திருவாரூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பருக்கையானை மத்தகத் தரிக்குலத் துகிர்ப்புக
நெருக்கிவாய நித்திலந் நிரக்குநீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழநீடு மாடமாளி கைக்கொடி
அருக்கன்மண்ட லத்தணாவு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால் , மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலைமால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாட மாளிகைகளை உடைய திருவாரூர் .

குறிப்புரை :

மத்தகம் - தலை , நெற்றி . அரி - சிங்கம் , அருக்கன் - சூரியன் . அணாவும் - கிட்டும் . ஆரூர் - ` ஆத்தி ` பற்றி வந்த காரணப் பெயர் . அது சோழ மன்னரது தார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்டவெள் ளெருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும்
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவூர்
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய்
அண்டரண்ட மூடறுக்கு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

` மலர்ந்த வெள்ளெருக்குமலர் , விரிந்தவன்னி யிலை , கொன்றைமலர் , ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர் , கெண்டைமீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர் .

குறிப்புரை :

இண்டை - திங்கள் வட்டம்போலத் திரட்சியுற்ற பத்திரபுட்பங் கலந்த மாலைவகை . சிவலிங்கத்திற்கு இண்டை இன்றியமையாதது . அண்டம் - மேலுலகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கறுத்தநஞ்ச முண்டிருண்ட கண்டர்கால னின்னுயிர்
மறுத்தமாணி தன்றனாகம் வண்மைசெய்த மைந்தனூர்
வெறித்துமேதி யோடிமூசு வள்ளைவெள்ளை நீள்கொடி
அறுத்துமண்டி யாவிபாயு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும் , காலன் உயிரைக் கவரவந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர் . எருமைகள் மயங்கியோடி வெள்ளியவள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர் .

குறிப்புரை :

` பாலாகித்தோன்றிப் பருகினாராவிகொள்ளும் ஆலாலம் ` கந்தபுராணம் - வள்ளியம்மையார் . மாணி - பிரமசாரி ; மார்க்கண்டேய முனிவர் , வண்மை - கொடைமை , வன்மை என்றும் பாடம் இருத்தல் கூடும் . வெறித்து - மயங்கி , கலங்கி . வள்ளை என்பது ஒரு கொடி , ஆவி - குளம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

அஞ்சுமொன்றி யாறுவீசி நீறுபூசி மேனியில்
குஞ்சியார வந்திசெய்ய வஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்தகொங்கை நுண்ணிடை
அஞ்சொலார் அரங்கெடுக்கு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

காமம் , குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து , ஐம்புலன்களும் ஒன்றிநிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர் , பஞ்சுபோன்ற மென்மையான அடிகளையும் , பருத்த தனங்களையும் , நுண்ணிடையையும் , அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறிநடஞ்செயும் ஆரூர் .

குறிப்புரை :

அஞ்சும் ஒன்றுதல் - ஐம்பொறிகளும் தத்தம் புலன்களைக் கொள்வதில் சிவபெருமான் திறத்திலன்றி மற்றெத்திறத்தி லும் ஈடுபடாமை . ` ஐந்துபேரறிவும் கண்களே கொள்ள ` ஆறு வீசுதல் - காமக் குரோத லோப மோக மத மாற்சரியம் , அறு பகையும் செற்று ஐம்புலனும் அடக்கி நிற்றல் . குஞ்சி - தலைமயிர் . ஈண்டுத்தலைக்கு ஆகுபெயர் : குஞ்சி ஆர - தலையார . வந்தி - வந்தனை . தலையாரக் கும்பிட்டு . அஞ்சல் என்னி - அஞ்சாதே என்னும் சிவபிரான் . பஞ்சியாருமெல்லடி - பஞ்சுலாவிய மெல்லடி . ( தி .2. ப .105. பா .9.) அடியின் மென்மைக்குப் பஞ்சு ஒப்பு . மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செய்யும் திறம் அவை யோரால் எடுத்துப் புகழ்ந்து பாராட்டும் அளவுடையதாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சங்குலாவு திங்கள்சூடி தன்னையுன்னு வார்மனத்
தங்குலாவி நின்றவெங்க ளாதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலைநீடு தேனுலாவு செண்பகம்
அங்குலாவி யண்டநாறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

சங்கு போன்ற வெண்மையான பிறைமதியைத் தலையில் சூடி , தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்துநிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர் , தென்னஞ்சோலைகளையும் , வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

சங்கு உலாவு திங்கள் - சங்கினைப்போலும் வெண்டிங்கள் . சூடி - சூடிய சிவபிரான் . எங்கள் ஆதிதேவன் என்று உரைக்கும் உரிமை ஆசிரியர்க்கு உண்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கள்ளநெஞ்ச வஞ்சகக் கருத்தைவிட் டருத்தியோ
டுள்ளமொன்றி யுள்குவா ருளத்துளா னுகந்தவூர்
துள்ளிவாளை பாய்வயற் சுரும்புலாவு நெய்தல்வாய்
அள்ளல்நாரை யாரல்வாரு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும் , தீய எண்ணங்களையும் கைவிட்டு , அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர் , வாளை மீன்கள் துள்ளிப்பாயும் வயல்களையும் , சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும் , நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர் .

குறிப்புரை :

கள்ளநெஞ்ச வஞ்சகக்கருத்து - நெஞ்சத்தின் இயல்பும் அதுகாரணமாகத் தோன்றும் வஞ்சகமாகிய காரியமும் , அக்காரியத்தின் விளைவான தீயகருத்தும் உணர்த்தப்பட்டன . அத்தீயகருத்து உள்ளவரை அருள்பெறலரிது . அக்கருத்தை ஒழித்து , அன்போடு , உள்ளம் ஒன்றியிருந்து , தியாநம் புரிபவர் உள்ளத்தில் உள்ள சிவபெருமான் . வாளைகள் துள்ளிப்பாய்கின்ற வயல் . வயலில் நாரை ஆரும் ஆரூர் . நெய்தற் பூக்களைச் சூழ்ந்து வண்டுகள் உலாவும் . அள்ளல் - சேறு . நெய்தற்கண் உள்ள ஆரல் மீன்கள் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கங்கைபொங்கு செஞ்சடைக் கரந்தகண்டர் காமனை
மங்கவெங்க ணால்விழித்த மங்கைபங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகிவாழை கொத்திறுத்து மாவின்மேல்
அங்கண்மந்தி முந்தியேறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த . சருவவியாபகரும் , காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும் , மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர் , அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக் குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்ற திருவாரூர் .

குறிப்புரை :

கங்கைநீர் பொங்குஞ் செஞ்சடை , கங்கையைக்கரந்த அகண்டர் . அகண்டர் - சருவவியாபகர் . மந்தி - பெண்குரங்குகள் . தெங்கினூடுபோய் , வாழைக்குலையை ஒடித்து , மாமரத்தின் மேல் ஏறும் வளமுடைய .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

வரைத்தலம் மெடுத்தவன் முடித்தலம் முரத்தொடும்
நெரித்தவன் புரத்தைமுன் னெரித்தவன் னிருந்தவூர்
நிரைத்தமாளி கைத்திருவி னேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்க ளாடுமாரூ ரென்பதே.

பொழிப்புரை :

திருக்கயிலைமலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும் , திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய , சிவபிரான் ஊர் , வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும் , வெண்ணகையும் செவ் வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர் .

குறிப்புரை :

உரத்தொடும் - மார்பொடும் , வலியுடன் , நிரைத்த - வரிசையுற்ற . திருவின் நேரனார்கள் - திருமகளை நேரொத்தவர்கள் . அரத்தவாய் - செவ்வாய் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

இருந்தவன் கிடந்தவன் னிடந்துவிண் பறந்துமெய்
வருந்தியு மளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்திஞாழல் புன்னைவன்னி செண்பகஞ் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

தாமரைமலரில் இருந்த நான்முகனும் , பாம் பணையில் கிடந்த திருமாலும் விண்பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்துகாணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர் , செருந்தி , ஞாழல் , புன்னை , வன்னி , செண்பகம் , குரா ஆகியன மலர்ந்து மணம்வீசும் சோலைகள் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

நான்முகன் திருமால் இடந்தும் பறந்தும் வருந்தியும் அளப்பதற்கு ஒன்றாத உம்பரான் . செருந்தி - ஒருவகைமரம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பறித்தவெண் டலைக்கடுப் படுத்தமேனி யார்தவம்
வெறித்தவேடன் வேலைநஞ்ச முண்டகண்டன் மேவுமூர்
மறித்துமண்டு வண்டல்வாரி மிண்டுநீர் வயற்செந்நெல்
அறுத்தவா யசும்புபாயு மந்தணாரூ ரென்பதே.

பொழிப்புரை :

பறித்த வெள்ளிய தலையையும் , கடுக்காய்ப் பொடிபூசிய மேனியையும் , உடைய சமணர் , மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும் , நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர் , மீண்டும் , மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத்தடுத்து , செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப்பொசிவு தோன்றும் , மண்வளமும் , நீர் வளமும் உடைய திருவாரூர் .

குறிப்புரை :

பறிகொள்தலையினாக கடுப்படுத்த மேனி , கடுப்பொடியுடற்கவசர் . ` கடுவேதின்று ` மெய்ப்பொடியட்டி . வெறித்த வேடன் - அஞ்சிய சிவவேடமுடைய சிவபிரான் . அச்சம் - நெறியல்லா நெறியிற் செல்வதுபற்றித் தோன்றுவது . மறித்து - தடுத்து , திருப்பி . அசும்பு - நீர்ப்பொசிவு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

வல்லிசோலை சூதநீடு மன்னுவீதி பொன்னுலா
அல்லிமா தமர்ந்திருந்த வந்தணாரூ ராதியை
நல்லசொல்லு ஞானசம் பந்தன்நாவின் இன்னுரை
வல்லதொண்டர் வானமாள வல்லர்வாய்மை யாகவே.

பொழிப்புரை :

கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக்கூறும் ஞானசம்பந்தன்தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர் ; இஃது உண்மை .

குறிப்புரை :

சூதம் - மாமரம். பொன்னுலாவல்லிமாது - `அல்லியங் கோதை` தேவியின் திருநாமம். நல்ல - ஞான நன்னெறியுணர்த்துஞ் சொற்களை. இன்னுரை - பேரின்பப்பாடல். வானம் - தேன்வந்த முதின்றெளிவி னொளிவந்தவான்` திருவாசகம் . 178. `வானுக்குள் ஈசனைத் தேடும் மதி இலீர்` திருமந்திரமாலை . முத்தி நிச்சயம் . பக்கம்.139. வாய்மை - வாயின் (நாவின்) பொய்யாமொழி. `வாய்மை எனப்படுவது யாதெனின்` என்று ஒரு வினாவை ஏறிட்டுக்கொண்டு, அதற்கு விடையிறுக்கும் ஆசிரியர், `யாதொன்றும் தீமை இலாத (வற்றைச்) சொலல்` என்றார். செயல் என்றோ எண்ணல் என்றோ உரைத்தாரல்லர், அதனால், வாய்மை சொற்களைப் பற்றியதாதல் விளங்கும். உள் - உள்ளம். உள்ளத்தின்தன்மை உண்மை, உள்ளு தலின் பொய்யாமை குறித்து. `உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலதத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்`. மெய்ம்மை - மெய்யாற் செய்யுஞ் செயலின் பொய்யாமை. உண்மையும் முறையே எண்ணம் செய்கை இரண்டனையும் பற்றிய காரணப் பெயர்களாம்.
சிற்பி