திருநாகேச்சரம்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

தழைகொள்சந் தும்மகிலும் மயிற்பீலி யுஞ்சாதியின்
பழமும்உந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை
நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத்
தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க் கழகாகுமே.

பொழிப்புரை :

தழைகளோடு கூடிய சந்தன மரங்கள் , அகில் மரங்கள் , மயிற்பீலி , நல்லபழங்கள் ஆகியவற்றைப்புனலில் உந்தி வந்து பாயும் பழமையான காவிரியின் தென்கரையில் வானோர் விலகாது தொழ அருள் நல்கும் சிறப்புமிக்க நாகேச்சுரத்தில் விளங்கும் அழகர் பாதங்களைத் தொழுது போற்றவல்லார்க்கு அழகு நலம் வாய்க்கும் .

குறிப்புரை :

சந்து - அகில் , பீலி , சாதிப்பழம் எல்லாம் காவிரி வெள்ளத்தால் கொள்ளப்பட்டவை , நழுவு . இல் - விலகுதல் இல்லாத . அழகராதலின் வணங்க வல்லார்க்கும் அழகு அருள்கின்றார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

பெண்ணொர்பாகம் அடையச் சடையிற் புனல்பேணிய
வண்ணமான பெருமான் மருவும் இடம்மண்ணுளார்
நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரம்
கண்ணினாற் காணவல்லா ரவர்கண் ணுடையார்களே.

பொழிப்புரை :

ஒருபாகத்தே உமையையும் , சடையில் நீர் வடிவான கங்கையையும் கொண்ட அழகிய பெருமான் அமரும் இடம் ஆகிய , மண்ணுலகத்தோர் நாள்தோறும் வந்து வணங்கி நன்மைகள் பெறும் நாகேச்சரத்தைக் கண்ணால் காண்பவரே கண்ணுடையராவர் .

குறிப்புரை :

நன்கு - சிவபுண்ணியம் முதலிய நன்மைகள் . கண்ணி னால் என்றது காண்டற்குக் கடவுளையே பொருளாக் கொண்ட கண் என்று அதன் சிறப்புணர்த்த .

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும் மணிகுலவுநீர்
பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை
நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத்
திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

குறவர் வாழும் குறிஞ்சிப்புனம் , முல்லைநிலம் ஆகியவற்றைக் கொள்ளைகொண்டு மணிகள் குலாவும் நீரைப் பரவச் செய்யும் காவிரித் தென்கரையில் தேன்மணம் கமழும் பொழில் சூழ்ந்து அழகியதாய் விளங்கும் நாகேச்சுரத்து இறைவர் பாதங்களைத் தொழுது ஏத்த வல்லார்க்கு இடர்இல்லை .

குறிப்புரை :

ஆல - அசைய . அழகாய நாகேச்சரம் . நாகேச்சரத்து அழகர் ( பா . 1.) என்றவற்றால் தலமும் மூர்த்தியும் அழகுடைமை உணர்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

கூசநோக்காதுமுன் சொன்ன பொய்கொடு வினைகுற்றமும்
நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரம்
தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல்
நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.

பொழிப்புரை :

ஆராயாது பிறர் மனம் கூசுமாறு சொல்லும் பொய் , கொடிய வினைகளால் வந்த குற்றங்கள் ஆகியவற்றைச் செய்யாத நன்மனம் உடைய அடியவர்கள் வந்து மகிழும் நாகேச்சுரத்தை ஒளி விளங்கும் கோயிலாகக் கொண்ட செல்வன் திருவடிகளில் அன்புடையவர் அறநெறிப் பாலராவர் .

குறிப்புரை :

கூசச்சொன்னபொய் , நோக்காது சொன்னபொய் . பொய்யும் வினையும் குற்றமும் நாசம் ஆக்கும் மனத்தார்கள் . ஆடுதல் - தீர்த்தமாடுதல் . நேசம் - அன்பு . அறத்தார் - சிவ தரும முடையவர் . நெறிபாலர் - வீட்டுநெறிக்கண் ஒழுகுபவர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர்
பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை
நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
உம்பர்வானோர் தொழச் சென்றுடனாவதும்உண்மையே.

பொழிப்புரை :

மணம் கமழும் மலர்களையும் , மலைப் பொருள் களையும் வாரிக் கொண்டு , பைம் பொன் கொழித்து வரும் நீரை யுடைய பழங்காவிரித் தென்கரையில் நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச் சரத்தை நண்ணுபவர் உம்பர் வானவர் தொழச் சிவபிரானோடு ஒன்றாவர் .

குறிப்புரை :

உம்பரும் வானோரும் , உடனாவது - அத்துவித முறுவது . ஒன்றாய் வேறாய் உடனாதல் . அஃது ஈண்டு ஆன்மாச் சிவனு டனாதலை உணர்த்திற்று .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும்
நீளமாய்நின் றெய்தகாமனும் பட்டன நினைவுறின்
நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சர நண்ணுவார்
கோளுநாளுந் தீயவேனும் நன்காங் குறிக்கொண்மினே.

பொழிப்புரை :

கரிய நிறமுடைய காலன் , அந்தகன் , கருடன் , விலகி நின்று கணை எய்த காமன் ஆகியோரை இறைவன் செற்றதை நினைந்து நாள்தோறும் சிவபிரான் உறையும் நாகேச்சுரத்தை நண்ணி வழிபடுபவர்க்குக் கோள்களும் நாள்களும் தீயவேனும் நல்லன ஆகும் . அதனை மனத்தில் கொள்மின் .

குறிப்புரை :

காளம் - கருமை . காலன் அந்தகன் என்னும் இருவரும் வெவ்வேறு ஆவர் . கருடன் பட்டது :- இத்தலத்தில் ஐந்தலைப் பாம்பின் பணிகொண்டு கருடனைச் செற்ற வரலாறு குறித்தது . அடுத்த குறிப்பிற் காண்க . ` மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத்தாள் ` ( பெரிய . 2310). கோள்களும் நாள்களும் தீயன எனினும் நல்லன ஆகும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

வேயுதிர்முத் தொடுமத்த யானை மருப்பும்விராய்ப்
பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை
நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம்
மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.

பொழிப்புரை :

மூங்கில் முத்துக்கள் , யானைமருப்பு ஆகியவற்றுடன் வந்து வளம் செயும் காவிரியாற்றின் தென்கரையில் , நாயிறு , திங்கள் இரண்டும் வந்து வழிபடும் நாகேச்சுரத்தில் எழுந்தருளிய இறைவன் திருவடிகளைப் போற்றி என வணங்குவார் வினைகள் கெடும் .

குறிப்புரை :

ஞாயிறு - சூரியன் . சூரிய சந்திரர் வழிபட்ட தலம் . ` சந்திரன்னொடு சூரியர் தாம் உடன் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்தலையரவின் பணிகொண்டருள் மைந்தர்போல் மணி நாகேச்சுரவரே ` ( தி .5 ப .52 பா .4). வீடும் - அழியும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

இலங்கைவேந்தன் சிரம்பத்தி ரட்டியெழிற் றோள்களும்
மலங்கிவீழம் மலையால் அடர்த்தா னிடமல்கிய
நலங்கொள்சிந்தை யவர்நாள்தொறும் நண்ணும் நாகேச்சரம்
வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனாகிய இராவணனின் பத்துத் தலைகள் இருபது தோள்கள் ஆகியன சிதையுமாறு மலையினால் அடர்த்த இறைவன் இடம் ஆகிய நன்மைகெழுமிய மனமுடையோர் நாள்தோறும் நண்ணி வழிபடும் நாகேச்சுரத்தை வலம் வந்து வழிபடும் சிந்தை உடையவர்களின் இடர்கள் கெடும் .

குறிப்புரை :

வீழ அடர்த்தான் , சிந்தைக்கு நலம் தியாகபலம் , வலம் - திருக்கோயிலைச் சூழ்தல் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

கரியமாலும் மயனும் மடியும்முடி காண்பொணா
எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்இட மீண்டுகா
விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம்
பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.

பொழிப்புரை :

கருநிறமுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காண இயலாதவாறு எரியுருவாக நிமிர்ந்த இறைவன் அமரும் இடம் ஆகிய , பெருகிவரும் காவிரி நீர் வந்தலைக்கும் தென் கரையில் அமைந்த நாகேச்சுரத்தைப் பிரிவிலாத அடியவர் சிவலோகத்தைப் பிரியார் .

குறிப்புரை :

காண்பு - காட்சிக்கு . காவிரியினீர் கரையை அலைக்கும் நாகேச்சுரத்தைப் பிரியாதவர் சிவலோகத்தைப் பிரியார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

தட்டிடுக்கி யுறிதூக்கி யகையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளி லங்காட்டிடை
நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சுரம்
மட்டிருக்கும் மலரிட் டடிவீழ்வது வாய்மையே.

பொழிப்புரை :

தட்டைக் கக்கத்தில் இடுக்கி உறிதூக்கிய கையின ராய்த்திரியும் சமணர் , சாக்கியர் , புனைந்து சொல்லும் மொழிகளைக் கொள்ளாது , இடுகாட்டில் நள்ளிருளில் நடனமாடும் நாகேச்சுரத்து இறைவனைத் தேன் நிறைந்த மலர்களைத் தூவி அடி வீழ்ந்து வணங்கு வது உண்மைப் பயனைத்தரும் .

குறிப்புரை :

கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் - கட்டிச் சொல்லும் சொற்களைக் கொள்ளதேயுங்கள் . கொள்ளல் என்னும் முன்னிலை ஒருமை ஏவல் வினையுடன் உம்மை சேர்த்துப் பன்மையேவல் வினை யாக்கியவாறுணர்க . வெள்ளில் - பிணப்பாடை . நடு இருள் = நட்டிருள் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

கந்தநாறும் புனற்காவிரித் தென்கரைக் கண்ணுதல்
நந்திசேருந் திருநாகேச் சரத்தின் மேன்ஞானசம்
பந்தனாவிற் பனுவல் லிவைபத்தும் வல்லார்கள்போய்
எந்தையீசன் இருக்கும் உலகெய்த வல்லார்களே.

பொழிப்புரை :

மணம் கமழும் நீரை உடைய காவிரித் தென் கரையில் , கண்ணுதற் கடவுளாகிய நந்தி எழுந்தருளிய திருநாகேச் சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் நாவினால் போற்றிய இப்பனுவல் பத்தையும் வல்லவர் மறுமையில் எந்தையீசன் இருக்கும் சிவலோகம் எய்துவர் .

குறிப்புரை :

கந்தம் - மணம் . கண்ணுதல் நந்தி - சிவபிரான் . உலகு - சிவலோகம் .
சிற்பி