திருத்தெங்கூர்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

புரைசெய் வல்வினை தீர்க்கும் புண்ணியர் விண்ணவர் போற்றக்
கரைசெய் மால்கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள்
இரைசெய் தாரழ லூட்டி யுழல்பவ ரிடுபலிக் கெழில்சேர்
விரைசெய் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர் . விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர் . முப்புரம் எரித்தவர் . இடுபலிக்கு உழல்பவர் .

குறிப்புரை :

ஆரழலுக்கு இரையாச் செய்து ஊட்டி , இடுபலிக்கு உழல்பவர் அமர்ந்தார் என்றார் . தென்கு ( தெங்கு ) + ஊர் = தெங்கூர் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம்பணிந் தேத்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் தாழ்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர் . கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர் . பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர் . நீரில் பதித்த விதை போன்றவர் .

குறிப்புரை :

தன் அடி சித்தம் நினைவார் வினை என்றியைக்க . சித்தத்தில் நினைவார் . செடிபடு - பாவத்தாலுண்டான . பிறையன் என்பது சிவனென்னும் பெயரளவாய் நின்று , தீர்க்கும் எனுமெச்சத்தைக் கொண்டது . கோள் - வலிமை , கொலை . புனல் பதித்த வித்தன் - நீரில் பதியச்செய்த விதையானவன் . ( தி .6 ப .15 பா .2.) ( திருவாசகம் 253 )

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

அடையும் வல்வினை யகல அருள்பவ ரனலுடை மழுவாட்
படையர் பாய்புலித் தோலர் பைம்புனற் கொன்றையர் படர்புன்
சடையில் வெண்பிறை சூடித் தார்மணி யணிதரு தறுகண்
விடையர் வீங்கெழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார் , நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர் . அனல்போன்ற மழுப்படையை உடையவர் . புலித்தோல் உடுத்தவர் . கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர் .

குறிப்புரை :

வினை அகல அருள்பவர் . விடை எருதுக்கு அதன் கழுத்தில் மணிகட்டுதல் உண்மையான் , மணி அணிதிரு விடை எனப் பட்டது . தறுகண் - கொடுமை ; அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமை . ` தறு கணன் ` ( நன்னூல் ) கண் என்பதன் முன் சில முதனிலைகள் சேர்ந்து வெவ்வேறு பொருள் பயத்தலை - அலக்கண் , புண்கண் , இடுக்கண் ( இடுங்குகண் ) வன்கண் முதலியவற்றிற் காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பண்டு நான்செய்த வினைகள் பறையவோர் நெறியருள் பயப்பார்
கொண்டல் வான்மதி சூடிக் குரைகடல் விடமணி கண்டர்
வண்டு மாமல ரூதி மதுவுண விதழ்மறி வெய்தி
விண்ட வார்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர் , முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர் . வானத்து இளம் பிறையைச் சூடியவர் . கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர் .

குறிப்புரை :

பறைய - அழிய , பயப்பார் . கொண்டல் - மேகம் . வானிற்கு அடை . குரைகடல் - முழங்கும் கடல் . வண்டு ... விண்ட பொழில் - இயற்கை உணர்த்திற்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

சுழித்த வார்புனற் கங்கை சூடியொர் காலனைக் காலால்
தெழித்து வானவர் நடுங்கச் செற்றவர் சிறையணி பறவை
கழித்த வெண்டலை யேந்திக் காமன துடல்பொடி யாக
விழித்த வர்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர் . அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர் . காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர் .

குறிப்புரை :

சுழித்த - சுழற்சியைச் செய்த , தெழித்து - கோபித்து , சிறையணிபறவை கழித்த வெண்டலை - பிரமகபாலம் . அன்னப் பறவையான காரணம் பற்றியது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தொல்லை வல்வினை தீர்ப்பார் சுடலைவெண் பொடியணி சுவண்டர்
எல்லி சூடிநின் றாடும் இறையவ ரிமையவ ரேத்தச்
சில்லை மால்விடை யேறித் திரிபுரந் தீயெழச் செற்ற
வில்லி னார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , பழவினை தீர்ப்பவர் . சுடலைப் பொடி பூசியவர் . திங்களை முடியில் சூடி நின்று ஆடுபவர் . இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரி புரம் எரித்த வில்லினர் .

குறிப்புரை :

தொல்லை வினை - பூர்வகர்மம் , பிராரப்தம் , சஞ்சிதம் இரண்டும் , சுவண்டர் :- சு = அண்டர் நல்லதேவர் எனவும் இடனில்லை . ` சுந்தரராய்த் தூமதியம் சூடுவது சுவண்டே ( தி .7 பா . 470.) என்பது கொண்டு முன்பொருத்தம் என்றேம் . அது இங்குப் பொருந்தாது . எல்லி - தண்ணொளியுடைய திங்கள் . எல் - ஒளி . சில்லை - இழிவு . பாசக்கடற்குளே வீழ்கின்றதே இழிவு . வில்லினார் - மேருமலையாகிய வில்லையுடையார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நெறிகொள் சிந்தைய ராகி நினைபவர் வினைகெட நின்றார்
முறிகொண் மேனிமுக் கண்ணர் முளைமதி நடுநடுத் திலங்கப்
பொறிகொள் வாளர வணிந்த புண்ணியர் வெண்பொடிப் பூசி
வெறிகொள் பூம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர் , நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர் . தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர் . பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர் .

குறிப்புரை :

நெறி - திருநெறி . முறி - தளிர் . முளைமதி - பிறை . வெறி - மணம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

எண்ணி லாவிறல் அரக்கன் எழில்திகழ் மால்வரை யெடுக்கக்
கண்ணெ லாம்பொடிந் தலறக் கால்விர லூன்றிய கருத்தர்
தண்ணு லாம்புனற் கண்ணி தயங்கிய சடைமுடிச் சதுரர்
விண்ணு லாம்பொழில் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய் , அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர் . தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர் .

குறிப்புரை :

எண் - கணக்கு . விறல் - வலிமை . கருத்தர் தலைவர் வினைமுதல்வர் . கண்ணி - கங்கை . பிறைக்கண்ணியுமாம் . விண் உலாம் பொழில் :- சோலையுயர்வு குறித்தது .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

தேடித் தானயன் மாலுந் திருமுடி யடியிணை காணார்
பாடத் தான்பல பூதப் படையினர் சுடலையிற் பலகால்
ஆடத் தான்மிக வல்லர் அருச்சுனற் கருள்செயக் கருதும்
வேடத் தார்திருத் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூரில் , அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர் . பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர் . அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர் .

குறிப்புரை :

அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடி யினையையும் தேடித் தான்காணார் . இணை - ஒத்தன ( இரண்டும் ) பாட ... படையினார் :- பாட என்னும் வினையெச்சம் படையை உடை யவர் என்பதில் உள்ள உடையவர் எனும் வினைக் குறிப்பைக் கொண்டது . ஆடவல்லர் . வேடத்தார் - வேட்டுவக் கோலத்தார் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

சடங்கொள் சீவரப் போர்வைச் சாக்கியர் சமணர்சொற் றவிர
இடங்கொள் வல்வினை தீர்க்கும் ஏத்துமி னிருமருப் பொருகைக்
கடங்கொண் மால்களிற் றுரியர் கடல்கடைந் திடக்கனன் றெழுந்த
விடங்கொள் கண்டத்தர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரே.

பொழிப்புரை :

திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினை களைத் தீர்த்தருள்புரிபவர் . இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர் . கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர் .

குறிப்புரை :

சடம் - உடம்பு , பொய் , இடம் கொள் - மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்ட . இருமருப்பு - இரண்டு ( பெருங் ) கொம்பு . கடம் - மதநீர் . களிற்றுரியர் - யானைத்தோலர் , கனன்று - வெம்மை வீசி .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

வெந்த நீற்றினர் தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந் தாரைக்
கந்த மார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
சந்த மாயின பாடல் தண்டமிழ் பத்தும்வல் லார்மேல்
பந்த மாயின பாவம் பாறுதல் தேறுதல் பயனே.

பொழிப்புரை :

வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும் . அவர்கள் தெளிவு பெறுதல் வந்துறும் பயனாகும் .

குறிப்புரை :

சந்தம் ஆயின பாடல் - சந்தப்பாடல் . பந்தம் ஆயின பாவம் - வினைப்பற்று உண்டாவதற்கு ஏதுவான பாவங்கள் . பாறுதல் - ஓடுதல் . தேறுதல் - தெளிதல் .
சிற்பி