திருத்துருத்தி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்க ளுந்திவந்
திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்
கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்
உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.

பொழிப்புரை :

மலைகளிலிருந்து பொன்னையும் , அரிய அணி களையும் உந்தி ஆரவாரம் செய்து அலை வீசி வரும் காவிரிக் கரை யிலுள்ள திருத்துருத்தியில் எழுந்தருளும் விருப்புடைய இறைவனே ! சொன்னவாறறிதலில் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை உடையோமோ ?

குறிப்புரை :

காவிரியிலிருந்து கிளைத்த விக்ரமம் என்னும் ஆறு செல்ல அவற்றைச் சார்ந்திருத்தலின் துருத்தி எனப்பட்ட இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் சொன்னவாறறிவார் என்பது . அது கருதி , உரைத்தலைப்பொலிந்த - சொன்னவாறறிதலில் விளங்கிய உனக்கு உணர்த்துமாறு வல்லோமோ ? வல்லோம் அல்லோம் . அறிவார்க்கு அறிவிப்பது எப்படி என்றவாறு . பொலிந்த உனக்கு என்பதில் பெய ரெச்சத்து அகரம் தொக்கது . சொன்னவாறு அறியவல்ல உனக்கு உரைத்தலைப் பொலிந்து உணர்த்துமாறு வல்லமோயாம் ? வெளிப் படச் சொல்லாத முன்பே அன்பர் நினைத்தவற்றைச் சொன்னவாறு அறியும் உனக்கு யாம் உணர்த்தும் வன்மை யுடையோமோ ? இல்லை , எனலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்
தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்
கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்
எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகில் நல்லமே.

பொழிப்புரை :

சடையில் அகத்திப்பூ , வன்னி , வில்வம் கொன்றை மலர் என்பவற்றை அடுத்தடுத்துத் தொடுத்தணிந்தவனே ! திருத்துருத்தி யில் எழுந்தருளியவனே ! நீ காலனைச் சினந்து திருவடியால் அவன் மார்பில் உதைத்தழித்த காரணத்தைப் பலகாலும் எடுத்து எடுத்து உரைத்தலில் வல்லமை உடையோமாயின் நாங்கள் நன்மை உறுவோம் .

குறிப்புரை :

சிவபிரான் சடையில் , அகத்திப்பூ , வன்னியிலை , கொன்றைமலர் , வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த மாலையை அணிந்துளான் என்னும் உண்மை வேறு யாண்டும் காண்டல் அரிது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்
சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்
பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக்
கெங்குநின் னிடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.

பொழிப்புரை :

கங்குலில் ஒளி வீசுதலைக் கொண்ட திங்களோடு கங்கையும் தங்கிய செஞ்சடையையும் , சங்கால் இயன்று விளங்கும் வெண்குழை தொங்கும் காதினையும் , பொங்கி விளங்கும் பூண நூலையும் உடைய உருத்திரமூர்த்தியே ! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க , திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம் யாதோ ?

குறிப்புரை :

பூணூல் உருத்திரா - முப்புரி நூலைப்பூண்ட உருத்திர மூர்த்தியே . துருத்திபுக்கு எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்தல் என்கொல் :- புக்கது துருத்தியாயினும் எல்லா இடங்களும் சிவப் பிரகாசத்தால் உன் நிறைவையே உணர்த்துகின்றன . அவ்வாறு ஓரிடத் திருந்து பலவிடத்தும் காட்சி தரும் ஆற்றல் இருந்தவாறென்னே ! என்ற படி , துருத்தியில் இன்றும் அத்திருக் கோயில் பொலிவு அத்தலம் முழுதும் விளங்கக் காணலாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கருத்தினாலொர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி யையமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாய மென்பதே.

பொழிப்புரை :

கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில் பயிரிட்டு வரும் வருவாயும் உனக்கு இல்லை . தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி , ஒரு பெண்ணைத் தன் உடம்பின் ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய மாயம் யாதோ ?

குறிப்புரை :

( பா . 8 பார்க்க ). யோகியாயிருந்த உண்மை உணர்த் தியவாறு . ஒருகாணி நிலம் உடையவனாகி , அதிற் பயிரிட்டு ஜீவனம் புரிதல் இல்லை . தம் வறுமைத்துன்பம் உரைத்துப் பிச்சை எடுப்பது . ` பகலிடம் புகலிடம் .... துருத்தியார் , இரவிடத் துறைவர் வேள்விக் குடியே ` என்று முதலிற் கூறியதுமன்றிப் பாடல்தொறும் அதனைத் தெரிவித்திருப்பதாலும் . ( தி .3 ப .90 பா .1.) ` ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்பு விட்டுத் துருத்திபுக்கு இருத்தி , இது என்னமாயம் என்பதோ ?` என்று இங்கு வினாவியதாலும் ` காப்பது வேள்விக்குடி தண்துருத்தி யெங் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம் ` என்றதாலும் ஆளுடைய பிள்ளையார் காலத்துக்கும் முன்பே , பகலில் துருத்திவாசமும் இரவில் வேள்விக்குடிவாசமும் உண்டு என்ற வரலாறு வழங்கப் பட்டமை விளங்கும் . இவை இல்லையேல் இரண்டு தலங்களையும் ஒருங்கு பாடார் என்க . ` வட்டக்குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் அட்டக்கொண் டுண்பதறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோம் ` என்றதில் ` வேள்விக்குடி ` என்னும் பெயர்க்காரணம் உள்ள தறிக . மான்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு யானைத்தோல் போர்ப்பதறிந்தோமெனில் நாம் இவர்க்கு ஆட்படோம் 7. என்பதில் துருத்தியோகியை நினைவூட்டினாரென்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.

பொழிப்புரை :

திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில் யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர் இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச் செய்த இழுக்கு யாதோ? சொல் வாயாக.

குறிப்புரை :

துருத்தியில் எழுந்தருளிய முதல்வனே, பகலில் துறவி போல வேடங்கொண்டு இரவில் வேள்விக்குடியில் மணவாளக் கோலம்பூண்டு, தழும்பும் உற இணை விழைச்சுடையாய்; துறக்கும் ஆறு சொல்லப்படாய், உன் திருந்திய திருவடிகளை மறக்கும் மாறுபாடு சிறிதும் இல்லாத என்னை, மையல்செய்து, இம்மண்ணுலகில் பிறக்குமாறு காட்டியருளினை. நோய்களுக்கு இடமாகும் உடம்பைத் தவிர்த்து, இறக்குமாறு காட்டியருளினை ; இவ்வாறு பிறப்பும் இறப்பும் நீ காட்ட நான் உனக்குச்செய்த இழுக்கு யாது? மறக்கும் ஆறு எனலும் உண்டு. நான்கடியிலும் ஆறு என்றே கொள்ளல் ஏலாததன்று. `பிணிப் படும் உடம்பு `-` இடும்பைக் கிடும்பை` ( மூதுரை ) என்றதுணர்க.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்
துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்
மயிற்கெதிர்ந் தணங்குசாயன் மாதொர்பாக மாகமூ
வெயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே.

பொழிப்புரை :

வெயிலை எதிர்த்து அதற்கு இடம் கொடாது அகம் குளிர்ந்த பைம் பொழிலில் துயிலாதனவாய்ப் பறவைஇனங்கள் நிறைந்து வாழும் தண்மையான திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே ! மயிலொடு மாறுபட்டு அழகால் அதனை வருந்தச் செய்யும் அழகினை உடைய உமைபாகராக மூவெயில்களை எதிர்த்து அவற்றை ஓரம்பினால் எரித்த சிறந்த வில்லாளி யல்லையோ நீ !.

குறிப்புரை :

துருத்தியில் உள்ள சோலைவளம் கூறியவாறு . வெயிலுக்கு எதிர்த்து இடம் கொடாது குளிர்ந்த சோலை இப்பொழுதும் உண்டு . அணங்கு - அழகு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்
துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்
அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்
மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்தவண்ண லல்லையே.

பொழிப்புரை :

மழுப்படையினை உடைய செல்வரே ! பல்லூழிக் காலங்களில் அழிந்தொழிந்த சிறப்பினராகிய திருமால் பிரமர் களுடைய தலையோடுகளைக் கட்டிய முடிச்சுடையவரே ! கரந்தை சூடியவரே , திருத்துருத்தியில் உறைபவரே ! அழகியதும் ஒப்பற்றது மான இளம்பிறையின் குளிர்ந்த நிலவொளியை அவாவும் , நல்ல மணியை உடைய படப்பாம்பை ஒருங்கே அணிந்த தலைமையாளர் அல்லிரோ நீர் .

குறிப்புரை :

கணிச்சி படை - கணச்சியம்படை , மழுப்படை . கழிந் தவர் - நூறுகோடி பிரமர்கள் நொந்தினார் , ஆறு கோடி நாராயணர் அங்கனே , ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர் , ` ஈறிலாதவன் ஈசன் ஒருவனே , ( தி .5 ப .100 பா .3.) என்றதிற் குறித்தவர்கள் , துணி சிரம் கிரந்தை - துணிந்த தலைமுடிச்சு ; தலை மாலையை அணிந்தவனே ; கரந்தையாய் - சிவகரந்தையைச் சூடியவனே `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்
இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக வெண்ணினாய்
கடற்படை யுடையவக் கடலிலங்கை மன்னனை
அடற்பட வடுக்கலில் லடர்த்தவண்ண லல்லையே.

பொழிப்புரை :

நெற்றிவிழி சுடுதலால் பொடியாய் உடம்பு அழிந்த மன்மதன் இடர்ப்பட , அவனை வென்று தமக்கு இடமாகத் திருத்துருத்தியைக் கொண்டவரே ! கடற்படையை உடைய இலங்கை மன்னன் இராவணன் துன்புறுமாறு மலையின் கீழ் அகப்படுத்தி அடர்த்த தலைமையாளர் அல்லிரோ நீர் .

குறிப்புரை :

நெற்றிக்கண்ணால் சுட்டொழிக்க , சாம்பராகி மெய்யிழந்த உருவிலியாகிய மன்மதன் . இடர்ப்படும்படி வென்று துருத்தி இடம் ஆகத் திருவுள்ளம் கொண்டருளினை . கடல் போலும் பெரும் படையை உடைய அப்பிரசித்திபெற்ற கடலின் நடுவே உள்ள இலங்கைக்கு வேந்தனை . கொலை உறத் திருக்கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன் அல்லையோ ?

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

களங்குளிர்ந் திலங்குபோது காதலானு மாலுமாய்
வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்
துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடி
உளங்குளிர்ந்த போதெலா முகந்துகந் துரைப்பனே.

பொழிப்புரை :

தேன் உடையதாய்க் குளிர்ந்து இலங்கும் தாமரைப் போதில் எழுந்தருளிய பிரமனும் திருமாலும் வந்து வணங்கி அழகிய திருவடிகளைக் காணாதவராயினர் . ஒளி துளங்கும் இளம்பிறையைச் சூடிய சென்னியினராய திருத்துருத்தி இறைவரே ! உம் திருவடிப் பெருமைகளை உளம் குளிர்ந்த போதெல்லாம் உவந்து உரைத்து மகிழ்கிறேன் .

குறிப்புரை :

கள் அம்குளிர்ந்து இலங்குபோது காதலான் - தேனுடைய அழகிய குளிர்வுற்று விளங்கும் தாமரைப்பூவை விரும்புமவன் . களம் இடமுமாம் , போது ஆகிய களம் , களமாகியபோது களம் போது ஆகக் காதலிப்பவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனை
உத்தம மெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம்
துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்
பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.

பொழிப்புரை :

புத்தர்களும் தத்துவங்கள் அற்ற நெறியாகிய சமணமதத்தினரும் உரைத்த பொய்களை உண்மை எனக் கொள்ளாது , வண்டினங்கள் மகிழ்வோடு எழுந்து , துத்தம் என்னும் சுருதியில் பாடும் பைம்பொழில் சூழ்ந்த திருத்துருத்தியில் விளங்கும் பக்தர்களிடம் அன்பு செய்யும் பரமனைத் தொழப் பிறப்பறுத்தல் பயனாய் விளையும் .

குறிப்புரை :

உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம் - ஏழிசையுள் ஒன்றானது . பித்தர் பித்தன் :- பித்தர்க்கெல்லாம் பித்தனாயிருப் பவனைத் தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே பெற்றி மையாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்
சுற்றுமுற்று மாயினா னவன்பகர்ந்த சொற்களால்
பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவே
குற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே.

பொழிப்புரை :

கல்விகற்று நிறைவு பெற்றவர்களால் தொழப் பெறும் கழுமலத்துள் தோன்றிய , அருந்தமிழை முற்றிலுமாக அறிந்துணர்ந்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் விடைக் கொடியை ஏந்திய சிவபிரானது திருத்துருத்தியை விரும்பி வழிபடுவோர் குற்றமற்றவர் ஆவர் . அவரிடம் நற்குணங்கள் வந்து பொருந்தும் .

குறிப்புரை :

சுற்றும் முற்றும் ஆயினன் - சுற்றிலும் முற்றிலும் ஆகிய சிவபிரான் . பெற்றம் - எருது எழுதிய கொடிக்கு ஆகுபெயர் .
சிற்பி