திருப்பூந்தராய்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்
மிக்க செம்மை விமலன் வியன்கழல்
சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி
நன்ற தாகிய நம்பன் தானே.

பொழிப்புரை :

சிவனை மதியாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனாகிய , திருப்பூந்தராய்த் தலத்தில் எழுந்தருளிய மிகுந்த சிறப்புடைய , இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமானின் பெருமையுடைய திருவடிகளைச் சிந்தியுங்கள் . அனைத்துயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற , அனைவராலும் விரும்பப்படுகின்ற அச் சிவபெருமானே நமக்கு வீடுபேற்றினைத் தருவான் .

குறிப்புரை :

தக்கன் வேள்வி தகர்த்தவனாகிய பூந்தராய் நிமலனது பெருமை பொருந்திய திருவடிகளை என முதலிரண்டடிக்குக் கூட்டி யுரைக்க . மிக்க செம்மை - மேலான வீட்டு நெறியை அருளும் . விமலன் - அமலன் . தன்னைச்சார்ந்த உயிர்களின் மலத்தை யொழிப்பவன் என் றும் , இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் என்றும் பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்
வெள்ளம் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்உயர் வார்உள்கும் நன்னெறி
மூலம் ஆய முதலவன் தானே.

பொழிப்புரை :

பறவையினங்களும் புகழ்ந்து போற்றிய திருப் பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள கங்கையைத் தாங்கி யுள்ள விகிர்தனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுதலே இந்நிலவுலகில் உயர்வடைவதை விரும்புபவர்கள் சிந்திக்கும் நன்னெறியாகும் . ஏனென்றால் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் அச்சிவபெருமானே ஆவான் .

குறிப்புரை :

புள்ளினம் புகழ்போற்றிய பூந்தராய் - அடியார்கள் பூந்தராயைப் போற்றிப் புகழ்ந்து பாராட்டலைக் கேட்டிருந்த கிளி , பூவை முதலிய பறவையினங்களும் புகழைப் போற்றுவன ஆயின . ` தெள்ளுவாய்மைத் திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவையே `

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

வேந்த ராய்உல காள விருப்புறின்
பூந்த ராய்நகர் மேயவன் பொற்கழல்
நீதி யால்நினைந் தேத்தி உள்கிடச்
சாதி யாவினை யான தானே.

பொழிப்புரை :

நீங்கள் மன்னராகி உலகாள விரும்பினால் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பொன்னார் திருவடிகளை வழிபடுங்கள் . மேலும் அத்திருவடிகளை விதிமுறைப்படி நினைந்து , போற்றித் தியானித்தால் வினைகள் தம் தொழிலைச் செய்யா . எனவே பிறவி நீங்கும் . வீடுபேறு உண்டாகும் .

குறிப்புரை :

மாந்தரீர் நீங்கள் அரசராகி உலகை ஆளவிரும்பினால் அதனைப் பூந்தராய் நகர் மேவியவன் பொன்னார் திருவடியே தரும் . பின்னும் அத்திருவடியை ஆசான் உணர்த்திய முறைப்படி நினைந்து துதிப்பின் நிட்டை கூட வினையாயினவை தம் தொழிலைச்செய்யா . ஆகவே பிறவியறும் : வீடு பேறு உண்டாம் : என்பதே வைப்பு அடிகளின் பொருள் . நினைந்தேத்தல் - ` மனத்தொடு வாய்மை மொழிதல் ` என்புழிப் போலக்கொள்க . ஆன - சொல்லுருபு . தான் , ஏ ; இரண்டும் ஈற்றசை . மேல் வைப்பு முதலடியில் உள்கிட என்பதற்குச் செயப்படு பொருள் - பொற்கழல் . இங்ஙனம் இருவாக்கியங்களாகக் கொள்ளாத இடத்து வினை முடிவு காண்டல் அரிது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய்
ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச்
சிந்தை நோயவை தீர நல்கிடும்
இந்து வார்சடை யெம்இ றையே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் தேவர்கள் போன்று பெருமையாகக் கருதப்படுகின்ற அந்தணர்கள் வணங்கிப் போற்றும் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் செம்மை வாய்ந்த திருவடிகளைத் துதித்து இறைஞ்சிடச் சந்திரனை அணிந்த நீண்ட சடைகளையுடைய இறைவன் நம் மனக்கவலைகளைப் போக்கி அருள்புரிவான் . ` தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது ` ( குறள் - 7) என்ற வள்ளுவர் வாக்கு இங்கு நினைவு கூர்தற்குரியது .

குறிப்புரை :

பூந்தராய் மேவிய ஈசன் மலரடிகளை யேத்தி வணங்கச் சந்திரனை யணிந்த நெடிய சடையை யுடையவனாகிய அவ்விறைவன் மனக்கவலைகள் மாற அருள்புரிவன் . நோயவை என்பதில் அவை பகுதிப்பொருள் விகுதி . நல்கிடும் - அருள் புரிவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய்
மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட
நுந்தம் மேல்வினையோட வீடுசெய்
எந்தை யாயஎம் மீசன் தானே.

பொழிப்புரை :

எலும்பு மாலைகளைத் தன் திருமேனியில் அணிந்து திருப்பூந்தராய் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை , நிறைந்த உள்ளத்தோடு வணங்கிட , நம் அனைவர்க்கும் தந்தையாகிய அவ்விறைவன் , நீங்கள் முன்பு ஈட்டிய சஞ்சிதவினையைப் போக்கு தலோடு , இனிமேல் வரும் ஆகாமிய வினையும் ஏறாதபடி செய்து வீடுபேறு அருளுவான் . தத்தம் கால எல்லைகளில் நீங்கிய திருமால் , பிரமன் இவர்களின் எலும்புகளைச் சிவபெருமான் மாலையாக அணிந் துள்ளது சிவனின் அநாதி நித்தத்தன்மையையும் , யாவருக்கும் முதல்வனாம் தன்மையையும் உணர்த்தும் .

குறிப்புரை :

புந்தி - மனம் . மலிந்த புந்தியராதல் - உளன் பெருங் களன் செய்தல் . நுந்தம் - உங்கள் . மேல் - காலப்பொருளில் , முற் பிறப்புக்களில் ஈட்டிய எஞ்சிய சஞ்சித வினையையும் ; இடப் பொருளில் , இனி ஈட்டும் வினையாகிய ஆகாமிய வினையையும் குறிக்கும் . வினையோட வீடுசெய் எந்தை ..... ஈசன்தானே - சிவ பெருமான் ஒருவனே நமக்கு உற்ற துணையாவன் என அவாய்நிலை வருவிக்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பூதம் சூழப் பொலிந்தவன் பூந்தராய்
நாதன் சேவடி நாளும் நவின்றிட
நல்கும் நாள்தொறும் இன்பம் நளிர்புனல்
பில்கு வார்சடைப் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

திருப்பூந்தராய் என்னும் தலத்தில் பூதகணங்கள் சூழ விளங்கும் தலைவனாகிய சிவபெருமானின் திருவடிகளை எந்நாளும் போற்றி வணங்க , குளிர்ந்த கங்கைநீர் சொட்டுகின்ற நீண்ட சடை முடியுடைய அப்பெருமான் நமக்கு நாள்தோறும் பேரின்பம் அருளுவான் .

குறிப்புரை :

நளிர்புனல் பில்குவார் சடைப்பிஞ்ஞகன் - குளிர்ந்த கங்கை நீர் சொட்டும் நெடிய சடையில் மயிற்பீலியை யணிந்தவனாகிய சிவபெருமான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய்
பற்றிவாழும் பரமனைப் பாடிடப்
பாவம் ஆயின தீரப் பணித்திடுஞ்
சேவ தேறிய செல்வன் தானே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பை ஆபரணமாக அணிந்து , திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , அனைவருக்கும் மேலான கடவுளான சிவபெருமானைப் பாடி வணங்க , விடையேறும் செல்வனான அவன் , நாம் மனம் , வாக்கு , காயத்தால் செய்த பாவங்களனைத்தையும் தீர்த்தருளுவான் .

குறிப்புரை :

சே அது ஏறிய செல்வன் - விடையேறிய சிவ பெருமான் . பரமனைப்பாட - பரமனாகிய தன்னை நாம்பாட . பாவமாயின தீரப்பணித்திடும் - நம்மைப் பற்றியிருக்கும் பாவங் களானவை பற்று விட்டொழிய ஆணைதருவான் ; அது பகுதிப் பொருள் விகுதி . பரமன் - ` யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடை யான் ` ( திருவாசகம் ). தீர்தல் - பற்றுவிடல் . தீர்தலும் தீர்த்தலும் விடற் பொருட்டாகும் . ( தொல் . சொல் . 318 )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

போத கத்துரி போர்த்தவன் பூந்தராய்
காத லித்தான் கழல்விரல் ஒன்றினால்
அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள்
பெருக்கி நின்றஎம் பிஞ்ஞ கனே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துப் போர்த்தித் திருப்பூந்தராய் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளியுள்ள எனது பிஞ்ஞகனாகிய சிவபெருமானே தனது திருவடி விரல் ஒன்றினால் அரக்கனது ஆற்றலை அழித்துப் பின்னர் அவனுக்கு அருள் செய்தான் .

குறிப்புரை :

போதகம் - யானை . பூந்தராய் காதலித்தான் - திருப் பூந்தராயை இருப்பிடமாக விரும்பினவன் . அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கே மீள அருளும் பெருக்கி நின்ற கடவுளே பூந்தராய் காதலித்தவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மத்தம் ஆன இருவர் மருவொணா
அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய்
ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை
மாளு மாறருள் செய்யுந் தானே.

பொழிப்புரை :

தாமே தலைவர் என்று செருக்குக் கொண்ட திரு மாலும் , பிரமனும் , அறிந்து அடைய முடியாது உயர்ந்து விளங்கிய சிவ பெருமான் எழுந்தருளிய திருப்பூந்தராய் என்னும் தலத்தை அவனுக்கு ஆட்படும்படி அடியவராய்ச் சென்று சேர்ந்து மேல் நிலையை அடை யுங்கள் . அவன் தானே வந்து உங்கள் வினைகள் அழியுமாறு அருள் புரிவான் .

குறிப்புரை :

மத்தம் - மயக்கம் ; செருக்கு . இருவர் - தொகைக் குறிப்பு . நீங்கள் ஆள் ( அது ) ஆக அடையுங்கள் . அவன்தானே வந்து உம்மைத் தலையளித்து உம்வினை மாளுமாறு அருள்செய்யும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பொருத்த மில்சமண் சாக்கியப் பொய்கடிந்
திருத்தல் செய்தபிரான் இமை யோர்தொழப்
பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை
ஏந்து மான்மறி யெம்இ றையே.

பொழிப்புரை :

வேத நெறிகட்குப் பொருந்தாத சமணர் , புத்தர் களின் பொய்யுரைகளை ஒதுக்கி , விண்ணோர்கள் வணங்கும்படி வீற்றிருக்கும் கடவுள் , திருப்பூந்தராய்த் தலத்தைக் கோயிலாகக் கொண்டு தனது கையில் மான்கன்றை ஏந்தியுள்ள சிவபெருமானே ஆவான் .

குறிப்புரை :

பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய்கடிந்து - அளவை நூலுக்குப் பொருத்தமில்லாத சமணநூலும் சாக்கியநூலும் சொல்லும் பொருளை நீக்கி . இமையோர் தொழ இருத்தல் செய்த பிரான் - இமையோர் தொழ இருந்தபிரான் . கைமான்மறி ஏந்தும் எம் இறை - அவனே கையில் மான்மறியேந்தும் எம் இறை . கைஏந்தும் மான் மறி எந்தை - இலாத வெண் கோவணத்தான் என்பதுபோல நின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புந்தி யான்மிக நல்லவர் பூந்தராய்
அந்தம் இல்எம் அடிகளை ஞானசம்
பந்தன் மாலைகொண் டேத்தி வாழும்நும்
பந்த மார்வினை பாறி டுமே.

பொழிப்புரை :

உள்ளத்தால் மிக நல்ல சிவனடியார்கள் வாழ்கின்ற திருப்பூந்தராய் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள , என்றும் அழிதலில்லாத எம் தலைவனான சிவபெருமானைத் திருஞான சம்பந்தன் அருளிச் செய்த இப்பதிகப் பாமாலையைக் கொண்டு போற்றி வாழுங்கள் . உங்களைப் பந்தித்து நின்ற வினைகள் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

எம் அடிகளை ஞானசம்பந்தன் மாலைகொண்டேத்தி வாழுங்கள் . அதனால் ஒளிபுக்க இடத்தில் இருள் தானாக நீங்குதல் போல நம்மைப் பந்தித்து நின்ற பழவினைகள் மாறிவிடும் . அந்தம்இல் அடிகள் - முடிவில்லாத எம்கடவுள் .
சிற்பி