்பெற்று விளங்கும் புகலூரில் வானளாவிய வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் விளங்கும் இறைவரைப் புகழ்மிக்க ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பாடல்கள் பத்தையும் எவ்விடத்தும் பாடி ஏத்துவார் இமையவர் உலகம் எய்துவர் .

குறிப்புரை :

போது - பூவின் முன்னைய பருவத்தது . மங்குல் - ஆகாயம் . மதிதவழும் ஈச்சுரம் என்றுகொண்டு , அத்திருக்கோயிலின் உயர்ச்சியைக் கருதுக . ஈச்சரத்தாருக்கு ஏற்றின் பிறையணிந்த வரலாறு குறித்ததாம் . தங்குசீர் - நிலைத்த சீர்த்தி . ` தண்டமிழ் ` என்றது இத்திருப் பதிகத்தை .
சிற்பி