திருச்சிரபுரம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

அன்ன மென்னடை யரிவையோ டினிதுறை யமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர் வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற் சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமல ரடிதொழு மடியவர் வினையொடும் பொருந்தாரே.

பொழிப்புரை :

அன்னம் போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் அமரர் தலைவரும் , ஒளி விடும் செஞ்சடையில் வெள்ளெருக்கமலர் சூடியவரும் . வேதங்களின் முடிபாய் விளங்கும் உபநிடதங்கள் வழியே நன் பொருள்களை அருளியவரும் பெரியமதில்களால் சூழப்பட்ட சிரபுரத்தில் எழுந்தருளி யிருப்பவரும் ஆகிய புகழாளர்தம் அழகிய மலர் போன்ற திருவடி களைத் தொழுது எழும் அடியவர் வினையொடும் பொருந்தார் .

குறிப்புரை :

அன்னப்பறவையின் நடைபோல மெல்லிய நடை யுடைய உமாதேவியார் . அடியவர் வினையொடும் பொருந்தார் . இத்திருப்பதிக முழுதும் பாராயணம் புரிவாரது வினை தீர்க்கும் உண் மையை அனுபவித்துணர்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

கோல மாகரி யுரித்தவ ரரவொடு மேனக்கொம் பிளவாமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர் பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந் தொழவினை நில்லாவே.

பொழிப்புரை :

அழகிய பெரிய யானையை உரித்தவரும் , பாம்பு , பன்றிப்பல் , இளஆமையோடு இவற்றைமிகுதியாகப் புனைந்து தண் மதிசூடிய சங்கரனாரும் , தம்மைப் போலத் தம் அடியார்க்கும் இன்பம் அளிப்பவரும் , பெரிய கடலிடைத் தோன்றிய விடத்தை உண்ட நீல கண்டரும் ஆகிய சிரபுரத்து இறைவனைத் தொழ வினைகள் நாசமாகும் .

குறிப்புரை :

சால - அமைய , சங்கரன் - சுகத்தைச் செய்பவன் , நித்தியசுகம் , பேரின்ப வடிவினனாகிய பரமசிவன் தன் அடி அடைந்தவர்க்குத் தனது பேரின்பவடிவினை அருள்கின்றான் . ( முத்திநிச்சயப் பேருரை :- பக்கம் - 74, 177. பார்க்க ).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக் கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ் சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடு மடியரைக் கொடுவினை குற்றங்கள் குறுகாவே.

பொழிப்புரை :

பெருமைமிக்க தோள்வலிமையோடு வில்திறனில் சிறந்திருந்த அருச்சுனனை அவன்தவம் கெடுமாறு செய்து அவனை மதித்துக் கானகத்தில் ஒரு வேடனாய்ச் சென்று அவனை எதிர்த்து அமர் செய்யும் அவன் ஆற்றலைக் கண்டு அருள்புரிந்தவரும் , வண்டுகள் பூந் தேனைத் தேர்ந்து திரியும் மலர்வனம் சூழ்ந்த சிரபுரத்துறை எங்கள் தலைவரும் ஆகிய பெருமானாரைக் கும்பிடும் அடியவரைக் கொடு வினைக்குற்றங்கள் குறுகா .

குறிப்புரை :

மானம் - பெருமை , வலி . பார்த்தன் அர்ச்சுனன் . புருதையின் புதல்வன் என்னும் பொருளது . மதித்து - அறிந்து . கானத்தே திரிவேடன் - வனசரன் . அமர் - விரும்பிச் செய்யும் போர் . பகைத்துச் செய்யும் போரன்று . களிப்புமிகுதி குறிக்கின்றுழி ` அமர்க்களம் ` என்பது உலகவழக்கு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக் காலனை யுதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப் பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச் சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை யடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரை மதித்துத் தானே கவர வந்த தென்திசைக்கோனாகிய காலனை உதைத்தவரும் , தம்மை விரும்பி நினையும் மெய்யடியார் படும் பெருந்துயர்ப்பிணக்கை நீக்கி அருள்புரிபவரும் , சடையில் வெண்பிறை அணிந்தவரும் ஆகிய விரிந்த புகழை உடைய சிரபுரத்தில் அமர்கின்ற மாற்றுயர்ந்த ஆணிப் பொன் போன்றவரை அடிதொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .

குறிப்புரை :

முனிவர் உயிரை அறிந்து கொள்ளவந்த அக்கூற்று வனை ` பெறுமவற்றுள் யாமறிவதில்லை ` ( குறள் ) என்பதில் பரி மேலழகர் மதிப்பது என்றுரைத்தார் . உண்மை அடியவர்க்குத் திருவடி வேட்கையும் , சதாகால தியானமும் இன்றியமையாதவை . துயர்ப் பிணக்கு - துயரத்தைத் தரும்மாறுபாடு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

பாரு நீரொடு பல்கதி ரிரவியும் பனிமதி யாகாசம்
ஓரும் வாயுவு மொண்கனல் வேள்வியிற் றலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தன மகிலொடு வந்திழி செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழு மடியவர் வருந்தாரே.

பொழிப்புரை :

மண் , நீர் , பல கதிர்களை உடைய இரவி , தண்மதி , ஆகாயம் , வாயு , ஒளிபொருந்திய கனல் வேள்வித்தலைவனாகிய உயிர் ஆகிய அட்டமூர்த்தங்களாய் விளங்குபவர் எழுந்தருளிய , ஆற்றுநீர் கொணரும் சந்தனம் அகில் ஆகியவற்றோடு வந்திழியும் செழும்புனலை உடைய கோட்டாறுபாயும் தண்புனல் சூழ்ந்த சிரபுரத்தைத் தொழும் அடியவர்கள் வருந்தார் .

குறிப்புரை :

வேள்வித்தலைவன் - இயமானன் . ` இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்டமூர்த்தியாகி ` ( அப்பர் ) சிவனை நினையாத உயிர்கள் அவ்வெட்டுருவங்களுள் சிறந்த ஒன்று ஆமோ ? கோட்டாறு :- கோணிய கோட்டாற்றுக் கொச்சை ( தி .2 ப .70 பா .2.) ` கோட்டாறு சூழ் கொச்சை ( தி .3 ப .89 பா .1.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஊழி யந்தத்தி லொலிகட லோட்டந்திவ் வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக வந்தரத் துயர்ந்தார்தாம்
யாழி னேர்மொழி யேழையோ டினிதுறை யின்பனெம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ வல்வினை யடையாவே.

பொழிப்புரை :

ஊழி முடிவில் ஒலிக்கும் கடல்அலைகள் ஓடிவந்து உலகங்களை மூடிய காலத்தில் அமரர்கள் ஓடிவந்து ` அருட்கடலே ! எந்தையே ` என்று சரண்புக அதுபோது ஊழி வெள்ளத்தில் தோணி புரத்தை மிதக்கச் செய்து அமரரைக்காத்தருளிய , யாழ்போலும் மொழி யினை உடைய உமையம்மையோடு இனிதாக உறையும் இன்பனும் எம்பெருமானும் ஆகிய சிவபிரானின் மாநகராகிய சிரபுரம் தொழு தெழ வல்வினைகள் அடையா .

குறிப்புரை :

யுகாந்தகாலத்தில் வெள்ளம் உலகங்களைமூடி அழிக்கும்போது தேவர்கள் சிவபெருமானைச் சரண்புகுந்தனர் என்பது வரலாறு . ஓட்டந்து - ஓட்டம்தந்து . ஆழி - அருட்கடல் . அந்தரம் - வானம் . இன்பன் - ஆனந்தரூபன் , மாநகர் - பெருங்கோயில் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெயப் பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநட மாடும்வித் தகனாரொண்
சாய்க டான்மிக வுடையதண் மறையவர் தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத் தொழுமவர் தளராரே.

பொழிப்புரை :

பேய்கள் பாடவும் , பலபூதங்கள் துதிக்கவும் , பிணங்கள் எரிக்கும் சுடுகாட்டில் , மூங்கில் போலும் தோளினை உடைய காளி நாண மாநடம் ஆடும் வித்தகனாரும் புகழ்மிகவுடைய மறையவர் வாழும் தக்க சிரபுரத்தில் உறைபவரும் , பல்வகை உயிர்கட்கும் அவ் வவற்றிற்குரிய தாய்களாக விளங்குபவரும் ஆகிய சிவபிரானைத் தொழுபவர் தளர்ச்சியுறார் .

குறிப்புரை :

பேய்கள் பாடவும் பூதங்கள் துதிக்கவும் காளி நாணவும் மகாதாண்டவம் ஆடிய ஞான சொரூபர் . சாய்கள் - புகழ்கள் ` இந்திரன் தன் சாயாப்பெருஞ்சாய் கெடத் தாம்புகளால் தடந்தோள் போய் ஆர்த்தவன் ` ( கம்ப - யுத்த - நாக 21) ` தாய்களாயினார் பல்லுயிர்க் கும் - ( தாயவன் காண் உலகிற்கு ,) ( அப்பர் ) பல்லுயிர்க்கும் தாய் களாயினார் தமை என்று மாற்றிக்கூட்டிச் சிவபெருமானை எனப் பொருளுரைக்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

இலங்கு பூண்வரை மார்புடை யிராவண னெழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றன்மன் றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொண் மாமறை யவர்சிர புரந்தொழு தெழவினை குறுகாவே.

பொழிப்புரை :

விளங்கிய அணிகலன்களைப் பூண்டவனாய் மலை போலும் மார்பினனாய் விளங்கும் இராவணன் அழகியகயிலை மலையை நிலைகுலையச்செய்து பெயர்த்தபோது அதனைக்கண்டு தம் திருவடிவிரலால் நெரியச் செய்து பின் அவன் தன் பிழைக்கு வருந்திய போது அருள்செய்தவர் ஆகிய சிவபெருமான் வீற்றிருப்பதும் வயல் களில் முளைத்த செங்கழுநீர் மலர் மணத்துடன் தென்றல் மன்றி னிடைப்புகுந்து இளைப்பாற்றும் சிறப்புடையதும் உயர்குலத்தில் தோன்றிய மறையவர் வாழ்வதுமான சிரபுரத்தைத் தொழ வினைகள் குறுகா .

குறிப்புரை :

நெரியக் கழலடியை வைத்து என்க . புலன்கள் - வயல்கள் . கள்தேனுமாம் . மன்றில் தென்றல்புகுந்து என மாற்றுக . குலம் - கூட்டம் . மா - பெருமை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன் மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோ ரேனமோ டன்னமாய்க் கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம் பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ வினையவை கூடாவே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் தாமரைமலர்மிசை விளங்கும் நான்முகனும் திருமாலும் ஆகிய இருவரும் சிவபிரானைக் கண்டறியும் முயற்சியில் முறையே அன்னமாகவும் பன்றியாகவும் பறந்தும் கிளறியும் தேடியபோது அவர்கள் முன்பு கண்ட அத்துணை அளவே காணுமாறு அழலுருவாய் நீண்ட எம் பசுபதியும் , பரமேட்டியும் ஆகிய சிவபிரான் விளங்கும் செல்வவளம் உடைய சிரபுரம் தொழுதுஎழ வினைகள் கூடா .

குறிப்புரை :

பண்டுகண்டது காண்டல் - புதிதாக ஒன்றும் காணாமை . அறியுந்தோறும் அறியாமைகாண்பது புதுக்காட்சி . அறியாமை விலகாதிருப்பதே பண்டுகண்டது காண்டலாகும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பறித்த புன்றலைக் குண்டிகைச் சமணரும் பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத் தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின் மூழ்கிட விளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை விட்டிடு மிகத்தானே.

பொழிப்புரை :

மயிர் பறித்த புன்தலையையும் குண்டிகை ஏந்திய கையையும் உடைய சமணரும் , உலகில் துவர் தோய்ந்த சீவரம் என்னும் ஆடையை அணிந்த தேரரும் , அறியமுடியாத தேவர் தலைவர் எழுந்தருளிய , எருமைகள் கரும்பை முறித்துத்தின்று குளங் களில் மூழ்க அதனைக்கண்டு அங்குள்ள இள வாளைகள் வெறித்துப் பாயும் வயல்கள் சூழ்ந்த சிரபுரம் தொழ மிகுதியான வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

மேதிகள் கரும்பை முறித்துத் தின்று குளத்தில் மூழ்க வாளை கலங்கிப்பாயும் வயல் , ஆவி - குளம் , வெறித்து - கலங்கி , அஞ்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

பரசு பாணியைப் பத்தர்க ளத்தனைப் பையர வோடக்கு
நிரைசெய் பூண்டிரு மார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.

பொழிப்புரை :

மழுவேந்திய கையனை , பக்தர்கள் தலைவனை , படப்பாம்பு , என்புமாலை ஆகியன அணிந்த அழகிய மார்புடைய நிமலனை , முத்துக்களின் கொத்தாக விளங்குவோனை , மணம் தரும் மலர்களை உடைய பொழில் சூழ்ந்த சிரபுரத்து அண்ணலை , தேவர் பெருமானைப் பரவிய ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லவர் பரமனைப்பணிபவர் ஆவார் .

குறிப்புரை :

பரசுபாணி - மழுவேந்தியகையன் . பத்தர்கள் அத்தன் - மெய்யன்புடையார்க்கு இறைவன் . அத்தன் - கையகப்படுவோன் எனலுமாம் . அக்கு - எலும்பு .
சிற்பி