திருவலஞ்சுழி


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனாலே.

பொழிப்புரை :

முழுமையான மணிகளும் , முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும் , அன்பு செய்தும் , பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத் தலால் , கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில் , நெஞ்சே ! நீ ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய் ?

குறிப்புரை :

நெஞ்சமே ! நீ ( இவ் ) வையத்து , திருவலஞ்சுழி வாணனை வாயாரப்பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே என்ன புண்ணியஞ் செய்தனை ? புண்ணியஞ் செய்ததா அன்றா என்னும் ஐயம் இல்லை . பல்வகைப் புண்ணியத்துள் இவ்வழி பாட்டிற்குரிய புண்ணியம் யாதென்பதே ஐயம் . ` நல்வினைப் பயன் ` என்று கொண்ட முடிவே அதற்குச் சான்றாயிற்று . அந்நல்வினையுள் யாது என்பது கருத்து . இத்திருமுறையுள் 79 ஆவது திருப்பதிகத்துள் வரும் பல திருப்பாடலுள் ` பேதைமார்போலநீ வெள்கினாயே ` ` மற வல்நீ மார்க்கமே நண்ணினாய் ` என்றுள்ள சிறப்பையும் அவ்வுண்மையைக் குறித்தருளக் கருதிய ஸ்ரீ சேக்கிழார் பெருமானார் , ` அவ மிலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யுமாறு அறிதி ` என்று அருளியதையும் உணர்ந்தால் , நல்வினைபற்றிய ஐயம் இல்லாமையும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருவுள்ளத்தை நாம் உணரத்தகும் முறைமையும் தெளிவாகும் . வாயாரப் பன்னுதல் பாடுதல் - வாக்கின் வினை . ஆதரித்தல் - மனத்தின்றொழில் . ஏத்துதல் - காயத்தின் செயல் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய விறைவனை யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ டினிதிருந் தமையாலே.

பொழிப்புரை :

கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர் களைக் காத்தருளிய இறைவனை , உமைகேள்வனை , இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந் தனவாகும் .

குறிப்புரை :

இனி திருந்தமையாலே விண்டொழிந்தன வல்வினை . விண்டு - நீங்கி . கடல் - பாற்கடல் . இறைஞ்சு வானவர் - வழிபடும் விண்ணவர் . தாங்கிய - நஞ்சுண்டு காத்தருளிய . ` வண்டார் குழலி ` - தேவியார் திருப்பெயர் . அவை கோட்டாறு , கோளிலி , பிரமபுரம் , மருகல் என்பவை . மெய்த்தொழில் - உண்மைத் தொண்டு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

திருந்த லார்புரந் தீயெழச் செறுவன விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயக னிமையவ ரேத்திய விணையடித் தலந்தானே.

பொழிப்புரை :

திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந் தருளியுள்ளவனும் , இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன . அடியவர்களை அன்புடன் காப்பன . பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன . உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன .

குறிப்புரை :

திருந்தலார் - பகைவர் . விறல் - பெருமை , வெற்றி . பரிந்து - இரங்கி . பத்தி - சிவபக்தி . ` பத்திவலையிற் படுவோன் காண்க `. மத்தம் - மயக்கம் . பிணியும் நோயும் மயக்கத்தால் வருவனவே . தெளிவு நோயை விளைவிக்காது . இணையடித் தலந்தான் புரம்செறுவன , அடியாரைக்காப்பன பத்தியில் வருவன . நோய்க்கு மருந்தாவன , மந்திரமாவன என்க . அப்பர் அருளிய ` சிந்திப்பரியன ` என்பது முதலிய இருபது திருவிருத்தங்களையும் இங்கு எண்ணுக .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர் அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந் தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய வற்புத மறியோமே.

பொழிப்புரை :

நீலகண்டரும் , செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளிய வரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தை யாம் இன்னதென அறியேம் .

குறிப்புரை :

கறை - நஞ்சாலாய கறுப்பு . கதிர் - சூரியன் . அறத் திறம் - தருமங்களின் வகைகளும் வேதாகம நூற்பொருளின் கூறுபாடும் . கழல் சிலம்பு - உம்மைத்தொகை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலா மெரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரும் வடிவினர் பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார் பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலு மெனைப்பல வியம்புவ ரிணையடி தொழுவாரே.

பொழிப்புரை :

சிவபிரான் மண் , விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர் . பெண்ணும் , ஆணும் கலந்த திருவுருவினர் . கடற் பவளம்போலும் திருமேனியர் . வலஞ்சுழியில் நீங்காது உறைபவர் . தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர் . அவர்தம் இணையடி தொழுபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர் .

குறிப்புரை :

சிவபிரான் ஐம்பெரும் பூதரூபமாக உள்ளவர் . அட்ட மூர்த்தங்களுள் முதல் ஐந்து அம்மையப்பர் ; அர்த்தநாரீச்சுவரர் . பவள வண்ணர் . நீங்காது வாழ்பவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர் மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும் பேய்களு மடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித் தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே வரிவளை கவர்ந்தாரே.

பொழிப்புரை :

அகப்பொருட்டுறை ; தலைவி கூற்று . ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர் . உமை , கங்கை இருவர் பால் அன்பு செய்பவர் . பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர் . வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர் .

குறிப்புரை :

இறைவன் திருமேனிக்கு ஒப்புரைக்க வேறு யாதும் இல்லாமையால் ` ஒருவரால் உவமிப்பதை அரியதோர் மேனியர் ` என்க . ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ( அப்பர் ) அருவராதது - அருவருக் காதது . முறுமுறுப்பு , சுறுசுறுப்பு , கிறுகிறுப்பு முதலியவற்றைப்போல ` அறுவறுப்பு ` என்பதும் உண்டு . மனத்தை அறுப்பதுபற்றிய பெயர் , அஃது இடையெழுத்தாக மருவிற்று . ` அஞ்சனம்சேர் கண்ணார் அருவருக்கும் அப்பதமாய்க் குஞ்சி வெளுத்துடலம் கோணாமுன் நெஞ்சமே ..... சாய்க்காடு கைதொழு நீ சார்ந்து ` ( க்ஷேத்திரவெண்பா . 15.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங் குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்று மியம்புவ ரிமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன வறிகிலோம் வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனிற் றலைப்பட லாமென்று சேயிழை தளர்வாமே.

பொழிப்புரை :

அகப்பொருட்டுறை ; தோழி கூற்று . குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல்லி வருபவர் . இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர் . மேற்குறித்த ஊர் களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம் . பல ஊர் களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள் .

குறிப்புரை :

இதிற் குறித்த குன்றியூர் எங்குளதோ ? தெரிந்திலது , ` வலம் என்றதால் ` இடம் ` இருத்தல் வேண்டும் . தலைப்படல் - சேர்தல் . ` தம்மிற்றலைப்பட்டார் ` ( திருக்களிறு . 2.) சேயிழை - தலைவி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

குயிலி னேர்மொழிக் கொடியிடை வெருவுறக் குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன் வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர் அல்லவர் காணாரே.

பொழிப்புரை :

குயில் மொழியும் கொடியிடையும் மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர் . அல்லவர் காணார் .

குறிப்புரை :

கொடியிடையும் மயிலை நேரொத்த சாயலும் உமா தேவியாரைக் குறித்தன . வல்லவர் காண்பவர் . அல்லவர்காணார் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

அழல தோம்பிய வலர்மிசை யண்ணலு மரவணைத் துயின்றானும்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு துன்பங்கள் களைவாரே.

பொழிப்புரை :

நான்முகனும் , திருமாலும் திருமுடியையும் , திரு வடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான் . மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர் . அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடை வார் தொல்வினை களும் துன்பங்களும் நீங்கப்பெறுவர் .

குறிப்புரை :

அழலது - தீ . ` கற்றாங்கு எரியோம்பிக் கலியைவாராமே செற்றார் `. அண்ணல் - பிரமன் . அரவணை - பாம்பாகிய படுக்கை . துயின்றான் - திருமால் . ஆயவர் - சிவபிரான் . மழலை வீணையர் - ` மிக நல்ல வீணைதடவி `. பாதத்தால் சுழலும் மாந்தர்கள் - திருக் கோயிலை வலம் வரும் அன்பர்கள் . தொல்வினை - சஞ்சித கர்மம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர் தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடி லளவறுப் பொண்ணாதே.

பொழிப்புரை :

அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர் . அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர் . வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும் .

குறிப்புரை :

தவம் புரிந்து அவம் செய்தல் - மேற்கொண்ட தவத் திற்கு ஒவ்வாத பாவச்செய்கையை உடையராதல் . நெறி அல்லாத வற்றைப் போதிப்பர் . தேறல்மின் - தெளியத்தக்கன அல்ல என்று தெளி யாது ஒழிமின் . பிறிவு இல்லாதவர் :- இடைவிடாமல் வழிபடும் அடியர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய் நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக் கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம்வந் தடையாவே.

பொழிப்புரை :

மாதொருகூறனை , திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை , காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத் திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார் அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா . இம்மை , மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா .

குறிப்புரை :

கூறன் - பாகத்தன் . மருந்து - பிறவிநோய் தீர்க்கும் மருந்து . தீராநோய் தீர்த்தருளவல்ல மருந்து . ` வருந்துயரந் தீர்க்கும் மருந்து ` ` காழிநாதன் ` ` வேதியன் ` என்பன ஆசிரியர் சிறப்புணர்த்தின . நவிற்றிய - திருவருள் நவிலச்செய்த ` நித்தம் நோய்கள் வாதியா , ( தி .2 ப .79 பா .4.) வாதித்தல் - வருத்துதல் .
சிற்பி