சீகாழி


பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 1

பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்க ணாடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயற் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

வெண்மை மிக்க முப்புரிநூல் புரளும் அழகிய மார்பினனாகிய எம் பெருமானும், சிவந்த கண்களை உடைய ஆடும் பாம்பினைப் பிடித்து ஆட்டுபவனும், செல்வனும், ஆகிய எம் சிவபிரான் உறையும் கோயிலை உடையது, தோல்வியுறாத வேதங் களில் வல்லவர்களும் பத்தர்களும் பரவுவதும், வெண்மையான அலைகள் வீசும் கடற்கரைச்சோலைகளையும் வயல்களையும் உடைய தும் ஆகிய சீகாழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

1. வெண்புரி - வெண்ணிறத்தையுடைய நூலாலாகிய முப்புரி. பங்கம் - தோல்வி; மறைப்பொருள்கள் வேறு எந்நூற் பொருள் களுக்கும் தோல்வி அடையாமைகுறிக்க, பங்கம் இல் மறைகள். அழியாமை குறித்ததுமாம்.
வேதம் நித்தியம், வல்லவர்களும் பத்தர்களும் பரவும் காழி நன்னகர் என்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 2

தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கட னிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவ ரிரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்ச முண்டவ னமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழில் காழிநன் னகரே.

பொழிப்புரை :

தேவர்களும், அசுரர்களும் கூடி, நாவினால் அமிர் தம் பெற்றுண்ணப் பெரிய கடலில் வலிய மந்தர மலையை மத்தாக நட்டுக் கடைந்த போது எழுந்த அரிய நஞ்சினைக் கண்டு ஆஆ என அலறி ஓடிச் சரண் அடைய, அந்நஞ்சினைத் திரட்டித் தானுண்டு தேவர் களைக் காத்தருளிய சிவபிரான் அமர்ந்தருளிய மூதூர், காவலாக அமைந்த மதில்கள் சூழ்ந்ததும் மணம் பொருந்திய பொழில்களை உடையதுமான சீகாழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

நிறுவி - மத்தாக நிறுத்தி, நாவதால் - நாக்கால்; அது பகுதிப் பொருள்விகுதி. இரிந்திட - சாய. ஆவ என்று - ஆஆ என்று இரங்கி, இத்தொடர் திருமுறைகளில் பயின்றுள்ளதை ஆங்காங்கு நோக்குக. காவல் ஆர் மதில்சூழ்ந்த நகர்; பொழிலையுடைய காழி நகர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 3

கரியின் மாமுக முடைய கணபதி தாதைபல் பூதந்
திரிய வில்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர் தரு மூதூர்
சரியின் முன்கைநன் மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.

பொழிப்புரை :

யானைமுகத்தோனாகிய கணபதியின் தந்தையும், பூதங்கள் பல சூழ்ந்து வர மனைகள் தோறும் உண் பலியேற்றுத் திரி பவரும், செழுமையான சுடர் போன்றவருமான சிவபிரான் எழுந் தருளிய மூதூர், வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய அழகிய மகளிர் காலில் தாளத்தட்டு நிற்கச் சிறந்த நடனத்தை ஆடிக் கொண்டு உரிய சிவநாமங்களை ஓதிப்போற்றும் ஒலிபுனல் சூழ்ந்த காழி நகராகும்.

குறிப்புரை :

கரத்தை உடையது கரி எனப்பட்டது. பூதகணங் களோடு பலிக்கு ஏகினார் எனல் அறிக. செழுஞ்சுடர்:- அழியாததும் அறியும் ஆன்மாக்களிடத்தில் வளர்வதுமாகிய ஒளி - `செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதி மிக்கவுருவே` அப்பர். `ஒளிவளர் விளக்கே` (திருவிசைப்பா). சரி - வளையல். சதிபட மாநடம் ஆடல். தண்ணுமை விளங்கலுறு தாளம் இசையெல்லாம் வண்ணமலர்மெல்லடி வழிச்சதியில் நிற்பக் கண்ணிணை கொள்பல்வளைய கைவழி நடப்ப, (பிரபுலிங்க. மாயை பூசைகதி 52). நடித்தல். செப்பமைந்த தண்ணுமை யிசை தாளம் மென்சிறுதாட் டுப்பமைந்த வொண்சதிதழீ இச்சுவைய பல்காய முப்பமைந்தவின் கறியென நடித்தல். (பிரபு. கைலாச 31). உரிய நாமங்கள் ஓதி என்றதால், அக்காலத்து மகளிர்க்குச் சிவநாமம் ஓதும் உரிமையை ஆசிரியர் உணர்ந்து மகிழ்ந்து பாட்டிலும் நாட்டிய உண்மை புலப்படும்.
இக்கால மகளிர் பலர், இறைவனை ஏத்த உரியநாமங்களை உணராமைக்குக் காரணத்தை ஆராய்ந்து கண்டு, போக்குதல். சமய வளர்ச்சிக்கு வழி கோலுவதாம். மகளிரே சமயம் வளர்க்கத்தக்கார்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 4

சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய வப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழில் காழிநன் னகரே.

பொழிப்புரை :

சங்கவெண்குழை அணிந்த செவியினனும், தண் மதி சூடிய சென்னியனும், எலும்புகளை மாலையாகக் கோத்து அணிந்த தலைவனுமாகிய சிவபிரானுக்கு அழகிய ஊராக விளங்கு வது, உயர்வான மாளிகைகளில் கட்டிய உயரிய கொடிகளின் தொகுதி கள் வானத்தில் சென்று, வெள்ளி போலத் திகழும் ஒளி பொருந்திய மதியைத் தடவும் அணி பொழில் காழி நன்னகராகும்.

குறிப்புரை :

அங்கம் - எலும்பு. துங்கம் - உயர்ச்சி. தொகு கொடி - தொக்க கொடிகள். வினைத்தொகை.
மிடைந்து - நெருங்கி. வங்கமதி - வெள்ளியைப் போன்ற திங்கள்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 5

மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் னியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

உமையம்மை ஒரு பாதியாக அமைந்த திரு மேனியனும், மான்மறி ஏந்திய கையினனும், எங்கள் ஈசன் என்று எழுவார் துன்பங்கள் அவற்றுக்குக் காரணமான வினைகள் ஆகியவற்றைத் தீர்ப் பவனும் ஆகிய சிவபிரானுக்கு உரிய ஊர், ஐயம் இன்றி நல்ல நியமங்களை முறையே செய்து தகுதியால் கங்கை நாடு வரை பரவிய புகழுடைய மறையவர் வாழும் காழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

உண்மை வடிவானவன் என்பது பொருந்துமேல் கொள்க. எழுவார்:- விழித்து எழுதல், மூலாதாரத்திலிருந்து சுழு முனை நாடி வழியாகத் தியானித்து எழுதல். இடர்வினை. இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகையாயும் உம்மைத் தொகை யாயும் கொள்ளலாம்.
வினைகொடுப்பவன் - வினைகளைப் போக்கிப் பிறவியை ஒழித்துப் பேரின்பம் அருளும் சிவபெருமான். சங்கை - ஐயம். தகுதி- ஒழுக்கத்தால் உயர்தல் மிக்கமறையவர். கீர்த்தியை உடைய மறையவர். உயர்கீர்த்தி வினைத்தொகை.
கங்கைநாடு:- கங்காநதி பாயும் நாட்டினின்றும் வந்த மறையவர் என்றேனும் அந்நாடு வரையிலும் பரவிய கீர்த்தியை யுடையமறையவர் என்றேனும் கொள்க.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 6

நாறு கூவிள மத்த நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

மணம்வீசும் வில்வம், ஊமத்தை ஆகியவற்றோடு பாம்பையும் முடியில் சூடிய நம்பனும், விடை ஏற்றினை விரும்பி ஏறும் ஈசனும் ஆகிய சிவபிரான் மேவிய ஊர், திருநீறு பூசிய உருவினராய், நெஞ்சினில் வஞ்சம் சிறிதும் இன்றித் தெளிவு பெற்ற அடியவர்கள் சென்று தொழும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

ஏறும் ஏறிய ஈசன் - என்பதிலுள்ள உம்மை ஏற்றின் அடங்காமையையும் அதை அடக்கிய ஈசன் ஆற்றலையும் குறித்தது. பசுக்களுக்கு எல்லாம் பதியாதலை உணர்த்துவதே அதன் உண்மைக் கருத்து. இருந்து அமர்தரும் ஊர் என்றதால் நிலைத்திருக்கையும் மிக்க விருப்பமும் புலப்படும்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 7

நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தற முரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிக்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.

பொழிப்புரை :

நந்தி மத்தளம் வாசிக்கச் சுடலையில் நடனம் ஆடிய தலைவனும், விடத்தை விரும்பி உண்டு முன் ஒரு காலத்தில் அறம் விரித்துச் சனகாதியர்க்கு உரைத்தருளியவனும் ஆகிய சிவ பிரானுக்கு உகந்த ஊர், விரிந்த மறைகளைப் பயின்ற அந்தணர்கள் வாழ்வதும் அழகிய போதிகையில் குடம் அமைந்தது போன்ற உறுப்புக்கள் திகழும் மணிமாடங்கள் விளங்குவதுமாகிய காழி நகராகும்.

குறிப்புரை :

நடமது - திருக்கூத்து, நடனமாகியமது எனக் கொண்டுரைத்தலுமாம். ஆனந்த நடனம் என்பதை நடமது எனப் பொருந்தும் மதுவை உண்டு அடையும் இன்பத்தை மது எனலாம். ஆனந்தத்தைக் குறிக்க அச்சொல்லை ஆள்வது பொருந்தும். நந்தி மத்தளம் வாசிக்க நடமாடினார் என்னும் வரலாறு இதில் குறிக்கப் பட்டது. ஒருகாலம் அறம்விரித்து உரைத்தவற்கு என்பதில் சநகாதி யார்க்குக் கல்லாலின் கீழ் இருந்து உபதேசித்த உண்மை குறிக்கப் பட்டது. இடம் - பரப்பு. வேதப்பொருளின் விரிவைக் குறித்தது. இருந்தவர் - பெருந் தவத்தோர்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 8

கார்கொண் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொண் மங்கையு மஞ்ச வெழின்மலை யெடுத்தவ னெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

கரியமேனியனாகிய இராவணன் தன் வலிமையைப் பெரிதெனக் கருதி அழகிய உமைநங்கை அஞ்சுமாறு அழகிய கயிலை மலையை எடுத்தபோது அவன் நெரியுமாறு சிறப்புமிகு பாதத்தில் அமைந்த ஒரு சிறு விரலால் செற்ற சிவபிரான் உறையும் கோயில், மலர்களில் பொருந்திய தேனை உண்ண வண்டுகள் சூழ்ந்து விளங்குவதும் தண்வயல்களை உடையதுமான காழி நன்னகர் ஆகும்.

குறிப்புரை :

ஏர் கொள்மங்கை - அழகுடைய உமாதேவியார். எழில் மலை - அழகிய கயிலை, உயர்ச்சியைக் குறித்த எழுச்சியுமாம். தார் - பூ.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 9

மாலு மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் கூடி நின்று யார் பெரியர் என்று தம்முள் மாறுபட்ட மனத்தினராய் நிற்க, அவர்களிடையே தனது பக்கத்தையும் காண மாட்டாத வகையில் தோன்றி நின்ற பரஞ்சுட ராகிய சிவபிரானது பதி, சேல், வாளை, கயல் ஆகியன தம் கிளையொடு செறிந்து வாழ்வதும், ஆலும் நெற்கதிர்களைக் கொண்டது மான அணிவயல்களை உடைய காழி நன்னகராகும்.

குறிப்புரை :

பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர் - தனது பக்கத்தையும் காண்டற்கு எளிதல்லாத மெய்யொளி. சேல், வாளை, கயல் என்பன வெவ்வேறு வகைமீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம் பல உள. ஆலும்சாலி - ஆடுகின்ற நெல்.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 10

புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே. 

பொழிப்புரை :

அழகிய கழலணிந்த திருவடிகளைக் காணும் மன மற்ற பொய்மைமிக்க புத்தர், சமணர் ஆகியவர்க்கு இல்லாதவாறு திகழ்கின்ற நற்செழுஞ்சுடர்க்கு ஊர், சித்தர்களும், அமரர்களும் முறை யோடு செறிந்த நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்து \\\\\\\"முத்தனே அருள்\\\\\\\" என வேண்டி நிற்கும் காழி நன்னகராகும்.

குறிப்புரை :

`பொய்மிகு` என்பது இடைநிலை விளக்கு. பொலி கழல் இணைகாணும் சித்தம் அற்றவர்க்கு - பொன்போல் ஒளிசெய்யும் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் ஒழிந்த அப்புத்தர்க்கும் சமணர்க்கும். இல்லாமை - பெறுதல் இல்லாதபடி, திகழ்ந்த நல் செழுஞ்சுடர்க்கு - சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர்கொண்டு வழிபாடு செய்யும்போது `முத்தனே அருள்` என்று முறையிட்டுக் கொண்டனர் என்றபடி. குறையிரந்து முறைமை செய்தல், அரசர் முதலியவர்பால் குடிகள் முதலியார்க்கு உள்ளது.

பண் :பியந்தைக்காந்தாரம்

பாடல் எண் : 11

ஊழி யானவை பலவு மொழித்திடுங் காலத்தி லோங்கு.
* * * * * *

பொழிப்புரை :

பல ஊழிக்காலங்கள் மாறிமாறி வந்துறும் காலங்களிலும் அழியாது ஓங்கி நிற்கும் சீகாழி.

குறிப்புரை :

* * * * * *
சிற்பி