திருவாழ்கொளிபுத்தூர்


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார்
ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்
தோகை மாமயி லனைய துடியிடை பாகமு முடையார்
வாகை நுண்டுளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ் கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர் . சாமகானம் பாடுபவர் . கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர் . மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர் .

குறிப்புரை :

சாகை - வேதநூற்பிரிவு , சாமம் - சாமவேதம் . ஈகை - வினைத்தொகை . வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி , ( திருவாசகம் . 73). ` இட்டும் அட்டியும் ஈ தொழில் பேணில் என் ? ( தி .5 ப .99 பா .3.) என்பவற்றில் உள்ள வினைத்தொகையை நோக்குக .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

எண்ணி லீரமு முடையா ரெத்தனை யோரிவ ரறங்கள்
கண்ணு மாயிர முடையார் கையுமொ ராயிர முடையார்
பெண்ணு மாயிர முடையார் பெருமையொ ராயிர முடையார்
வண்ண மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர் . இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர் . இவர் ஆயிரங்கண் , கைகளை உடையவர் . சக்தியின் அம்சமாகப் பல வற்றை உடையவர் . பெருமைகள் பல உடையவர் . இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும் .

குறிப்புரை :

எண் இல் ஈரம் - ` அளவுபடாததோர் அன்பு ` ( தி .4 ப .3 பா .10.) எண்ணில் - ஆராய்ந்தால் எனலுமாம் . இவர் அறங்கள் எத்தனையோர் என்று கொள்க . அறங்கள் எத்தனை ? எத்தனை ( யுடை ) யோர் ? இவர் எத்தனையோர் ? தனை - அளவு ஆயிரங்கண்ணர் . ஆயிரங்கையர் . பெண்ணும் ஆயிரம் உடையார் :- சிவசக்தியை உடையது சிவம் . சிவமும் சத்தியும் உருவம் முதலியவை இல்லாத உயர்வின . அவற்றில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை . ஆற்றலைப் பெண்மையாயும் ஆற்றலுடையதை ஆண்மையாயும் உருவகித்தமையால் , உண்மையிற் பெண் என்றும் அஃது ஆயிரம் என்றும் கொண்டு , நினைப்பென்னும் நெடுங்கிணற்றில் விழுதல் பெரும்பாவமாகும் . சிவசக்தியும் சிவமும் , அவ்வச்சத்திகட்கு இடமாய விந்துவும் முறையே பலவேறு வகையான் விருத்திப்பட்டும் நிற்கும் . சிவஞான பாடியத்தில் சூ .2. அதி . 2. காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

நொடியொ ராயிர முடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்
வடிவு மாயிர முடையார் வண்ணமு மாயிர முடையார்
முடியு மாயிர முடையார் மொய்குழ லாளையு முடையார்
வடிவு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர் . மிகவும் நுண்மையானவர் . அவர் பார்வையும் பலவேறு வகைப்பட்டவை . பலவேறு வண்ணங்கள் கொண்டவர் . பலவாய முடிகளை உடையவர் . உமையம்மையை இடப்பாக மாகக் கொண்டவர் . பலவேறு வடிவங்கள் கொண்டவர் .

குறிப்புரை :

நுண்ணியர் :- ` நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே ` திருவாசகம் .1 அடி : 76.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

பஞ்சி நுண்டுகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்
குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்
அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையி னீருரி யுடையார்
வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர் . சடைமுடியில் ஆடையைத்தரித்தவர் . பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர் . ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர் . ஆனைத்தோல் போர்த்தவர் .

குறிப்புரை :

சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது . குஞ்சி மேகலையுடையார் :- சைவத் துறவியர் சடைமுடி மறைக்கும் கல்லாடையைக் குறித்ததுபோலும் . குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ ? மகளிர் இடையில் அணிவது மேகலை . இங்குக் குஞ்சி ( தலைமயிர் ) மேல் உடையது மேகலை என்று குறிக்கின்றது . கொந்து - கோபம் . ( ஞானாமிர்தம் ). அஞ்சும்வென்றவர் :- ` பொறிவாயில் ஐந்தவித்தார் `. இடைக்கு உவமை வஞ்சிக்கொடி .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

பரவு வாரையு முடையார் பழித்திகழ் வாரையு முடையார்
விரவு வாரையு முடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்
அரவம் பூண்பது முடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்
வரமு மாயிர முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர் . தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர் . பிரமனது வெள்ளிய தலை யோட்டில் பலிகொள்பவர் . அரவம் பூண்டவர் . ஆயிரம் பேருடையவர் . வரங்கள் பல அருள்பவர் .

குறிப்புரை :

விரவுவார் :- மெய்யன்புடைய அடியார் . ` பரவுவார் இமையோர்கள் .. விரவுவார் மெய்யன்பின் அடியார்கள் ` திருவாசகம் .21. விரவுதல் . ` கலந்துநின் அடியாரோடு அன்று வாளா களித் திருந்தேன் ` ( திருவாசகம் . 485). ` எனைக்கலந்து ` ( ? .84). ` கருணையினால் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே `( ? ,105).

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்
கொண்ட பூதமு முடையார் கோலமும் பலபல வுடையார்
கண்டு கோடலு மரியார் காட்சியு மரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு , தாளம் , குழல் , தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர் . பல்வேறு கோலங்கள் கொண்டவர் . காணுதற்கும் காட்சிக்கும் அரியவர் .

குறிப்புரை :

தண்டு , தாளம் , குழல் , தண்ணுமைக்கருவி , பூதம் , பல பல கோலம் , காட்சியருமை , கண்டு கொள்ளலருமை ஆகியவற்றை இறைவன் உடையவன் . தண்டு - வீணை . சிவிகை என்றும் பொருள் உண்டு . அஃது இங்குப் பொருந்தாது . தாளம் முதலிய இன்னிசைக் கருவி களாகிய இனம்பற்றி வீணை என்பதே . ` வேயுறு தோளிபங்கன் ... மிக நல்ல வீணை தடவி ` ( தி .2 ப .85 பா .1.) கரந்தைப்பூவில் வண்டு வாழ்கின்ற வளமுடையபதி . ` செஞ்சடைசேர் கரந்தையான் ` ( தி .1 ப .61 பா . 3.) அவர் காட்சி கொடுப்பதும் அரிது ; அவரைக் கண்டு கொள்வதும் அரிது என்பதன் உண்மை அத்துவிதமாய் நின்றுணர்வோர்க்கே விளங்கும் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்
தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்த
ஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருண் மகளிர்நின் றேத்த
வான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பெருமை பொருந்திய வாழ்க்கையர் . தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர் . அருட் கொடை வழங்கும் இயல்புடைவர் . தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர் . நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர் .

குறிப்புரை :

மலைந்தவர் - மாறுபட்ட ( பகை ) வர் . தவத்தொடு ஞானவாழ்க்கை உடையவர் . புகழ்ந்து ஏத்தற்குரியது ஞான வாழ்வு ஒன்றே . மற்றைய வாழ்வெலாம் இகழ்ந்து ஒதுக்கற் பாலன . நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த வானவாழ்க்கைய துடையார் ` அல்லிய ... குழலார் . .. பரவ ... வல்லார் ` என்பதொடு பொருத்திக்காண்க .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

ஏழு மூன்றுமொர் தலைகள் உடையவ னிடர்பட வடர்த்து
வேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்
கேழல் வெண்பிறை யன்ன கெழுமணி மிடறுநின் றிலங்க
வாழி சாந்தமு முடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர் . தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர் . பலப்பல விருப்புடையவர் . வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர் . சாந்தம் அணிந்தவர் .

குறிப்புரை :

பத்துத் தலையுடையவன் , வேழ்வி - வேள்வி . தக்கன் செய்த யாகம் . எதுகைநோக்கி ளகரம் ழகரமாயிற்று . விரும்பிச் செற்ற தும் உடையார் என்றும் அவர் பலபல விருப்புடையார் என்றும் இயைக்க . கேழல் - பன்றிக்கொம்பு . ` ஏனக்கொம்பு ` ( தி .2 ப . 102 பா .2.) அன்ன - அவைபோல்வன ; ( ஆமை , நாகம் , தலையோடு முதலியன ). மிடறு - திருக்கழுத்து . சாந்தம் - சந்தனம் ; பொறுமையு மாம் . அட்ட புட்பத்துள் ஒன்று .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

வென்றி மாமல ரோனும் விரிகடற் றுயின்றவன் றானும்
என்று மேத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பி
முன்றின் மாமலர் வாச முதுமதி தவழ்பொழிற் றில்லை
மன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

வாழ்கொளிபுத்தூர் இறைவர் , தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள் தோறும் துதித்து வணங்கப் பெறுபவர் . இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர் .

குறிப்புரை :

ஏத்துகை - துதிக்கை ; வினைத்தொகையும் ஆம் . பா . 1. ஈகை . பார்க்க . துதி - ( தோத்திரம் ) புகழ்ச்சி மலர்வாசம் பொழில் . மதி தவழ் பொழில் . ஆடலது - திருக்கூத்தாடுதலை .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.

பொழிப்புரை :

மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர் , அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர் . ஒளிமிக்க பிறை சூடி , திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக .

குறிப்புரை :

பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும் , வெண்மையும் , சுண்ணப்பொடி என்பதினும் சுண்ணமும் பொடியும் எனல் சிறந்தது . சுண்ணம் :- திருப்பொற் சுண்ணம் .

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞானசம் பந்தன்
வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூ ருளானை
இலங்கு வெண்பிறை யானை ஏத்திய தமிழிவை வல்லார்
நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.

பொழிப்புரை :

நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண் மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் . நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர் .

குறிப்புரை :

நலம் - குறைவிலாமங்கலம். நன்னெறி - சரியையாதியின் பயனாகிய ஞானம்.
சிற்பி