திருப்பூந்தராய்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

பந்து சேர்விர லாள்பவ ளத்துவர்
வாயி னாள்பனி மாமதி போன்முகத்
தந்த மில்புக ழாள்மலை மாதொடும் ஆதிப்பிரான்
வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பந்து வந்தணைகின்ற விரல்களையும் , பவளம் போன்று சிவந்த வாயினையும் , குளிர்ந்த முழுமதி போன்ற முகத் தையும் , அளவற்ற புகழையுமுடையவளான மலைமகளாகிய உமா தேவியோடு எப்பொருள்கட்கும் முதல்வராக விளங்கும் சிவ பெருமான் எழுந்தருளியுள்ள இடம் திருப்பூந்தராய் ஆகும் . அங்குத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து , வலம் வந்து , மனத்தால் , நினைந்து , உடலால் , வணங்கி , சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர் . அத்தலத்தினை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பந்துசேர் விரலாள் - பந்து பொருந்திய விரலை யுடையவள் . ` பந்தணை விரலியும் நீயும் ` ( திருவாசகம் திருப் பள்ளியெழுச்சி .8) ` பந்தணை விரலாள் பங்க ` ( வாழாப்பத்து 8) எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க . துவர் - செந்நிறம் , பவளத்துவர் வாயினாள் - பவளம்போலும் செந்நிறம் பொருந்திய வாயையுடையவள் . பனிமாமதி போன்முகத்து - குளிர்ச்சி பொருந்திய சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய . அந்தம் இல்புகழாள் - அளவற்ற புகழையுடையவள் . விரலாளும் , வாயினாளும் ஆகிய அந்தமில்புகழாள் . அளவில் புகழையுடையவள் . உமாதேவி யாரோடும் . ஆதி - சிவனுக்கொருபெயர் ` ஆதியே ... அருளாயே ` ஆதிப்பிரான் - பெயரொட்டு . ` சத்தியும் சிவமுமாய தன்மை ... வைத்தனன் அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் ` என்பதால் ( சித்தியார் சூ - ம் 1-69) அந்தமில் புகழாள் என்றனர் . வந்து , சேர்வு இடம் - சேர்தலையுடைய இடம் . புந்தி செய்து இறைஞ்சி - புந்தி மனம் , இறைஞ்சி - வணங்கி , மனம்கூடாத வழிச் செய்கை பயன் தாராது ஆகலாற் புந்திசெய்து இறைஞ்சியென்றனர் . ` செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது ` ( மணிமேகலை . மலர் வனம்புக்ககாதை - 76-77.) எனப் பிறர் கூறுதலும் காண்க . வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி மாமலர்பொழி பூந்தராய் என்க . போற்றுதும் - வணங்குவோம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

காவி யங்கருங் கண்ணி னாள்கனித்
தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும் , கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும் , ஒளிவீசுகின்ற முத்துப் போன்ற வெண்மையான பற்களையும் , இறகுகளையுடைய பெண் அன்னப்பறவை போன்ற நடையையும் , பின்னிய மென்மையான கூந்தலையும் உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ள இடம் , மரபுப்படி சீகாழிக்கு வழங்கப்படுகின்ற பன்னிரு பெயர்களுள் ஆறாவதாகக் கூறப்படுகின்ற திருப்பூந்தராய் . தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனை ஒத்த அந்தணர்கள் வசிக்கும் அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

காவி - நீலோற்பலம் , கனித்தொண்டை - தொண்டைக் கனி . கொவ்வைப்பழம் போன்ற வாய் , கதிர் - ஒளி , முத்தம்வெண் நகை - முத்துப் போன்ற வெள்ளிய பற்கள் , தூவியம்பெடை யன்னம் நடை - இறகுகளையுடைய பெண்ணன்னம்போலும் நடை இவற்றோடு சுரிமென் குழலாள் - சுரிந்த மெல்லிய கூந்தலையுடையவள் . ஆகிய தேவியும் திருமேனியோர் பாகமாய் ( ச் சேர்பதி ). ஒன்று இரண்டு ஒரு மூன்றொடு சேர்பதி (1+2+3=6) ஆறாவது திருப்பெயராகப் பொருந்திய பூந்தராயைப் போற்றுவோம் . சீகாழிக்குரிய திருப் பெயர்கள் பன்னிரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக இன்னமுறையாக வழங்க வேண்டும் என்னும் மரபு உண்டு . அம்முறையினால் ஆறாவ தாக வழங்கப்படுவது திருப்பூந்தராய் என்னும் திருப்பெயராம் . அம்முறையைப் பின்வரும் சான்றுகளால் அறிக . இம்முறையைப் பின்பற்றுக என இப்பாசுரத்தால் ஆணைதந்தனர் காழியர் பெருமான் . ` பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குருப் பெருநீர்த்தோணி , புரமன்னு பூந்தராய் பொன்னஞ்சிரபுரம் புறவஞ்சண்பை , அரன்மன்னு தண்காழி கொச்சைவய முள்ளிட்டங்காதியாய பரமனூர் பன்னிரண்டாய் நின்ற திருக்கழுமலம் நாம் பரவும் ஊரே `. ( தி .2. ப .70.) ` பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப் , பொருவில் திருத்தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன் , வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம் . பரவுதிருக்கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த் தால் ` ( தி .12 திருஞானசம் . புரா . பா .14). சேர்பதி என்ற தொடரினைத் தேவியும் திருமேனியோர் பாகமாய்ச் சேர்பதியெனவும் ஈரிடத்தும் இயைக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பைய ராவரும் அல்குன் மெல்லியல்
பஞ்சின் நேரடி வஞ்சிகொள் நுண்ணிடைத்
தைய லாள்ஒரு பாலுடை எம்மிறை சாருமிடம்
செய்யெ லாங்கழு நீர்கம லம்மலர்த்
தேற லூறலிற் சேறுல ராதநற்
பொய்யி லாமறை யோர்பயில் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பாம்பின் படம் போன்ற அல்குலையும் , பஞ்சு போன்ற மென்மையான அடியையும் , வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையையும் உடைய தையலாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்ட எங்கள் இறைவன் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , செங்கழுநீர்ப் பூக்கள் , தாமரைப் பூக்கள் இவற்றிலிருந்து தேன் ஊறிப் பாய்தலால் ஏற்பட்ட சேறு உலராத வயல்களையும் , பொய்ம்மையிலாத அந்தணர்கள் வசிக்கும் சிறப்பையுமுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பைஅராவரும் , வஞ்சிகொள் நுண்ணிடை - என்னும் தொடர்களிலுள்ள பைஅரா - படத்தையுடைய பாம்பு , வரும் கொள் - என்ற சொற்கள் உவம வாசகம் , பஞ்சின் ஏர்அடி - பஞ்சைப்போன்ற மெத்தென்ற அழகிய அடி , இன் என்ற உருபு உவமப்பொருளில் வந்ததனால் , பஞ்சின் நேர்அடி எனப் பிரிக்கலாகாமை யறிக , இன் தவிர் வழிவந்த சாரியையெனக் கொள்ளின் பஞ்சு ( இன் ) நேரடி எனப் பிரித்துப் பஞ்சையொத்த அடியெனக் கொள்ளலாம் . கழுநீர் - செங்கழுநீர் , தேறல் - தேன் , மலர்த்தேன் ஊறிப் பாய்ந்து கொண்டே யிருப்பதால் வயலிற் சேறுலராத நல்ல வளம்பொருந்திய பூந்தராய் என்றும் பொய்யிலா மறையோர்பயில் பூந்தராய் என்றும் இயைக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

முள்ளி நாண்முகை மொட்டியல் கோங்கின்
அரும்பு தேன்கொள் குரும்பைமூ வாமருந்
துள்ளி யன்றபைம் பொற்கல சத்தியல் ஒத்தமுலை
வெள்ளி மால்வரை அன்னதோர் மேனியின்
மேவி னார்பதி வீமரு தண்பொழிற்
புள்ளி னந்துயின் மல்கிய பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

தாமரைமொட்டு , கோங்கின் அரும்பு , ஊறும் தேனை உள்ளே கொண்ட இளநீர் , மூவாமருந்தாகிய அமிர்தத்தை உள்ளடக்கிய பசும்பொற்கலசம் இவற்றை ஒத்த திருமுலைகளை யுடைய உமாதேவியாரை , திருநீறு பூசப் பெற்றமையால் வெள்ளிமலை போல் விளங்கும் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடம் , பறவைகள் அமைதியாய்த் துயில்கின்ற , மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

முள்ளி - தாமரை , தாமரைத்தண்டிலுள்ள கேசரங்கள் முள்ளைப்போலக் காணப்படுவதால் முள்ளியெனப்பட்டது . ( முளரி - தாமரை ) காரணப்பெயர் . ( காரண இடுகுறிப்பெயரென்க ). முகை - காயரும்பு . மொட்டு - முற்றிய அரும்பு . மொட்டு இயல் கோங்கு - மொட்டாகப் பொருந்திய கோங்கு . கோங்கமொட்டு . அரும்பு தேன்கொள் குரும்பை - ஊறும் தேனைக்கொண்ட குரும்பை இல் பொருளுவமை . அரும்புதல் - இங்கு ஊறுதல் என்னும் பொருட்டு . இச்சொல் ` கவர்வரும்ப ` எனப் பிறபொருளில் வருதலும் காண்க . மூவாமருந்து - மூவாமைக்குக் காரணமான மருந்து . எதிர்மறைப் பெயரெச்சம் - ஏதுப்பொருள் கொண்டது . வீமருபொழில் - மலர்கள் பொருந்திய சோலைகளில் . புள்ளினம் துயில் மல்கிய - பறவைக் கூட்டங்கள் துயிலுதல் மிகுந்த ( பூந்தராய் ). தங்களுக்கு வேண்டிய உணவு முதலிய வகைகளெல்லாம் எளிதிற் கிடைத்தலால் கவலை யின்றித் துயிலுகின்றன . இதனால் தலத்தின் சிறப்புக் கூறியவாறு . தாமரையரும்பு , கோங்குமொட்டு , தேனூறுகுரும்பை , அமிர்தம்உள் இயன்ற செம்பொற் கலசம்போன்ற தனபாரம் என்பது பல்பொருள் உவமை ( தண்டியலங்காரம் 32-16).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பண்ணி யன்றெழு மென்மொழி யாள்பகர்
கோதை யேர்திகழ் பைந்தளிர் மேனியோர்
பெண்ணி யன்றமொய்ம் பிற்பெரு மாற்கிடம் பெய்வளையார்
கண்ணி யன்றெழு காவிச் செழுங்கரு
நீல மல்கிய காமரு வாவிநற்
புண்ணி யருறை யும்பதி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

பண்ணின் இசையோடு ஒலிக்கின்ற மென்மொழி யாளாய் , நிறைந்த கூந்தலையும் , பசுந்தளிர் போன்ற மேனியையு முடைய உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் இடம் , வளையல்களை அணிந்த பெண்களின் கண்களைப் போன்ற நீலோற்பல மலர்கள் நிறைந்த அழகிய குளங்களையுடையதும் , பசு புண்ணியங்கள் , பதி புண்ணியங்களைச் செய்கின்றவர்கள் வசிக்கின்ற பதியுமாகிய திருப் பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

பண்ணியன்று எழும் - பண்ணின் இசையொடு பொருந்தி வெளிப்படும் , மென்மொழியாள் - மெல்லிய மொழியை உடையவள் . பெண்டிர் மென்மொழியர் என்பதனை ` மென்மொழிமே வல ரின்னரம் புளர ` என்னும் திருமுருகாற்றுப்படை யாலும் அறிக . பகர் - ` ஞானப்பூங்கோதையாள் ` என்று சிறப்பித்துச் சொல்லப்படு கின்ற , கோதை - கூந்தலையும் , ஏர்திகழ் - அழகு விளங்குகின்ற . பைந்தளிர் மேனி - பசிய தளிர் போன்ற மேனியையுடையவளு மாகிய உமாதேவியார் , இயன்ற - கூடிய . மொய்ம்பின் தோளை யுடைய , இன்சாரியை . காவி , செழும் கருநீலம் செங்கழுநீரோடு கூடிய செழிய கரிய நீலோற்பலமலர் , ` காவியிருங் கருங்குவளை ` ( தி .1 ப .129 பா .1) என்றதும் காண்க . மல்கிய - மிகுந்த . காமரு - அழகிய . ( காமம்மருவு ) மரூஉ காமம் - வரு , என்ற தொடரின் மரூஉ எனக் கொண்டு விரும்பத்தக்க எனப் பொருள்கூறலும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வாணி லாமதி போல்நுத லாள்மட
மாழை யொண்க ணாள்வண்ட ரளந்நகை
பாணி லாவிய இன்னிசை யார்மொழிப் பாவையொடும்
சேணி லாத்திகழ் செஞ்சடை யெம்மண்ணல்
சேர்வ துசிக ரப்பெருங் கோயில்சூழ்
போணி லாநுழை யும்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையும் , மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையும் வளமான முத்துக்களைப் போன்ற பற்களையும் , பாட்டில் விளங்குகின்ற இனிய இசைபோன்ற மொழியினையும் உடைய பாவையாகிய உமாதேவி யோடு , வானில் விளங்கும் நிலவு திகழ்கின்ற சிவந்த சடையையுடைய எங்கள் தலைவனான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள இடமாவது , உயர்ந்த சிகரத்தையுடைய பெருங் கோயிலைச் சூழ்ந்து பிறைச்சந்திரன் நுழையும் சோலைகளையுடைய திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

வாணிலா மதிபோல் நுதலாள் - ஒளிபொருந்திய நிலவினை வீசுகிற பிறைச்சந்திரனையொத்த நெற்றியை யுடைய வளும் , மடமாழை ஒண்க ( ண் ) ணாள் - மாம்பிஞ்சு போன்ற ஒள்ளிய கண்களையுடையவளும் , வண்தரளநகை - வளம்பொருந்திய முத்துப்போன்ற பற்களையும் , பாண்நிலாவிய - பாட்டின்கண் விளங்குகின்ற , இன்இசைஆர்மொழி - இனிய இசைபோன்ற மொழியையுமுடைய பாவை போன்றவள் , மதிநுதலாளும் , கண்ணினாளும் , பாவையுமாகிய அம்பிகைஎன இயையும் . சேண் - வானம் , வானத்தில் இயங்கும் நிலா - உருபும் பயனுந் தொக்க தொகை போழ் - பிளவு ; கூறிடுதல் . வட்டமான ஒருபொருளைச் சரிகூறிட்டால் பிறை - வடிவு தோன்றுதலின் , அதனைப் பிறைக்கு உவமை கூறுவர் . ` போழிளங்கண்ணியினானை ` என்ற அப்பர் வாக்கில் உவமையாகு பெயராய்ப் பிறையையுணர்த்தலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

காரு லாவிய வார்குழ லாள்கயற்
கண்ணி னாள்புயற் காலொளி மின்னிடை
வாரு லாவிய மென்முலை யாள்மலை மாதுடனாய்
நீரு லாவிய சென்னி யன்மன்னி
நிகரும் நாமமுந் நான்கு நிகழ்பதி
போரு லாவெயில் சூழ்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

கார்மேகம் போன்ற கரிய நீண்ட கூந்தலையும் , கயல்மீன் போன்ற கண்களையும் , மேகத்தில் தோன்றும் மின்னலைப் போன்ற இடையையும் கச்சணிந்த மென்மை யான கொங்கைகளையும் உடைய மலைமகளான உமாதேவியோடு , கங்கையைத் தாங்கிய முடியையுடைய சிவபெருமான் நிலை பெற்றிருக்கும் பதி , பன்னிரு திருப்பெயர்கள் கொண்டு தனக்குத்தானே ஒப்பாக விளங்கும் பெருமை மிகுந்த , போர்க்கருவிகள் பொருத்தப்பட்ட மதில்கள் சூழ்ந்த , சோலைகள் நிறைந்த திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

கார் - மேகம் , உலாவிய - போன்ற ( உவம வாசகம் ) புயல்கால் மின் இடை - முகில் வெளிவிடும் மின்னல் போலும் இடை ` அல்வழியெல்லாம் உறழெனமொழிப ` என்ற தொல்காப்பிய ( எழுத்து . சூ - ம் 368) விதிப்படி புயல் + கால் = புயற்கால் என்றாயிற்று . நிகரும் - தமக்குத் தாமேயிணையான , நாமம் முந்நான்கும் - பன் னிரண்டு திருப்பெயர்களும் , நிகழ் - ( திருப்பிரமபுரம் , முதலாக ... திருக்கழுமலம் ஈறாக முறைப்படி ) வழங்கப்படுகிற . போர் - போர்ப் பொறிகள் . உலா - உலவுகின்ற . எயில் - மதில் . மதிலில் அமைக்கப்பட்ட பொறிகள் பகைவர் வருவரேல் அவர்களையழித்தற்கு அங்கு மிங்கும் திரிவனவாக இருக்கும் . போர்ப்பொறிகளைப் போர் என்றது காரிய ஆகுபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

காசை சேர்குழ லாள்கயல் ஏர்தடங்
கண்ணி காம்பன தோள்கதிர் மென்முலைத்
தேசு சேர்மலை மாதம ருந்திரு மார்பகலத்
தீசன் மேவும் இருங்கயி லையெடுத்
தானை அன்றடர்த் தானிணைச் சேவடி
பூசை செய்பவர் சேர்பொழிற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

காயாம்பூப் போன்ற கருநிறமுடைய கூந்தலையும் , கயல்மீன் போன்ற அழகிய அகன்ற கண்களையும் , மூங்கில் போன்ற தோள்களையும் , கதிர்வீசும் மென்மை வாய்ந்த கொங்கைகளையும் , உடைய ஒளி பொருந்திய மலைமகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட அழகிய அகன்ற மார்பினையுடைய சிவ பெருமான் எழுந்தருளியுள்ளதும் பெரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுத்த இராவணனை அந்நாளில் அடர்த்த அச்சிவனின் சேவடிகள் இரண்டினையும் வழிபடுகிறவர்கள் வந்து சேர்கின்றதும் , ஆகிய சோலைகள் சூழ்ந்த திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

காசை - காயாம்பூ ; நீலநிறமுடைமையால் இது குழலுக்கு உவமை கூறப்பட்டது . கயல்ஏர்தடங்கண்ணி - மீனைப்போன்ற அழகிய அகன்ற கண்களையுடையவள் . காம்பு அ ( ன் ) னதோள் கதிர்மென்முலை - மூங்கில் போன்ற தோளையும் கதிர்வீசும் மெல்லிய தனங்களின் ஒளியையுமுடைய . மலைமாது - இமைய அரையன் புதல்வியாகிய அம்பிகை . மார்பு அகலம் - இருபெயரொட்டுப் பண்புத் தொகை . அமரும் - தங்கும் . மார்பு அகலத்து ஈசன் மேவும் . இரும் - பெரிய .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

கொங்கு சேர்குழ லாள்நிழல் வெண்ணகைக்
கொவ்வை வாய்க்கொடி யேரிடை யாள்உமை
பங்கு சேர்திரு மார்புடை யார்படர் தீயுருவாய்
மங்குல் வண்ணனு மாமல ரோனும்
மயங்க நீண்டவர் வான்மிசை வந்தெழு
பொங்கு நீரின் மிதந்தநற் பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

மணம் பொருந்திய கூந்தலையும் , ஒளி பொருந்திய வெண்ணிறப் பற்களையும் , கொவ்வைக்கனி போன்ற வாயினையும் , கொடி போன்ற அழகிய இடையையும் உடைய உமாதேவியைத் தன்னுடைய ஒரு பாகமாக வைத்துள்ள அழகிய மார்பினையுடையவராய் , கார்மேக வண்ணனான திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அடிமுடியறியாது மயங்கும்படி படர்கின்ற தீயுருவாய் ஓங்கி நின்ற சிவபெருமான் எழுந்தருளும் இடம் , வானம்வரை பொங்கிய ஊழி வெள்ளத்திலும் அழியாது மிதந்த நற்பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக !

குறிப்புரை :

கொங்கு - வாசனை . நிழல் - ஒளி . கொவ்வைவாய் - கொவ்வைக் கனி போன்றவாய் . கொவ்வை - முதலாகுபெயர் கொடிஏர் இடை - பூங்கொடிபோன்ற இடையுடையவளுமாகிய . உமைபங்குசேர் திருமார்புடையார் - உமாதேவியார் ஒரு பாகம் பொருந்திய சிறந்த மார்பையுடையவர் . படர்தீ - படருகின்ற தீ . மங்குல் - மேகம் . வான்மிசை - ஆகாயத்தின் இடம் வரை . வந்து பரவி - வந்து எழும்பிய . பொங்கும்நீரில் - பொங்கிய ஊழி வெள்ள நீரிலே . மிதந்த நற்பூந்தராய் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கலவ மாமயி லார்இய லாள்கரும்
பன்ன மென்மொழி யாள்கதிர் வாள்நுதற்
குலவு பூங்குழ லாள்உமை கூறனை வேறுரையால்
அலவை சொல்லுவார் தேர்அமண் ஆதர்கள்
ஆக்கி னான்றனை நண்ணலும் நல்கும்நற்
புலவர் தாம்புகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதுமே.

பொழிப்புரை :

தோகை மயில் போன்ற சாயலையுடையவளாய்க் , கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவளும் , கதிர் வீசுகின்ற ஒளியுடைய நெற்றியுடையவளும் , வாசனை பொருந்திய பூக்களைச் சூடிய கூந்தலையுடையவளுமான உமாதேவியை ஒரு பாகமாக வைத்தவர் சிவபெருமான் . கூறத்தகாத சொற்களால் பழித்துக் கூறும் புத்தர்களையும் , சமணர்களையும் பிறக்கும்படி செய்தவன் அவனே . அப்பெருமானை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டால் சிவபோகத்தைத் தருவான் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் சிவஞானிகள் போற்றும் அழகிய பதியான திருப்பூந்தராய் . அத்திருத்தலத்தை நாம் வணங்குவோமாக .

குறிப்புரை :

கலவம் - தோகை . மயில்ஆர் - மயில்போன்ற . இயலாள் - சாயலையுடையவள் . குலவு பூங்குழலாள் உமை - பூங் குழலையுடையவளாகிய குலாவும் உமை . கூறனை - உமாதேவியாரை ஒருபங்கு உடைய சிவபெருமானை , வேறு உரையால் - மாறுபட்ட சொற்களால் . அலவை - தகாத சொற்கள் . தேரமண் - தேரர் அமணர் களாகிய ( மரூஉ ) ஆதர் - பயனற்றவர்கள் . அலவை ... ஆக்கினான் - புத்தரும் சமணரும் ஆகிய பயனிலிகளை , அலவை சொல்லுவாராக ஆக்கினவன் . முன்வினைப் பயனாற் புறமதத்திற் பிறந்து அதன் பயனாகச் சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும் தீவினைக்கே முயல்கின்றனர் . அவ்வாறு அவர்கள் செய்வது கன்மவசத்தினால் ஆவதெனினும் அதுவும் சிவன் செயலே என்றுணர்த்துவார் , ` ஆக்கினான் ` என இறைவன் மேல் வைத்தோதினார் . ஆக்கினான் தனை நண்ணலும் நல்கும் ... பூந்தராய் - தன்னையடைந்த அளவில் சிவப்பேற்றை யளிக்கவல்ல ( பெருமை வாய்ந்த ) பூந்தராய் எனத் தலத்தின் பெருமை கூறினார் . கேட்டல் , சிந்தித்தல் , தெளிதல்களால் நிட்டை கூடுதலுறுவார் எய்தும் பேற்றை அளிக்கவல்லது இத்தலம் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

தேம்பல் நுண்ணிடை யாள்செழுஞ் சேலன
கண்ணி யோடண்ணல் சேர்விடம் தேன்அமர்
பூம்பொ ழில்திகழ் பொற்பதி பூந்தராய் போற்றுதும்என்
றோம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை
ஞான சம்பந்தன் ஒண்டமிழ் மாலைகொண்
டாம்படி இவை ஏத்தவல் லார்க்குஅடை யாவினையே.

பொழிப்புரை :

மெலிந்த சிற்றிடையையும் , செழுமையான சேல்மீன் போன்ற கண்களையும் உடைய உமாதேவியோடு எங்கள் தலைவனான சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் , தேன் நிறைந்த பூஞ்சோலைகளுடன் விளங்குகின்ற அழகிய பதியான திருப்பூந்தராய் . அதனை வணங்குவோம் என்று அத்திருத்தலப் பெருமையைப் போற்றி வளர்க்கின்ற முத்தமிழ் , நான்மறை இரண்டிற்குமுரிய திருஞானசம்பந்தனின் சிவஞானம் ததும்பும் தமிழ்ப்பாமாலையாகிய இப்பதிகத்தினைத் தமக்குப் பயன்தர வேண்டி ஓதுபவர்களை வினைகள் வந்தடையா .

குறிப்புரை :

தேம்பு நுண்இடை - இளைத்தசிற்றிடை , ` தேம்பலஞ் சிற்றிடையீங்கிவள் ` எனத் திருக்கோவையாரில் வருதலுங்காண்க . ஓம்புதன்மையன் - அப்பதியின் பெருமையைப் பாதுகாக்கும் தன்மை யையுடையவன் . ஒண் தமிழ்மாலை - சிவஞானம் ததும்பும் தமிழ்ப் பாசுரங்களாலாய மாலையாகிய இப்பதிகம் . ஒண்மை - அறிவு : சிவ ஞானம் , ஆம்படி இவை ஏத்தவல்லார்க்கு அடையாவினையே - தமக்குப் பயனாகும் வண்ணம் பாசுரங்களாகிய இவற்றைக்கொண்டு துதிக்கவல்லவர்களுக்கு மேல்வரக் கடவனவும் எஞ்சியனவுமாகிய வினைகள் அடைய மாட்டா . வினை - பால் பகா அஃறிணைப் பெயர் .
சிற்பி