திருப்புகலி


பண் :செவ்வழி

பாடல் எண் : 1

விடைய தேறி வெறிஅக் கரவார்த்த விமலனார்
படைய தாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
கொடை யிலோவார் குலமும் உயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள் வேள்விப் புகையும்ப ருலாவும் புகலியே.

பொழிப்புரை :

விடைமீதுஏறி, முடைநாறும் எலும்பு, பாம்பு இவற்றை மாலையாக அணிந்துவரும் விமலரும், மழுவைப் படைக் கலனாகக் கொண்ட வரும் ஆகிய சிவபிரானுக்குரிய இடம், கொடை வண்மை, குன்றா மரபினரும் ஆகிய, உயரிய, வேதங்களில் வல்ல அந் தணர் வேட்கும் வேள்விப்புகை வானத்து உலாவும் புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

ஆர்த்த - கட்டிய. விமலனார் - இயல்பாகவே பாசங்கள் இல்லாதவர். அநாதிமலமுத்தர். பரசு - மழு. புடை - பக்கம். வேள்வி- யாகம். உம்பர் - ஆகாயம். கலை நிலவிய புலவர்க ளிடர்களை தரு கொடை பயில்பவர். (தி.1 ப.20 பா.3).
புகலி - புகலடைந்த காரணம் பற்றிய பெயர் . `அமரர் புகலால் மலிந்த பூம்புகலி மேவிய புண்ணியனே`. (தி.1. ப.63 பா.3).

பண் :செவ்வழி

பாடல் எண் : 2

வேலை தன்னின் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞால மெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சால நல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலை மேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.

பொழிப்புரை :

கடலில் தோன்றிய மிக்க நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினரும், உலகெங்கும் பலியேற்றுத் திரிபவருமான சிவபிரானுக்குரிய நகர், மிகவும் நல்லவர் பயிலும் வேதப்பதங்களைக் கேட்டு, சோலைகளில் வாழும் கிளிகள் அச்சொற்களை மீண்டும் கூறும் புகலியாகும்.

குறிப்புரை :

வேலை - பாற்கடல். உண்டு என்னும் வினையெச்சம் இருள் என்னும் வினைப்பகுதிகொண்டது. இருள்கண்டனார் - இருண்ட திருக்கழுத்தினையுடையவர். ஞாலம் - பூமி, உலகம். நாலம் என்பதன் மரூஉ. உழல்வார் - திரிபவர். நல்லார் சாலப்பயிலும் மறை என்க. சால நல்லார் என்றே கொள்ளலுமாம். கிளிகள் நல்லார் பயிலும் மறை(யைக்) கேட்டுப் பதங்களைச் சொற்பயிலும் என்க. `கிளித்தான்` என்பது, `வேற்றுமையல்வழி` (தொல், தொகைமரபு. 16) என்னுஞ் சூத்திரத்தின்படி வல்லெழுத்து மிக்கது.

பண் :செவ்வழி

பாடல் எண் : 3

வண்டு வாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
துண்ட மேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
கெண்டை பாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்ட ரீகம் மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே. 

பொழிப்புரை :

வண்டுகள் மொய்க்கும் கூந்தலை உடைய உமை நங்கையை தன் மேனியின் ஒரு கூறாக உகந்தவரும், பிறைமதி அணிந்த ஒளி மயமான தொல்சடை முடியினரும், ஆகிய சிவபெரு மானுக்கு இடமாக விளங்குவது கெண்டை மீன்கள் துள்ளி ஆடும் மடுக் களையும், தாழை, மாதவி மரங்களையும், தாமரை மலரும் பொய்கை களையும் கொண்ட புகலியாகும்.

குறிப்புரை :

மங்கை - உமாதேவியார். அவர் குழலில் வண்டுகள் வாழும் என்றது சாதியடை. மதித்துண்டம் - பிறை. `திங்கட் பிளவு`. சுடர்ச்சடை, தொல்சடை என்க. தொல்சடை என்னும் பண்பு தொகு மொழி, சுடர் என்னும் அடைகொண்டதாதலின், சுடரை (-ஒளியை) உடைய தொல்சடை என விரிக்க. தொல்சடை என்பதைப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறலாகாது என்பதை , `ஐம்பாலறியும் பண்பு தொகு மொழியும்...தொழில் தொகுமொழியும்... ... பிறவும்` ... ... மருவின் பாத்திய, புணரியல் நிலையிடை உணரத்தோன்றா` என்ற தொல் காப்பியச் சூத்திரத்தால் (எழுத்து, 482) உணர்க. கேதகை - தாழை. மாதவி - குருக்கத்திக்கொடி. புண்டரீகம் - தாமரை. பொய்கை - மானுட ராக்காத நீர்நிலை (சிந்தாமணி. 337.)

பண் :செவ்வழி

பாடல் எண் : 4

திரியு மூன்று புரமும் எரித்துத் திகழ்வானவர்க்
கரிய பெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
பெரிய மாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவி லாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே. 

பொழிப்புரை :

வானத்தில் திரிந்து இடர்விளைத்த முப்புரங்களை எரித்தவனும் வானவர்க்கு அரியவனாய் விளங்குவோனும், அரவக் குழை அணிந்தவனுமாகிய சிவபெருமானுக்கு இடமாக விளங்குவது, பெரிய மாடவீடுகளில் விளங்கும் கொடிகளால் வெண்மையான வெயிலொளி புகாததாய், தடம் பொய்கைகள் சூழ்ந்ததாய் விளங்கும் புகலியாகும்.

குறிப்புரை :

`அளவறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு` (திருவாசகம். திருச்சதகம் 35) அரவக்குழையார் - சர்ப்ப குண்டலம் அணிந்தவர். மிடைவால் - நெருக்கத்தால், வெயில் புரிவு இலாத - வெயிலைச் செய்தலின்றி நிழலைச் செய்தலுடைய. தட - பெரிய. பூம் பொழில் - மலர்க்கா.

பண் :செவ்வழி

பாடல் எண் : 5

ஏவி லாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
நாவி னாண்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
மாவி லாருங் கனிவார் கிடங்கில் விழவாளைபோய்ப்
பூவி லாரும் புனற்பொய்கை யில்வைகும் புகலியே.

பொழிப்புரை :

கணை பொருந்திய வில்லில் வல்ல அருச்சுனனுக்கு அருள் செய்தவரும், கலைமகளின் மூக்கை அரிவித்தவரும், ஆகிய சிவபிரானுக்குரிய இடம், மாங்கனிகள் பெரிய மடுக்களில் வீழ்வதைக் கண்டு வாளைமீன்கள் பூக்கள் நிறைந்த அப்பொய்கை மடுக்களைச் சென்றடையும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

நாவினாள் - நாமகள். மூக்கு அரிவித்த நம்பர் - மூக் கினை அரியச்செய்த சிவபிரானார், தக்கயாக சங்காரத்தில் வீரபத்திரர் அரிந்தார். சுருதியான் தலையும் நாமகள் மூக்கும் ... இறுத்து அவர்க்கு அருளும் பரமனார்` (தி.3 ப.118 பா.5). நம்பர் - உயிர்களின் விருப்பிற்குரியர், விருப்பாயிருப்பவர். மாவில் ஆரும் கனி - மாமரத்தில் நிறைந்த பழங்கள். வார் கிடங்கில் - நீண்ட அகழியில். விழ- விழலால். வாளை போய்ப் பொய் கையில் வைகும் என்க.

பண் :செவ்வழி

பாடல் எண் : 6

தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்க வேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந்தண்  கனிகொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும் புகலியே.

பொழிப்புரை :

தக்கன் வேள்வியைத் தகர்த்தவனும், எம் உரவோனும் ஆகிய சிவபிரான் தையலாளொடு உறையும் இடம், மா, வாழை, பலா ஆகிய கனிகளின் மணத்துடன் கொன்றை, புன்னை இவற்றின் மகரந்தம் பொன்திரள் போலத் தோன்றும் புகலியாகும்.

குறிப்புரை :

தக்கன் - தக்ஷன். தகர்த்த - அழித்த. தையலாள் - உமா தேவியார். கொக்கு - மாமரம். புன்னைகள் பொன் போலப் பூக்கும். திரள் என்பது இங்குத் திரட்சி என்னும் பொருளதாயிற்று.

பண் :செவ்வழி

பாடல் எண் : 7

* * * * *

பொழிப்புரை :

* * * * *

குறிப்புரை :

* * * * *

பண் :செவ்வழி

பாடல் எண் : 8

தொலைவி லாத அரக்கன் உரத்தைத் தொலைவித்தவன்
தலையுந் தோளுந் நெரித்த சதுரர்க் கிடமாவது
கலையின் மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியு மந்தண் பொழில்சூழ்ந் தழகாரும் புகலியே.

பொழிப்புரை :

அழிவற்ற இராவணனின் ஆற்றலை அழித்து அவ னது தலை தோள் ஆகியவற்றை நெரித்த சதுரப்பாடுடைய சிவ பிரானுக் குரிய இடம், கலை உள்ளம் கொண்டோர், இரப்போர்க்கு இல்லை என்னாத வண்மையுடையோர் விளங்கும் பொழில் சூழ்ந்த புகலிப் பதியாகும்.

குறிப்புரை :

தொலைவு - தோல்வி. உரத்தை - வலியை. மார்பை எனலுமாம். தொலைவித்து - ஒழித்து, அவன் தலையும் தோளும் நெரித்த சதுரர் என்க. சதுரர்க்கு - மூவர்க்கும் மேலாய முதல்வர். கலை- வேதாகம புராணேதிகாசாதி கலைகள். மனத்தோர் - உள்ளத்தை யுடைய அந்தணர், கரப்பு இலார் - மறைத்தலில்லாமல் ஈந்துவப்பவர். கரப்பு - மறைப்பு. பொலியும் - விளங்கும். அம் - (அழகு) ஆரும் - நிறையும்.

பண் :செவ்வழி

பாடல் எண் : 9

கீண்டு புக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
காண்டு மென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
நீண்ட நாரை யிரையாரல் வாரநிறை செறுவினிற்
பூண்டு மிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியே. 

பொழிப்புரை :

கேழலாய் நிலத்தை அகழ்ந்து சென்ற திருமால், அன்னமாய்ப் பறந்து உயர்ந்து சென்ற நான்முகன் ஆகியோர் அடிமுடி காண்போம் எனச்சூளுரைத்து முயன்று தோற்றுக் கழல்பணிய நின்றார்க்கு இடமாக விளங்குவது, நாரைக்கு இரையான ஆரல் மீன்கள் ஒழுகி ஓட, நிறைந்த சேற்றோடு விளங்கும் வயல்களை உடைய அழகிய புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

கீண்டு - (நிலத்தைப்) பிளந்து. திருமால் செயல். கேழல்- பன்றி. காண்டும் - காண்போம், பறந்துயர்ந்தார். பிரான் திரு வடிகளை. பணிய - பணிந்து வழிபட. நின்றார்க்கு - நின்ற சிவபெரு மானுக்கு. நாரைக்கு இரையாகிய ஆரல் மீன்கள் ஒழுகியோட, நிறைந்த செறு. செறு - சேறு. மிக்கவயல் என்பது சந்தம் நோக்கி விரித்தல் விகார முற்றது.

பண் :செவ்வழி

பாடல் எண் : 10

தடுக்கு டுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்க ணுய்ப்பா ரிறைஞ்சாத வெம்மாற் கிடமாவது
மடுப்ப டுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்த டுத்துப் புகுந்தீண்டு மந்தண் புகலியே. 

பொழிப்புரை :

ஓலையால் இயன்ற தடுக்கைக் கட்டிக் கொண்டும் தலையைப் பறித்துக் கொண்டும் வாழும் சமணர்களும், சாக்கியர் களும் இடுக்கண்பட்டவராய் இறைஞ்சாது நிற்குமாறு செய்த எம் பெருமானுக்கு உரிய இடமாக விளங்குவது, வேதம் வல்ல அந்தண ரும் வானுலகில் வாழும் தேவர்களும் அடுத்தடுத்து வந்து வழிபடும் புகலிப்பதியாகும்.

குறிப்புரை :

பறிப்பார் - சமணர். உய்ப்பார் - செலுத்துவார், உண் டாக்குவார் என்றவாறு. இறைஞ்சாத - தலைவணங்காத. வணங்கப் பெறாமை எம்மானது. மடுப்படுக்கும் - (வைகறையில் நீர்) மடுவில் குளிக்கும். சுருதிப்பொருள் - வேதார்த்தம். வல்லவர் - வல்ல அந்தணர். மடுப்பு அடுக்கும் எனப் பிரித்து, உட்கொள்ளுதலைப் பொருந்தும் என்று கொண்டு, சுருதிப் பொருளையுட்கொண்டு என்க. வான் உளோர் - தேவர். பூதேவரும் மாதேவ ரும் அடுத்து அடுத்துப் புகுந்து ஈண்டும் புகலி.

பண் :செவ்வழி

பாடல் எண் : 11

எய்த வொண்ணா இறைவன் னுறைகின்ற புகலியைக்
கைதவ மில்லாக் கவுணியன் ஞான சம்பந்தன்சீர்
செய்த பத்தும் மிவைசெப்ப வல்லார் சிவலோகத்தில்
எய்தி நல்ல விமையோர்க ளேத்த இருப்பார்களே.

பொழிப்புரை :

உயிர் தம் அறிவால் எய்த ஒண்ணாத இறைவன் உறையும் புகலியை, வஞ்சனையற்ற கவுணியர்குடியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்புடன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவற்றை, செப்பவல்லவர் சிவலோகத்தை அடைந்து நல்ல தேவர்கள் ஏத்தப் புகழுடன் இருப்பர்.

குறிப்புரை :

எய்த ஒண்ணா இறைவன் - பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன்! (சித்தியார்சூ.9) \\\\\\\\\\\\\\\"இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய்\\\\\\\\\\\\\\\" (திருவாசகம். திருச்சதகம்.25) உறைகின்ற - திருக்கோயில்கொண்டு (கடல் கொண்ட கடை நாளிலும்) அடியார்க்கு அருளற்பொருட்டு எழுந்தருளியுள்ள.கைதவம் - வஞ்சகம். நல்ல இமையோர்கள் - சிவலோகத்தை அடையச் சிவ புண்ணியம் செய்த நன்மையையுடைய தேவர்கள். ஏத்த - எடுத்துப் புகழ்ந்து வழிபட, இருப்பார்களே - பேரின்பம் நுகர்ந்து அழியா திருந்து விளங்கும் சாலோகமான பத முத்தியடைந்தாரே யாவர்.
சிற்பி