திருக்கோவலூர்வீரட்டம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

படைகொள்கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்
இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமே
குடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்
விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

படைகளைக் கொண்ட கூற்றுவன் வந்து உடலைப் பிரித்து உயிரைக் கொள்வதற்குப் பாசக்கயிற்றை வீசும் நேரத்தில் இடையில் வந்து தடுப்பார் எவரும் எமக்கு இல்லை . நெஞ்சே ! எழுக . என்னோடு போதுக . வெண்கொற்றக்குடையைக் கொண்ட மலைய மானின் முதிய தாதையாக விளங்கும் குழகனும் விடைக் கொடியினனு மாய்க் கோவலூரில் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

பாசம் - கயிறு ; எமபாசம் . நெஞ்சமே எழுக , போதுக . வெண்கொற்றக் குடையைக்கொண்ட மலையமான் முது தாதையாகிய குழகன் சிவபிரான் . குழகன் இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் ; ( பா . 3.6.9) விடையது - அது பகுதிப்பொருள் விகுதி . வீரட்டானம் , வீரஸ்தாநம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கரவலாளர் தம்மனைக் கடைகடோறுங் கானிமிர்த்
திரவலாழி நெஞ்சமே யினியதெய்த வேண்டில்நீ
குரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்
விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கரப்பவர் இல்லங்கள் தோறும் சென்று இரவாதே . இனியதை நீ எய்த வேண்டின் , வண்டினங்கள் குரா மரங்களில் ஏறிக் குழலும் யாழும் போல ஒலிசெய்யும் கோவலூரில் மணம் விரவி வீசும் கொன்றைமாலையை அணிந்த சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

கரப்பவர் வீடுகளின் கடைவாயில் தோறும் , கால் நிமிர்த்து ( நடந்து ) இரப்பதைச் செய்யாதே ; நெஞ்சமே ! ஆழி நெஞ்சம் - கடலாழத்தினும் காண்டற்கரிய ஆழமுடைய நெஞ்சமே ! நினைப் பென்னும் நெடுங்கிணறு . இனியதை எய்தவேண்டினால் , சிவபெருமான் வீரட்டானத்தைச் சேர்வோம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்
அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் ளழுந்தாதே
கொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்
வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நல்ல உள்ளம் உடையவர்களே ! உயிருக்கு உறுதி யானதை நீர் அறிய விரும்புவீராயின் நரகத்தில் அழுந்தித் துயரு றாமல் , செவி ஏற்கும் பாடல்களைப் பாடுபவனும் குழகனும் கோவலூரில் கங்கை தங்கிய சடையினனாக விளங்குவோனும் ஆகிய பெருமான் உறையும் வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதி யாவதை அறிதிர் என்னில் திருக்கோவலூர் வீரட்டானம் சேர் வோம் . அள்ளற்சேறு - நரகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கனைகொளிருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்
இனையபலவு மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்
பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்
வினையைவென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

மூப்புக் காலத்தில் கனைத்தலைக் கொண்ட இருமல் , சூலை நோய் , நடுக்கம் , குன்மம் முதலியன வந்து நலிவு செய்தற்கு முன்னே , பனைகள் மிக்க பசிய பொழில் வயல் ஆகியன சூழ்ந்த கோவலூரில் , இருவினைகளும் அற்ற வடிவினனாய் விளங்கும் சிவபிரானது வீரட்டானத்தை அடைவோமாக .

குறிப்புரை :

கம்பதாளி - தாள்நடுங்கும் ஒருவகை நோய் ; கம்பம் - நடுக்கம் ; தாளி - கால்களைப்பற்றுவது . ` பெண்ணை ` என்றதற்கேற்ப பனந்தோப்பு மிக்கிருக்கும் நாடு . இருவினையையும் போக்கிய சிவ வேடத்தை உடையவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உளங்கொள்போக முய்த்திடா ருடம்பிழந்த போதின்கண்
துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமே
வளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

ஆழமான சிந்தனையை உடைய நெஞ்சமே ! உடலற்ற காலத்தில் மனத்தால் விரும்பியவற்றை எய்துதல் இயலாது . நாள் தோறும் துளங்கித் துயருறாதே . வளமான பெண்ணையாறு வந்து பாயும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் , விளங்கிய கோவணத்தினனாய்ச் சிவபிரான் வீற்றிருந்தருளும் வீரட்டானத்தை அடைவோம் .

குறிப்புரை :

ஆழி நெஞ்சமே ! - ஆழ்தலையுடைய மனமே ! மனத்தில் விரும்பப்பட்ட போகங்களை அநுபவிக்கச் செய்யும் புண்ணியம் இல்லாதவர்கள் கட்டையை விட்டகன்ற சமயத்தில் , தளர்ந்து நின்று நாள்தோறும் துயரம் அடையாதே .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்
ஆடுபோல நரைகளா யாக்கைபோக்க தன்றியும்
கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்
வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

நம் உடல் நரையுடையதாய் , ஆடுபோல அலைதலால் கேடு , முதுமை , சாக்காடு ஆகியன நெருங்கி வந்து அழிதலை உடையது . பசுமையான பொழில்கள் செறிந்து நின்று அணி செய்யும் கோவலூரில் விளங்கும் குழகனும் , வீடுகாட்டும் நெறியினனும் ஆகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் . நெஞ்சே ! வருக .

குறிப்புரை :

கேடும் முதுமையும் இறப்பும் பொருந்திவந்து நாள் தொறும் ஆடுகளைப்போல நரைகளாகி உடம்பு அழிதலுடையது . பேரின்ப வீட்டைக்காட்டும் திருநெறி . நெறியினான் - திருநெறியில் சென்று அடையப்பெறும் சிவபிரான் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

உரையும்பாட்டுந் தளர்வெய்தி யுடம்புமூத்த போதின்கண்
நரையுந்திரையுங் கண்டெள்கி நகுவர் நமர்க ளாதலால்
வரைகொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்
விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

பேச்சும் , பாட்டும் தளர்ந்து நம் உடல் மூத்த போதில் நம் உறவினர் நரைதிரை கண்டு இகழ்ந்து சிரிப்பர் . ஆதலால் , மலையி லிருந்து இழிந்து வரும் பெண்ணையாறு பாய்ந்துலாவும் வயல்கள் சூழ்ந்த கோவலூரில் மணம் கமழும் சிறப்புமிக்க வெண்ணீறணிந்தவனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தைச் சென்றடைவோம் .

குறிப்புரை :

உரையும் பாட்டும் - பேச்சும் பாடலும் . ` பாட்டும் உரையும் பயிலாதன இரண்டோட்டைச் செவியும் உள`.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

ஏதமிக்க மூப்பினோ டிருமலீளை யென்றிவை
ஊதலாக்கை யோம்புவீ ருறுதியாவ தறிதிரேல்
போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவலூர்தனுள்
வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

துன்பம்மிக்க மூப்போடு இருமல் ஈளை ஆகியனவற்றுக்கு இடனாய பருத்த உடலைப் பேணித் திரிபவர்களே ! உயிர்க்கு உறுதியாவதை அறிவீராயின் , மலர்களில் வண்டுகள் பண் பாடும் அழகிய கோவலூரில் , வேதங்களை ஓதும் நெறியினன் ஆகிய சிவ பிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

ஈளை - சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள் ஒன்று . ஊதல் ஆக்கை - பருத்தலையுடைய உடம்பு . உறுதி - ஆன்ம லாபம் . அறிதிர் ஏல் - அறிவீர் எனில் . வேதம் ஓதும் நெறியினான் - வேதநெறியை அருளியவன் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஆறுபட்ட புன்சடை அழகனாயி ழைக்கொரு
கூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள்
நீறுபட்ட கோலத்தான் நீலகண்ட னிருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

கங்கை தங்கிய மென்மையான சடைகளை உடைய அழகனும் , உமையம்மைக்குத் தன் மேனியில் ஒரு கூற்றை அளித்தவனும் ஆகிய குழகன் விளங்கும் கோவலூரில் நீறணிந்த கோலத்தினனாய் , நீலகண்டனாய் , திருமால் பிரமர்க்கு வேறான சிந்தையனாய் விளங்கும் சிவபிரானின் வீரட்டானத்தை அடைவோம் வருக .

குறிப்புரை :

ஆயிழை - உமாதேவியார் . திருவெண்ணீறு சண்ணித்த மேனியழகினன் . இருவர் - மாலும் அயனும் , வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன் .` அந்தணர் தம் சிந்தையானை ` ` வாயானை , மனத் தானை , மனத்துள் நின்ற கருத்தானை `.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

குறிகொளாழி நெஞ்சமே கூறைதுவரிட் டார்களும்
அறிவிலாத வமணர்சொல் லவத்தமாவ தறிதிரேல்
பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்
வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

ஆழமாகப்பலவற்றை எண்ணும் நெஞ்சமே ! துவரூட்டிய ஆடையினர்களாகிய புத்தர்களும் அறிவிலாத சமணர்களும் கூறும் சொற்கள் பயனற்றவை ஆதலை உணர்வாயேயானால் , பொறிகளை உடைய வண்டுகள் இசைபாடும் அழகிய கோவலூரில் மணம் கமழும் கங்கையை அணிந்த சடையினனாகிய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் வருக .

குறிப்புரை :

` ஆழி நெஞ்சமே `. நீராழங்கண்டாலும் நெஞ்சாழம் காணமுடியாது . அவத்தம் - பொய் , பொறி - வரி . வெறி - மணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

கழியொடுலவு கானல்சூழ் காழிஞான சம்பந்தன்
பழிகள்தீரச் சொன்னசொற் பாவநாச மாதலால்
அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள்
விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.

பொழிப்புரை :

வீணே அழிதல் இல்லாதவர்களே ! உப்பங் கழிகளோடு கூடிய கடற்கரைச் சோலைகள் சூழ்ந்த காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் , பழிகள் நீங்கப்பாடிய இப்பதிகச் செஞ் சொல் , பாவங்களை நீக்கும் தன்மையன ஆதலின் இவற்றை ஓதி வழி படுங்கள் . அழகிய தண்ணிய கோவலூரில் பெரிய விழிகளைக் கொண்ட பூதப்படைகளை உடைய சிவபிரானது வீரட்டானத்தை அடைவோம் . வருக .

குறிப்புரை :

பழிகள் தீரச்சொன்ன சொல் . பாவநாசம் - பழிகள் ஒழியப் பாடியருளிய இத்திருப்பதிகத்தினை ஓதுவார்க்குப் பாவங்கள் அழியும் . கொண்டு - இத்திருப்பதிகப் பொருளை உள்ளத்திற் கொண்டு .
சிற்பி