திருக்கேதாரம்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக்
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

பொழிப்புரை :

அடியவர் ஐம்புலக்களிறுகளையும் அடக்கி ஆண்டு , நாண்மலர்களைக் கொண்டு இண்டைகட்டிச் சார்த்தி வழிபாடு செய்யுமிடம் , வண்டுகள் பாடவும் , மயில்கள் ஆர்ப்பரிக்கவும் , மான் கன்றுகள் துள்ளவும் , சுனைகளில் கெண்டைகள் பாய்வதால் நீலமலர் மொட்டுக்கள் அலரவும் விளங்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

அஞ்சுகளிறும் - ஐம்புலங்களாகிய ஆண்யானைகளை யும் . ` ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம் உள்ளப் புண்ட ரிகத்துள் இருக்கும் புராணர் ` ( தி .1. ப .32. பா .6.) இண்டை கட்டி வழிபாடு செய்தல் வடநாட்டிலும் உண்டுபோலும் ! ` என்பரால் ` என்றது , காணாது கேட்டுப் பாடியருளியதைக் குறித்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

பாதம்விண்ணோர் பலரும் பரவிப் பணிந்தேத்தவே
வேதநான்கும் பதினெட்டொ டாறும் விரித்தார்க்கிடம்
தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினம்
கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.

பொழிப்புரை :

விண்ணோர் பலரும்பாதம் பரவித் தொழ நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் பதினெண் புராணங்களையும் விரித்துரைத்த சிவபிரானுக்கு இடம் , மலரின் மது உண்ட வண்டுகள் கீதம்பாட மந்திகள் கேட்டு மகிழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

விண்ணோர் பலரும் பாதம் பரவிப் பணிந்து ஏத்த விரித்தார்க்கு இடம் கேதாரம் என்க . வண்டினம் கீதம்பாட மந்திகள் கேட்டுத் துள்ளும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

முந்திவந்து புரோதாய மூழ்கி முனிகள்பலர்
எந்தைபெம்மா னெனநின்றி றைஞ்சும் மிடமென்பரால்
மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக்
கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.

பொழிப்புரை :

முனிவர்கள் உதயத்துக்கு முன் எழுந்து நீராடி எந்தைபெருமான் என இறைஞ்சச் சடாதாரியான சிவபிரானுக்குரிய இடம் , மந்திகள் பாய்தலால் சரேலெனத் தேனைச் சொரிந்து முரிந்து வீழ்ந்த மலர்களின் மணங்கமழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

புரோதாயம் :- புர + உதயம் = புரோதயம் , புர :- கீழ்த் திசை உதயத்திற்கு முன்னர் எனலுமாம் . ` நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம் ` புரோதயம் என்பது புரோதாயம் எனப் பிழையாய் நின்றது . சிவாலிங்கம் , சடாட்சரம் ஆதினம் ஆதிபன் ஆம்பா ( கண்ணாம்பா ஜகதாம்பா ) முதலியவற்றில் நீண்டதுபோல உதயம் - உதாயம் என்று நீண்டது பிழைவழக்கு . புரா + உத் + ஆயம் எனின் , ( கதிரவன் ) எழுமுன் என்க . ` தாயம் ` என்பதை ணமுல் ப்ரத்யயாந்த மாகக் கொள்ளின் முன்னர்க்கொடுத்து என்றுரைக்க . முனிகள் பலர் இறைஞ்சும் இடம் கேதாரம் . ` சரேல் எனச் சொரிந்து ` என்றிருந்தது போலும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 4

உள்ளமிக்கார் குதிரைம் முகத்தார் ஒருகாலர்கள்
எள்கலில்லா இமையோர்கள் சேரும் மிடமென்பரால்
பிள்ளைதுள்ளிக் கிள்ளைபயில்வ கேட்டுப் பிரியாதுபோய்க்
கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

தியான பலம் உடையோரும் , குதிரை முகமுடைய கின்னரரும் , ஒற்றைக் காலுடைய பிரமதகணத்தவரும் இமையவரும் சிவபிரானை வழிபடக் கூடுமிடம் , தம்குஞ்சுகள் பசியோடு தம்மை அழைப்பதைக் கேட்டுக் கிளிகள் ஏனற் கதிர்களைக் கொய்து வந்து அவற்றின் வாயிற் பெய்யும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

உள்ளம் மிக்கார் - தியானபலம் மிகுந்தவர் . குதிரை முகத்தார் - கின்னரர் ஸ்யா திக் , க்ஷரஹ் : கிம்ரூபுர த்ருட வதனோ மயூம் என்பது ( அமரகோசம் முதற்காண்டம் சுலோகம் 74) ஒருகாலர்கள் :- ` கொம்பைப் பிடித்தொருக்காலர்கள் இருக்கான் மலர்தூவி ` ( தி .7. ப .78. பா .3.) பிரமதகணத்தவருள் ஒருவகையர் என்னும் பவிடிய புராணக்கூற்று இங்குப் பொருந்துமோ ?

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால்
வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும் இடமென்பரால்
மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய
கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.

பொழிப்புரை :

பல்லூழிக்காலம் வேதப் பொருள்களை உணரும் அடியவர் சிவபெருமானை வாழ்த்தி இறைஞ்சிச் சேரும் இடம் , உணவு பெற விரும்பிக் கலப்பையால் உழுவார்க்கு அந்நிலத்தில் மாணிக்க மணிகள் கிடைக்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

ஊழிஊழி உணர்வார்கள் . புழுதியின் மரூஉ பூழ்தி , ( பொழுது - போழ்து ), கிளைக்க - கிண்ட .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கி நீள்வரைதன்மேல்
தேறுசிந்தை யுடையார்கள் சேரும் இடமென்பரால்
ஏறிமாவின் கனியும்பலா வின்இருஞ் சுளைகளும்
கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.

பொழிப்புரை :

நீரில் மூழ்கித் திருநீற்றை அணிந்து , நிலத்திடை உண்டு , நீண்ட மலையின்மேல் தெளிந்த சிந்தை உடைவர்களான தாபதர்கள் வாழும் இடம் , குரங்குகள் மா , பலா மரங்களில் ஏறி அவற்றின் கனிகளைக் கீறி உண்டு மகிழ்ந்து வாழும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

தாபதரொழுக்கம் முதலீரடிகளில் குறிக்கப்பட்டது . தேறு சிந்தை - தெளிந்த உள்ளம் . மாமரத்தில் ஏறிப் பழங்களையும் பலா வைக் கீறிச் சுளைகளையும் உண்டு திரிவன குரங்கினங்கள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத்
தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க் கிடமென்பரால்
உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக்கல் லறைகண்மேல்
கிடந்தவேங்கை சினமாமுகஞ் செய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

சிவபிரான் வானோர் தொழுமாறு மறை ஓதியும் , மங்கை பங்கராகியும் , வேதாகமங்களை அருளியும் , அடியவர் வினை களைத் தீர்த்தற்கு எழுந்தருளி விளங்கும் இடம் , காற்றடிக்கப் பூத்த வேங்கை மலர்கள் பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்து புலியென மற்ற புலிகளை மருள்விக்கும் திருக்கேதாரமாகும் .

குறிப்புரை :

சிவபிரான் , மங்கைபங்கராகியும் வேதாகமங்களை அருளியும் உயிர்களின் வினைகளைத் தீர்க்கின்ற உண்மை முன்னீரடி களில் உணர்த்தப்பட்டது . ` ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு , காரணன் அருளானாகில் கதிப்பவர் இல்லை ஆகும் ` என்பது சிவாகம வசனம் . காற்றடிக்கப் பூத்த வேங்கைப் பூக்கள் கற்பாறைகளின் மேல் உதிர்ந்து கிடந்தன . வேங்கை கண்டு பிறிதொரு வேங்கை எனச் சினந்தது .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால்
வெருவவூன்றி விரலா லடர்த்தார்க் கிடமென்பரால்
குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல்
கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

பொழிப்புரை :

கடல்சூழ்ந்த இலங்கை மன்னன் இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தபோது அம்மலைக்கீழ் அகப்படுத்திக் கால்விரலை ஊன்றி அடர்த்த இறைவனுக்கு இடம் , குரவம் , கோங்கு , அசோகு , ஞாழல் , சுரபுன்னை ஆகிய மரங்களில் பூத்த மலர்களில் முறையாக வண்டு பண்செய்து தேனுண்ணும் கேதாரமாகும் .

குறிப்புரை :

அரவம் - முழக்கம் . வரை - மலை . குரவம் - குராமரம் . பிண்டி - அசோகம் . கிரமம் - முறை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

ஆழ்ந்துகாணா ருயர்ந்தெய்த கில்லார் அலமந்தவர்
தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க் கிடமென்பரால்
வீழ்ந்துசெற்றுந் நிழற்கிரங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக்
கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.

பொழிப்புரை :

பன்றியுருக் கொண்டு மண் இடந்தும் காணாத திருமாலும் , அன்னப்புள்ளாய் விண் பறந்தும் காணாத பிரமனும் தாழ்ந்து தம் முடிசாய்த்து வணங்க நின்றவனாகிய சிவபிரானுக்கு உரிய இடம் , சிங்கம் யானைமேல் வீழ்ந்து அழித்து அதன்மருப்பைப் பிளந்து குருத்தை உண்ணும்போது முத்துக்கள் மருப்பிலிருந்து உதிரும் கேதாரமாகும் .

குறிப்புரை :

ஆழ்ந்துகாணார் - பன்றியுருக்கொண்டு மண் இடந்தும் காணாத திருமால் . உயர்ந்து எய்தகில்லார் - அன்னப்புள் வடிவு கொண்டு விண்பறந்தும் காணாத அயன் , தாழ்ந்து தம்தம் முடிசாய நின்றவர் சிவபிரான் . சாய்ந்தவர் - அயனும் அரியும் . சிங்கம் யானை மேல் வீழ்ந்து அழித்து மருப்பைப் பிளந்து உண்ணுகின்றுழி முத்துக்கள் உதிரும் .

பண் :நட்டராகம்

பாடல் எண் : 10

கடுக்கள்தின்று கழிமீன் கவர்வார்கண் மாசுடம்பினர்
இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணா விடமென்பரால்
அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங் கவர்வினைகளைக்
கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

பொழிப்புரை :

துவர்க்காய்களைத் தின்று கழிமீன்களை யாரும் அறியாமல் கவர்ந்து உண்பவரும் , மாசு பொருந்திய உடலினரும் மக்களைத் துன்பநெறியில் செலுத்துவோருமாகிய சமணர்கள் சாராத இடம் , அருகில் இருந்து அறநெறியான வார்த்தைகளைக் கேட்டு அடிய வர் வினைகளைக் கெடுக்கும் பெருமான் உறையும் கேதாரமாகும் .

குறிப்புரை :

கடுக்கள் தின்று - துவர்க்காய்கள் தின்று . கழிமீன்கள் கவர்வார்கள் என்றதில் அவர் புலைமை குறிக்கப்பட்டது . இடுக்கண் - ( இடுங்குகண் ) துன்பம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான்
ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை
ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர்
வேந்தராகி யுலகாண்டு வீடுகதி பெறுவரே.

பொழிப்புரை :

வயல்வளம் உடைய காழிநகரில் தோன்றிய ஞானசம்பந்தன் , நீர் அருவிகளை உடையதும் , இமையோர்கள் உறைவதுமாகிய கேதாரத்து இறைவர்மீது ஆய்ந்து சொன்ன அருந்தமிழ் பத்தையும் இசையோடு பாடி வழிபட வல்லவர் . வேந்தராய் உலகை ஆண்டு முடிவில் வீடுகதி பெறுவார்கள் .

குறிப்புரை :

ஏய்ந்த நீர்க்கோட்டு இமையோர் உறைகின்ற கேதாரம் என்றதில் , கேதாரத்தை வழிபடும் இமையவர் அவ்வாறு திங்களும் உறைகின்ற இடம் நீர்க்கோடு என்பது குறிக்கப்பட்டது . வீடுகதி - வீட்டிற்குரிய நெறி . வீடும் ( பாசநீக்கம் ) கதியும் ( சிவப்பேறு ) என உம்மைத் தொகையுமாம் .
சிற்பி