திருக்கேதீச்சரம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

விருது குன்றமா மேருவில் நாணர வாஅனல் எரிஅம்பாப்
பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும்
கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம்
கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.

பொழிப்புரை :

வெற்றிக்கு அடையாளமாக , பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி அனல் எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவ பிரான் பற்றிநின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர் , ஆரவாரிக்கின்ற கடலால் சூழப்பட்ட , மணம் கமழும் பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் கருதி வழிபாடு செய்யாநின்ற திருக்கேதீச்சரமாகும் . அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா .

குறிப்புரை :

விருது - வெற்றி . அடையாளம் மாமேருகுன்றம் வில் ஆ - மகாமேருமலை வில்லாக . மாதோட்டம் என்பது தலப்பெயர் கேதீச்சுரம் என்பது திருக்கோயில் . மகாதுவட்டாபுரம் என்பதன் திரிபன்று . அங்குப்பொழிலணி மாதோட்டம் உளது . இக்கேதீச்சுரத்தில் ` கேது ` இருப்பதை இன்றுங்காணலாம் . இத்தலத்தை வழிபடுவோர் வினைகளும் நோய்களும் தீரப்பெற்றின்புறுவர் என்பது திண்ணம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர்
ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம்
கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.

பொழிப்புரை :

வீணையை மீட்டிக்கொண்டு பாடுபவர் . பற்பல வான புராண வரலாறுகளைக் கொண்டவர் . எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர் . அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர் . அவருக்குரிய இடம் , கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின்கண் விளங்கும் கேடில்லாத கேதீச்சரம் ஆகும் . அதனைத் தொழ இடர்வினை கெடும் .

குறிப்புரை :

சரிதையர் - ஒழுக்கத்தவர் . உகைத்து - செலுத்தி . இருள் - இருண்ட . ஈடம் :- முதல் நீட்சி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச்
சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக்
குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத்
தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.

பொழிப்புரை :

உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர் . பிறை தவழ் சடையினர் . திருநீற்றை விரும்பிப்பூசி , கழலும் சிலம்பும் ஆர்க்க ஆடுபவர் . பாடுபவர் . உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள்தோறும் இடும் பிச்சைக்கு உழல்பவர் . அவ்விறைவர் எழுந் தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங்கும் கேதீச்சரத்தை அடை பவரை இருவினைகள் அடையா .

குறிப்புரை :

சுண்ணம் - திருவெண்ணீறு . பிச்சைக்கு இச்சை :- ` தந்த துன்றன்னைக் கொண்டதென்றன்னை ` என்றகருத்தும் ஈண்டுப் பொருந்தும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பொடிகொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும்
வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத்
தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி
முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும் வினைபோமே.

பொழிப்புரை :

திருநீறணிந்த திருமேனியர் . புலித்தோலை உடுத்தவர் . விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச்சூலத்தை உடையவர் . முப்புரி நூல் அணிந்தவர் . மறித்துவரும் அலைகளைக் கொண்ட கடல் சூழ்ந்த மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள் . அவர் விரும்பி எழுந்தருளிய கேதீச்சரத்தை அன்புகொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர்மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும் .

குறிப்புரை :

பொடி - திருநீறு . இலைவேல் - முத்தலைச் சூலம் . அடிகள் - சிவபெருமானை . பரிந்த - அன்பு கொண்ட .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

நல்ல ராற்றவும் ஞானநன் குடையர் தம் மடைந்தவர்க் கருளீய
வல்லர் பார்மிசை வான்பிறப் பிறப்பிலர் மலிகடல் மாதோட்டத்
தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி
அல்லல் ஆசறுத் தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.

பொழிப்புரை :

மிகவும் நல்லவர் . ஞானம் நன்கு உடையவர் . தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர் . மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பிறத்தல் இறத்தல் இல்லாதவர் . நீர் நிறைந்த கடலால் சூழப்பட்ட மாதோட்டத்து எல்லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச்சரத்தை இரவும் பகலும் நினைந்து போற்றித் துன்பம் குற்றம் அற்றவர்களாய் அவ் அரனடியினை தொழும் அன்புடையவரே அடியவர் ஆவர் .

குறிப்புரை :

ஆற்றவும் - மிகவும் . அருள் ஈய வல்லர் . பார்மிசை வான் - மண்ணிலும் விண்ணிலும் . எல்லை - அளவு . அல்லல் - துன்பம் . ஆசு - குற்றம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம்
மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை
வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக்
கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சரம் பிரியாரே.

பொழிப்புரை :

பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து , தம் திருமேனி யின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமை யம்மைபால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பழுத்த பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தில் , பன்றியின் வெண்மையான கொம்பினை அணிந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாழும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார் .

குறிப்புரை :

பேழை :- பெருமை , ` பேழைப் பெருவயிற்றோடும் புகுந்து என் உளம்பிரியாந் ` (மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை 4) பெருந்திரு மகள் - கங்கை . மாழை - அழகு . இங்கு மாதோட்டம் என்பதன் விளக்கம் உளது . கேழல் பன்றி , மருப்பு - கொம்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர்வாழ்க்கை
கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில்
வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு மாதோட்டம்
தொண்டர் நாடொறுந் துதிசெய வருள்செய்கே தீச்சர மதுதானே.

பொழிப்புரை :

முற்காலத்தில் நால்வர்க்கு அறம் உரைத்தருளிப் பல உலகங்களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார் , கடல் சூழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொழுமாறு விரும்பி உறையும் கோயில் , வண்டுகள் பண்ணிசைக்கும் , சிறந்த மலர்கள் நிறைந்த பொழில்களில் மயில்கள் நடனமாடும் மாதோட்டத்தின்கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள் புரியும் கேதீச்சரமாகும் .

குறிப்புரை :

பல உலகங்களிலும் உடம்போடு உயிர்வாழ்க்கையை , அவ்வவ்வுயிர்களின் கன்மத்திற்கேற்ப அருளிய முதல்வன் பரம சிவனே என்றதாம் . பண் - பண்ணிசை . மஞ்ஞை - மயில் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

தென்னி லங்கையர் குலபதி மலைநலிந் தெடுத்தவன் முடிதிண்தோள்
தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப்
பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத்
துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.

பொழிப்புரை :

தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி , தோள் ஆகியன அழ கிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல்கேட்டு அருள் செய்த தலைவனார் , பொன் , முத்து , மாணிக்கம் , மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார் .

குறிப்புரை :

குலபதி - குலத்திற்குத் தலைவன் . நலிந்து - நெருக்கி . அடர்த்து அவனுக்கு அருள் செய்த தலைவனார் . உன்னி - தியாநித்து .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி
மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும்
மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித்
தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.

பொழிப்புரை :

மா , கமுகு , வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக , தேவியோடும் அழகிய கேதீச்சரத்து விளங்கும் எம்பெருமானே ! தாமரை மலரில் உறையும் நான்முகனும் , கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும் வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமை யாதோ ? இஃது எதிர் நிரல் நிறை .

குறிப்புரை :

பூவுளான் - பிரமன் . புவி - பூமி . இடந்து - பேர்த்து . இடந்தவன் மாயன் . ஓடியவன் அயன் . நுன் அடியிணை - உன்னுடைய திருவடிகளிரண்டும் . வித்தகம் - சாதுரியம் . மா , பூகம் ( பாக்கு ), கதலி எல்லாம் உள்ளது அம்மாதோட்டம் . தேவி - கௌரி ( திருக்கேதீச்சர மான்மியம் , பகுதி 1. பா . 36.)

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர்
எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின்
மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத்
தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.

பொழிப்புரை :

புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும் , ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும் , கூறும் அறியாமை உரைகளைக் கேளாதீர் . மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய , மாதோட்டத்துள் பாலாவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடை யுங்கள் .

குறிப்புரை :

ஆதர் - அறிவிலார் , எத்தர் - ஏமாற்றுவோர் , விரகுள்ளவர் . ஏழைமை - அறியாமை தோற்றும் சொற்கள் . மறுகிட - கலங்க . பாலாவி - அத்தலத்தின் தீர்த்தம் . அது மிகப்பெரியது .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

மாடெ லாமண முரசெனக் கடலின தொலிகவர் மாதோட்டத்
தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி
நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப்
பாட லாயின பாடுமின்ப த்தர்கள் பரகதி பெறலாமே.

பொழிப்புரை :

அருகிலெல்லாம் மணமுரசு ஒலிப்பதுபோலக் கடல் ஒலி நிரம்பப் பெற்றமாதோட்டத்தில் , வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழி நாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே ! பாடி வழிபடுமின் . பரகதி பெறலாம் .

குறிப்புரை :

மணமுரசு :- வீரமுரசு , தியாகமுரசு என்னும் மூவகை யுள் ஒன்று . ` இமிழ்குரல் முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ்கெழுகூடல் தண்கோல்வேந்து ` ( புறம் 58) ` வம்மின் எனப்புலவோரை அளித்திடு வண் கொடைமுரசு ... மணமுரசு ... திறல்முரசு ` ( முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் . 8) ஆடல் - வெற்றி . காழிநாடுளார்க்கிறை ` ஆசிரியர் . பரகதி - சிவானந்தப் பேறு அடையும் நெறி .
சிற்பி