திருப்புகலூர்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரம்ஒர் அம்பால்எரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்இடர் கழியுமே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க தேன் விம்மும் மலர்கள் கூடிய கூந்தலினராகிய இளம்பெண்கள் ஆட , மணம் விரவும் நீர்நிலையில் வாழும் செம்மைமிக்க கண்களை உடைய கரிய கயல்மீன்கள் துள்ளிப் பாயும் புகலூரில் விளங்கும் திங்கள் சூடித் திரிபுரங்களை ஓரம்பால் எரி யூட்டிய எங்கள் பெருமான் திருவடிகளைப்பரவ இடர் கெடும் .

குறிப்புரை :

குழலில் மலரினது கள் இருத்தலால் , ` வெங்கள் விம்மு குழல் ` எனப்பட்டது . செங்கட் கருங்கயல் ; திரிபுரம் ஓரம்பு :- முரண் டொடை . நாளும் பரவ இடர்கழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வாழ்ந்தநாளும் இனிவாழு நாளும்இவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன் புகலூரையே
சூழ்ந்தவுள்ளம் முடையீர்கள் உங்கள்துயர் தீருமே.

பொழிப்புரை :

இதுவரை வாழ்ந்த நாளையும் இனி வாழும் நாளையும் அறிவீரேயானால் எம்பெருமானை ஏத்தாத நாள்கள் வீழ்ந்த நாட்கள் என்றறிந்தும் , எம்பெருமானை ஏத்தும் நல்லூழாகிய விதி இல்லாதவர்களே ! பிறை மதிசூடிய சடையினான்தன் புகலூரை மறவாது நினையும் உள்ளம் உடையீர்களாயின் உங்கள் துயர் தீரும் .

குறிப்புரை :

உடம்பொடு உயிர்வாழ்வின் இறந்த காலத்தையும் அறிவீர் எனில் :- ` ஆர் அறிவார் சாநாளும் வாழ்நாளும் ` ( தி .1 ப .41 பா .3.) எம் பெருமானை ஏத்தாத நாள் வாழ்ந்த நாளாகா . ` நின்திரு வருளே பேசின் அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே ` ( தி .6 ப .47 பா .10) சூழ்ந்த - ஆராய்ந்த .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மடையின்நெய்தல் கருங்குவளை செய்யமலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானொர் பாகம்மதி சூடியை
அடையவல்லவர் அமருலகம் ஆளப்பெறு வார்களே.

பொழிப்புரை :

மடைகளில் நெய்தல் , குவளை , செந்தாமரைமலர் ஆகியன விளங்க , அருகில் செந்நெல் விளையும் வயல்களை உடைய புகலூரில் தன்பாகத்தே கொன்றை மாலை சூடி மதிபுனைந்து உமை யோடு விளங்கும் சிவபிரானை அடைய வல்லவர் அமருலகு ஆள்வர் .

குறிப்புரை :

தொடை - மாலை . அமருலகம் :- அமரருலகம் என்பது இவ்வாறு ஆளப்பட்டது . வன்மை பேற்றிற்குக்காரணம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

பூவுந்நீரும் பலியுஞ் சுமந்து புகலூரையே
நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கடாம்
ஓவும்நாளும் உணர்வொழிந்த நாளென் றுள்ளங்கொள்ளவே.

பொழிப்புரை :

பூவும் , நீரும் , நிவேதனப் பொருள்களும் எடுத்து வந்து புகலூரை அடைந்து , அங்குள்ள பெருமானை நாவினால் நவின்று , ஏத்த வல்லவராய் , செவிகளால் அவன் பெருமையல்லால் யாதும் கேளாதவராய்த் தொண்டுபூண்ட அடியவர்களே இறைவனை நினைதல் பேசுதல் இல்லாத நாள்களைப் பயனின்றிக் கழிந்த நாள் என்றும் உணர்வு ஒழிந்த நாள் என்றும் கருதுவர் .

குறிப்புரை :

பலி - நிவேதனம் . ஓவார் - நீங்கார் . அடியார்கள் அவன் பெருமை அல்லால் செவித்துளைகளால் யாதும் கேளார் . ஓவார் , ஓவும் நாள் உணர்வு ஒழிந்த நாள் என்க . ` ஓவும் நாள் உணர்வு அழியும் நாள் ` ( தி .7 ப .48 பா .3)

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச் சிறிதெளியரே.

பொழிப்புரை :

அன்னங்கள் கன்னிப் பெடைகளைத் தழுவி ஒதுங்கி அழகிய நடையினவாய்ப் பொன்போன்று அலரும் காஞ்சி மரங்களின் நிழலில் ஆரவாரிக்கும் புகலூரில் , முன் நாளில் முப்புரங்களை எரித்த மூர்த்தியின் இயல்புகளைக் கருதுமிடத்து இத்தகையவர் என்னப் பெரிதும் அரியராய் அடியார்கள் ஏத்த மிக எளியவர் ஆவர் .

குறிப்புரை :

புல்கி - தழுவி . ஒல்கி - ஒதுங்கி . இன்னர் என்னப் பெரிது அரியர் :- ` அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய வொண்ணார் ( தி .6 ப .85 பா .3). ` இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10).

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

குலவராகக் குலமிலரும் மாகக்குணம் புகழுங்கால்
உலகினல்ல கதிபெறுவ ரேனும்மலர் ஊறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக லூர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம் நினைவார்களே.

பொழிப்புரை :

உயர் குலத்தினராயினும் அல்லாதவராயினும் அவருடைய குணங்களைப் புகழுமிடத்து அவர் நற்கதி பெறுவர் . ஆத லின் , அடியவர்கள் மலர்களில் விளைந்த தேனால் , புலால் நாறும் இடங்களிலும் மணம் வீசுகின்ற , அழகிய புகலூரில் பிறையணிந்த சடை யுடைய அடிகளின் திருவடிகளையே நினைவார்கள் .

குறிப்புரை :

குலவர் - உயர் குலத்திற் பிறந்தவர் . ஆக :- இரண்டும் வியங்கோள் . குணம் - இறைவனுக்குள்ள எண்குணங்கள் , பொருள் சேர்புகழ்கள் . நல்லகதி :- ` நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவு இலை ` ( தி .3 ப .24 பா .1). புலவும் - புலால் நாற்றம் உடையவை . நிலவம் - பிறை .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்அர வாரமாப்
பூணுமேனும் புகலூர்தனக் கோர்பொரு ளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப ரால்எம்பெரு மானையே.

பொழிப்புரை :

புகலூரைத் தமக்குரிய இடமாகக் கொண்ட இறைவர் ஆணும் பெண்ணுமான வடிவுடையரேனும் , பாம்புகளை உடல் முழுதும் அணிகலன்களாகப் பூண்பவரேனும் , ஊரார் இடும் பிச்சையை ஏற்று உண்பவரேனும் , கோவணம் ஒன்றையே உடையாகக் கொண்டவரேனும் , அடியவர் அவரையே பிரான் என்பர் .

குறிப்புரை :

ஊணும் ஊரார் இடுகின்ற பிச்சையுண்டி . உடையும் கோவணம் , பிச்சையைப்பேணும் ( விரும்பும் ) கோவணத்தைப் பேணும் . எம்பெருமானையே பிரான் என்பர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுயர் இலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை யெடுத்தானை யோர்விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உய்தி பெற வேண்டில் எழுக , போதுக : உயரிய இலங்கைக்கு அரசனாகிய இராவணனை , கைகளால் கயிலை மலையைப் பெயர்த்தவனை ஓர்விரலால் தன் வன்மை தோன்றச் சிதைத்து அருளவல்ல சிவன் மேவிய , பூம் பொய்கை சூழ்ந்த புகலூரைப் புகழ்ந்து போற்ற அதுவே அடைதற்குரிய மெய்ப் பொருள் ஆகும் .

குறிப்புரை :

நெஞ்சே ! உய்யவேண்டுவையாயின் எழு . போத :- புகுத என்பதன் மரூஉ . ஒல்க - தளர . புகழ்ந்தால் மெய்ப்பொருள் கிட்டும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும் புகலூரையே.

பொழிப்புரை :

சக்கராயுதம் உடைய திருமாலும் , நான்முகனும் இதுவே ஏற்ற வழி எனக்கூறுபடுத்திப் பன்றியாயும் அன்னமாயும் வடிவு கொண்டு தேட அழலுரு ஆனவனும் முருகனின் தந்தையும் ஆகிய புகலூர்ப் பெருமானே நாம் சரண் அடைதற்குரியவன் ஆவன் , என்று தலைதாழ்த்தி வணங்குமின் . உலகம் புகழும் செல்வமும் நலமும் நிறையும் .

குறிப்புரை :

நேமியான் - சக்கிராயுதம் ஏந்திய திருமால் , நான்கு முக முடைய நெறியண்ணல் எனமாறுக . ஆம் இது என்று தகைந்து - மேலி டம் ஆகும் கீழிடமாகும் இ ( றைவனது இ ) ந்நிலை என்று கூறுபடுத்தி . சாமி - முருகன் . புகழ் செல்வம் :- வினைத்தொகை . உம்மைத் தொகை யும் ஆம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும் புகலூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

வியர்வை தோன்றிய உடலினோரும் , உடலில் உடையின்றித்திரிபவரும் , ஆடையைப் போர்த்திக் கொண்டு அரச மரநிழலில் உறைவாரும் ஆகிய சமணரும் புத்தரும் கூறும் நெறிகளை விடுத்து , புகலூரில் கங்கைசூடிய பெருமான் திருவடிகளைக் கருதி வழிபடுமிடத்து அவனுடைய இயல்புகளை ஆராய முற்படாமல் அவன் திருவடிகளை வணங்கி உய்மின் .

குறிப்புரை :

கூறை - ஆடை . போதி - அரசமரம் . தீர்த்தம் - கங்கை . கரந்த - மறைத்த . ஓர்த்து - ஆராய்ந்து .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

அறிவார்ந்த பெரியோர்கள் ஏத்தும் புகலூரில் நன்கு வெந்த திருநீற்றுப் பொடியைப் பூசவல்லவனும் , விடையூர்திய னும் , அழிவற்ற அனலில் நின்று ஆடுபவனும் ஆகிய பெருமானை ஞான சம்பந்தன் சொன்ன இத்தமிழ்மாலையைப் பாடி , ஆடிப் போற்ற , பாவம் கெடும் .

குறிப்புரை :

புந்தி - அறிவு . அந்தம் - முடிவு , முடிவின்மை இறை வனுக்குரியது . ( தி .2 ப .117 பா .11). தமிழ் - இத்திருப்பதிகம் பாடி ஆடினால் பாவம் கெடும் .
சிற்பி