திருஅம்பர்மாகாளம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை யரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
அல்லு நண்பக லுந்தொழு மடியவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

பொன்னிறம் பொருந்திய சடைமுடியில் இளம் பிறையையும் தேன் பொருந்திய கொன்றைமலரையும் பிணைத்துச் சூடிய பெருமான் எழுந்தருளிய அரிசிலாற்றின் வடகரையில் உள்ள அம்பர் மாகாளத்தை இரவும் பகலும் தொழும் அடியவர்களை அருவினைகள் அடையா .

குறிப்புரை :

அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப் பகல் இடைவிடாமல் வழிபடும் அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள் நீங்கிப்போம் . அவை மீண்டும் அவரை அடைய வல்லன அல்ல . ` அல்லும் நண்பகலும் தொழும் அடியவர் `:- ` கங்குலும் பகலும் தொழும் அடியவர் ` ( பா . 4.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

அரவ மாட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையி லனலேந்தி
இரவு மாடுவ ரிவையிவர் சரிதைகள் இசைவன பலபூதம்
மரவந்தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்றலைப் படுவாரே.

பொழிப்புரை :

பாம்பினைப் பிடித்து ஆட்டுபவர் , புலித்தோலை ஆடையாக உடுப்பவர் . அழகிய கையில் அனலேந்தி இரவுப் பொழுதில் ஆடுபவர் , அவர்தம் சரிதைகளாகிய இவற்றைப் பல பூதங்கள் பாடித்துதிக்கின்றன . வெண்கடம்ப மரச்சோலைகளை உடையதும் அரிசிலாற்றின் வடகரையிலுள்ளதுமாகிய திருமா காளத்தில் உறையும் அப்பெருமானைப் பரவிப் பணிந்து ஏத்த வல்லவர் விழுமிய பயனை அடைவர் .

குறிப்புரை :

பாம்பாட்டுபவர் . புலித்தோல் உடுப்பவர் . கையில் எரி ஏந்துவர் . ஏந்தி இரவில் ஆடுவர் . இவர் சரிதைகள் இவை . இசைவன - இசைபாடுவன . தலைப்படுவார் - அடைவார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
வணங்கு முள்ளமோ டணையவல் லார்களை வல்வினை யடையாவே.

பொழிப்புரை :

அவன் குணங்களைக் கூறியும் தம் குற்றங்களை எடுத்துரைத்தும் அவன் திருவடிகளை அடைய முற்படின் , பூதகணங்கள் பாடவும் , அன்பர்கள் பரவித்துதிக்கவும் வீற்றிருக்கும் அப் பெருமான் நம் , கருத்தறிந்து அருள் செய்யும் இயல்பினனாவான் . அவ் விறைவன் மேவிய திருமாகாளத்தை வணங்கும் உள்ளத்தோடு அத்தலத்திற்குச் செல்லவல்லவர்களை வல்வினைகள் அடையா .

குறிப்புரை :

கணங்கள் பாடவும் , தரிசித்தோர் வாழ்த்தவும் அவரவர் கருத்தை அறிந்து அருளும் சிவபிரான் எழுந்தருளிய அரிசிற்கரை மாகாளத்தை வணங்கும் உள்ளத்தொடும் சேர வல்லவர் களை அடையும் வன்மை வினைகளுக்கு இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கங்கு லும்பக லுந்தொழு மடியவர் காதன்மை யுடையாரே.

பொழிப்புரை :

மேகங்கள் தோயும் பொழில் சூழ்ந்ததும் , அரிசிலாற்றின் வடகரையில் உள்ளதும் ஆகிய திருமாகாளத்தில் இழையால் கட்டிய மணம்கமழும் கொன்றைமாலை , தாமம் , கண்ணி ஆகியவற்றை அணிந்த இறைவரை இரவும் பகலும் தொழும் அன்புடை அடியவர் எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணியிலராவர் .

குறிப்புரை :

எவ்விடத்தும் ஒருசிறிதும் பிணி எய்திலர் . கெடுத லிலர் . தொங்கல் - மாலை , தாமம் - தார் . காதன்மை - காதலின் இயல்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

நெதிய மென்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய
கதிய மென்னுள வானவ ரென்னுளர் கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.

பொழிப்புரை :

திங்கள் தோயும் பொழில்களால் சூழப்பெற்றதும் , அரிசிலாற்றின் வடகரையில் விளங்குவதுமாகிய திருமாகாளத்து இறைவரைப் பூக்கள் சந்தனம் நறுமணப் புகைகளைக் கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியம் உடையோருக்கு அச்சிவபூசையால் எய்தும் திருவருளினும் வேறுநிதியம் , சுகபோகம் அடையத்தக்க வேறுகதிகள் உலகில் உண்டோ ?

குறிப்புரை :

நெதியம் - நிதியம் . மதியம் - தோய்புனல் . கதியம் - வழி . மாகாளத்துப் பரசிவனைப் புதுப்பூக்கள் சந்தனம் தூபம் ( முதலியவை ) கொண்டு ஏத்தி வழிபடும் சிவபுண்ணியத்தை உடையவர்க்கு அச்சிவபூஜையால் எய்தும் திருவருளினும் நிதியம் சுகபோகம் வேறு என்ன இருக்கின்றன ?

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகம்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினி லுயர்வாரே.

பொழிப்புரை :

கதிரொளி பொருந்திய முடிமிசைப் பாம்பு திங்கள் தலைமாலை ஆகியவற்றை அணிந்த பெருமான் எழுந்தருளிய பொழில் சூழ்ந்த அரிசிலாற்று வடகரையில் விளங்கும் திருமாகாளத்தை உள்ளத்தே கொண்டு வழிபடுபவர் யாவரோ ? அவர் இவ்வுலகில் உயர்வெய்துவர் .

குறிப்புரை :

கண் உலாவிய கதிர் ஒளிமுடி :- செஞ்சடை முடியின் ஒளியை உணர்த்திற்று . திலதம் - திலகம் . வைத்தவர் - சிவபிரானார் . உள் - மனத்தில் . நிலாம் - நிலாவுகின்ற .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பேசு நீர்மையரி யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.

பொழிப்புரை :

தோலே அவர் இடையில் கட்டியுள்ள ஆடை யாகும் . கொன்றையே அவர்தம் கண்ணி , பூசுவது வெண்பொடி . புகழை விரும்புபவர் . அவர்தம் திருமாகாளத்தைப் பேசும் தன்மையர் யாவரோ அவர் இவ்வுலகில் பெருமையைப் பெறுவர் .

குறிப்புரை :

தூசு - உடை . அரையில் தோலுடையே தூசு . கொன்றையே - கண்ணி . பூசுவது வெண்பொடி , புரிந்தவர் - விரும் பினவர் . மாசு - மேகம் . யாவர் ? அவர் பெருமை பெறுவார் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

பவ்வ மார்கட லிலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த விறையவ னுறைகோயில்
மவ்வந் தோய்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
கவ்வை யாற்றொழு மடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.

பொழிப்புரை :

கடல் சூழ்ந்த இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி அடர்த்து , இமையவர்க்குத் துன்பங்கள் தீர அருள் செய்தவர் . அவ்விறைவர் உறையும் கோயில் அம்பர் மாகாளம் . அத்தலத்தைத் தோத்திர ஆரவாரத்தோடு வழிபடும் அடியவர்களின் வினைகள் அழலிற்பட்ட தூசுபோலக்கெடும் .

குறிப்புரை :

பவ்வம் ஆர் ( கடல் ) - நீர்க்குமிழி நிறைந்த ; நுரையும் ஆம் . ` நுரை மொக்குள் பௌவத்தோடு நொவ்விய புற்புதங்கள் திரைகொள் நீர்க்குமிழி ஐந்தாம் ` ( சூடாமணி நிகண்டு . 5. பெயர்ப் பிரிவு . 2.5). மவ்வம் - மேகம் . அழகு ( தோய்பொழில் ) எனல் பொருந்தாது . ( தமிழ் லெக்ஸிகன் , பக் . 3112 .) கவ்வை - தோத்திர முழக்கம் . தீயிற்பட்ட மரத்தூள் போல வினை அழியும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

உய்யுங் காரண முண்டென்று கருதுமி னொளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொ ளண்ணலும் பரவநின் றவர்மேய
மையுலாம்பொழி லரிசின் வடகரை வருபுனன் மாகாளம்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.

பொழிப்புரை :

கடைத்தேறுதற்கு ஒருவழி உண்டென்று கருதுங்கள் . நான்முகனும் திருமாலும் பரவ நின்றவராகிய இறைவர் பொழில்சூழ்ந்த அரிசிலாற்றின் கரையில் உள்ள திருமாகாளத்தில் உள்ளார் . அவரைக் கையினால் தொழுவாரே அவலமும் பிணியும் கவலையும் இலராவர் .

குறிப்புரை :

அவலமும் . பிணியும் , கவலையும் ( ஆக்கும் பிறவியைக் ) களைவார் மாகாளத்தைத் தொழுவாரே . அடியார்க்கே அவற்றைக்களையும் நிலைமை உண்டு . உய்யும் காரணம் அவர்க்கு உண்டு என்று நீவிர் கருதுமின் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிண்டி பாலரு மண்டைகொ டேரரும் பீலிகொண் டுழல்வாரும்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளாருங் கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழி லரிசிலின் வடகரை வருபுனன் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.

பொழிப்புரை :

மாவுக்கஞ்சி உண்டு தம்மைப் பசியிலிருந்து காப் பவரும் , மண்டை என்னும் பிச்சைப்பாத்திரத்தை ஏந்தி நிற்பவரும் , பீலிகொண்டு உழல்வோரும் , கண்டநூல்களை வேதங் களாகக் கொண்டு கூறுவோரும் , கடுந்தொழில்புரிவோரும் ஆகிய சமணர் புத்தர் ஆகியோர் புறங்கூறும் பொய்யுரைகளைக் கேளாது மாகாளம் மேவிய பெருமானை முற்பிறவிகளில் நாம் செய்தபாவங் களின் தொடர்ச்சி நீங்கப் பரவுதல் செய்வோம் .

குறிப்புரை :

பிண்டிபாலர் - தலையிலே பீலி கட்டப்பட்டு , எறி கின்ற படையான பிண்டிபாலத்தை ஏந்திய ஒருவகைச் சமணர் , ` பெருவலியதனை நோனான் பிண்டிபாலத்தை யேந்தி ` சிந்தா . 2269. என்பதன் உரையில் நச்சினார்க்கினியர் எழுதியதைக் காண்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனன் மாகாளத்
தீறு மாதியு மாகிய சோதியை யேறமர் பெருமானை
நாறு பூம்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.

பொழிப்புரை :

இவ்வுலகில் தன்னொடு ஒப்புக்கூறத்தக்க தலம் ஒன்றும் இல்லாத மாகாளத்தில் உறையும் ஆதியும் அந்தமும் இல்லாத சோதியை , விடை ஏறும் பெருமானை , ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய தமிழ்மாலையைக் கூறி வழிபடுவோரையும் , கேட்போரையும் குற்றங்கள் குறுகா .

குறிப்புரை :

மண்மிசை தன்னொடு மாறு இல்லது - இப்பூமியில் தன்னுடன் ஒப்புக்கூறத் தக்கது வேறு யாதும் இல்லாதது . ஈறும் ஆதியும் - அநாதி நித்தமுத்த சுத்த சித்துருவாகிய பரசிவம் உயிர்கட்கு அருளற்பொருட்டு ஆதியும் அந்தமும் ஆகி உபகரித்தல் குறித்தது , ` ஆதியும் அந்தமும் ஆயினார் ` ( திருவாசகம் 214.) இறைவன் ஏறுவதால் ஏறு எனப் பெயர்பெற்றது எனல் இதுபோலும் இடங்களில் பொருந்துவதே .
சிற்பி