திருவாய்மூர்


பண் :நட்டராகம்

பாடல் எண் : 1

தளிரிள வளரென வுமைபாடத் தாளம் மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த் தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருணல்கி வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல , உமையம்மை அருகிருந்து பாடவும் , தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி , விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர் . தம்மை விரும் பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசி , முடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர் . வாய்மூரடி களாகிய அவர் வருவார் காணீர் .

குறிப்புரை :

இப்பதிகத்தில் அகத்துறை அமைந்தமை உணர்க . உமையம்மையார் தளிர் இளவளர் எனப் பாடவும் தாளம் இடவும் ஒருதாள் எடுத்து ஆடும் கிறிமையார் . கிறிமை - பொய்ம்மை . விளர் - வெழுப்பு . ` மன்னிய ஆடல்காட்ட ` எனச் சேக்கிழார் சுவாமிகள் அருளியதை நோக்கின் , இவர் காணீர் என்று இருத்தல் வேண்டும் எனத் தோன்றுகின்றது . அதில் ககர உயிர்மெய் ஏட்டில் கெட்டிருக்க ரகர ஆகாரமாகக் கொண்டனர்போலும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 2

வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி விரிதரு கோவண வுடைமேலோர்
பந்தஞ்செய் தரவசைத் தொலிபாடிப் பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந்தெனக் கருள்நல்கிச் செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

தழல் போன்ற திருமேனியராய் , திருநீறுபூசி , விரித் தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர் . செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கி ப்புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர் .

குறிப்புரை :

இறைவர் என் சிந்தனையுட்புகுந்து எனக்கு அருள் நல்கித் தன்னைப் பரவச்செய்ய வருவார் காணீர் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 3

பண்ணிற் பொலிந்த வீணையர் பதினெண் கணமு முணராநஞ்
சுண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்
சுண்ணப் பொடிநீ றணிமார்பர் சுடர்பொற் சடைமேற் றிகழ்கின்ற
வண்ணப் பிறையோ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பண்ணிசை பொருந்திய வீணையை உடையவர் . பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர் . திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர் . அழகிய சடை மீது இளம்பிறை சூடியவர் . வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர் .

குறிப்புரை :

பண் - பண்ணிசை . வீணையர் - ( பா .8 பார்க்க ) பதினெண்கணம் - பதினெட்டுத் தேவர்கூட்டம் . நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் - நஞ்சு உண்டும் சாவா ஒருவன் என்ற கருத்தை உணர்த்திற்று . ` உள்ளம் உருகில் உடனாவர் ` என்னும் பரமாப்த வசனத் தைத் திருவுந்தியாரில் (7) அமைத்து , உள்ளம் உருகில் உடனாவர் அல்லது தெள்ள அரியர் என்று உந்தீபற , சிற்பரச் செல்வர் என்று உந்தீ பற என்றருளியது காண்க . சுண்ணம் - சுவர்ணம் , திருநீற்றுப் பொற் சுண்ணம் . பொன்போலச் சுடருஞ் சடை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

எரிகிளர் மதியமொ டெழினுதன்மேல் எறிபொறி யரவினொ டாறுமூழ்க
விரிகிளர் சடையினர் விடையேறி வெருவவந் திடர்செய்த விகிர்தனார்
புரிகிளர் பொடியணி திருவகலம் பொன்செய்த வாய்மையர் பொன்மிளிரும்
வரியர வரைக்கசைத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும் , அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும் , கங்கையை யும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர் . திருநீறணிந்த மார்பினர் . சத்திய வடிவினர் . வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வரு வார் . காணீர் .

குறிப்புரை :

பொறி - படப்பொறி . அகலம் - மார்பு . ( பா .7.) வாய்மையர் - சத்தியரூபர் . வாய்மையரூர் என்பதன் மரூஉவே வாய்மூர் . அரவு அரைக்கு அசைத்து வருவார் இவர் காணீர் என்க .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 5

அஞ்சன மணிவணம் எழில்நிறமா வகமிட றணிகொள வுடல்திமில
நஞ்சினை யமரர்கள் அமுதமென நண்ணிய நறுநுதல் உமைநடுங்க
வெஞ்சின மால்களி யானையின்தோல் வெருவுறப் போர்த்ததநிறமு மஃதே
வஞ்சனை வடிவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறு நுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண் டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனைவடிவோடு வருவார் . அவரைக் காணீர் .

குறிப்புரை :

நீலமணிபோலும் மேனியர் . அஞ்சனம் - கருநிறம் , மணிவண்ணம்போலும் அழகிய நிறம் . அகம் மிடறு - கழுத்திடம் . திமிலம் - பேரொலி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 6

அல்லிய மலர்புல்கு விரிகுழலார் கழலிணை யடிநிழ லவைபரவ
எல்லியம் போதுகொண் டெரியேந்தி யெழிலொடு தொழிலவை யிசையவல்லார்
சொல்லிய அருமறை யிசைபாடிச் சூடிள மதியினர் தோடுபெய்து
வல்லியந் தோலுடுத் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவு தலை ஏற்றருளுபவர் . வேதங்களைப் பாடிக்கொண்டு , இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார் . அவ்வாய்மூர் இறைவரைக் காணீர் .

குறிப்புரை :

இதன் முதலீரடியொடும் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்தவான வாழ்க்கையது உடையார் ( தி .2 ப .94 பா .7.) என்பதைப் பொருத்திக் காண்க . மகா சங்கார தாண்டவத்தைப் பல்வேறு கூறுபாடுற்ற சத்திகள் ஒருங்குசேர்ந்து காணும் உண்மை உணர்த்திற்று . வல்லியம் - புலி .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 7

கடிபடு கொன்றைநன் மலர்திகழுங் கண்ணியர் விண்ணவர் கனமணிசேர்
முடிபில்கும் இறையவர் மறுகின்நல்லார் முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்
பொடியணி வடிவொடு திருவகலம் பொன்னென மிளிர்வதொர் அரவினொடும்
வடிநுனை மழுவினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலை யில் அணிந்தவர் . தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழு மணிகளின் ஒளி சிதறும் திருவடியினர் . வீதிகளில் பெண்கள் பலி யிடலைக் கண்டு முறுவல் செய்பவர் . திருநீறு அணிந்த வடிவோடும் , பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும் , கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

கண்ணியர் - தலையிற்சூடும் மாலையர் , மணிமுடி . பில் கும் - ( ஒளி ) சிதறும் , ( பா .4.) பொடி - திருநீறு . வடி - கூர்மை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 8

கட்டிணை புதுமலர்க் கமழ்கொன்றைக் கண்ணியர் வீணையர் தாமுமஃதே
எட்டுணை சாந்தமொ டுமைதுணையா இறைவனா ருறைவதொர் இடம்வினவில்
பட்டிணை யகலல்குல் விரிகுழலார் பாவையர் பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வட்டணை யாடலொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர்மாலையைத் தலையில் அணிந்தவர் . வீணை வாசிப்பவர் . அவ் விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும் . பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய் மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார் . காணீர் .

குறிப்புரை :

கட்டிணை புதுமலர் - இணை இணையாகக் கட்டப்படும் புதிய பூக்கள் . எட்டுணை - ( எண் + துணை ) எண் மடங்கு . பட்டு இணைந்த - பட்டிசைந்த . பாவையர் - தாருகவனத்து மகளிர் . வட்டணை - வட்டம் . தாளம் போடுதலுமாம் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 9

ஏனம ருப்பினொ டெழிலாமை யிசையப் பூண்டோ ரேறேறிக்
கானம திடமா வுறைகின்ற கள்வர் கனவிற் றுயர்செய்து
தேனுண மலர்கள் உந்திவிம்மித் திகழ்பொற் சடைமேல் திகழ்கின்ற
வானநன் மதியினொ டிவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங் களைக் கவரும் கள்வராவர் . கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ்வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி . மருப்பு - கொம்பு , பன்றிக்கொம்பும் ஆமையோடும் பூண்டவர் என்று திருமுறைகளில் பல இடங்களில் இருத்தல் வெளிப்படை .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர்
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் பாம்பொடு நூலவை பசைந்திலங்கக்
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் வாய்மூ ரடிகள் வருவாரே.

பொழிப்புரை :

பிறைசூடியவராய் , சுடர்முடியவராய் , திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய் , கொன்றைமாலை சூடியவராய் , பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய் , காந்தள் போன்று முகிழ்த்த கையினராகி , தாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

குறிப்புரை :

பசைந்து - பற்றி , பசுமையுற்று . கோடல் - வெண் காந்தள் , ஈண்டுக் காந்தளையுணர்த்தி , மகளிர் செவ்விரல்களுக்கு ஒப்பாயிற்று . முகிழ் - அரும்பு .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 11

திங்களொ டருவரைப் பொழிற்சோலைத் தேனலங் கானலந் திருவாய்மூர்
அங்கமொ டருமறை யொலிபாடல் அழல்நிற வண்ணர்தம் மடிபரவி
நங்கள்தம் வினைகெட மொழியவல்ல ஞானசம் பந்தன் தமிழ்மாலை
தங்கிய மனத்தினால் தொழுதெழுவார் தமர்நெறி யுலகுக்கோர் தவநெறியே.

பொழிப்புரை :

சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும் சோலைகளையும் உடைய திருவாய்மூரிலுள்ள , வேதங்கள் , வேதாங் கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடி களைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறி , உலகில் மேலான தவநெறியாகும் .

குறிப்புரை :

வரைப்பொழில் - மலையிலுள்ள சோலைகள் . மறை யொலி - வேதமுழக்கம் . நங்கள் தம்வினை . எழுவார் நெறி , எழு வார்க்குத் தமர்நெறி , உலகுக்கு ஒரு தவநெறி .
சிற்பி