திருக்கடிக்குளம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

பொடிகொண் மேனிவெண் ணூலினர் தோலினர் புலியுரி யதளாடை
கொடிகொ ளேற்றினர் மணிகிணி னெனவரு குரைகழல் சிலம்பார்க்கக்
கடிகொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தைத்தம்
முடிகள் சாய்த்தடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே.

பொழிப்புரை :

திருநீறணிந்த மேனியராய் , வெண்ணூல் அணிந் தவராய் , புலித்தோலுடுத்தவராய் , யானைத்தோலைப் போர்த்திய வராய் , விடைக்கொடி உடையவராய் , கட்டப்பட்ட மணிகள் கிணின் என ஒலிக்கக் , கால்களில் சுழல் சிலம்பு ஆகியன ஒலிக்க மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தைத் தம் முடிசாய்த்து அடிகளில் வீழ்ந்து வணங்கும் அடியவரைப் பழ வினைகள் தொடரா .

குறிப்புரை :

கடிக்குளத்தில் எழுந்தருளிய கற்பகத்தைத் தலை சாய்த்துத் திருவடியை வணங்கும் அடியார்களை வினைகள் சூழமாட்டா . கற்பகம் - இத்தலத்தில் இறைவன் திருநாமம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.

பொழிப்புரை :

தேவர்கள் தொழும் திருவிளக்கை , தளர்ச்சியுறாத விகிர்தனை , விழாக்கள் பலவும் நிகழ்த்தும் மண்ணுலகில் உள்ளார் துதித்து அன்புடையவர்களாய் மகிழும் வள்ளலை , சென்றடைந்து தம் கண்களாரக் கண்டு மகிழும் நம் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை , பண்களோடு பாடல்களைப் பாடிப் போற்றுவார் கேடிலர் . பழியிலர் அவரைப் புகழ்வந்தடையும் .

குறிப்புரை :

விண்ணோர் தொழும் விளக்கு . துளக்கு - தளர்ச்சி . விகிர்தன் - முரணுறுசெயலினன் . திருவிழாக்கள் நிறைந்த மண்ணுலகில் வாழ்வோர் அன்பராகிப் பேரின்பம்பெற ஈந்தருளும் வள்ளல் . அவ்வள்ளலைச் சேர்ந்து கண்ணாரக்கண்டு பண்ணாரப் பாடிப் பணிவார் கேடும் பழியும் இலராவர் , புகழ் உளராவர் . தரிசனமும் கீதமும் திருந்தவும் முற்றவும்செய்தால் எய்தும்பயன்கள் உணர்த்தப்பட்டன .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பொங்கு நற்கரி யுரியது போர்ப்பது புலியத ளழனாகம்
தங்க மங்கையைப் பாகம துடையவர் தழல்புரை திருமேனிக்
கங்கை சேர்தரு சடையினர் கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
எங்கு மேத்திநின் றின்புறு மடியரை யிடும்பைவந் தடையாவே.

பொழிப்புரை :

சினந்துவந்த நல்ல யானையின் தோலைப் போர்த்து , புலித்தோலை உடுத்து , கொடிய பாம்பு திருமேனியில் விளையாட , உமை நங்கையைப் பாகமாகக் கொண்டு , தழல் போன்ற சிவந்த திருமேனியராய்க் கங்கை சேர்ந்த சடையினராய் விளங்கும் கடிக்குளத்து உறையும் கற்பகத்தை எவ்விடத்தும் ஏத்தி நின்று இன்புறும் அடியாரைத் துன்பம் வந்து அடையமாட்டா .

குறிப்புரை :

கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகத்தை எவ்விடத்தும் வழிபட்டு இன்பத்தை அடையும் அடியார்களை இடும்பைகள் வந்து அடையமாட்டா .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

நீர்கொ ணீள்சடை முடியனை நித்திலத் தொத்தினை நிகரில்லாப்
பார்கொள் பாரிடத் தவர்தொழும் பவளத்தைப் பசும்பொனை விசும்பாரும்
கார்கொள் பூம்பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகந்தன்னைச்
சீர்கொள் செல்வங்க ளேத்தவல் லார்வினை தேய்வது திணமாமே.

பொழிப்புரை :

கங்கைதங்கிய நீண்ட சடைமுடியினனை , முத்துக்களின் கொத்தாய் விளங்குவோனை , உலகில் பல இடங் களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை , பசும் பொன்னை , வானளாவிய மேகங்கள் தங்கியவாய் விளங்கும் அழகிய பொழில்கள் சூழ்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க அருட் செல்வங்களை ஏத்த வல்லவர்களின் வினைகள் தேய்வது திண்ணம் .

குறிப்புரை :

திருக்கடிக்குளத்தில் எழுந்தருளும் கற்பகத்தின் செல்வங்களைப் புகழவல்லவருடைய வினைகள் தேய்ந்தொழிவது உறுதி . செல்வங்கள் :- ` அவளால்வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை யெல்லாம் `. ( சித்தியார் 89).

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

சுரும்பு சேர்சடை முடியினன் மதியொடு துன்னிய தழனாகம்
அரும்பு தாதவிழ்ந் தலர்ந்தன மலர்பல கொண்டடி யவர்போற்றக்
கரும்பு கார்மலி கொடிமிடை கடிக்குளத் துறைதரு கற்பகத்தை
விரும்பு வேட்கையொ டுளமகிழ்ந் துரைப்பவர் விதியுடை யவர்தாமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்த சடையினனும் , கொடிய பாம்பினை மதியோடு பகை நீக்கிப் பொருத்திவைத்த முடியினனும் , அரும்புகளையும் மகரந்தம் விரிந்து அலர்ந்த மலர்களையும் கொண்டு அடியவர் போற்ற , கரும்புகளும் உயர்ந்து வளர்ந்த கொடிகளும் பின்னி வளர்ந்த கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தை அன்போடு விரும்பி உளம்மகிழ்ந்து போற்றுபவர் நல்லூழ் உடையவர் ஆவர் .

குறிப்புரை :

அரும்புகள் தாது அவிழ்ந்து விரிந்த பல மலர்களைக் கொண்டு அடியவர்கள் வழிபடக் கடிக்குளத்து எழுந்தருளும் கற்பகம் . கரும்புகளும் மேக மண்டலத்தை அளாவிய கொடிகளும் பின்னிய கடிக்குளம் . மனமகிழ்ந்து தோத்திரம் சொல்லும் அடியவர்கள் செல்வ முடையவராவார்கள் , விதி - செல்வம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

மாதி லங்கிய பாகத்தன் மதியமொ டலைபுன லழனாகம்
போதி லங்கிய கொன்றையு மத்தமும் புரிசடைக் கழகாகக்
காதி லங்கிய குழையினன் கடிக்குளத் துறைதரு கற்பகத்தின்
பாதங் கைதொழு தேத்தவல் லார்வினை பற்றறக் கெடுமன்றே.

பொழிப்புரை :

உமைமாது விளங்கும் பாகத்தினனும் , திங்கள் கங்கை , சினம் மிக்க பாம்பு , கொன்றைமலர் , ஊமத்தை மலர் ஆகியன வற்றை வளைந்த சடையின் மேல் , அழகுறச் சூடியவனும் காதிலங்கு குழையினனும் , ஆகிய கடிக்குளத்தில் உறையும் கற்பகத்தின் பாதங் களைக் கைகளால் தொழுது ஏத்த வல்லார் வினைகள் அடியோடு கெடும் .

குறிப்புரை :

கற்பகத்தின் திருவடியைக் கைகூப்பித் தொழவல்லவர் வினைகள் முழுதும் கெட்டொழியும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் குழாம்பல குளிர்பொய்கை
புலவு புள்ளின மன்னங்க ளாலிடும் பூவைசே ருங்கூந்தல்
கலவை சேர்தரு கண்ணியன் கடிக்குளத் துறையுங்கற் பகத்தைச்சீர்
நிலவி நின்றுநின் றேத்துவார் மேல்வினை நிற்ககில் லாதானே.

பொழிப்புரை :

விளங்கும் அழகினை உடையனவான கொடிகள் கட்டப்பட்ட உயரிய மாடவீடுகளையும் மகளிர் குழாம் நீராடும் குளிர்ந்த பொய்கைகளையும் உடையதும் புலாலுண்ணும் நாரை முதலிய பறவைகளும் அன்னங்களும் விளையாடும் சிறப்பினதுமான கடிக்குளத்தில் மலர்கள் பொருந்திய கூந்தலினளாகிய உமையம்மை யோடு கூடிக் கண்ணிமிலைந்து விளங்கும் கற்பகத்தைப் புகழ்ந்து போற்றி ஏத்துவார்மேல் வினைநில்லா .

குறிப்புரை :

பூவைசேரும் கூந்தற்கலவையென்பது வாமபாகத்தைக் குறித்தது . கற்பகத்தை ஏத்துவார்பால் வினைகள் நிற்கமாட்டா .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

மடுத்த வாளரக் கன்னவன் மலைதன்மேன் மதியிலா மையிலோடி
எடுத்த லும்முடி தோள்கர நெரிந்திற விறையவன் விரலூன்றக்
கடுத்து வாயொடு கையெடுத் தலறிடக் கடிக்குளந் தனின்மேவிக்
கொடுத்த பேரருட் கூத்தனை யேத்துவார் குணமுடை யவர்தாமே.

பொழிப்புரை :

பகைவரைக் கொல்லும் வாட்படையை உடைய இராவணன் அறிவின்றிக் கயிலைமலையைப் பெயர்த்த அளவில் அவனுடைய முடி தோள் கை ஆகியன நெரிந்து அழியுமாறு சிவபிரான் கால் விரலை ஊன்றிய அளவில் , அவன் தன் குற்றத்திற்கு வருந்தி கை கூப்பி அலற , பேரருள் கொடுத்த ஆனந்தக் கூத்தனைக் கடிக்குளத்தை அடைந்து ஏத்துபவர் நல்ல குணமுடையவர் ஆவர் .

குறிப்புரை :

மடுத்த - ( பகைவர் உடம்பின் ) உட்புகுத்திய . இற - முரிய . அருட்கூத்தன் - ஞானநாடகமாடும்பிரான் . குணம் - எண்குணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

நீரினார் கடற் றுயின்றவ னயனொடு நிகழடி முடிகாணார்
பாரி னார்விசும் புறப்பரந் தெழுந்ததோர் பவளத்தின் படியாகிக்
காரினார் பொழில் சூழ்தரு கடிக்குளத் துறையுங்கற் பகத்தின்றன்
சீரினார்கழ லேத்தவல் லார்களைத் தீவினை யடையாவே.

பொழிப்புரை :

நீர் நிறைந்த கடலிடைத் துயிலும் திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாராய் எய்த்தகாலத்து , மண்ணுலகில் அடித்தளம் , விசும்பின் எல்லைவரை எழுந்து பவளம் போன்றநிறம் உடையவராய்த் தோன்றி , மேகம்தவழும் பொழில் சூழ்ந்த கடிக் குளத்தில் உறையும் கற்பகத்தின் சிறப்புமிக்க திருவடிகளை ஏத்த வல்லார்களைத் தீவினை அடையா .

குறிப்புரை :

கடல் துயின்றவன் - பாற்கடலில் யோக நித்திரை செய்யும் திருமால் . விசும்பு - ஆகாயம் . படி - உருவம் . கற்பகத்தின் கழல் ஏத்தவல்லவர்களுக்கு வினை இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

குண்டர் தம்மொடு சாக்கியர் சமணருங் குறியினி னெறிநில்லா
மிண்டர் மிண்டுரை கேட்டவை மெய்யெனக் கொள்ளன்மின் விடமுண்ட
கண்டர் முண்டநன் மேனியர் கடிக்குளத் துறைதரு மெம்மீசர்
தொண்டர் தொண்டரைத் தொழுதடி பணிமின்கள் தூநெறி யெளிதாமே.

பொழிப்புரை :

குண்டர்களாகிய சாக்கியர் சமணர்கள் ஆகியோர் தாம் கூறும் குறிகளின் நெறிநில்லாமிண்டர்கள் . அவர்தம் பொய் யுரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதாதீர் . விடம் உண்டகண்டரும் திரிபுண்டரம் அணிந்த நன்மேனியரும் ஆகிய கடிக் குளத்தில் உறையும் எம் ஈசர்தம் தொண்டர் தொண்டரைத் தொழுது அடிபணிமின் . தூய சிவநெறி எளிதாம் .

குறிப்புரை :

குறி - குறிக்கோள் . தொண்டர் தொண்டர் - தொண்டர்க்குத் தொண்டர் . தூநெறி - திருநெறி , சிவநெறி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

தனமலி புகழ் தயங்குபூந் தராயவர் மன்னன்நற் சம்பந்தன்
மனமலி புகழ் வண்டமிழ் மாலைகள் மாலதாய் மகிழ்வோடும்
கனமலி கட லோதம் வந்துலவிய கடிக்குளத் தமர்வானை
இனம லிந்திசை பாடவல் லார்கள்போ யிறைவனோ டுறைவாரே.

பொழிப்புரை :

செல்வவளம் மிக்க புகழ் விளங்கும் பூந்தராய் மக்களின் மன்னனாகத்திகழும் ஞானசம்பந்தன் மனநிறைவோடு புகழ்ந்துரைத்த வண்டமிழ் மாலைகள் மீது அன்பு கொண்டு , மகிழ் வோடு , கடல்ஓதம் வந்துலவும் கடிக்குளத்து அமரும் இறைவனை அடியவர்களோடு கூடி அவற்றை இசையோடு பாடவல்லார்கள் போய் இறைவனோடு உறைவார்கள் .

குறிப்புரை :

செல்வமும் மிக்க புகழும். மாலது - அன்பு. கனம் - மேகம். இனம் - அடியார்கூட்டம்.
சிற்பி