சீகாழி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர்
அம்பர மடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாத னுத்தமன் ஒளிமிகுந்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

நம் பொருள், நம் மக்கள் என்று பற்றுச் செய்து நீர் அழிந்தொழிந்து அல்லல் உறுதற்குமுன்னரே, தேவர் தலைவன், உத்தமன், ஒளிமிக்க செஞ்சடையை உடைய நம்பன் எழுந்தருளிய நன்னகராகிய அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

பொருட்பற்றாலும் மக்கட் பற்றாலும், லோகாந்தரம் சேர்ந்து, துன்பம் அடைதற்கு முன்னமே சீகாழியைச் சேருங்கள் நீங்கள் என்று உபதேசம் புரிந்தருள்வதை உணர்க. அம்பரம் அடைதல்:- நாதனார் ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் போய்ச் சேர்தல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பாவமேவு முள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர்
தீவமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

பாவங்களைச் செய்யும் உள்ளத்தோடு இறை வனிடம் பக்தி இன்றி நாள்தோறும் பயனற்றன செய்து இறப்பதன் முன்னம், நீர் சிவபிரானிடம் அன்பு கொண்டு தீபம், மாலை, தூபம் முதலியன ஏந்திய கையராகித் தேவர் தலைவனாகிய அவ் விறைவன் எழுந்தருளிய ஊராகிய அழகிய காழிப்பதியை அடை வீர்களாக.

குறிப்புரை :

நல்வினை தீவினை என்பன கன்மங்கள். அவை ஆகாமியவினை. அவ்விரண்டும் அறமும் மறமும் ஆகும் நிலைமை யில் சஞ்சிதம் எனப்படும். அறம் - புண்ணியம், மறம் - பாபம். அப் புண்ணிய பாவம் இரண்டும் அநுபவத்திற்கு வந்து சுக துக்கங்களை ஆக்கும், அப்போது அவ்விரண்டும் பிராரப்தம் எனப்படும். புண்ணி யம் பசுபுண்ணியம், சிவபுண்ணியம் என இருவகைப்படும். அவற்றுள் ஈண்டுச் சிவபுண்ணியத்துள் அடங்கும் சிவபூஜையைக் கருத வேண்டும். \\\\\\\"புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு\\\\\\\" என்பது திருமந்திரம். அப்புண்ணியத்தைச் செய்க என விதிப்பாராய், \\\\\\\"நீர், தீபம், மாலை, தூபம் என்பவை செறிதல் வேண்டும்\\\\\\\" என்றருளினார். நீர் என்பது முன்னிலைப் பெயராயினும் பொருத்தமாயிருத்தலின் வழி பாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டது.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்ற மெள்கவே இடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானைச் செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.

பொழிப்புரை :

உணவும், உடையும் இன்றித் துவண்டு, உற்ற சுற்றத்தினர் விலகிச்செல்லத் துன்பம் உறுவதன் முன்னம், கங்கை தங்கிய சடையினனும், நான்முகன் தலையைக், கொய்தவனும் ஆகிய சிவபெருமான் உகக்கும் தேன் மணம் கமழும் மலர்ப்பொழில் சூழ்ந்த அழகிய காழிப் பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

இடுக்கண் என்பது மரூஉ. அலக்கண், தறுகண், வன் கண், புன்கண் முதலியவை உள்ளேயுற்ற நிலையை வெளியே தோற்றும் கண்ணென்னும் உறுப்பைப் பற்றித் தோன்றிய பெயர் களாதல் அறிக. ஆறும் - சுவதந்திரம் முதலிய அறுகுணங்களும் எனக் கொண்டு, அவற்றால் ஓர்தற்குரிய சடையுடையான் எனல் சிறக்கும். சடைஞானமயமாகும், \\\\\\\\\\\\\\\"நுண்சிகைஞானமாம்\\\\\\\\\\\\\\\" (திருமந்திரம்)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யு மெம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

பொருளை விரும்பிப் பிறர் மனைவாயிலை நடந்து சென்று அடையக்கண்டும் அச்செல்வர் `நாளை நண்பகற்போதில் வருக `எனக் கூறும் உரையைக் கேட்டு வருந்துவதன் முன்னம் நம் மேல் ஈடு பாடுடையவரும், விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும் வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

இரப்பவர் பிறர் கடைவாயில் நின்று \\\\\\\"இடுக\\\\\\\" என்று இரக்க அவர் \\\\\\\"நாளை நண் பகலில் வருக\\\\\\\" என்று சொல்லும் சொல்லைக் கேட்டுணர்ந்து வருந்தும் நிலையெய்தும் முன்னரே சிவ பிரான் திருக்காழியைச் சேருங்கள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன்ற லாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே.

பொழிப்புரை :

கண்கள் காட்சி தவிர்ந்து உடல் கன்றி ஒன்றல்லாத பல நோய்கள் நும்மைத் தாக்கி அழிப்பதற்கு முன்னமே விண்ணகத் தேவர் உய்யக் கடலிடைத் தோன்றிய நஞ்சினை உண்ட முக்கண்ண ராகிய எம் தலைவர் விளங்கும் காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

காண்பு - காட்சி, \\\\\\\"காண்பரிதாய பரசுடர்\\\\\\\" \\\\\\\"காம்பி னொடுநேத்திரங்கள் பணித்தருளவேண்டும் \\\\\\\"காண்பினிய மணி மாடம்\\\\\\\" (தி.7 ப.46 பா.2,3) \\\\\\\"கண்கள் காண்பொழிந்து\\\\\\\".

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமேபிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

துன்பமயமான வாழ்க்கையை நடத்துதற்கு வீணாகப் பிறந்து, நீர் எல்லையில்லாத மாறுபாடுகளில் கிடந்திடாது புறப்படுவீர்களாக. பல்லில்லாத வெண்டலையில் பலியேற்கத் திரிதற்கு முல்லை நிலத்து ஆனேற்றில் ஏறிச் செல்வோனாகிய சிவ பிரானது அழகிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

அவத்தம் - (அபத்தம்) தவறு, பொய். பலிக்கு இயங்கு பான்மையான், இயங்குதல் - நடத்தல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்திரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே. 

பொழிப்புரை :

மிகுதியாகப் பொய் பேசும் வாயினராய்ப் பொறாமையோடு பேசும் நீர், கோழைமிகுந்த கண்டத்தினராய் இரைப்பு அடைதற்கு முன்னரே, கரிய மேனியனாகிய இராவணனை மலையின் கீழ் நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பினை அரையில் கட்டிய பரமனும் ஆகிய சிவபிரானது காழியை அடைவீர்களாக.

குறிப்புரை :

ஐமிகுத்த கண்டர் - கோழை பெருகிய கழுத் தினர்.இரைப்பது என்பது கோழைகட்டியபின் பேசமுடியாமல் மூச்சுடன் வரும் ஒலி.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினா ரிகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

கைகால்கள் தளர்ந்து, விரும்பி உடலைப் பற்றிய நோயினால் அன்பொடு போற்றிய அழகிய மனைவியரும் இகழ்ந்து பேசுதற்கு முன்னமே, திருமால் பிரமர்கள் மதித்துக் காண ஒண்ணாத நீலகண்டர் எழுந்தருளிய காழிப்பதியை அடைவீர்களாக.

குறிப்புரை :

காலுங் கையுந்தளர்ந்து, நோய்மிகப் பெற்றமையால், அன்பொடு உபசாரங்கள் செய்து போற்றிவந்த மனைவியரும் இகழ்ந் துரைக்கும் இழிவை அடையும் முன்னரே காழிசேர்மின் என்க. ஏலம்- மயிர்ச்சாந்து.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே. 

பொழிப்புரை :

பலநாள்கள் நோயிற் கிடத்தலால் தந்தை என்ற முன்நிலையை வெறுத்த அன்பு அற்ற புதல்வர்கள், மனைவி முதலா னோர் முனிவு கொள்ளுதற்கு முன்னரே, தலைபறித்து வாழும் சமணர், தேரர் ஆகியோர் நினைதற்கும் அரியவனும், சிலைபிடித்து முப்புரம் எரித்தவனும் ஆகிய சிவபிரானது அழகிய காழியை அடைவீர்களாக.

குறிப்புரை :

பெற்றவரை வழிபட்ட மக்களும் பல நாள் படுக்கையிற் கிடந்து வருந்தும் அப்பெற்றோர்க்கு அவ்வப்போது வேண்டுவன செய்து சலித்து, வெறுத்து, இவ்வாறுகிடந்து தாமும் துன்புற்று நம்மை யும் துன்புறுத்தும் இவர்கள் இருப்பதினும் இறப்பதே நன்று, என முன்னைய நிலையை வெறுப்பர். அதனை `நிலைவெறுத்தநெஞ்சம்` என்றார். வெறுத்தல் செறிதல், நெருங்கல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

தக்கனார் தலையரிந்த சங்கரன் தனதரை
அக்கினோ டரவசைத்த வந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கவின்ப மெய்திவீற் றிருந்துவாழ்தன் மெய்ம்மையே. 

பொழிப்புரை :

தக்கன் தலையை அரிந்தவனும், சங்கரனும், தனது இடையில் என்புமாலையுடன் பாம்பு அணிந்த அந்தி வண்ணனும் ஆகிய சிவபிரானது காழிப்பதியைப் பொருந்துமாறு ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப்பாடல்களை வல்லவர்கள் மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் உண்மையாகும்.

குறிப்புரை :

தலையரிந்தசங்கரன் என்றதால், தலை அரிந்த கொடுமை செய்தல் கடவுட்குத்தகுமோ? என்பார்க்குச் சுகத்தைச் செய்பவன் அசுகத்தை விளைக்குமளவு மிக்க அபராதங்களைத் தக்கன் செய்தான் என்றும், ஆண்டும் சிவபிரான் மறக்கருணையால் ஆண்டு சுகத்தையே பின்விளைவாகச் செய்தான் என்றும் உணர்க.
சிற்பி