திருநாகைக்காரோணம்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

கூனல்திங்கட் குறுங்கண்ணி கான்றந்நெடு வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் அமரர்பெரு மாற்கிட மாவது
கானல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

வளைந்த பிறையாகிய சிறிய தலைமாலை , ஒளி உமிழும் வெண்ணிலவில் குறிஞ்சி நிலத்தில் தினைக்கொல்லையில் பூத்த கடம்பமலர்மாலை ஆகியவற்றைப் புனைந்த சடையை உடைய வானநாடனும் , அமரர் பெருமானும் ஆகிய இறைவற்கு இடமாவது சோலைகளை வேலியாகக் கொண்டதும் உப்பங்கழிகளை உடையது மாகிய கடல்நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

கூனல்திங்கட் குறுங்கண்ணி :- வளைந்த பிறையாகிய சிறியதலைமாலை . ஏனல் - தினை . மராங்கோதை - கடம்பலர் மாலை . ` வான நாடன் ; அமரர் பெருமான் `( தி .3 ப .118 பா .4; தி .7 ப .25 பா .2; தி .81 ப .1 பா .5; தி .39 ப .3)

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

விலங்கலொன்று சிலையாமதில் மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

மேருமலை ஒன்றை வில்லாகக் கொண்டு மும் மதில்களை அழித்தவனும் அழகிய கழுத்தில் ஆமை ஓட்டைப் பூண்ட வனும் ஆகிய இறைவனுக்கு இடம் , கலங்கி ஓங்கி வரும் வெண் திரை களை உடைய கடலின் கரையில் கலங்கிய நீர்ப்பெருக்கோடு கூடிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

விலங்கல் - மேருமலை . ஆமை கழுத்திற் பூண்டான் . மலங்கி - அலைந்து .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வெறிகொளாருங் கடற்கைதை நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொண்ஞாழல் முடப்புன்னை முல்லைமுகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கு நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

தளிர்களோடு கூடிய ஞாழல்மலர் , வளைந்த புன்னை மரத்தில் பூத்தமலர்கள் , வெள்ளிய முல்லையரும்புகள் , தேன் நிறைந்த கொன்றைமலர் ஆகியவற்றை விரும்பி அணியும் பெருமானுக்கு இடம் , மணம் கமழும் தாழைமலர் , நெய்தல்மலர் ஆகியவை நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட , கரிய ஓதம் பரவி விளங்கும் கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

வெறி - மணம் . கைதை - தாழை . முறி - தளிர் . ஞாழல் - மரம் , கோங்கு . நறை - தேன் . கறை - கறுப்பு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

வண்டுபாட வளர்கொன்றை மாலைமதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து கந்தவொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

வண்டுகள் பாடுமாறு மலர்ந்த கொன்றை மலர் மாலையை இளம்பிறையோடு ஒருசேர அணிந்து , சுருண்ட சடையுள் குளிர்ந்த கங்கையை ஐயப்படுமாறு மறைத்துவைத்து மகிழ்ந்த இறைவனுக்கு இடம் , தாழைவேலி சூழ்ந்ததும் உப்பங்கழிகள் நிறைந்ததும் ஆகிய கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

மாலைமதி :- ` மாசில்வீணையும் மாலைமதியமும் ` கோலம் - அழகு . சிவவேடம் . குருள்குஞ்சி - குருண்டசடை , குருண்டவார் குழற்சடை யுடைக்குழகன் ( தி .2 ப .105 பா .11).

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

வார்கொள்கோலம் முலைமங்கை நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு வெண்திங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

நல்லவர் மகிழ்ந்தேத்த , கச்சணிந்த தனங்களை உடைய உமையம்மையோடுகூடிய அழகோடு , தண்மையான அழகிய சடையில் நீண்டநிலாக்கதிர்களைப் பரப்பும் இளம்பிறை விளங்கப் போருடற்றும் சூலப்படையைக் கையின்கண் கொண்டுவிளங்கும் சிவ பிரானுக்குரிய இடம் ஓதம் பெருகும் கரிய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக் காரோணமாகும் .

குறிப்புரை :

வார் - கச்சு , நிகழ்வு - விளக்கம் . கார் - மேகம் . ஏத்தவும் எய்தவும் புல்குகையார்க்கு இடம் காரோணம் என்க . ` பரமாயவர் ` என்றும் பாடம் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

விடையதேறிவ் விடவர வசைத்தவ் விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட ஆடும்பர மரவர்
உடைகொள்வேங்கை யுரிதோ லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

விடைமீது ஏறி வருபவனும் , விடம்பொருந்திய பாம்பை இடையில்கட்டிய விகிர்தனும் , பூதப்படைகள் பாட ஆடும் பரமனும் , புலித்தோலை உடையாக உடுத்தவனும் ஆகிய சிவபெரு மானுக்குரிய இடம் , மீன்களாகிய செல்வங்கள் நிறைந்த கழிசூழ்ந்த கடல்நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

விடை ஏறி நச்சுப்பாம்பை அரைக்கச்சாகக்கட்டிய விகிர்தர் . பூதங்கள் பாட ஆடும் பரமர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

பொய்துவாழ்வார் மனம்பாழ் படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்கே செலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க ரெம்மாற் கிடமாவது
கைதல்வேலி கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

மனத்தைப் பாழ்படுத்தி வாழும் பொய்ம்மை வாழ்வுடையாரும் , சிவன் சேவடிக்கே செல்லும் சிந்தையராய் மலர் தூவிப் பூசனைசெய்து வாழ் அடியவரும் தம்மை எய்தவாழ்வாராகிய அழகிய பெருமானுக்கு இடம் , தாழைவேலியையும் உப்பங் கழிகளை யும் உடைய கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

பொய்து வாழ்வு - பொள்ளலுடையதாகிய வாழ்வு . ஆர் - பொருந்திய , வாழ்வாரும் சிந்தையாரும் எய்த வாழ்வாராகிய நக்கர் . பொய்து வாழ்வார் மனத்தைப் பாழ்படுக்கும் பூசனை என்றலும் பொருந்தும் . பூசனை செய்து வாழ்வாரும் சிவன் சேவடிக்கே செலுஞ் சிந்தையாரும் எய்த வாழ்பவர் நக்கர் . கைதல் (- தாழை ) என்பது அருஞ்சொல் . கைதல் சூழ்கழிக்கானல் ` ( தி .3 ப .66 பா .2).

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

பத்திரட்டி திரடோ ளுடையான் முடிபத்திற
வத்திரட்டி விரலா லடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கத்திரட்டுங் கழிசூழ் கடனாகைக் காரோணமே.

பொழிப்புரை :

இருபது தோள்களை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியச் சிவந்த கால் விரல்களால் அடர்த்த பெருமானுக்குரிய இடம் , கரிய மணலைத்திரட்டி வரும் வெண்திரைகளை உடைய பெரியகடலைச் சூழ்ந்துள்ள கழிகள் ஒளிசிறந்து ஒலியெழுப் பும் கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

பத்து இரட்டிதோள் - இருபது தோள்கள் . அத்து - சிவப்பு . மை திரட்டிவரு வெள்திரை எனப் பிரிக்க . கத்து - ஒளி .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நல்லபோதில் லுறைவானு மாலுந் நடுக்கத்தினால்
அல்லராவ ரெனநின்ற பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை மல்கிய மால்கடல்
கல்லலோதங் கழிசூழ் கடனாகைக் காரோணமே.

பொழிப்புரை :

நல்ல தாமரை மலரில் உறையும் நான்முகனும் , திருமாலும் நடுக்கத்தால் இவரே சிவபரஞ்சுடர் எனவும் அல்லர் எனவும் ஐயுற நின்ற பெருமானுக்குரிய இடம் , வளமோங்கிவரும் வெள்ளிய அலைகள் நிரம்பிய பெரிய கடலினது ஒலிக்கும் ஓதங்களை யுடைய கழிகள் சூழ்ந்த கடல் நாகைக்காரோணமாகும் .

குறிப்புரை :

இவர் சிவபெருமான் அல்லார் எனவும் இவரே சிவ பரஞ் சுடர் ஆவார் எனவும் ஐயுற நின்ற பெருமான் . மல்லல் - வளம் , கல்லல் - ( சகரர் ) தோண்டுதல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

உயர்ந்தபோதின் னுருவத் துடைவிட் டுழல்வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட மாவுண் டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ் கடல்நாகைக் காரோணமே.

பொழிப்புரை :

தாமரைமலர் போன்று சிவந்த கல்லாடையை உடுத்தவர்களும் உடையின்றித் திரிபவர்களும் கையில் ஏந்திய மண்டையில் பிறர் இடும் பிச்சையை உணவாகக் கொண்டு உழல் பவரும் ஆகிய புத்தர்களும் சமணர்களும் விரும்பிக் காணாத வாறு நின்ற பெருமானுக்கு உரிய இடம் ஆழமும் நீர்ப் பெருக்கும் உடைய கழிகள் சூழ்ந்து விளங்கும் கடல்நாகைக் காரோணமாகும் .

குறிப்புரை :

சமணரும் தேரரும் இங்குக் குறிக்கப்பட்டவாறு காண்க . கயம் - ஆழம் , நீர் , பெருமை . ` பியர்ந்த ` பி . பே .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மல்குதண்பூம் புனல்வாய்ந் தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான சம்பந்தன்நல் லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங் காரோணத்து வண்தமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப வர்க்குந்துய ரில்லையே.

பொழிப்புரை :

நீர்நிறைந்த வயல்களால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றியவரும் நல்ல கேள்வியை உடையவரும் ஆகிய தமிழ் ஞானசம்பந்தர் நல்லோர்கள்முன் வல்லவாறு பாடிய காரோணத்துத் திருப்பதிகமாகிய இவ்வண்தமிழைச் சொல்பவர் கட்கும் கேட்பவர்கட்கும் துன்பம் இல்லை .

குறிப்புரை :

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருநாகைக் காரோணத்தில், நல்லோர்கள் முன்னர், இத்திருப்பதிகத்தைப் பாடி யருளிய உண்மை குறிக்கப்பட்டது.
சிற்பி