திருக்கோட்டூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே யொற்றைவிடைச்
சூல மார் தரு கையனே துன்றுபைம் பொழில்கள் சூழ்ந்தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீடல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காவே.

பொழிப்புரை :

நீலகண்டனே , நெற்றிக்கண்ணனே , ஒற்றைவிடை மீது ஏறி வருபவனே , முத்தலைச்சூலம் ஏந்திய கையனே , செறிந்த பொழில்களால் சூழப்பட்டதும் அழகிய மலர்களின் மணம் கமழ்வது மாகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தே என்றுகூறி அவனை வணங்க எழுபவர் மிகப்பெரிதாய சிவலோகத்தில் பெருமானுக்கு அருகில் புகழ் பெறத் தங்குவர் .

குறிப்புரை :

நீலம் - நீலநிறமுடைய ஆலகாலவிடம் . கோலம் - அழகு . கொழுந்து என்பது இறைவன் திருப்பெயர் . சாலநீள் தலம் - சிவலோகம் ,

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

பங்க யம்மலர்ச் சீறடிப் பஞ்சுறு மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.

பொழிப்புரை :

தாமரைமலர் போன்ற அழகிய சிறியகால்களையும் பஞ்சுபோன்ற மென்மையான விரல்களையும் , அரவு போன்ற அல்குலையும் உடையவரும் . மயில் குயில் கிளி போன்ற மொழியினரும் , மென்மையான தனங்களையுடையாருமாகிய மங்கையர் குணலைக்கூத்து ஆடிமகிழும் கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று கூறிச் சங்கரனை வணங்க எழுவார் ஐயமின்றி அவன் திருவருளைப் பெறுவர் .

குறிப்புரை :

பங்கயம் - தாமரை . மயிலும் மொழிக்கு ஒப்பாக் கூறுவது உண்டுபோலும் . ` குயில்மொழி ` ` கிளிமொழி ` என்பனபோல மயில் மொழி என்று கேட்டிலோம் . மிழற்றிய - மெல்லச் சொல்லிய . குணலை - கூத்துள் ஒன்று . சங்கை - சந்தேகம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாம்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.

பொழிப்புரை :

நல்ல மலர்களைக்கொண்டு தொழுது எழும் அடியவர்கட்கு நம்பனாரும் , செம்பொன்போன்ற மேனியையும் அழகிய நகில்களையும் உடைய பூங்கொம்பு போன்ற மகளிர் ஆடிப் பாடித் தொழுபவரும் , செம்மைமல்கிய கோட்டூரில் விளங்குபவரு மாகிய இறைவரைக் கொழுந்தீசரே என்று வணங்கிட எழுவார் பொன்னுலகில் தேவரோடும் இனிதிருப்பர் .

குறிப்புரை :

அடியவர் தமக்கு எல்லாம் நம்பனார் . பொன்னுலகில் தேவரொடும் இனிதிருப்பர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய
குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தேயென்றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.

பொழிப்புரை :

பலாச்சுளை , மாங்கனி முதலிய தீங்கனிகளையும் தேனையும் உண்ட தோகைமயில்களும் கிளிகளும் அன்னங்களும் விளையாடும் மரஞ்செடி கொடிகள் பலவும் நிறைந்த பொழில் களையும் , கயல்கள் உகளும் அழகிய வயல்களையும் உடைய கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே என்று போற்றியவர் அழியாத செல்வமுடையவராய் இவ்வுலகில் புகழோடு வாழ்வர் .

குறிப்புரை :

பலவு - பல மரஞ்செடி கொடிகளும் . கலவம் - தோகை . மஞ்ஞை - மயில் . கிள்ளை - கிளி . நிலவு செல்வத்தர் - அழியாத ஐசுவரியமுடையவர் . நீடிய - அழியாத .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையும்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.

பொழிப்புரை :

உள்ளம் உருகுவார்க்கு ஒண்சுடராகவும் , என்றும் தன்மேல் அன்புடையடியார்க்கு ஆரமுதாகவும் விளங்குபவனே என்றும் கூறிப் பரிவும் பக்தியும் செய்து , குருகுகள் வாழும் கோட்டூர் நற்கொழுந்தே என்று விளித்து வழிபடப்புகும் அடியவர்களின் வினைகள் நீங்கும் . அவனது திருவருளைப் பெறலாம் .

குறிப்புரை :

உள்ளம் உருகுவார்க்கு ஒளிவளர் விளக்கு , அன்புடை யடியார்க்கு உண் ஆரமுது ` பரிவும் பக்தியும் செய்து கோட்டூர் நற்கொழுந்தே என்று எழுவார் வினைகள் விலகும் . திருவருள் வாய்க்கும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தே யென்றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.

பொழிப்புரை :

நெருங்கி நீண்டு வளர்ந்த சடைமுடியில் பிறைமதி , ஊமத்தை , வெள்எருக்கமலர் , வன்னியிலை , ஆகியவற்றைச் சூடியும் , தலைமாலைகளை மேனியில் அணிந்தும் , கையில் கபாலத்தை உண்கலனாக ஏந்தியும் , புலித்தோலை இடையில் உடுத்தும் , கொன்றை மரங்கள் பொன்போல மலரும் கோட்டூரில் எழுந்தருளி விளங்கும் கொழுந்தீசரின் திருப்பெயரை விளித்து அவரை வழிபட எழும் அடிய வரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் , கேடும் ஏதமும் இல்லை .

குறிப்புரை :

கோட்டூர் நற்கொழுந்தே என்று எழும் அடியவரை என்றும் வழிபடுவார்க்கு இடரும் கேடும் ஏதமும் இல்லை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

மாட மாளிகை கோபுரங் கூடங்கண் மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.

பொழிப்புரை :

மாடமாளிகை , கூடகோபுரம் , மணிஅரங்கம் , அழகியசாலை , புகழ்தற்குரியமதில் , பொன் மண்டபம் ஆகியவற்றோடு , அழகிய பொழில்கள் சூழ்ந்த கோட்டூரில் விளங்கும் நற்கொழுந்தே , என்று எழுவார் கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையவராவர் .

குறிப்புரை :

மாளிகை , கோபுரம் , கூடம் , மணி அரங்கம் , சாலை , பொன்மண்டபம் , மதில் , பொழில் , எல்லாம் கோட்டூர்ச் சிறப்பை உணர்த்தின . கேடில்லாதவராய் உலகெலாம் விளங்கிய புகழ் உடையராவர் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.

பொழிப்புரை :

ஒளியும் கூர்மையுமுடைய பற்களைக் கொண்ட இராவணன் கயிலைமலையை எடுத்தபோது , உமையம்மை அஞ்ச , இறைவன் தனது திருக்கால் பெருவிரலைச் சிறிதே சுளித்து ஊன்றிய அளவில் அவ்விராவணன் நெரிந்து வருந்தி வேண்ட , அவனுக்கு வாளும் நாளும் அருள் செய்தருளிய , பொழில் சூழ்ந்த கோட்டூர்க் கொழுந்தீசனைத் தொழுவார் இறைவன் திருவடித் தாமரைகளை அடையும் தவமுடையவராவர் .

குறிப்புரை :

வாள் எயிறு - வாள்போலும் கோரைப்பல் . சுளிய - சுளிக்க , வாளொடுநாள் - வாட்படையும் ஆயுளும் . தளிர்கொள் தாமரைப் பாதங்கள் . அருளைப் பெறுதற்குரிய தவம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

பாடி யாடும்மெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார்
கூடி ஆடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.

பொழிப்புரை :

பாடி ஆடுகின்ற உண்மை அடியார்க்கு அருளும் முத்தும் பவளமும் போன்றவனை , திருமாலும் நான்முகனும் தேடி யறிய முடியாத திருவை , மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூரில் விளங்கும் கொழுந்தை வழிபட எழுபவர் நீடிய செல்வ மும் , உலகெலாம் நிகழும் புகழும் அடைவர் .

குறிப்புரை :

பாடி ஆடுகின்ற உண்மையடியார்க்கு அருளும் முத்து . அரி அயன் அறியாத திரு . மகளிரும் ஆடவரும் கூடித்தொழும் கோட்டூர்க் கொழுந்தே என்று எழுவார்க்கு நீடிய செல்வமும் உலகெலாம் நிகழும் புகழும் உண்டாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றும்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.

பொழிப்புரை :

வளைந்த வெண்பிறையை அணிந்த சடைமுடியராகிய கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசராகிய , செழுமை யின் திரட்சியை , மலர்களால் அலங்கரித்து அவர்தம் திருவடிகளைப் போற்றுமின் . பொய்யில்லாத மெய்யராகிய அவர்தம் நல்லவருளைக் காணும் நல்லூழில்லாத சமண புத்தர்களின் உரைகளைக்கேளாது அவ்விறைவரை விரும்பித்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவர் .

குறிப்புரை :

பூணல் - மலர்களாலும் ஆடை ஆபரணங்களாலும் அலங்கரித்தல் , அரனைப் பேணல்செய்து தொழும் அடியவர் . பேணல் - பக்தி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாரும்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.

பொழிப்புரை :

பந்தாடும் மெல் விரலையும் , பவளவாயையும் தேன்மொழியையும் உடைய உமையம்மையோடு அழகிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட கோட்டூரில் விளங்கும் கொழுந்தீசரை , கடல் அலைகள் பவளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் போற்றிப் பாடிய இச்செந்தமிழ்மாலையை ஓதவல்லவர் புகழ்பெறுவர் .

குறிப்புரை :

தேன்மொழிப்பாவை - இத்தலத்தில் உள்ள தேவியார் திருப்பெயர். இதனை மதுரவசனி என்று பின்னோர் மொழி பெயர்த்தனர். கொந்து - பூங்கொத்து. சந்து - சந்தம். பாவண்ணம்.
சிற்பி