திருவிற்குடி வீரட்டம்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே. 

பொழிப்புரை :

தெளிவான திருமேனியினரும், வானத்துப்பிறை மதியைச் சூடியவரும், கங்கையை அணிந்தவரும் தேன் நிறைந்த மண முடைய கொன்றை மலரைச் சூடிய சடையினரும், கொடிபோன்ற உமையம்மை மணாளரும் புவித்தோலை உடுத்தவரும் ஆகிய விடை ஏறும் எம்பெருமான் இனிதாக அமர்ந்துறையும் விற்குடி வீரட்டத்தை அடியவராய் நின்று ஏத்தவல்லார்களை அரியவினைகள் அடையா.

குறிப்புரை :

வடி - தெளிவு, மது - தேன்.
கொடி - உமாதேவியார் அருவினை அடையாமைக்கு வேண்டுவது அடியாராகிநின்று ஏத்தும் வன்மை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம்
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே. 

பொழிப்புரை :

களர் நிலத்துப்பூக்கும் கொன்றை மலரையும், கதிர்விரியும் மதியத்தையும், மணம் கமழும் சடையில் ஏற்றி, மனம் பொருந்த வழிபடும் அன்பர்கட்கு அருள் செய்துவரும் பெருமை யரும், யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து விளங்கும் திருமேனியை உடையவரும் ஆகிய எம்பெருமானார் உறையும் விற்குடி வீரட்டத்தைச் செழுமையான மலர்களைக் கொண்டு தூவி நினைந்து ஏத்துவார் வருத்தம் அறியார்.

குறிப்புரை :

கதிர் - நிலவு. கடி - மணம். பத்தியை உள்ளத்திற் கொண்டவரிடத்தில் சிவனருள் விளங்கும். கரி - யானை. மலரால் வழிபட்டு மனத்தில் நினைத்து வாயால் துதிப்பார்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத்  தாடிய வேடத்தர்
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம்
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே. 

பொழிப்புரை :

கரிய கண்டத்தினரும், வெண்மையான திரு நீற்றை அணிந்த மார்பினரும், வலக்கையில் எரியேந்தியவரும், மெல்லிய சடைகள் நிலத்தில் புரளச் சுடுகாட்டகத்தே ஆடிய கோலத் தினரும், ஆகிய சிவபிரான் உறையும் மலர்ப்பொய்கைசூழ்ந்த விற்குடி வீரட்டத்தைப் பிரியாது தொழுபவரைப் பெருந்தவத்தோர் என உலகில் பேணுவர்.

குறிப்புரை :

வலங்கை:- வலக்கை இடக்கையென்றலே குற்றமில்லாதது. வேடம் - சிவவேடம். பிரிவிலாதவர் - மனத்தாலும் வாக்காலும் மெய்யாலும் நீக்கமின்றி நினைத்தும் போற்றியும் வழிபட்டும் வரும் அடியார்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டம்
சேரு நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி தீவினை கெடுமாறே.

பொழிப்புரை :

பூதகணங்களோடு சேர்ந்து பாடுபவர், ஆடுபவர், அழகுபொலிந்த திருவடிகளைச் சேர்ந்த சிலம்புகளை அணிந்தவர். மரக்கலங்கள் உலாவும் கடலிடையே தோன்றிய விடத்தை உண்டவர். வேதம் ஓதும் நாவினர். அப்பெருமானுக்குரிய இடமாக விளங்கும் விற்குடி வீரட்டத்தைச் சேரும் நெஞ்சினர்க் கன்றிப் பிறருக்குத் தீவினை, பிணி கெடும் வழி உண்டோ?

குறிப்புரை :

பாடுதலுடையார், ஆடுதலுடையார், மரக்கலம், வேதங்களை அருளிச்செய்த முதல்வன். இடைவிடாது நினைக்கும். சேர்தல் - இடைவிடாது நினைத்தல் (குறள், 3.உரை.) பிணியும் வினையும் கெடுமாறு, வீரட்டம்சேரும் நெஞ்சினர்க்கே உண்டு. சேரும் என்பது எதுகைத் தொடைக்கு ஏலாது.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும்
இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம்
படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே. 

பொழிப்புரை :

விரைந்து செல்லும் விடைஏற்றை உடையவர். கனல்போன்ற மேனியர். திரிபுரங்களில் அனல் எழுமாறு பெரிய மேருமலையைக் கால் ஊன்றி வளைத்தவர். தம் அடியவர் மேலுள்ள தீய வல்வினைகளைப் போக்குபவர். அவரது உறைவிடமாகிய விற்குடி வீரட்டத்தைப் பண்போடு பரவுமின். பரவினால் அரிய நோய்கள் பற்றறும்.

குறிப்புரை :

ஏற்றினர் - எருதுடையவர். கனல் அன்ன மேனியர்:- `தீவண்ணர் திறம் ஒருகால் செப்பாராகில்`. ஊர் மூன்றும் - திரிபுரங்களும். வரை - மேரு. வெடிய - பகையாகிய. கேடாகிய அச்சத்தினைச் செய்யும். வீட்டுவிப்பான் - கொல்விப்பவன். படி - பண்பு. நோய் பற்று அறும்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர்  அரியவர் அல்லார்க்கு
விண்ணி லார்பொழின் மல்கிய மலர்விரி  விற்குடி வீரட்டம்
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக்  கிடர்கள்வந் தடையாவே.

பொழிப்புரை :

மாதொருபாகத்தர். பெருமை உடையவர். சிறியமான் கன்றை ஏந்திய கையினர். உண்மையான தலைவர். அன்பு செய்பவர்க்கு எளியவர். அல்லாதவர்க்கு அரியவர். அவர் உறையும் இடமாகிய, விண்ணுறஓங்கிய மலர்மல்கிய பொழில்கள் சூழ்ந்த விற்குடி வீரட்டத்தை எண்ணிய சிந்தையர்க்கு இடர்கள் வந்தடையா.

குறிப்புரை :

கூறு - பாகம், மறி - மான். அன்பர்க்கு எளியவர் அல்லார்க்கு அரியவர். `அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு, அடியவர்க்கு எளியான்` ` மெய்யடியவர்க்கு எண்மையனே என்றும் சேயாய் பிறர்க்கு`. (திருவாசகம்) விண்ணில் ஆர் பொழில் என்க. எண்- எண்ணுதல்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்தனை யிகலழி தரவூன்று
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டம்
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத்  துன்பநோ யடையாவே. 

பொழிப்புரை :

இடமகன்ற பெரிய கடலால் சூழப்பட்ட இலங்கையர் மன்னனை அவனது பகைமை அழியுமாறு ஊன்றிய திடமான பெரிய கயிலாய மலைக்கு உரியவர். சொற்களின் பொருளாய் விளங்குபவர். இருளார்ந்த விடமுண்ட கண்டத்தர். அவர் உறையும் பதியாகிய விற்குடி வீரட்டத்தை எண்ணும் வகையில் இசைபாடி நிற்பவர்களைத் துன்பம் நோய்கள் அடையா.

குறிப்புரை :

இகல் - வலி. மிடறு - திருக்கழுத்து. தொடங்கும் ஆறு- தொடங்கும் நெறி. சிவசம்பந்தமான இசைப்பாட்டு என்றவாறு. துன்பநோய் - துன்பத்தைத் தரும் நோய்கள்.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவ டியறியாமை
எங்கு மாரெரி யாகிய இறைவனை  யறைபுனன் முடியார்ந்த
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டம்
தங்கை யால்தொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே. 

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேடியும் திருவடி மற்றும் திருமுடியைக்காண இயலாதவாறு எரியுருவாக நின்ற இறைவனை, கங்கை சூடிய முடியோடு, சினம் மிக்க யானையின் தோலினை உரித்துப்போர்த்து உகந்தவனை, விற்குடி வீரட்டத்துள் கண்டு தம்கையால் தொழுது ஏத்த வல்லவர்கள் தவம் மல்கு குணத்தோர் ஆவர்.

குறிப்புரை :

அறியாமை - அறியாதவாறு. ஆர் எரி - நிறைந்த தீ. வரைக்கரி - மலைபோலும் யானை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின்
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில்  விற்குடி வீரட்டம்
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே. 

பொழிப்புரை :

அன்புடையவர்களே! கேளுங்கள்: சோற்றுத்திரளை உண்டு திரியும் சமணர்களையும் துவர் ஆடை உடுத்த புத்தர்களையும், பண்டும் இன்றும் ஒருபொருள் எனக்கருதாதீர். விரிந்த மலர்களைச் சூடிய சடைகளை உடைய சிவபிரான் உறையும் இடம் எது எனில் விற்குடி வீரட்டமாகும். அதனைக்கண்டு காதல் செய்வார் கருதத்தக்க குணமுடையோர் ஆவர்.

குறிப்புரை :

வார்த்தையை ஒரு பொருள் என்று கருதாதீர்கள். பரிவு உறுவீர் - அன்புமிக்கீரே! அடி - திருவடிகளை.

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத்
திலங்கு சோதியை யெம்பெரு மான்றனை எழில்திகழ் கழல்பேணி
நலங்கொள் வார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே. 

பொழிப்புரை :

மேருமலையேவில். கயிலாய மலையே தங்குமிடம் எனக்கொண்ட விற்குடி வீரட்டத்தில் விளங்கும் சோதியை, எம்பெருமானை, அவனது அழகிய திருவடிகளை விரும்பி அழகிய சோலைகள் சூழ்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழ் மாலையை உறுதியாகப் பற்றி இசையோடு மொழியுங்கள். மொழிந்தால் அதுவே நன்மைகளைத் தரும்.

குறிப்புரை :

விலங்கலே (-மேருமலையே) சிலையெனவும் (கயிலைமலையே) இடமெனவும் உடைய சிவன். எழில் - அழகு. நலம் - அழகு. செறிவு முதலிய நலங்கள்.
சிற்பி