திருமூக்கீச்சரம்


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர்
காந்தளாரும் விரலேழை யொடாடிய காரணம்
ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ
வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.

பொழிப்புரை :

சந்தனம்போலத் திருநீற்றை உடல் முழுதும் பூசி , கங்கையைச் சடைமீது வைத்துள்ளவராகிய சிவபிரான் , காந்தள் போன்ற கைவிரல்களை உடைய உமையம்மையோடு கூடியிருந்ததற் குரிய காரணத்தை ஆராய்ந்தறிந்தவர்கள் யார் ? கோச்செங்கட்சோழ னால் கட்டப்பட்ட மூக்கீச்சரத்துள் விளங்கும் இறைவன் செய்யும் மெய்மை இதுவாகும் .

குறிப்புரை :

வெண்ணீறு சாந்தம் எனப்பூசி ` சாந்தம் ஈதுஎன்று எம் பெருமான் அணிந்த நீறு ` ( தி .1 ப .52 பா .7). காந்தள் ஆரும் விரல் - காந்தளை ஒத்த கைவிரல்கள் . ஏழை - உமாதேவியார் . கடவுள் நிறைவு ஆய்ந்து கொண்டறியத்தக்கது . கோச்செங்கட்சோழநாயனார் கட்டுவித்த மாடக்கோயில் ஆதலின் வேந்தன் மூக்கீச்சரம் எனப்பட்டது . இப்பதிகத்தில் வரலாறு பற்றிய உண்மைகளைக் காண்க .

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக்
கொண்டலாரும் புனல்சேர்த் துமையாளொடுங் கூட்டமா
விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில் வேள்வெந்தெழக்
கண்டவர் மூக்கீச்சரத்தெம் அடிகள் செய்கன்மமே.

பொழிப்புரை :

வெண்தலையை உண்கலனாகக் கையில் ஏந்திப் பலிதேர்தல் , விரிந்தசடையில் கங்கையைத் தாங்குதல் , உமையம்மை யோடு கூடியிருத்தல் , பகைவர்தம் முப்புரங்களை எய்து அழித்தல் , மன்மதனை நெற்றிவிழியால் வெந்தழியச் செய்தல் ஆகியன மூக்கீச் சரத்தில் விளங்கும் எம் அடிகள் செய்த செயல்களாகும் .

குறிப்புரை :

கொண்டல் - கொள்ளுதல் . காற்று , மேகம் எனல் இங்குப் பொருந்தாது . வேனில்வேள் - மன்மதன் ,

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

மருவலார்தம் மதிலெய்த துவும்மான் மதலையை
உருவிலாரவ் வெரியூட்டி யதும்உல குண்டதால்
செருவிலாரும் புலிசெங் கயலானை யினான்செய்த
பொருவின் மூக்கீச்சரத்தெம் அடிகள் செயும்பூசலே.

பொழிப்புரை :

போர்க்கருவியாகிய வில் , புலி , கயல் ஆகிய மூவிலச்சினைகளுக்கும் உரிய சேர , சோழ , பாண்டிய மண்டலங்களுக் குரியவனாய் விளங்கிய கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட ஒப் பற்ற மூக்கீச்சரத்தில் உறையும் எம் அடிகள் செய்த போர்களில் மும் மதில்களை எய்தது , மால்மகனாகிய காமனை எரித்தது ஆகியன உலக றிந்தனவாம் .

குறிப்புரை :

மால்மதலை - மன்மதன் . உருவில் ஆர - வடிவத்தில் நிறைய . புலிசெங்கயல் ஆனை :- சோழபாண்டிய சேரர்க்குரிய மூன்றும் மூவேறுயிர்களாயும் முறையே மும்மண்டலத்திலும் உள்ளன வாயும் இருத்தல் அறிக . புலிவிற் கெண்டை என்பதில் வானவரம் பனாதலின் , வானிற்றோற்றும் வில்லைக் கொண்டனர் . ` தென்னவனா யுலகாண்ட செங்கணார்க்கு அடியேன் ` மூக்கீச்சரத்தில் மூவேந்தர் திருப்பணியும் உண்டு போலும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

அன்னமன்னந் நடைச்சாய லாளோ டழகெய்தவே
மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணம்
தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்கு செங்கோலினான்
மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்மாயமே.

பொழிப்புரை :

தென்நாட்டின் உறையூர் வஞ்சி ஆகிய சோழ , சேர மண்டலங்களுக்கும் உரியவனாய்ப் புகழ்மிக்க செங்கோலினனாய் விளங்கிய கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய மூக்கீச்சரத்துக் கோயிலில் விளங்கும் அடிகள் , அன்னம் போன்ற நடையினை உடைய உமை யம்மையாரோடு அழகுற விளங்கி , மின்னல் போன்ற சடையில் கங்கையைக் கொண்டுள்ள காரணம் யாதோ ?

குறிப்புரை :

சாயலாள் - உமையம்மையார் . தென்னன் - தென் பாண்டிநாட்டான் . செங்கோல் ஏனையிரண்டும் மண்டலத்திலும் ஓங்கும் பெருமை நாயனாருக்கு உண்டு என்று உணர்த்துகின்றதால் மும்மண்டலத்தும் ஓங்கும் செங்கோல் என்க . தென்னன் என்பது பாண்டி மண்டலத்துக்கு ஆவதால் ஆகுபெயர் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

விடமுனாரவ் வழல்வாய தோர் பாம்பரை வீக்கியே
நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்
வடமன்நீடு புகழ்ப்பூழி யன்றென்ன வன்கோழிமன்
அடன்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

பொழிப்புரை :

வடதிசையில் புகழ்மிக்கு விளங்கும் பாண்டிய னாகவும் உறையூருக்குரிய சோழனாகவும் விளங்கிய வலிமை பொருந்திய கோச்செங்கட்சோழமன்னன் கட்டிய மூக்கீச்சரத்துறையும் அடிகள் அச்சம் தரும் முறையில் , அழல் போன்ற வாயில் நஞ்சுடைய பாம்பை அரையில் கட்டியவர் . நள்ளிருளில் பேயோடு , ஆரழலில் நடனம் ஆடுபவர் .

குறிப்புரை :

நஞ்சுடைய பாம்பை அரையில்கட்டிப் பேயொடு நள்ளிருளில் தீயில் நடமாடுவர் . வடமன்நீடுபுகழ் - வடக்கில் மிக நீடிய கீர்த்தி . பூழியன் - பாண்டியன் . கோழிமன் - உறையூர்க் கிறைவன் . அடல்மன் - போர்வேந்தன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

வெந்தநீறு மெய்யிற் பூசுவராடுவர் வீங்கிருள்
வந்தெனாரவ் வளைகொள்வதும் இங்கொரு மாயமாம்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரேதமே.

பொழிப்புரை :

அகத்துறைப்பாடல் : பகைவரின் மானத்தை அழிக்கும் பெருவீரனும் நேரியன் செம்பியன் என்ற பெயர்களை உடைய வனுமான கோச்செங்கட்சோழன் கட்டிய மூக்கீச்சரத்தில் விளங்கும் அடிகள் செய்த ஏதமான செயல் திருநீற்றை மேனியில் பூசிய சுந்தரத் திருமேனியராய் , ஆடல் வல்லவராய் , மிக்க இருளில் வந்து என் அரிய வளையல்களை மாயமானமுறையில் கவர்ந்து சென்ற தாகும் .

குறிப்புரை :

மெய்யில் நீறு பூசுவர் , இருளில் ஆடுவர் , இங்குவந்து என்வளை கொள்வதும் ஒரு மாயமாம் . இத்திருக்கோயில் மூவேந் தராலும் வழிபடப்பட்டது என்பதை 3,9, பாடல்களாலும் அறிக . மானதன் - பகைவரது மானத்தை அழிப்பவன் , மானத்தை உடையவன் . நேரியன் என்பவை சோழனையே குறித்தன .

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

அரையிலாருங் கலையில்ல வனாணொடு பெண்ணுமாய்
உரையிலாரவ் வழலாடு வரொன்றலர் காண்மினோ
விரவலார்தம் மதின்மூன் றுடன்வெவ்வழ லாக்கினான்
அரையன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோரச்சமே.

பொழிப்புரை :

இடையில் பொருந்தும் உடை இல்லாதவன் . ஆணும் , பெண்ணுமாய் விளங்குபவன் . அழலில் நின்று ஆடுபவன் . ஒன்றாயின்றிப் பலபலவேடம் கொள்பவன் . பகைவரின் முப்புரங்களை அழல்எழச் செய்து அழித்தவன் . கோச்செங்கணான் கட்டிய மூக்கீச்சரக் கோயிலில் விளங்கும் அப்பெருமான் செய்யும் அச்சமான செயல்கள் இவையாகும் .

குறிப்புரை :

அரையில் ஆரும் கலையில்லவன் - இடையிற் பொருந்தும் உடையில்லாதவன் , திகம்பரன் , பெண்ணுமாய் ஆணுமாகி , ( பெரிய , தில்லைவாழ் ). ஒன்றலர்காண் - பலபலவேடமாகும் பரன் , விரவலார் - பகைவர் . அரையன் - கோச்செங்கட்சோழநாயனார் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

ஈர்க்குநீர்ச்செஞ் சடைக்கேற் றதுங்கூற்றை யுதைத்ததும்
கூர்க்குநன்மூ விலைவேல்வல னேந்திய கொள்கையும்
ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தை நெரித்தவ்வடல்
மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.

பொழிப்புரை :

மூக்கீச்சரத்து அடிகள் செய்த வலிய செயல்கள் ஈர்க்கும் தன்மையை உடைய கங்கையைச் சடைமிசை ஏற்றது , கூரிய முத்தலைச்சூலத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பிடித்துள்ளது , ஆரவாரிக்கும் வாயினனும் வலியமூர்க்கனும் , அரக்கனும் ஆகிய இராவணன் உடலை நெரித்தது முதலியனவாகும் .

குறிப்புரை :

ஈர்க்கும் - இழுக்கும் . கூர்க்கும் - கூராக இருக்கும் . ஆர்க்கும் - ஆரவாரம் செய்யும் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே.

பொழிப்புரை :

சிறப்புமிக்க தென்னவன் , செம்பியன் , வில்லவன் ஆகிய மூவேந்தரும் வந்து வழிபடும் மூக்கீச்சரத்தில் , உறையும் பெருமான் நீருள் தோன்றிய தாமரையில் விளங்கும் நான்முகனும் , நெடியமாலும் புகழிற் பொருந்திய திருவடிகளைத் தேட முற்பட்ட போது தீத்திரளாய் நின்றவன் .

குறிப்புரை :

மெய்த்தீத்திரள் - ஞானத்திரளாய் நின்ற பெருமான் ( தி .1 ப .69 பா .3) தென்னவன் - பாண்டியன் . வில்லவன் - சேரன் . செம்பியன் - சோழன் .

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர்
உண்பினாலே யுரைப்பார் மொழி யூனமதாக்கினான்
ஒண்புலால்வேன் மிகவல்லவ னோங்கெழிற் கிள்ளிசேர்
பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.

பொழிப்புரை :

வெண்மையான புலால் நாற்றம் வீசும் ஆடையை மார்பிற் கொண்டவரும் , வெற்றுடம்போடு திரிபவரும் ஆகிய புத்தர்களும் சமணரும் உண்ணும் பொருட்டு உரைக்கும் மொழிகளைக் குறையுடைய தாக்கினான் . புலால் மணக்கும் வேல் வென்றி உடையவன் . சோழமன்னன் எடுப்பித்த மூக்கீச்சரத்து அப் பெருமான் செய்யும் புதுமையான செயல் இதுவாகும் .

குறிப்புரை :

துகில் - ஆடை . வெற்றரை :- ஆடையில்லாமை குறித்தது . உண்பினாலே - உண்டபிறகு .

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்
செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்
நல்லராய்வாழ் பவர்காழி யுள்ஞான சம்பந்தன
சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.

பொழிப்புரை :

மற்போரில் வல்லவராய முடிமன்னர் மூவரானும் தொழப் பெறும் மூக்கீச்சரத்து அடிகளை நல்லவர் வாழும் காழியுள் மேவிய ஞானசம்பந்தன் செல்வராக நினையும்படிப் பாடிய இச் செந்தமிழைச் சொல்லவல்லவர் வானுலகையும் ஆளவல்லவர் ஆவர் .

குறிப்புரை :

மல் - வலிமை. மும்முடி மன்னர் - முடிவேந்தர் மூவர். ஞானசம்பந்தன என்று இத்திருப்பாடல்களைக் குறித்தருளினார். சொல்லவும் வல்லார். ஆளவும்வல்லார்.
சிற்பி