சீகாழி


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

பொடியிலங்குந் திருமேனி யாளர் புலியதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும் மடிகள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ் வெறிவார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

திருநீறணிந்த திருமேனியர் . புலித்தோல் உடுத்தவர் . திருவடிகளில் விளங்கும் கழல்கள் ஆர்க்க ஆடுபவர் . அவர் உறையு மிடம் , இடிபோல் முழங்கும் கடல் அலைகளின் நீர்ப் பெருக்கு முத்துக் களை மிகுதியாகக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

இலங்கும் - விளங்கும் . கடல் அலையொலி இடி யொலி போலுள்ளதாம் . கடி - விரைவு , மிகுதி . அடிகள் இடம் கடற்காழி என்றவாறே மேலும் இயைத்துக் கொள்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ் வடிகள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.

பொழிப்புரை :

மயக்கம் தரும் பிறவித்துயராகிய மாசினைப் போக்க எண்ணிய தொண்டர்கள் தான் வாழும் இடங்கள் எங்கும் பணி செய்ய நின்ற சிவபிரான் உறையுமிடம் , மேகம் போல வரையாது கொடுக்கும் கொடையாளர்களுடன் வேதஒலிபரவும் சிறப்பினதாய , கயல்மீன்கள் தவழும் வயல்கள் சூழ்ந்த காழிப் பதியாகும் .

குறிப்புரை :

துயர்மாசு - உம்மைத்தொகை . ` கைம்மாறு வேண்டாக் கடப்பாடுமாரி மாட்டு என் ஆற்றுங்கொல்லோ உலகு ` ( குறள் . 211). கொடையாளர் - அந்தணர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

கூர்விலங்குந் திரிசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தமண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரை கள்மோதந் நெடுந்தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.

பொழிப்புரை :

கூரிய முத்தலைச் சூலத்தை ஏந்தியவர் . குழை யணிந்த செவியினர் . மார்பில் முப்புரிநூல் விளங்கும் மணவாளக் கோலத்தினர் . அவருக்குரிய ஊர் , மலைபோலக் கடல் அலைகள் வந்தலைக்கும் காழிப் பதியாகும் .

குறிப்புரை :

திரிசூலமாகி . வேலுடையவர் , மார்வு - மார்பு . உகந்த மணவாளன் . விலங்கல் - மலை . தாரை - நீரொழுக்கு , பெருமழை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

குற்றமில்லார் குறைபாடு செய்வார் பழிதீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்த பெருமானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார் மறைகலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

குற்றம் இல்லாதவர் . தம் குறைகளைக் கூறி வேண்டு பவருக்கு வரும் பழிகளைத் தீர்ப்பவர் . விடைக்கொடியை உயர்த்தி யவர் . அப் பெருமானுக்குரிய இடம் , நல்லவர் , மனத்தால் இனியவர் , வேதங்களைக் கற்றுணர்ந்து நல்லோர் செய்யும் பிழைதெரிந்து போக்கித் தலையளி செய்வோர் ஆகியவர்கள் வாழும் கடற்காழியாகும் .

குறிப்புரை :

குற்றம் இல்லார் . குறைபாடு செய்பவரது பழியைத் தீர்ப்பவர் . நல்லார் ; இனியார் ; கலையெல்லாம் கற்று நல்லாரானவர் என்று அந்தணரைக் குறித்தல் அறிக . அளிக்கும் - தலையளிசெய்யும்

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

விருதிலங்குஞ் சரிதைத் தொழிலார் விரிசடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக் கிடமாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப் பிழைகேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

வெற்றியமைந்த புராண வரலாறுகளை உடையவர் . விரிந்த சடையினர் . எருது விளங்க அதன்மேல் பொலிவோடு அமரும் எந்தை . அவருக்குரிய இடம் , பெருமை பொருந்திய வேதங்களைப் பயில்வோர் ஓதக்கேட்டு அதிலுள்ள பிழைகளைப் பலகாலும் கேட்டுப் பழகிய வாசனையால் கிளிக் குலங்கள் தெரிந்து தீர்க்கும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

சரிதை - ஒழுக்கம் . சீகாழியில் வேதியர்கள் வேதத்தை ஓதுங்கால் கேட்டுணர்ந்து , முன்புற்ற கேள்வி வன்மையால் , கிளியினங்கள் அதன்கண் பிழைகளைத் திருத்தும் அற்புதம் உணர்த்தப்பட்டது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

தோடிலங்குங் குழைக்காதர் தேவர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க் கிடமாவது
கோடிலங்கும் பெரும்பொழில் கள்மல்கப் பெருஞ்செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.

பொழிப்புரை :

தோடும் குழையும் விளங்கும் காதினர் . வேதங்களை அருளியவர் . வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்து பெருமையோடு இலங்கும் சடைமிசைக் கங்கையைச் சூடியவர் . அவ்வடிகட்கு இடம் பெரிய கிளைகளோடு கூடிய மரங்கள் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ளதும் செந்நெற்காடுகளை உடைய வயல்களை உடையதுமான காழிப்பதியாகும் .

குறிப்புரை :

தோடும் குழையும் இலங்கும் காதர் . வேதர் - வேதத்தை யுடையவர் . கோடு - கொம்பு . செந்நெலின்காடு - செந்நெற்பயிர் நெருக்கம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலாற்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.

பொழிப்புரை :

மேருமலையை வில்லாகக் கொண்டு முப் புரங்களை எரித்து , அலைகளோடு கூடிய கங்கையை முடிமிசை வைத்துள்ள அடிகட்கு இடம் , இலைகளோடு பூத்து விளங்கும் தாழை நீர் முள்ளி ஆகியவற்றின் மணத்துடன் வேதம் வல்லமறையவர் கணம் வாழும் காழிப்பதியாகும் .

குறிப்புரை :

வைத்த அடிகள் என்னும் பெயரெச்சத்தொடர்க்கு இடையில் வகரமெய் பிற்பதிப்புக்களில் இருக்கின்றது . கைதை - தாழை . கண்டல் - நீர்முள்ளி , கலையிலங்குங்கணத் தினம் :- கல்வி விளங்கும் மறையவர் கூட்டம் ; மான்கூட்டம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ் வடர்த்தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.

பொழிப்புரை :

உலகில் மாறுபாடுடையவனாய் வாழ்ந்த இராவணன் அழுது இரங்க , அவன் தலை மார்பு ஆகியன ஒடுங்க அடர்த்துப் பின் அவன் தொழுது இரங்கிய அளவில் அவனது துயர் தீர்த்தருளிய இறைவற்கு இடம் வண்டும் பறவைகளும் மதிற்புறத்தே வாழும் கடற் காழியாகும் .

குறிப்புரை :

முரண் - வலி , மாறுபாடு . சிரம்உரம் - தலையும் மார்பும் . உகந்தார் - உயர்ந்த சிவபிரான் . கழுது - வண்டு . பேயும் ஆம் . புள் - பறவை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகடனை
மேவினானும் வியந்தேத்த நீண்டா ரழலாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ் வொருவர்க்கிடங்
காவியங்கண் மடமங்கையர் சேர்கடற் காழியே.

பொழிப்புரை :

நான்முகனும் , தாமரைமலரில் வாழும் திருமகளை மருவிய திருமாலும் வியந்து போற்ற , அழலுருவாய் நீண்டுப்பின் அதனின் நீங்கி அவர்களுக்கு அருள்புரிந்த இறைவற்கு இடம் , குவளை மலர் போலும் கண்களை உடைய அழகிய மகளிர் வாழும் கடற்காழியாகும் .

குறிப்புரை :

விரிபோது - பூத்த தாமரைமலர் . மேவினான் - விரும்பிய திருமால் . ஓவி - நீங்கி . புரிந்த ஒருவர் என்னும் பெயரெச்சத் தொடரில் வகரம் விரித்தல் விகாரம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உடைநவின் றாருடைவிட் டுழல்வார் இருந்தவத்தார்
முடைநவின் றம்மொழி யொழித்துகந்தம் முதல்வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாடம் ஓங்குங்கடற் காழியே.

பொழிப்புரை :

உடையோடும் , உடையின்றியும் திரிபவரும் , கடுமையான விரதங்களைத் தவமாக மேற்கொள்பவருமான புத்தர் சமணர்களின் நாற்றமுடைய மொழிகளையொழித்து உகந்த முதல்வன் இடம் , கெண்டை மீன்கள் துள்ளிப் பாயும் நீர் நிறைந்த மடைகளோடு கூடிய வயல்கள் சூழ்ந்ததும் , வாயில்களை உடைய உயர்ந்த மாட வீடுகளைக் கொண்டுள்ளதுமான காழிப்பதியாகும் .

குறிப்புரை :

உடை நவின்றார் - உடை செய்தார் , உடுத்தார் . தேரர் , உடைவிட்டு உழன்றார் - ஆடையின்றித் திரிந்தவர் ; சமணர் . முடை - நாற்றம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

கருகுமுந்நீர் திரையோத மாருங் கடற்காழியுள்
உரகமாருஞ் சடையடி கள்தம்பா லுணர்ந்துறுதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.

பொழிப்புரை :

கரிய கடல் அலைகளின் ஓதநீர் நிறைந்த காழிப் பதியுள் , பாம்பணிந்தவராய் விளங்கும் சடைகளை உடைய அடிகளின் அருளை உணர்ந்து ஓதுதலால் புகழ் பெருக வாழ்ந்து அன்பு செய்யும் தொண்டர்கள் தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் சொன்ன இப்பதிகப் பாடல்களைப் பாடி ஆட அவர்களுடைய பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

உரகம் - பாம்பு . அடிகள் தம்பால் - சிவபிரானிடத்தில் . விரகன் - வல்லவன் , அறிஞன் .
சிற்பி